அண்ணலின்  அடிச்சுவட்டில்...21

அன்றைய தனது பணிகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் கல்யாணம் காந்தியின் அருகே ஒரு பக்கமாக உட்கார்ந்திருந்தார்.
அண்ணலின்  அடிச்சுவட்டில்...21

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
அன்றைய தனது பணிகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் கல்யாணம் காந்தியின் அருகே ஒரு பக்கமாக உட்கார்ந்திருந்தார். பிப்ரவரி 2 ஆம் தேதியிலிருந்து பத்து நாட்கள் சேவாகிரமில் பயணிப்பதற்கான ஏற்பாடுகளுக்காக அவர் கல்யாணத்தைப் பணித்திருந்தார். 

முந்தைய தினம் இந்திய தேசிய காங்கிரஸின் புதிய அமைப்புரீதியான விதிகளை காந்தி கூற கூற கல்யாணம் குறிப்பெடுத்து கொண்டு பின் தட்டச்சு செய்து காந்தியின் முன்பு வைத்தார். அதில் காங்கிரஸைக் கலைத்து விட்டு அதை சமூக சேவைக்கும் கிராம வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவமளிக்கும் விதத்தில் ஒரு புதிய அமைப்பாக உருவாக்க பரிந்துரைத்திருந்தார். அப்போது அதைப் படித்துப் பார்க்க காந்திக்கு நேரம் இல்லாமல் இருந்தது. அதனால் மூத்த செயலாளர் பியார்லாலை அழைத்தார். அவரிடம் அதைக் கவனமாகப் படித்து அதில் ஏதாவது கருத்துகள் தேவைப்பட்டாலோ பிழை திருத்தங்களிருந்தாலோ அதையெல்லாம் செய்து விடக் கூறினார். 

அந்த நாட்களில் டெல்லியானது இயல்பு நிலைக்கு அப்பாற்பட்டு இருந்தது.  மதக் கலவரங்கள் ஏராளமாய் இருந்தன. இஸ்லாமிய பிரதிநிதிகளும் இந்துமதத் தலைவர்களும் இயல்பு நிலை கொண்டு வருவதற்கான தேவையையும் வழிகளையும் அன்றாடம் காந்தியோடு வந்து விவாதித்தனர். அவரது அன்றாட நிகழ்ச்சிகள் ஓய்வின்றி அடுத்தடுத்து இருந்தன. அமைச்சர்களெல்லாம் காந்தியைச் சந்திப்பதற்கான நேரத்தை முன்கூட்டியே பெற்ற பின்னரே சந்தித்தனர். 

குளிர் காலங்களில் பகல் நேரங்களில் திறந்த புல்வெளியில் வெயில் காய்வதென்பது காந்திக்கு விருப்பமாக இருந்தது. காந்தியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருந்த நேரமது. பிர்லா மாளிகைக்கென காவலர்கள் வாயிலில் இருந்தனர். 

அதற்கு முந்தைய வருடத்தில் பொதுக் கூட்டங்களில் குரான் ஓதுவதற்கு எதிர்ப்புகள் இருந்தன. அதனால் முன்னெச்சரிக்கையாக அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் பிர்லா மாளிகையின் வாயிலில் ஒரு தலைமைக் காவலரின் தலைமையில் நான்கு காவலர்களைப் பாதுகாப்பாக நிறுத்த உத்தரவிட்டார். 

காந்தியைப் பொறுத்தவரை அவருக்கு எந்தப் பாதுகாப்புப் பட்டாளங்களும் கிடையாது. பாதுகாப்பைப் பொருத்தவரை எல்லாம் கடவுளின் கையிலென நம்பி இருந்தார். அவரொரு திறந்த புத்தகமாக இருந்தார். யாரிடமும் எதையும் மறைப்பதற்கு தேவையில்லையென நம்பி இருந்தார். 

காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு பத்து தினங்களுக்கு முன்பு 1948 ஐனவரி 20 அன்றுதான் வழிபாட்டுக் கூட்டத்தில் ஒரு குண்டு வெடித்தது. பிர்லா இல்லத்தின் பின்வளாகத்தில்தான் வழிபாடு நடக்கும். அப்போது பின்பகுதியிலுள்ள சாலையிலிருந்து அந்தக் குண்டை எறிந்தவன் மதன்லால் பாவா என்ற அகதியாவான். குண்டு சுவரில் விழுந்து சுவர் சேதமானது. காந்தியிடம் யாரோ இதைச் சொல்ல காந்தி  அதொன்றுமில்லை. ராணுவ வீரர்கள் பயிற்சி செய்யும் சப்தமாக இருக்குமென்று கூறி விட்டார்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர்தான் காந்தியை கொல்கிற நோக்கில் குண்டெறியப் பட்டது தெரிய வந்தது. அதனால் சர்தார் பட்டேல் பிர்லா மாளிகையின் வெளியே காவலர்களை அதிகப்படுத்தினார். சந்தேகத்திற்கிடமாக தோன்றும் நபர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாமென அவர்கள் அறிவுறுத்தப் பட்டனர். பிர்லா மாளிகைக்குள் வருகிற ஒவ்வொருவரையும் பரிசோதிப்பதே நல்லதென காவல்துறையினர் கருதினர்.

காந்தியின் தனிச் செயலர் என்ற அளவில் கல்யாணத்தின் அறை பிர்லா மாளிகையின் நுழைவு வாயிலில் இருந்தது. கல்யாணத்தைப் பார்த்த பின்னர்தான் காந்தியை அப்போது எல்லோரும் சந்திக்க இயலும். வழிபாட்டுக்கு வருபவர்களைப் பரிசோதனை செய்யும் ஆலோசனையுடன் ஒரு காவல்துறை ஆய்வாளர் கல்யாணத்திடம் வந்தார். காந்தியின் உயிருக்கு ஆபத்திருக்கிறது. அதனால் வழிபாட்டுக்கு வரும் ஒவ்வொரு நபரையும் கண்காணித்து அவர்கள் கொண்டுவரும் பைகளையெல்லாம் சோதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்று சொன்னார். 

கல்யாணம் உடனே பைகளைச் சோதிக்க வேண்டுமென்றால் அதை காந்தியின் அனுமதியைப் பெற்றுதான் செய்ய முடியுமென்று கூறி விட்டு இந்த விவரங்களை காந்தியிடம் தெரிவித்தார். 

அப்படி ஒவ்வொருவரையும் பரிசோதிப்பதை காந்தி சிறிதளவிலும் ஒத்துக் கொள்ளவே இல்லை. கல்யாணமும் உடனே அதையே காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார். 

"நீங்கள் வேண்டுமானால் காவல் காத்து கண்காணிக்கலாம். ஆனால் பைகளைப் பரிசோதிக்கக் கூடாதென காந்தி சொல்லிவிட்டார்'' எனத் தெரிவித்தார். 

சில நிமிடங்களிலேயே காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டவுடன் அங்கே காவல்துறை துணைத்தலைவர் வந்து காந்தியடிகளைச் சந்திக்க அனுமதி கேட்டார். 

கல்யாணம் அவரை காந்தியிடம் அழைத்துச் சென்றார். அவர் காந்தியிடம் உங்கள் உயிருக்கு ஆபத்திருப்பதாகவும் அதனால் முன்னெச்சரிக்கையாய் காவல் துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். எதிர்பாராமல் ஏதாவது சம்பவங்கள் நிகழுமானால் அது காவல்துறைக்கு இழுக்கேற்படுத்தி விடுமென்றும் கூறினார். 

அதற்கு காந்தியடிகள்,  " எனக்கு இது எதுவும் தேவையே இல்லை... என்னுடைய உயிர் கடவுளின் கையில் இருக்கிறது. நான் சாக  வேண்டுமென்று இருந்தால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் என்னை காப்பாற்ற இயலாது... தனது சுதந்திரத்திற்காக பாதுகாப்பைத் தேடுபவர்கள் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள்.

ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பரிசோதிப்பதற்கு அனுமதிப்பதை விட நான் பொது பிரார்த்தனையையே நிறுத்தி விடுவேன்''  என்றார். 

காந்தியை உடன்பட வைக்க இயலவில்லை. அதனால் காந்தி பிரார்த்தனைக்கு வருவதிலிருந்து திரும்பிச் செல்லும் வரை சந்தேகத்துக்கிடமானவர்களை கண்காணிக்கவும் அவரை யாரும் தாக்காதவாறு கவனமாகப் பாதுகாக்கவும் சீருடையற்ற காவலர்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டனர். 

அன்று மதியம் இரண்டு மணியளவில் ஆபாவும் மனுவும் காந்தியின் முன் அனுமதியுடன் அவர்களது நண்பர்களைப் பார்க்கச் சென்றனர். மாலை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்து விடுவோம் என்றும் உறுதி கூறிச் சென்றனர். மகாத்மாவின் மாலை உணவு வழங்கும் பொறுப்பு கல்யாணத்திற்கே வந்தது. 

இந்திய அரசு உருவாகி ஐந்தே மாதங்களேயாகியும் ஊடகங்களிலெல்லாம் பண்டிட் நேருவுக்கும் சர்தார் பட்டேலுக்குமிடையேயான கருத்து முரண்பாடுகளைப் பற்றியும் அவர்களது சண்டையைக் குறித்துமே  முழுக்க முழுக்கச் செய்திகள் நிரம்பி இருந்தன. இத்தகைய வதந்திகளால் மகாத்மா மிகுந்த வேதனைக்குள்ளானார். அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டுமென விரும்பினார். இது குறித்த விவாதத்திற்காக மாலை 4 மணிக்கு பட்டேலிடம் தன்னைச் சந்திக்க அழைத்திருந்தார். வழிபாட்டிற்குப் பின்னரே இந்தப் பிரச்னையைப் பேசலாமென்பதே காந்தியின் எண்ணமாக இருந்தது. ஆனால் பிரார்த்தனைக்கு முன்னரே காந்திக்கு அதைப் பற்றிப் பேச வேண்டியதாகி விட்டது. 

காந்தியடிகளுக்கு கல்யாணம் வழங்கிய அந்த எளிய உணவிற்குப் பின் பட்டேலுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஆபாவும் மனுவும் அங்கே வந்து விட்டார்கள். சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனை தொடங்க வேண்டும். ஐந்து மணிக்கும் மேலாக காந்திக்கும் பட்டேலுக்குமான உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த உரையாடலின் அக்கறையையும் முக்கியத்துவத்தையும் கருத்தில்கொண்டு அவர்களை இடைமறித்து நேரத்தை  நினைவுப்படுத்த அவர்கள் யாருக்கும் துணிவு இருக்கவில்லை. 

அங்கிருந்த சர்தார் பட்டேலின் மகள் மணிபென்னிடம் ஆபாவும் மனுவும் சைகையால் நேரத்தை நினைவுப்படுத்த 05.10 க்கு உரையாடல் முடிவுக்கு வந்தது. 

பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காந்தி இன்று வழக்கத்திற்கு மாறாக 15 நிமிடங்கள் கால தாமதமாக வர வேண்டி இருந்தது. அவருடைய வருகைக்காக சுமார் 300 பேர் மிகுந்த வருத்தத்துடன் காத்திருந்தனர். தொலைவிலிருந்து பார்க்கும்போது பிரார்த்தனைக்கு வந்த எல்லோரது கவனமும் காந்தியின் அறையை நோக்கி குவிந்திருந்ததை கல்யாணத்தால் காண முடிந்தது.  

