அண்ணலின்  அடிச்சுவட்டில்...27: காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

காந்தியிடம் ஒரு செய்தியாளர் ""நீங்கள் சர்வாதிகாரியானால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார். 
அண்ணலின்  அடிச்சுவட்டில்...27: காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

காந்தியிடம் ஒரு செய்தியாளர் ""நீங்கள் சர்வாதிகாரியானால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார். 
அதற்கு அவர் ""நான் அந்தப் பொறுப்பை ஒத்துக்கொள்ளவே மாட்டேன். அப்படியே நான் ஒரு சர்வாதிகாரியானால் வைஸ்ராயின் வீட்டுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்கிற துப்புரவுத் தொழிலாளர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களின் வீட்டுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வேன்'' என்றார். 
""காரணம், வைஸ்ராயின் வீட்டுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கின்றன. அதைச் சுத்தம் செய்பவர்களின் வீட்டுக் கழிப்பறைகள் சுகாதாரமற்று இருக்கின்றன'' என்றார்.
காந்தியின் கனவு யாருடைய கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாதென்பதாகவே இருந்தது. காந்தி உயிரோடு இருந்திருந்தால் 1949-லேயே ஒரு புரட்சியை உருவாக்கி இருப்பார்.  

கல்யாணமும் சென்னையும்

காந்தியோடு பணியாற்றிய பின் கல்யாணம் 1956-இல்தான் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறினார். அதற்கு முன்னால் அவருடைய வாழ்க்கை டெல்லியிலும் சிம்லாவிலும்தான் கழிந்தது. அப்போது அரசு அவரை நியமித்த பணி நிமித்தமாகத்தான் சென்னைக்கு வந்தார். இந்திய உள்துறை அமைச்சகம் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் மலைச் சாதியினருக்கான தென் மண்டல ஆணையராக கல்யாணத்தை நியமித்தது. தென் மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் சென்னையிலேயே இருந்தது. கேரளா, மைசூர், ஆந்திரா, தமிழ்நாடு, அந்தமான், நிகோபார் பகுதிகள் அவரது பொறுப்பில் இருந்தன. அடிக்கடி இப்பகுதிகளுக்குச் சென்று அப்பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 

அந்தந்த அரசு செய்து வரும் வசதிகளைப் பார்த்து மத்திய அரசிற்கு அறிக்கை தர வேண்டியது கல்யாணத்தின்  பணியாக இருந்தது. அதற்கான நிதியினையும் மத்திய அரசுதான் அளித்து வந்தது. அதை மத்திய நிதி உதவியென்று சொல்வார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு, கல்விக் கூடங்கள், மருத்துவமனை போன்ற வசதிகளை செய்து கொடுப்பதற்காக இந்த நிதியினை மத்திய அரசு வழங்கியது. அதை முறையாக அந்த மாநில அரசுகள் பயன்படுத்துகின்றனவா என கண்காணிப்பதே கல்யாணத்தின் பொறுப்பு.
இந்தப் பணிக்காக கல்யாணம் இந்தப் பகுதிகளிலுள்ள எல்லா கிராமங்களுக்கும் பயணம் செய்ய வேண்டும்.  அவர்களின் வீடுகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் சென்று அவர்களின் குறைகளை அறிந்து வர வேண்டும்.   அந்தந்த ஊர்களில் மாவட்ட நல அதிகாரிகள் அந்த வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்துவார்கள்.  அவர்கள் தான் செயல்படுத்திய பணிகளை கல்யாணத்தை அழைத்துச் சென்று காட்டுவார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கூடவே வருவார்கள். அந்தப் 

