அண்ணலின் அடிச்சுவட்டில்...7

காந்திஜி காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். வழிபாடில்லாமல் அவர் காலையில் எந்த வேலையையுமே தொடங்குவது கிடையாது.
அண்ணலின் அடிச்சுவட்டில்...7

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

காந்திஜி காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். வழிபாடில்லாமல் அவர் காலையில் எந்த வேலையையுமே தொடங்குவது கிடையாது. காலை எழுந்ததும் வழிபாடு செய்ய வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பும் வழிபாடு செய்ய வேண்டுமென்பதே அவரது சித்தாந்தமாக இருந்தது. ஆஸ்ரமத்திலிருக்கும் மற்றவர்களும் இந்த வழக்கத்தைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். அதைக் கடைப்பிடிக்காதவர்கள் ஆஸ்ரமத்திலிருக்கத் தேவையில்லை என்று உறுதியாகக் கூறினார். அவரது வாழ்க்கை முறைகளையும் அதற்கான காரணங்களையும் நேரில் பார்த்தும் அங்கு பணியாற்றும் மற்ற பணியாளர்கள் மூலமாகவும் கல்யாணம்  நன்கு தெரிந்து கொண்டார். 

காந்திஜி இரண்டு கைகளாலும் (Ambidextrous)  நன்றாக எழுதும் பழக்கம் கொண்டவர். வலது கையில் நிறைய எழுதி கை களைப்படைகிறபோது இடது கையால் எழுத ஆரம்பித்து விடுவார்.

காந்திஜி தண்ணீரை மிகவும் சிக்கனமாகத்தான் பயன்படுத்துவார். அவரருகே ஒரு கண்ணாடிப் புட்டி நிறைய நீரை வைத்திருப்பார். பக்கத்தில் ஒரு சிறிய கறுப்பு கிண்ணம் வைத்திருப்பார். புட்டியிலிருந்து சிறிய அளவு நீரை கிண்ணத்தில் விட்டு முகத்தையும் கண்ணையும் அவ்வப்போது சுத்தமாகக் கழுவிக் கொள்வார். நிறைய நீரை விரயம் செய்ய மாட்டார். 

எளிய சுகாதாரமான சத்தான உணவு அங்கே கிடைத்தது. தேநீர், காப்பி போன்ற பானங்கள் அங்கே அருந்துவதில்லை. காலையில் பப்பாளிப் பழங்களைச் சாப்பிடுவார்கள். சுடு தண்ணீரில் எலுமிச்சம் பழச் சாற்றினைப் பிழிந்து, அதில் தேனை விட்டு அருந்துவதை வழக்கமாகக்  கொண்டிருந்தனர். காந்திஜி வழிபாடு முடிந்ததுமே நான்கு மணியளவில் அதையே பருகினார்.  பின் அவர் நடைப்பயிற்சி செய்வார். அதன் பின் அவரது பேத்திமார் ஆபாவும் மனுவும் அவருக்கு மசாஜ் செய்வார்கள். கால் பாதத்தில் சிறிது நெய் தடவி அழுத்தித் தேய்த்து விடுவார்கள். அதன் பின் எளிய காலை உணவைச் சாப்பிடுவார். அவர் கிழங்கு வகைகளைச் சாப்பிட மாட்டார். வேக வைத்த காய்கறிகளைச் சாப்பிட்டார். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரி, பூசணி, பரங்கிக்காய் போன்றவற்றையே சாப்பிட்டார். அவற்றில் உப்பில்லாமலேயே சாப்பிட்டார்.  

காந்திஜியிடம் இருந்தபோது அனைத்து மதங்களையும் நேசிக்கக் கற்றுக் கொண்டார். 

இரண்டாவதாக,  சேவாகிராமத்தில் தங்கி இருந்த அந்தக் குறுகிய நாட்களில் பொருளாதாரம், நேரம் தவறாமை, ஒழுங்குமுறை, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றைக் குறித்து முறையாகக் கற்றுக் கொண்டார். 

மூன்றாவதாக, சுய உதவி குறித்தும், யாரையும் சாராத தன்னிறைவின் முக்கியத்துவத்தைக் குறித்தும் புரிந்து கொண்டார். 

