அண்ணலின் அடிச்சுவட்டில்...10

பொதுவாக, காந்தி வழிபாட்டுக் கூட்டத்திலே பஜன் முடிந்ததும்  உரை நிகழ்த்துவார். அவர் இந்தியிலே பேசுவதை அவரது பேத்திகளான
அண்ணலின் அடிச்சுவட்டில்...10

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
பொதுவாக, காந்தி வழிபாட்டுக் கூட்டத்திலே பஜன் முடிந்ததும்  உரை நிகழ்த்துவார். அவர் இந்தியிலே பேசுவதை அவரது பேத்திகளான ஆபாவும் மனுவும் இந்தியிலேயே எழுதி வைப்பார்கள். கல்யாணம், சுசீலா நய்யர், ராஜ்குமாரி போன்றோர் அவர் இந்தியில் பேசப் பேச அதை ஆங்கிலத்திலேயே அப்போதே எழுதி விடுவார்கள். வழிபாட்டுக் கூட்டம் முடிந்து காந்தி நடை பயிற்சிக்குச் சென்று வந்ததும் அவரிடம் அவர்கள் எழுதி வைத்திருக்கும் அவரது உரை வடிவத்தை திருத்தக் கொடுப்பர். அவர் அதிலுள்ள தவறுகளைத் திருத்தி பத்திரிகைகளுக்கு அனுப்ப அவர்களிடம் பரிந்துரைப்பார். 

மூவரும் எழுதிக் கொடுப்பதில் அவர் சுசீலா நய்யர் எழுதியதைத் திருத்தித் தருவதிலேயே, அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அவர்கள் கொடுத்த வரிசையில் சில நேரங்களில் ராஜ்குமாரியின் நகல் முதலிலிருந்தாலும், காந்தி சுசீலா நய்யரின் நகலையே நாளிதழ்களுக்கு அனுப்ப பரிந்துரைப்பார். இந்த விஷயத்தில் ராஜ் குமாரிக்கு அதிக வருத்தமுண்டு. காரணம் அவர் சிறந்த அறிஞரும் ஆங்கிலப் புலமையும் மிக்கவர். மொழியியல் வல்லுநர்... அவருடைய கையெழுத்தும் எல்லோரையும் விட  அழகாக இருக்கும். அப்படி இருந்தும் சுசீலா நய்யர் எழுதிய உரை வடிவமே திருத்தப்பட்டு பத்திரிகைகளுக்குச் செல்வதில் ராஜ்குமாரிக்கு இன்னும் வருத்தம்...

அவர் கல்யாணத்திடம் இது குறித்து தனியாக பல தடவை, "நாம் இவ்வளவு அழகாக முதலிலேயே எழுதிக் கொடுத்தும் இவர் கடைசியில் எழுதிக் கொடுத்த சுசீலா நய்யருடைய உரையை வாங்கித் திருத்துவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்'' என்பார்.

சுசீலா நய்யர் தொடர்பான இன்னொரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இது நிகழ்ந்தது சுதந்திரத்திற்கு பின். 

ஃபரீதாபாதில் அகதிகளுக்கான நிவாரணப்பணி நடைபெற்று வந்தது.  ஃபரீதாபாத் வளர்ச்சி திட்டம் என அழைக்கப்பட்ட அந்த திட்டத்தின் தலைவராக சுதிர் கோஷ் இருந்தார். அவரின் கீழ் சுசீலா நய்யர் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார். காந்தியுடன் நெடுநாட்கள் பணியாற்றிய கெளரவச் சுமை பல நேரங்களில் சுசீலா நய்யரை சுதிர் கோஷின் உத்தரவுகளுக்கு இணங்க மறுத்தது. சுதிர் கோஷ் கூறுவதை பல நேரங்களில் சுசீலா நய்யர் பொருட்படுத்தாமல் இருந்தார். மிகுந்த கோபமடைந்த சுதிர் கோஷ் ஒரு தருணத்தில் "நீங்கள் காந்தியோடு பணியாற்றி இருக்கலாம். ஆனால் இங்கே இந்த திட்டத்திற்கு நான்தான் தலைவர். நான் சொல்வதையே நீங்கள் இங்கு கேட்க வேண்டும்''  எனக் கூறி விட்டார்.  சுசீலா நய்யரால் ஒன்றும் சொல்ல இயலவில்லை.