பணிகளின் நிறை குறைகளைப் பற்றி கல்யாணம் அவர்களிடம் விவாதிப்பார். 1964 வரை அவர் அந்தப் பணியில் சிறப்பாகப் பணியாற்றினார். அந்தப் பணியின்போதே அப்போது பரபரப்பாக இருந்த இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கினை விசாரிக்கும் பொறுப்பு கல்யாணத்திடம் வழங்கப்பட்டிருந்தது. கல்யாணமும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் அந்தச் சம்பவம் குறித்து விசாரித்து டெல்லிக்கு அறிக்கையும் அனுப்பினார். அதேபோன்று கேரளாவில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு அமைச்சரவையில் ஓர் அமைச்சர் குறித்த குற்றச்சாட்டினையும் கல்யாணமே விசாரிக்க வேண்டி இருந்தது. அதற்காக அவர் முதலமைச்சர் நம்பூதிரிபாடின் அலுவலகத்திற்குச் சென்றார். அத் தருணத்தில் முதலமைச்சரின் அறையில் அமைச்சர் கே.ஆர். கெüரி அம்மாளும் இருந்தார். அப்போது நம்பூதிரிபாட் கல்யாணத்தை நோக்கி ""நாம் பேசும்போது கெüரி அம்மாள் இந்த அறையிலிருப்பதில் உங்களுக்கு மறுப்பொன்றும் இல்லையே. உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால்  அவரை வெளியே இருக்கச் சொல்கிறேன்'' என்றார்.  கல்யாணம் அவர் அங்கே இருப்பதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அந்த குறிப்பிட்ட அமைச்சரை மட்டும் விசாரித்து அறிக்கையும் அனுப்பினார். இறுதியில் அந்த அமைச்சர் தனது பதவியினை இழக்க வேண்டி வந்தது.

அப்போதுதான் கல்யாணம் டெல்லியிலிருந்து வந்ததால் அவருக்கு தமிழ்நாடு புதிதாக இருந்தது. அப்போது தமிழ்நாட்டில் பிரபலமாக அறியப்பட்ட இரு ஆன்மிகச் சொற்பொழிவாளர்களாய் அனந்தராம தீக்ஷிதரும் திருமுருக கிருபானந்த வாரியாரும் திகழ்ந்தனர். அவர்களைப் பற்றி சென்னை வந்த பின்னர்தான் கல்யாணம் தெரிந்து கொண்டார்.  அவர்களது சொற்பொழிவைக் கேட்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் வந்தனர். டெல்லியில் அப்போது இதேபோன்ற ஆன்மிகச்  சொற்பொழிவுகள் அவ்வளவாக நடக்கவில்லை.

கல்யாணம் சென்னை வந்த புதிது. கல்யாணமும் ஆகவில்லை. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையிலிருக்கும் உட்லண்ட்ஸில்தான் தங்கி இருந்தார். அலுவலக வேலை முடிந்து வந்ததுமே இந்தச்  சொற்பொழிவாளர்கள் எங்கு நிகழ்ச்சி செய்கிறார்களோ அங்கே சென்று விடுவார். அவர்களின் ஆன்மிக உரை கல்யாணத்திற்கு மிகவும் பிடித்தது. அதனால் அவர்கள் எங்கு பேசினாலும் அங்கே செல்வதை வழக்கமாகக்   கொண்டிருந்தார்.  ஒருநாள் கல்யாணம் உட்லண்ட்ஸ் ஹோட்டலிலிருந்து லஸ்ஸிற்குப் பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது ஒரு நிறுத்தத்தின்போது  கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது.  வாரியார் ஏதோ 

நகைச்சுவையாகச் சொல்லிக் கொண்டிருந்ததை  பேருந்தில் எல்லோரும் கேட்டுச் சிரிக்க கல்யாணமும் அதை அனுபவித்துச் சிரித்தார். அதன்பின் இரண்டு மூன்று ஆண்டுகளாகத்   தொடர்ந்து வாரியாரின் சொற்பொழிவைத்  தவறாமல் கேட்டு அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் மாறி விட்டார். சிந்தாதிரிப்பேட்டையில்தான் அவரது வீடிருந்தது. 

