அண்ணலின் அடிச்சுவட்டில்... 23

காந்தி இறந்த மறுநாள் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அடுத்த நாள் அவரது அஸ்தியினை பெரிய பாத்திரத்தில் பிர்லா மாளிகையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டிலேயே வைத்திருந்தார்கள்.
அண்ணலின் அடிச்சுவட்டில்... 23

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

காந்தியின் அஸ்தி 
காந்தி இறந்த மறுநாள் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அடுத்த நாள் அவரது அஸ்தியினை பெரிய பாத்திரத்தில் பிர்லா மாளிகையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டிலேயே வைத்திருந்தார்கள். பல மாநிலங்களிலிருந்து முதலமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் காந்தியின் அஸ்தியை வாங்க வந்திருந்தார்கள்.

ஒவ்வொருவருக்கும் சிறிதளவு அஸ்தியினை கல்யாணம்தான் கொடுத்துக் கொண்டிருந்தார். 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் புனிதத் தலங்களிலும் அவை கரைக்கப்பட்டன. காந்தியின் அஸ்தியின் பெரும்பாலான பகுதி 1947 பிப்ரவரி மாதம் 12- ஆம் தேதியன்று அலகாபாத் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. அதற்காக மத்திய அரசு புதுடெல்லியிலிருந்து சிறப்பு ரயிலொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த ரயிலிலேயே கல்யாணம், கிர்பால் உட்பட பலரும் தலைவர்களுடன் பயணம் செய்தனர். ராஜேந்திர பிரசாத்திற்கு உடல் நலமில்லாமல் இருந்ததால் அவரால் அலகாபாத் நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போனது.

எல்லோருக்கும் அஸ்தியை வழங்கிய பின் இறுதியாக ஆற்றில் கரைப்பதற்கு முன்னதாக கல்யாணம் சிறிதளவு அஸ்தியினை தனியாக எடுத்து ஒரு பொட்டலத்தில் வைத்திருந்தார். அதில் அஸ்தியோடிருந்த பழைய ரோஜா இதழ்களும் நிறைய கிடந்தன. அதை மட்டும் கல்யாணத்திற்கு கரைக்க மனம் வரவில்லை. காரணம் காந்தியை இழந்த அவருக்கு அந்த அஸ்தி ஒரு துணையாக தோன்றியது. அது காந்தியோடு  அவர் இருப்பது போன்ற ஓர் உணர்வை அவருக்குத் தந்தது. 

கல்யாணம் அந்த அஸ்தியை வைத்திருப்பதை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. காரணம் அஸ்தியை வீட்டில் வைத்திருப்பதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கலாம். 

1965 காலகட்டத்தில் கல்யாணத்திற்கு வாழ்க்கை மிகவும் போராட்டமாக இருந்தது. நிறையப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

பொருளாதாரரீதியாக பலர் அவரை ஏமாற்றிவிட  மிகுந்த மனக் குழப்பங்களுக்குள் மூழ்கி இருந்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.மாரிசாமி கல்யாணத்தின் நெருக்கமான நண்பர். அவர் ராஜாஜியின் சுதந்திராக் கட்சியில் இருந்தார். கல்யாணம் ராஜாஜியுடன் பணியாற்றிக் கொண்டிருந்த தருணமது. அப்போது எஸ்.எஸ்.

மாரிசாமி ராஜாஜியைப் பார்க்க வருவார். அப்படி கல்யாணத்தோடும் எஸ்.எஸ்.மாரிசாமி நெருக்கமாகவே இருந்தார். 

ஒருநாள் கல்யாணம் தனது பிரச்னைகளை நட்புரீதியாக எஸ்.எஸ்.மாரிசாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பேச்சுவாக்கில் காந்தியின் அஸ்தி தனது வீட்டிலிருப்பதையும் சொல்லி விட்டார். 