நான்காவதாக. உடல் ரீதியான உழைப்பின் தேவையையும் தனது பணிகளை தானே செய்வதன் முக்கியத்துவத்தையும் அறிந்து அதைச் செயல்படுத்தவும் செய்தார்.

ஆஸ்ரமத்தில் எல்லாருமே அன்றாடம்  நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்தது. காந்திஜியுடன் ஆஸ்ரமத்திலிருந்தபோது கல்யாணத்திற்கு ஆஸ்ரம வேலைகளோடு இன்னும் நிறைய வேலைகள் இருந்தன. ராஜ்குமாரி அம்ரித் கெளரும் ஆஸ்ரமத்திலேயே இருந்தார். "ஹரிஜன்' இதழுக்காக ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியிலும் உருதுவிலும் மொழி பெயர்க்கும் வேலைகள் நிறைய இருந்தன. அதற்காக ஓர் அகராதியை தயார் செய்யும் பணியினை ராஜ்குமாரி அம்ரித் கெளரிடம் காந்திஜி ஒப்படைத்திருந்தார். அந்தப் பணியில் அவருக்கு கல்யாணம் அன்றாடம்  உதவ  வேண்டி இருந்தது. 

அடிப்படைக் கல்வி பயிற்சியினை ஆர்யநாயகம் நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பள்ளியில் சென்று அடிப்படைக் கல்வி முறையினை கல்யாணம் கற்று வர வேண்டும். 

அங்கிருந்து சிறிது தொலைவில் பஜாஜ்வாடியில் ஜே.சி.குமரப்பா ஒரு வார இதழ் நடத்தி வந்தார். அவர் பல கட்டுரைகள் எழுதுவார். அவருக்கும் உதவ வேண்டும். அவரிடமிருந்துதான் காந்தியைப் பற்றி கல்யாணம் நிறைய கற்றுக் கொண்டார்.

கல்யாணத்திற்கு எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். கல்யாணத்தின் நெடுநாளைய நண்பர் ஃபெரோஸ்கானுடன் ஒரு தடவை ஓர் ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே காஃபிக்கு ஆர்டர் கொடுத்தார். பணியாளர் முதலில் தண்ணீரைக் கொண்டு வைத்தான். தண்ணீரைக் கொண்டு வரும்போது அவனது ஒரு விரல் தண்ணீரைத் தொட்டுக் கொண்டிருந்தது. மேசை அழுக்காக இருந்தது. காஃபியை கொண்டு வந்தபோது அந்த கோப்பையும் கழுவாதது போலவே இருந்தது.

அவனிடம் கோப்பை சரியாகக் கழுவப்படவில்லை என்று பணிவாக கூறினார். அவன் வேறு காஃபி கொண்டு வருவதாகச் சென்றவன் அதே காஃபியை இன்னொரு கோப்பையில் விட்டுக் கொண்டு வந்தான். உடனே அவர் கோபப்படவில்லை. அவனிடம் பில் கொண்டு வரச் சொன்னார். பில் வந்ததும் காஃபியை குடிக்காமலேயே காஃபிக்கான பணத்தையும் கொடுத்துவிட்டு, அவனுக்கு ஓர்  ஐந்து ரூபாய் டிப்சும் கொடுத்தார். உடனே சர்வர், " காஃபியை குடிக்கவில்லையே'' என்றான். 

"உனக்கும் ஹோட்டலுக்கும் தர வேண்டியதை தந்து விட்டேன். கோப்பை சுத்தமாக இல்லாததால் நான் காஃபியை குடிக்கவில்லை'' என்றார். அவ்வாறு அவர் கோபத்தை வெளிக் காட்டாமலேயே அங்கே அவனுடைய தவறையும் புரிய வைத்தார்.

ஒரு தடவை கல்யாணம், சுசீலா நய்யார், காந்தி ஆகியோர் ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டிருந்தனர். அப்போது சுசீலா நய்யார் தண்ணீர் புட்டியிலிருந்து தண்ணீரை எடுப்பதற்காக புட்டியைத் திறந்து அதன் மூடியை அப்படியே தரையில் வைத்தார். அதைப் பார்த்த கல்யாணம் உடனடியாக அந்த மூடியை எடுத்து மேல் கீழாக மாற்றி வைத்தார். 