கோள் சொல்லுதல், பொறாமைகள், பின் வேலைகள் போன்ற துர்குணங்கள் எல்லாக் காலத்திற்குமே உரியவைதான். மிகவும் ஆச்சரியப்படத்தக்க அளவில் காந்தியின் கீழ் வேலை பார்த்த ஒரு சிலரிடம் கூட அந்த மாதிரி துர்குணங்கள் இருந்தன. ஒரு தடவை கல்யாணத்திடம் காந்திஜி இரண்டு கடிதங்கள் தட்டச்சு செய்யத் தந்திருந்தார். அவரும் அவர் கூறிய அந்தப் பணியை தனது அறையில் செய்து கொண்டிருந்தார். காந்திஜி அங்கே பணி செய்கிற இன்னொருவரிடம் கல்யாணம் பணியை முடித்து விட்டாரா எனப் பார்த்து வர அனுப்பினார்.  

கல்யாணம் ஒரு கடிதத்தை தட்டச்சு செய்துவிட்டு, அந்தக் காகிதத்தை இயந்திர உருளையிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் அங்கு வந்த அந்த சக நண்பர் கல்யாணம் இரண்டாவது காகிதத்தை தட்டச்சு செய்ய இயந்திரத்தில் சொருகுவதையும் பார்த்தார். அவர் கல்யாணத்திடம் ஒன்றுமே கேட்கவில்லை. நேராக காந்தியிடம் சென்று கல்யாணம் அடித்த கடிதத்தில் நிறையத் தவறுகள் இருப்பதால் மீண்டும் அந்தக் கடிதத்தை அடித்துக் கொண்டிருப்பதாக காந்தியிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். 

சிறிது நேரத்தில் கல்யாணம் இரண்டு கடிதங்களையும் தட்டச்சு செய்து விட்டு காந்தியிடம் கொண்டு வந்து கொடுத்தார். அவர் அதை வாங்கிக் கொண்டு "முதலில் கடிதத்தைத்  தப்பாக அடித்துவிட்டு திருப்பி அடித்தீர்களோ'' எனக் கேட்டார். 

கல்யாணம் "இல்லை'' என்று சொன்னார். 

வந்த நபருக்கு காந்தியடிகள் கல்யாணத்திடம் இரண்டு கடிதங்கள் தட்டச்சு செய்ய தந்திருப்பது தெரியாது.  அவர் காந்தி கல்யாணத்திடம் ஒரு கடிதம்தான் தந்திருக்கிறாரென நினைத்துக் கொண்டு அவர் முதல் காகிதத்தை இயந்திரத்திலிருந்து எடுத்துவிட்டு, அடுத்த காகிதத்தை சொருகுவதைப் பார்த்துவிட்டு கல்யாணம் தப்பாக அடித்ததால் திருப்பி வேறு காகிதத்தில் அடிக்கிறாரென நினைத்துக் கொண்டு காந்தியிடம் கூறியிருக்கிறார். குற்றங்களைச் சொல்வதற்காகவே அவர் காத்திருப்பதுபோல் பட்டது. ஆனால், காந்திஜி என்ற புடம் போட்ட தங்கத்திடம் எந்த அழுக்கும் ஒட்டுவதில்லை.