உடனடியாக அவர், "அஸ்தியெல்லாம்  யார் வீட்டில் வைத்திருப்பார்கள். அது தீட்டல்லவா. அதனால்தான் உங்களுக்கு இந்த கஷ்டமெல்லாம்'' என்று கூறி உடனடியாக அதைக் கடலில் கொண்டு போட்டு விடச் சொன்னார்.  அதைக் கேட்டும் கல்யாணத்திற்கு மனம் ஒப்பவில்லை. காந்தியின் புனிதமான உடலின் எஞ்சிய அந்த சாம்பலைக் களைவதற்கு அவருக்கு மிகவும் தயக்கமாகவே இருந்தது. ஆனாலும் மீள முடியாத அளவிற்குத் தோன்றிய  தனது சொந்த பிரச்னைகளும் அவரது நிர்பந்தமும் அவரை அந்த முடிவிற்கு பலவந்தப்படுத்திற்று. 

எஸ்.எஸ்.மாரிசாமிக்குத் தெரியாமலேயே சிறிதளவு சாம்பலை இன்னொரு காகிதத்தில் பொட்டலமாய் மடித்து வைத்து விட்டு மீதியை தனிப் பொட்டலமாய் எடுத்துக் கொண்டு எஸ்.எஸ்.மாரிசாமியின் காரிலேயே கல்யாணம் மெரினா கடற்கரைக்குச் சென்றார். யாருக்கும் தெரியாமல் கடலில் கரைத்தார். பூக்களின் இதழ்களிருந்த பகுதிகளனைத்தையுமே கடலில் கரைத்து விட்டார். அப்படி உலகறிந்த காந்தியின் அஸ்தி எதிர்பாராத ஒரு நாள் இரவு மெரினா கடற்கரையில் வங்களா விரிகுடாவில் மீண்டும் கலந்தது.

காந்திக்கு வந்த கவிதை
காந்திக்கு அப்போது வரும் வழக்கமான கடிதங்களுக்கிடையே ஒரு நல்ல கவிதையும் வந்திருந்தது. அந்தக் கவிதையை கல்யாணம் எப்போதும் குறிப்பிடத் தவறுவதில்லை.   அன்றைய நாட்டின் நடப்பு நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக அந்தக் கவிதை இருந்தது. கவிதையை அனுப்பியவர் அதன் நகலை ஜவகர்லால் நேரு, ஆசார்ய கிருபளானி, வல்லபாய் பட்டேல், எஸ். பி. முகர்ஜி, பல்தேவ் சிங், பிரபுல்ல சந்திர கோஷ், சரத் சந்திர போஸ், அமிர்த பிரதாப் பத்திரிகையின் ஆசிரியரென பலருக்கும் அனுப்பி இருந்தனர். 

மனு தந்த பரிசு
 கல்யாணம் காந்தி அளிக்கும் ஆங்கிலக் கடிதங்களையே அதிகமாக தட்டச்சு செய்து கொண்டிருந்தார். எப்போதாவது அவர் சொல்லச் சொல்ல இந்தியில்கூட எழுதுவது உண்டு. குஜராத்தி மொழியிலான கடிதங்கள் தொடர்பான பணிகளை அவருடைய பேத்தி மனுகாந்திதான் கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்காக கல்யாணம் தட்டச்சு செய்து காந்தி கையெழுத்திட்ட காகிதங்களின் நகல்கள் கல்யாணத்திடம் இருந்தன. காந்தி உயிரோடு இருக்கும்போது அவர் தட்டச்சு செய்யத் தந்த அந்த படிவ மாதிரிகளுக்கு கல்யாணம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அன்றாடம் தேவையற்றவையென கருதும் மற்ற காகிதங்கள் போலவே அதனைக் கருதி வந்தார். காந்தி இறந்த பின்புதான் அவரது கையெழுத்தின் முக்கியத்துவம்  தெரிய வந்தது. அதன்பின் காந்தி தொடர்பான சின்ன துண்டு காகிதத்தையும் பத்திரப்படுத்தத் தொடங்கினார். 