இதைக் கண்ட காந்தி, சுசீலா நய்யாரைப் பார்த்து "நீ ஒரு மருத்துவர். சுத்தம் சுகாதாரத்தைப் பற்றியெல்லாம் நிறையப் படித்தவள். நீ மூடியை அப்படியே தரையில் வைத்துவிட்டாய். தரையிலுள்ள தூசு மூடியின் ஓரத்தில் ஒட்டி விடுமென்று கல்யாணம் அதைத் திருப்பி வைத்து விட்டான். பார்த்தாயா?''  என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

தவறை உணர்ந்த சுசீலா நய்யாரும் கல்யாணத்தைப் பார்த்து நன்றியுடன் சிரித்தார்.

கல்யாணத்தோடு மற்றவர்களும் ஆஸ்ரமத்திலிருந்து பல ஊர்களுக்கும் பயணம் செய்வர். அப்போதுதான் ஆஸ்ரமத்திலிருக்கும்போது கல்யாணம் செய்கிற அந்த அன்றாட வேலைகள் நின்று போயின.

டெல்லிக்கு செல்கையில் தனது பெற்றோரும் டெல்லியிலிருந்தால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் அம்மாவிடம் கூறி காந்திஜிக்காக இட்லி செய்து தரச் சொல்வார் கல்யாணம். 

"உப்பு போடாமல் இட்லி செய்ய வேண்டும்'' என்பார். 
அம்மா சொன்னார், "உப்பில்லாமல் இட்லியை எப்படி சாப்பிட இயலும்?'' என்று. 

உடனடியாக கல்யாணம் அம்மாவிடம் அவர் உப்பில்லாமல் உணவு உண்பதன் காரணத்தை விளக்கமாகக் கூறினார். 

அம்மாவிற்கு ஆச்சரியமாகி விட்டது. அம்மாவும் உப்பில்லாமலேயே இட்லி செய்து கொடுத்தார். அதை காந்திஜியிடம் கொண்டு போனார். அவர் இரண்டே இட்லிகள் சாப்பிடுவார்.  மீதியை வைத்திருப்பார்.  குறிப்பாக அவர் வெறும் இட்லியையே சாப்பிட்டார். அதற்கு கூட்டாக சட்னி எதையும் எடுத்துக் கொள்வதில்லை.  மீதியை அங்கே வருகிற நண்பர்கள் யாராவது சாப்பிடுவார்கள். 

எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் காந்திஜியோடு கல்யாணம் சென்ற துவக்கப் பயணங்களிலும் வழக்கமான நடைமுறைகளைப் பற்றி கல்யாணம் அறியாமல் இருந்தார். அவர்களே பயணச்சீட்டினை எடுத்திருப்பார்களென்று அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்தார். இன்னும் சொல்லப்போனால் காந்தி யாரைப் பார்க்கப் போகிறார்? எங்கே தங்கப் போகிறாரென்று கூட கல்யாணத்திற்கு தெரியாது.

காந்திஜியிடம் பணிக்குச் சேர்ந்து பல பயணங்கள் அவரோடு சென்றிருப்பார். முதலில் கல்யாணத்திற்கு அவர் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்வாரென்று தெரியாது. சாதாரணமாக அவர் எப்போதுமே மூன்றாம் வகுப்பு டிக்கெட் எடுத்தே பயணம் செய்வார். அரசாங்கமும் அவர் பயணம் செய்யும் முழு பெட்டியையும் அவர் பயன்பாட்டுக்கே கொடுத்துவிடும்.  அதில் அவரோடு பணியாற்றும் மூன்று நான்குபேர் மட்டுமே இருப்பார்கள். குறிப்பாக கல்யாணம், பேத்திகளான ஆபா, மனு எனும் இருவர், சில சமயம் மூத்த செயலாளர் பியாரிலால், அவரது தங்கை டாக்டர் சுசீலா நய்யார்,  பிஸன் என்ற கணக்காளர் ஆகியோர் பயணம் செய்வர்.

பயணம் செய்யும் அனைவருக்குமே காந்திஜி பயணச் சீட்டு வாங்கி விடுவார். முதலில் சில பயணங்களில் எல்லாருக்கும் அவர்களுடன் பயணிக்கும் காந்தியின் மூத்த செயலாளராக இருந்த பியாரிலால் போன்றோர் பயணச்சீட்டு எடுத்து விடுவர். மேலும் காந்திஜி மீது கொண்ட மரியாதை காரணமாக காந்தி இருக்கும் பெட்டியில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் யாரும் ஏறுவதில்லை. குறிப்பிட்ட அந்தப் பயண நாளில்  காந்திஜியோடு கல்யாணம் பயணம் செய்த போது அங்கே அவரோடு அவரது பேத்தி இருவர் மட்டுமே இருந்தார்கள். கல்யாணம் டிக்கெட் எடுக்கவில்லை.  அவர்களே எடுத்திருப்பார்களென விட்டு விட்டார். 