வழிபாட்டில் வந்த தடை
 காந்தியின் நாளானது வழிபாட்டில் தொடங்கி வழிபாட்டில் நிறைவு பெறும். காலையில் வழிபாட்டோடு நாளைத் தொடங்குவார். மாலையில் அவரது வழிபாடு தனிப்பட்டதாகவோ அல்லது மக்களோடு இணைந்த வழிபாடாகவோ இருக்கும். காந்திஜிக்கு மிகவும் பிடிக்காத விஷயம் ஆஸ்ரமத்திலிருப்பவர்கள் வழிபாட்டிற்கு வரத் தவறுவதுதான். 

கல்யாணம் டெல்லியில் பிர்லா மாளிகையில் அவரோடு தங்கி இருக்கும்போது, நிறைய பணிகள் அவருக்குத் தொடர்ந்து இருந்தன. காலையில் காந்திஜியின் வழிபாட்டிற்கு முன்பாகவே அவர்கள் எழுந்திருக்க வேண்டும். அகதிகள் நிறைய இருந்தார்கள். சில நேரம் நெடுநேரம் இரவில் இரண்டு மணி வரை பணி செய்திருப்பர். அப்போது அதிகாலையில் எழுந்திருக்க இயலுமாவென கல்யாணத்திற்கே சந்தேகம் வந்துவிடும். அந்தத் தருணங்களில் அச்சத்துடன் வாசற்காவலனிடம் தன்னை நினைவுடன் குறிப்பிட்ட நேரத்தில் எழுப்ப கல்யாணம் சொல்லி இருப்பார். 

மாலை வழிபாடு பொதுவானதாக இருக்கும். அதில் பொதுமக்கள் வருவர். அப்போது சுதந்திரப் போராட்டமானது உச்சகட்டத்திலிருந்த தருணம். ஆங்கிலேய அதிகாரிகள் காந்தியை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருந்தனர். மக்களுக்கு அவர்களின் பேச்சு வார்த்தை குறித்து அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமிருந்தது.

சுதந்திரம் குறித்த தாகம் அவர்களின் கண்களிலும் காதுகளிலும் நுட்பமாய் தெரிந்தன. மாலை வழிபாடு முடிந்ததுமே காந்தி வழக்கமாக ஆற்றுகிற அவரது உரைக்காக மக்கள் காத்திருந்தனர். அதில் சுதந்திரம் குறித்து அன்று அவரைச் சந்தித்த ஆங்கிலத் தலைவர்கள் குறித்தும் அவர்கள் பேசிய விஷயங்கள் குறித்தும் தெளிவாக ஒளிவு மறைவின்றி விரிவாகக் கூறுவார். அதில் போராட்டத்தின் வளர்ச்சி குறித்த தெளிவான சித்திரம் பொதுமக்களுக்குக் கிட்டியது. 

காந்தியை எந்த ஆங்கிலேய தூதர்களும் சந்திக்காத நாட்களில் வழிபாட்டிற்குப் பிந்தைய உரை சுத்தம் சுகாதாரம் பற்றியதாக இருக்கும். பெரும்பாலும் வழிபாட்டின் நிறைவில் காந்தியிடம் நன்கொடையாய் பொதுமக்களால் அளிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளெல்லாம் ஏலம் விடப்படும். அதில் திரட்டப்படும் நிதியினை தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியில் சேர்த்து விடுவார்.

அவர்கள் அப்போது காந்தியோடு பிர்லா இல்லத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதியிலிருந்து ஜனவரி 30 வரை சுமார் ஐந்து மாதங்கள் இருந்தனர். வழக்கமாக நடக்கும் வழிபாட்டில் அன்று நடந்தது மறக்க இயலாதது. 

வழிபாட்டிற்கு சாதாரணமாக 200 அல்லது 300 பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். அதிகப்படியாக சில நாட்களில் 400 பேருக்குள் இருக்கலாம். அவரது அன்றாட வழிபாடானது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியமென சர்வமத வழிபாடாக இருக்கும். வழிபாடென்பது கண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறைவனை நினைப்பதாகும். காந்தியும் வழிபாடு தொடங்கியதுமே கண்ணை மூடிக் கொள்வார். 