காந்தி இறந்தபின் பிர்லா மாளிகையை விட்டு கல்யாணமும் தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது காந்திக்கு வந்த கடிதங்களெல்லாம் கல்யாணமிருந்த வீட்டு முகவரிக்கே வந்தன. அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து வரும் பன்மொழிச் செய்தித்தாள்கள் அவரிருந்த வீட்டு அறைகளை நிரப்பிவிட்டன.   இந்திய மொழிகளோடு நூற்றுக்கணக்கானஉலக மொழிச் செய்தித்தாள்கள் ஏராளமாய் இருந்தன. அவை முழுவதும் காந்தியைப் பற்றிய செய்திகளால் நிரம்பி இருந்தன.

ஒருவேளை பிர்லா மாளிகையிலிருந்து காந்தி அந்த நேரத்தில் வெளியூர் பயணமாகியிருந்தால் தேவையற்ற கடிதங்களென அங்கேயே அவை குப்பை பெட்டிக்கு போயிருக்கும். இவ்வளவு கடிதங்கள் சேர்ந்திருக்காது. 

காந்தி இறந்த பின் சில நாட்கள் கழித்து மனுகாந்தி கல்யாணத்திடம் "காந்தி எழுதிய கடிதங்கள் ஏதாவது அவரது நினைவாக கொடுங்களேன்'' என்றார்.  கல்யாணமும் உடனடியாக காந்தி எழுதிய இரண்டு, மூன்று கடிதங்களை அவருக்குக் கொடுத்தார்.  அதைக் கொடுத்ததும் அதற்குப் பரிகாரமாக ஏதாவது தர வேண்டுமென்று எண்ணி, "உங்களுக்கும் நானொரு முக்கியமான பொருளொன்றைத் தரப் போகிறேன். காந்தியுடைய அந்தப் பொருள் உலகில் ஒருவரிடமும் இருக்காது'' என்று கூறினார் மனு.  

கல்யாணமும் மகிழ்ச்சி அடைந்தார். கிடைக்கப் போகும் காந்தியின் அந்தப் பொருளை அறிந்துகொள்ளும் ஆர்வம் அவருள் உச்சத்தில் இருந்தது.   அவர் கல்யாணத்திடம் தந்த அந்தப் பொருளானது காந்தியின் ஐந்து நகங்கள். காந்தியை மனுகாந்தியே குளிப்பாட்டி அவருக்கு நகங்களைக் கத்தரித்து விடுவார். அந்த நகங்களை அவர் பத்திரமாக வைத்திருந்தார். அந்த ஐந்து நகங்களையும் ஒரு பொட்டலத்திலிருந்து பிரித்துக் காட்டினார். இது காந்தியுடைய பெருவிரல், ஆள்காட்டி விரல், நடு விரல், நான்காவது விரல், சுண்டு விரலென ஐந்து விரல் நகங்களையும் பிரித்துக் காட்டினார். 

"எனக்கு நகத்தை வைத்துக்கொள்ள பிடிக்கவில்லை''  எனக் கூறி மனுவிடம் அதை திருப்பிக் கொடுத்து விட்டார்.   

காந்தியுடைய நகத்தை ஓர் அழுக்குப் பொருளாக வர்ணித்ததில் மனு காந்திக்கு கல்யாணத்திடம் சிறிதளவு வருத்தம்.  அவரது இதயமெழுதிய கடிதங்களையும், அவர் உபயோகித்தப்  பொருட்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அவை நமது உள்ளுணர்வைத் தூண்டும் அடையாளங்கள். அவரது உயர்ந்த கொள்கைகளை கடைப்பிடித்து பாதுகாப்பதே அவருக்குப் பிடித்தமானது என்பதே கல்யாணத்தின் கொள்கை. 

கல்யாணத்தைப் பொருத்தவரை கடவுள் நம்பிக்கை நன்றாகவே இருக்கிறது. அவர் அன்றாடம் செய்யும் பணிகளையே கடவுளின் உருவத்தில் காண்கிறார். கடவுளின் உருவமாக காந்தியையே தன் இதயத்தில் வைத்திருக்கிறார். அவருக்கு கோயிலுக்குச் செல்லும் வழக்கம் இல்லை. ஆனால் எல்லா மத வழிபாட்டையும் மதிப்பவர். காலையில் எழுந்ததுமே ஒரு குறிப்பேட்டில் சர்வமத வழிபாட்டு வாசகங்களை எழுதிய பின்பே அன்றைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். 