அந்தப் பயணமானது பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயில் 100 மைல் தூரம் சென்றிருக்கும். திடீரென காந்திஜி ஏதோ நினைவு வந்தவராய் கல்யாணத்தைக் கூப்பிட்டு, "டிக்கெட் வாங்கி விட்டாயா?'' எனக் கேட்டார். 

"எனக்குத் தெரியாது. யாரும் என்னிடம் டிக்கெட் எடுக்கச் சொல்லவில்லை'' என்றார். 

உடனே அவர், அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது அந்த ரயில் நிலைய அதிகாரியை கல்யாணத்திடமே அழைத்து வரச் சொன்னார். 

எப்போதுமே காந்திஜி ரயிலில் பயணம் செய்கிற போது அவரது பயணத்தைப் பற்றியும் அவரது ரயில் நிற்கும் நிலையங்கள் பற்றிய எல்லா விவரங்களையும், எல்லா செய்தித் தாள்களிலும் விவரமாகப் போட்டு விடுவார்கள். அதனால் எல்லா நிலையங்களிலும் அவரைக் காண ஏராளமான மக்கள் கூட்டம் இருக்கும்.

எல்லாரும் அவரைப் பார்த்து வணக்கம் தெரிவிப்பார்கள். குறுகிய காலமே ரயில் நிற்பதால் யாரும் அவரோடு பேச முயற்சி செய்ய மாட்டார்கள். அந்த ஊரின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மட்டும் உள்ளே வந்து காந்திஜியிடம் பேசுவார்கள். அதேபோல்தான் நிலைய அதிகாரியும் நிலையத்தில் எல்லா பணிகளும் சரியாக நடக்கிறதாவென கண்காணித்து கொள்வார். அவர்கூட காந்திஜியின் அருகில் வர மாட்டார்.

அப்போது காந்திஜி அந்த நிலையத்தின் அதிகாரியை தன்னிடம் அழைத்து வரச் சொன்னதால், கல்யாணமும் கூட்டத்தினிடையே  சென்று அவரிடம், "காந்தி உங்களை அழைக்கிறார்'' என்றார். 

அவருக்கு மிகுந்த பெருமை கலந்த ஆச்சரியம்.  "என்னைக் கூப்பிடுகிறாரா?'' என்று கூறிய அவர் பதட்டம் கலந்த பெருமிதத்துடன் கல்யாணத்தோடு வந்தார். 

அவரிடம் காந்திஜி, "சின்னப் பையன் இவன். என்னிடம் இப்போதுதான் வேலை செய்ய வந்திருக்கிறான். அவன் டிக்கெட் வாங்காமல் வந்து விட்டான்'' என்று கூறினார். 

அதற்கு அந்த அதிகாரி, "என்னய்யா. டிக்கெட் வாங்கலையா.. நீங்க எதற்கு டிக்கெட் வாங்க வேண்டும். நீங்க எவ்வளவு பெரிய மனிதர்'' என்றார் காந்திஜியைப் பார்த்து. 

உடனே காந்திஜி, "இப்படிதான் பல பெரிய மனிதர்களையெல்லாம் டிக்கெட் வாங்காமலேயே விடுறீங்களா..'' என்று கேட்டார். 

உடனே அந்த அதிகாரி, "பரவாயில்லை ஐயா. நீங்க எவ்வளவு பெரிய மகான்'' என்றும் வாதாடினார். 

உடனே காந்திஜி, "அதெல்லாம் ஒண்ணுமில்லே. நீங்க இப்போ டிக்கெட் வாங்கலேன்னா  நீங்க டிக்கெட் இல்லாமலேயே பயணம் செய்ய அனுமதிக்கறீங்கன்னு உங்களைப் பற்றி நான் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திடுவேன்'' என்று கூறி அவரை டிக்கெட் வாங்க வைத்தார். 
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com