முதலில் எல்லோரும் சேர்ந்து சொல்வது ஒரு ஜப்பானிய வழிபாட்டு வாசகம். அது ஒரு ஜப்பானியர் வழிபாட்டில் கலந்து கொண்டபோது அதில் கவரப்பட்ட காந்தி அன்றிலிருந்து அறிமுகப்படுத்திய வாசகமது. "'நம் யோ... ஹோ... ரீங்கே... க்யோ....'' என்பதே அந்த வாசகம். "ஞானிகளுக்கு வணக்கங்கள்'' என்பதே அதன் பொருள். அதை மூன்று முறை சொன்னதும் காந்தி "தோ மினிட் கீ ஷாந்தி'' எனச் சொல்வார். உடனடியாக எல்லோரும் இரண்டு நிமிடங்கள் மெüனமாக இருப்பார்கள். அதன்பின் வழிபாடு ஆரம்பிக்கும்.

காந்தியும் மற்றவர்களும் பொதுமக்களைப் பார்த்து பிரார்த்தனை செய்ய காந்தி அவர்களின் பின்னால் சிறிய மேடையில் இருப்பார். 

வழிபாடு நடக்கும்போது அதிகமாய் மற்றவர்கள் கண்ணைத் திறந்துகொண்டே வழிபாடு செய்வர். காந்தி கண்களை மூடிக் கொள்வதால் அவர்கள் கண்களைத் திறந்து வழிபாடு செய்வது அவருக்குத் தெரியாது. கல்யாணத்தின் கண்கள் திறந்திருந்ததால் அங்கே நடப்பவையெல்லாம் தெரிய வந்தது. அப்போது முன் வரிசையிலிருந்த இரண்டு குழந்தைகள் மிகவும் சுட்டித்தனமாக குறும்பு செய்து கொண்டிருந்தனர். அவர்களின் செய்கைகள் அங்கே எல்லாருடைய கண்களுக்கும் மையமாக இருந்தன. 

ஒரு தருணத்தில் பலருக்கும் சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலவில்லை. கல்யாணம் மிகவும் கவனத்துடன் சிரிப்பை அடக்கிக் கொண்டார். எல்லோருக்கும் பயங்கர சிரிப்பு வர  மனுவும் ஆபாவுமே சிரித்து விட்டார்கள். மனு, ஆபா இருவரின் பிரார்த்தனைப் பாடல் சில நொடிகள் தடைபட காந்தி கண்களைத் திறந்து பார்த்தார்.

எல்லோரும் அச்சத்தில் ஒரு நொடியில் இயல்பிற்குத் திரும்பினர். 

காந்திக்கு பயங்கர கோபம். அவர்தான் கோபத்தை வெளிப்படுத்துவது இல்லையே. அடக்கிக் கொண்டார். ஒரு நிமிடத்தில் மீண்டும் வழிபாடு தொடர்ந்தது.  

அறைக்கு வந்ததும் காந்தி மனுவிடமும் ஆபாவிடமும் என்ன நடந்ததெனக் கேட்டார். அப்போது மனு ஒரு பொய் சொன்னார். ஸ்வரம் மாறியதால் சிரிப்பு வந்ததாகச் சொன்னார். இதை அப்படியே நம்பிய காந்தி மிகுந்த வருத்தத்துடன் அதை ஒரு குறிப்பில் எழுதி இருக்கிறார். 

ஸ்வரம் தவறாகிவிட்டதென (tune went wrong)  காரணத்தைக் குறிப்பிட்டு அதனால் வழிபாடு தடைபட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். தவறு நடந்த அன்றே அவர்களை விசாரித்து அவர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு வருத்தமும் கண்டனமும் தெரிவித்தார். அடுத்த நாள் எல்லாரும் வழிபாட்டில் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றார். அடுத்த நாள் மன்னிப்பும் கேட்டனர்.  அதையும் காந்தி எழுதி இருக்கிறார். 

(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com