அவரது வீட்டிற்கும் பல தடவை சென்றிருக்கிறார். கல்யாணத்திற்கு எல்லாருக்கும் உதவுவதில் மிகுந்த விருப்பம். ஒருதடவை கிருபானந்த வாரியாரின் ஆன்மிகச் சொற்பொழிவினைக் கேட்பதற்காக காரில் மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரிக்குச்  சென்று கொண்டிருந்தார். அப்போது நிறைய மக்கள் அந்த வழியாகச்  சென்று கொண்டிருந்தனர். அங்கே ஒரு நடுத்தர வயது பெண் தனது மகளுடன் அந்த ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்பதற்காகச்  சென்று கொண்டிருந்தார். அவர்களை கல்யாணம் ஏற்கெனவே அந்த ஆன்மிகச் சொற்பொழிவு அரங்கத்தில் பார்த்திருக்கிறார். அந்த அளவில் அவர் மேல் கல்யாணத்திற்கு ஓர் உயர்ந்த மரியாதையும் இருந்தது. 
அவர்களுக்கு உதவும் நோக்கில் அவர்களினருகே காரை நிறுத்தி ""நானும் வாரியாரின் சொற்பொழிவைக் கேட்கத்தான் செல்கிறேன். உட்காருங்கள்'' என அவர்களை காரில் ஏறிக்கொள்ள அழைத்தார். உடனே அந்தப் பெண் கல்யாணத்தைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்று விட்டாள். அப்போதுதான் அவருக்கு இந்த ஊர் வழக்கப்படி தான் அவரிடம் அப்படிக் கேட்டது தவறு என்று புரிந்தது. தனது உதவும் மனப்பான்மையை அவர் தவறாகப் புரிந்து கொண்டது மிகுந்த ஆச்சரியத்தையும் அளித்தது.   "கல்கி'யில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு நண்பரிடம் இதுபற்றிக் கூறினார். நண்பர் கல்யாணத்தைக் கண்டித்தார்... ""இதுமாதிரி இனி யாருக்கும் உதவ நினைக்காதே. பெண்களைப் பொருத்தவரை  இந்த ஊரில் இப்படி அழைத்தால் நிச்சயமாகத் தவறாகத்தான் எண்ணுவார்கள்'' என்று எச்சரித்தார். 

1959 காலகட்டத்தில் ஒரு நாள் கல்யாணம் தங்கியிருந்த உட்லண்ட்ஸ் ஹோட்டலிலிருந்து மெüபரீஸ் சாலையிலுள்ள வீட்டிற்கு மாறினார். பக்கத்தில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதை அலுவலகமாகவும் மாற்றிக் கொண்டார். இரண்டும் நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. ராமனுடைய வீடுகளாகும். வீட்டிற்கு நூறு ரூபாய் வாடகை கொடுத்தார். அது அறக்கட்டளைக்குச்  சொந்தமானது.  1972 வரை அந்த வீட்டில்தான் குடியிருந்தார். சர்.சி.வி. ராமன் வீட்டிலிருக்கும்போது சென்னை வந்தால் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கி இருப்பார். அப்போது கல்யாணம் தங்கி இருந்த அவரது வீட்டிற்கும்  வருவார். வரும்போது ஆப்பிளைக்  கடித்துக் கொண்டே சாலை வழியாக நடந்து வருவார். வாயில் கடித்த ஆப்பிளும் கையில் பாதி ஆப்பிளும் இருக்க வீட்டு வாசலில் நுழைந்து கொண்டே ""எப்படி இருக்கிறீர்கள் கல்யாணம்?'' எனக் கேட்பார். 

அவர் வீட்டில் 40 தென்னை மரங்கள். ஆறேழு புளிய மரங்கள். நான்கைந்து பனை மரங்கள் இருந்தன. அவருக்கு அறிவியல் ஆராய்ச்சியைத் தவிர்த்து வேறெதுவும் தெரியாது. அவர் வீட்டிற்கு முன்பிருந்த தூங்கு மூஞ்சி மரம் மிகுந்த இடைஞ்சலாக இருந்ததால் ஒருநாள் அதை வெட்டி விற்று விட்டார் கல்யாணம். அதற்கு 60 ரூபாய் கிடைத்தது. அப்போது 60  ரூபாயென்பது பெரிய மதிப்புள்ள பணம். ராமன் வந்தபோது அவரிடம் இந்த விவரத்தைச் சொன்ன போது அந்த மரத்திற்கு எப்படி 60 ரூபாய் கிடைக்குமென நம்ப முடியாமல் அதனை வாங்கிப் போனார். சர்.சி.வி ராமன் முதலில் ஐ.ஏ.ஏ.எஸ் தான் தேர்வு பெற்றிருந்தார். கல்கத்தாவில் அஷுதோஷ் முகர்ஜியின்  நட்பு காரணமாக அவர்தான் இவரை அறிவியல் பக்கம் திருப்பினார். இந்தியாவில் முக்கியமான ஐந்தாறு விஞ்ஞானிகளை அப்போதைய மத்திய அரசு தேசிய பேராசிரியர்களாக கெüரவித்து அவர்களுக்கு மாதம் 5,000 ரூபாயினை வழங்கியது. அவர்களில் சர். சி. வி. ராமனும் ஒருவர். அப்போது 