அந்தப் பழக்கத்தின் பின்னணியில் ஒரு சம்பவம் இருக்கிறது. கல்யாணம் ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போது அவர் குளித்துக் கொண்டிருந்தார். அவருக்காக அவரது வீட்டு முன்னறையில் காத்துக் கொண்டிருந்தார். அவர் குளித்து விட்டு அந்த அறைக்கு வந்ததுமே அவரிடம் கல்யாணம் பேச முற்பட்டார். 

ஆனால் அவர் கல்யாணத்திடம் எதுவும் பேசவில்லை.  அவர் கல்யாணத்தைப் பார்த்து "பேசாதே'' என கையால் சைகை காட்டினார்.   ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஒரு குறிப்பேட்டை எடுத்து அதில் எழுத ஆரம்பித்தார். அதில் ஸ்ரீராம ஜெயம், ஸ்ரீராம ஜெயமென சில வரிகள் எழுதினார். பின்னரே பேச ஆரம்பித்தார். 

அந்த நல்ல பழக்கம் கல்யாணத்தின் மனதினில் ஒரு விதையினை விதைக்க அதைத் தானும் தொடர எண்ணினார். அதை நடைமுறைப்படுத்தவும் செய்தார். ஸ்ரீராம ஜெயமென எழுத ஆரம்பித்த அந்தப் பழக்கம் காந்தியுடன் பணியாற்ற ஆரம்பித்த பின் சர்வமத வழிபாட்டு வாசகங்களுடன் தொடர்ந்தது. காலையில் முதலில் "ஸ்ரீராம ஜெயம்' என ஐந்து தடவை எழுதுவார். அடுத்து "அல்லாஹு அக்பர்' என ஐந்து தடவை எழுதுவார். பின் "ஜீசஸ் நெவர் ஃபெயில்ஸ்' என ஐந்து தடவை எழுதுவார். பின் மற்ற வேலைகள் தொடரும். 

கல்யாணத்திடம் தூய்மையான நான்கு வெண் முயல்கள் இருக்கின்றன. அவை வெவ்வேறு மதங்களின் அடையாளங்கள். அந்த காகிதத்தை ஒரு முறையில் ஒன்றிணைத்தால் அங்கே மகாத்மா காந்தி காட்சி தருவார்.

காந்தியும் நோபெலும்
போரும் அதற்கு கொடுக்கிற விலையும் கிடைக்கிற வெற்றியும் படை வீரர்களுக்குரியது. அதில் கிடைக்கிற அமைதி அமுக்கி வைக்கிற அணுகுண்டைப் போன்றது.   இந்தியாவின் இறுதி வைஸ்ராயாக இருந்த லார்டு லூயிஸ் மவுண்ட் பேட்டன் 1947 ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று காந்திக்கு ஒரு தந்தி கொடுத்தார்... அந்த தந்தியின் செய்தி இது.

"என் அன்பிற்குரிய காந்திஜி,
பஞ்சாபில் நாங்கள் எங்கள் கைகளில் பெருங் கலகத்தையும் 55000 படை வீரர்களையும் கொண்டிருக்கிறோம். வங்காளத்தில் எங்கள் படை ஒரே ஒரு மனிதரைக் கொண்டிருக்கிறது. அங்கு எந்தக் கலகமும் இல்லை. ஒரு ஆட்சியாளரென்ற அளவிலும் இங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிற அதிகாரி என்ற அளவிலும் இந்த ஒரு மனிதர் எல்லைப் படைக்கு (ர்ய்ங் ம்ஹய் க்ஷர்ன்ய்க்ஹழ்ஹ் ச்ர்ழ்ஸ்ரீங்) என்  நன்மதிப்பினை அளிக்க அனுமதிக்கப்பட வேண்டும்'  என்று குறிப்பிட்டிருந்தார்.

(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com