"அதோ காந்தி வருகிறார்'' என்று சிலர் கூறுவதும் கல்யாணத்தின் காதில் விழுந்தது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும் மாணவர்கள் உடனடியாக அமைதியாக இருப்பதுபோல் கூடியிருந்தவர்கள் அமைதியாயினர்.

அப்போது எல்லோரும் கழுத்தை உயர்த்தி காந்தி வருகிற திசையை தியானமாய் பார்க்க ஆபா, மனு இருவரது தோள்களிலும் கையைப் போட்டுக் கொண்டு வழக்கம் போல் குனிந்த தலையுடன் தரையைப் பார்த்துக்கொண்டே மெதுவாக காந்தி நடந்து வந்து கொண்டிருந்தார். 

இருவரில் ஒருவர் காதிச் சேலையும் இன்னொரு பெண் காதி சல்வார் கமீசும் அணிந்திருந்தனர். காந்திக்கருகே இடது புறமாக கல்யாணம் நடந்து வந்து கொண்டிருந்தார். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நேரமானதை தெரிவிக்காததற்கு அந்த பெண்கள் இருவரையும் காந்தி நயமாகக் கண்டித்தார்.  

அவர்களிடம்  "நீங்களே எனது நேரக் காப்பாளர்கள்'' என்றவர், " இன்று எனக்கு பிரார்த்தனைக்கு காலதாமதமாகி விட்டது. இதெல்லாம் எனக்கு விருப்பமில்லாதது'' என்றும் கூறினார். 

பட்டேலுடனான காந்தியின் பேச்சு மிகவும் முக்கியமானதாக கருதியதால் தாங்கள் இடைமறிக்க விரும்பவில்லையென்று மனு கூறிய போது காந்தியின் வலுவான பதில் இவ்வாறு இருந்தது. "நோயாளிக்குச் சரியான நேரத்தில் மருந்து கொடுப்பதே தாதியின் கடமையாகும். அந்தப் பணியில் கால தாமதமானால் நோயாளி இறக்க நேரிடலாம்'' என்றார்.

பிரார்த்தனை தளத்திற்குச் செல்கிற படிகளில் அனைவரும் ஏறிக் கொண்டிருந்தனர்.  மக்கள் கைகளைக் கூப்பி நிற்க காந்தியடிகளும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். அவர் மேடைக்குச் செல்ல வசதியாக எல்லோரும் வழி விட்டனர். படிகளிலிருந்து சுமார் 25 அடி தொலைவில் ஒரு அடி உயர மர மேடையில் அவர் உட்காரும் இடமிருந்தது. கொலையாளியான நாதுராம் கோட்சே கைகளைக் குவித்து துப்பாக்கியை மறைத்துக் கொண்டு மக்களோடு மக்களாக காத்திருக்கிறான். காந்தியடிகள் ஐந்து அல்லது ஆறடிகளே வைத்திருப்பார். கல்யாணம் காந்தியின் இடப்புறமாக வந்து கொண்டிருந்தார்.

கோட்சே மிக அருகிலிருந்தே தொடர்ந்து துப்பாக்கியின் பொத்தானை அழுத்தினான். ஒன்று இரண்டென தொடர்ந்து மூன்றாவது குண்டும் பாய்ந்தது. காந்தியின் வயிற்றின் வலதுபுறத்தை குண்டுகள் துளைத்தன. உயிர்மூச்சு போயிற்று. காந்தியடிகள் அப்பால் விழ, ரத்தம் மளமளவென கொட்டியது. இந்தக் களேபரத்தில் காந்தியின் கண்ணாடியும் செருப்புகளும் வேறேங்கோ விழுந்தன. கல்யாணம் அதிர்ச்சியில் உறைந்து போனார். கல்யாணத்தால் எதுவும் பேச இயலவில்லை.

பின்பு தனிமையில் இருந்தபோது கல்யாணத்தின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது. காந்தி என்ற ஒளி மறைய மாலையை இருள் கவ்வத் தொடங்கி இருந்தது.

(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com