அந்த ஐந்தாயிரம ரூபாய்க்கான கணக்கு விவரங்களை மத்திய அரசு உடனடியாய் அனுப்பக் கேட்டுக் கொண்டது. சி. வி. ராமன் இந்தியாவின் முதல் கணக்கு தணிக்கை அலுவலராக இருந்த நரஹரிராவிடம் இதை எப்படி தயாரிப்பதெனக் கேட்க வந்திருந்தார். நரஹரிராவ் கல்யாணத்திற்கும் சர்.சி.வி.ராமனுக்கும் பொதுவான நண்பராக இருந்ததால் கல்யாணமும் அவரோடு சென்றிருந்தார்.

சி.வி.ராமன் அவரிடம் இது குறித்து சலிப்போடு ""நான் அறிவியல் ஆராய்ச்சி செய்வேனா அல்லது இந்த கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டு இருப்பேனா'' என்றார்.  உடனே நரஹரிராவ் இதுபற்றி நேருவுக்குத் தெரிந்தால் இதையெல்லாம் வலியுறுத்தி இருக்க மாட்டாரென்று கூறுவதற்காக ""நேருவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால்....''  என்று ஆரம்பித்த உடனேயே ராமன், ""நேருக்குத்தான் என்ன தெரியும்?'' என்று கேட்டார். எல்லோரும் சிரித்து விட்டார்கள்.
அதேபோல் இன்னொரு தருணத்தில் கல்யாணமும் அவரும் பேசிக்  கொண்டிருந்த போது ஒருவர் சி.வி.ராமனிடம் ""நீங்கள் ஏன் எப்போதும் தலைப்பாகை அணிந்திருக்கிறீர்கள்'' என்று கேட்டார். உடனே ராமன், ""பலரும் என்னைப் புகழ்கிறபோது தலைக்கனம் ஏறி விடாமல் இருக்க தலைப்பாகையினால் அவ்வப்போது அதை இறுக்கிக் கொள்கிறேன்'' என்றார்.

கல்யாணத்தின் கல்யாணம்

கல்யாணத்திற்கு அப்போது 25 வயதிருக்கும். எல்லோரும் சேர்ந்து அவரை கல்யாணம் செய்து கொள்ள மிகவும் வற்புறுத்தினார்கள். வீட்டுக்கு வரும் நண்பர்களெல்லாம் ""என்னப்பா கல்யாணம்! எப்போது கல்யாணம்'' எனக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதற்கு ""நான் நல்ல நிலைக்கு வந்த பின்புதான் திருமணம் செய்து கொள்வேன்'' என்பார் அவர். 
நல்ல வசதியுடன் உயர்தரமான வாழ்க்கை வாழ வேண்டுமென்பது கல்யாணத்தின் ஆசையாக இருந்தது. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே அவருக்கு அந்த மாதிரியான வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்ற நோக்கம் இருந்தது. அதற்காக நிறைய செலவு செய்ய வேண்டுமென்று விரும்ப மாட்டார். இருக்கிற வருவாயில் உயர்ந்த தரமான வாழ்க்கை வாழ வேண்டுமென எண்ணுவார். 
அதனால் அவருக்கு எப்போது பயணம் செய்ய வேண்டுமென்றாலும் ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யுமளவிற்கு பணம் இருக்க வேண்டும் என்பார். அப்போது முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, இடைநிலை வகுப்பு, மூன்றாம் வகுப்பென நான்கு பிரிவுகள் ரயில் பயணத்தில் இருந்தன. இரண்டாம் வகுப்பு என்பது மிகவும் வசதியானவர்கள் மட்டுமே செல்லத் தகுந்ததாய் இருந்தது. அது இப்போது ஓரளவு விமானத்தில் பயணம் செய்வதற்கு ஈடாக இருந்தது. அப்போது அந்த அளவிற்கு கல்யாணத்திடம் பணம் இல்லாததால் அவர் கல்யாணம் பண்ணாமலேயே இருந்தார். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com