அண்ணலின் அடிச்சுவட்டில்...25

சுதந்திரத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு பாட்ஷா கான் அமைதியின் தூதராக விளங்கினார். அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் அவரின் இந்திய வருகையின்போது
அண்ணலின் அடிச்சுவட்டில்...25

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
சுதந்திரத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு பாட்ஷா கான் அமைதியின் தூதராக விளங்கினார். அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் அவரின் இந்திய வருகையின்போது அவருக்கு அளிக்கப்பட்ட  உயர்ந்த வரவேற்பும் இருந்தது. அவரை அறியாத மக்கள் அவர்மீது காட்டிய அளப்பரிய பாசம் மிகுந்த வியப்பிற்குரியது. இதுவே இவரைத் தவிர்த்த வேறொரு அயல்நாட்டு தலைவர் அல்லது மற்ற விருந்தினர்களின் வருகையாக இருந்தால், அது அவரவர் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட வெறும் பயணமாகவே இருந்திருக்கும். 

பாட்ஷாகான் ஒரு பொது மனிதர். அவருடையப் பயணத்தில் பகட்டான ஆரவாரங்கள், பாசாங்கான காட்சிகளென எதுவுமில்லை. ஒருங்கிணைந்த இந்தியாவின் குடிமகனாக இருந்து பாகிஸ்தான் பிரிவினையில் அவரது மாநிலம் பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டதால் பாகிஸ்தானின் குடிமகனாக ஆக்கப்பட்டவர். அவரைப் போன்ற மனிதர்களைப் பார்ப்பது இயலாது. அவர் ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகனாக இருந்தாலும் அவரை ஓர் உலகக் குடிமகனாக அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும். சுதந்திரத்திற்குப் பின் நம் நாட்டிற்குப் பயணம் செய்த எல்லா அயல்நாட்டுத் தலைவர்களும் நம் நாட்டின் வளர்ச்சியையும் ஆட்சியையும் குறித்து நல்ல கருத்துக்களுடன் போற்றிப் புளகாங்கிதமடைந்தனர். ஆனால் பாட்ஷாகான் மட்டுமே இந்தியாவின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டார். அந்தப் பயணத்தில் இந்தியாவை அவர் கண்ட போது மிகவும் கொதித்துப் போனார். 

அவர் அப்போது தோற்றமளித்த இந்தியாவின் மயக்க மூட்டுகிற மாயத் தோற்றத்திலிருந்து வெளியே வந்து மக்களுக்கு துயரமூட்டுகிற கோரமான குளறுபடியினைக் கண்டு மிகவும் மனம் வருந்தினார். நாம் நம் தேசத் தந்தைக்கு காட்டும் பரிவானது உதட்டளவில் மட்டுமே உள்ளதாக மழுப்பல் வார்த்தைகளேதுமின்றி மனம்திறந்து சொன்னார். 

அவருக்களிக்கப்பட்ட "கெளரவ டாக்டர்'  பட்டத்தினை மறுத்தார்.   மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைக்கச் சொன்ன போது அதையும் மறுத்தார்.  உயர்ந்த எளிமைக்கு காந்தியைப் போல் உலகின் உன்னத புருஷனாகவே  திகழ்ந்தார். அற்பமான பெருமைகளுக்கும் விளம்பரங்களுக்கும் அவர் சிறிதும் முக்கியத்துவம் அளிக்கவில்லை.

அவரது இந்தியச் சூறாவளி சுற்றுப்பயணத்தில் பாட்ஷா கான் கூறிய எல்லாவற்றையுமே மிகுந்த மதிப்பிற்குரிய அப்போதைய தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயண், ஆச்சார்ய கிருபளானி, ராஜாஜி போன்றவர்கள் ஏற்கெனவே அடிக்கடி சொல்லி இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர்களின் அறிவுரைகள் அப்போதைய ஆட்சியிலிருந்த அதிகார வர்க்கத்தினரால் பேரளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தன. அந்த நிலையில் அப்போதைய அரசின் கொள்கைகள் குறித்த பாட்ஷா கானின் தெளிவானக் குற்றச்சாட்டும், நாட்டில் அப்போது நடப்பவை  குறித்து ஒளிவுமறைவின்றி திறந்த உறுதியான  கண்டனமும் அந்தத் தலைவர்களின் சிந்தனைக்கு நல்ல வளமான உணவளித்திருக்க வேண்டும், சுதந்திரம் கிடைத்த சில நாட்களிலேயே அரசாங்கம் சென்று கொண்டிருக்கிற பாதை மிகவும் தவறானதாக காந்தி கருதினார். காந்தியின் கடைசி நாட்களில் எல்லா செய்தித்தாள்களிலும் "ஹரிஜன்'  உட்பட்ட இதழ்களிலும் அவர் எழுதிய  கட்டுரைகளில் அந்த வருத்தம் படர்ந்து இருந்தது. அப்போது அதைத் தொடர்ந்து படித்தவர்கள் அதை நன்கு அறிந்திருந்தனர். அவரது சில கனவுகளாவது நனவாகுமென்ற நம்பிக்கையினையும் இழந்து காந்தி மிகுந்த விரக்திக்குள்ளானார். அரசாங்கத்தின் பெரும்பாலான செயல்களை எதிர்த்து புறக்கணித்து ஹரிஜனில் இதயத்தைத் திறந்து தன் தாள முடியாத துயரத்தைக் கொட்டி எழுதினார். மிகவும் மோசமான நிலையில் நம் தேசத்தை பார்ப்பதற்கு நான் வாழவே விரும்பவில்லையெனவும் மிகுந்த துயரத்துடன் எழுதினார். 

அத்தகைய காந்தியைப் போலவே வாழ்ந்த பாட்ஷா கானின் இந்திய வருகையும் எல்லாருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அங்கே அவரை வரவேற்க வந்த விமான நிலைய அதிகாரிகள் அவரது பயண சாமான்கள் மற்றும் பைகள் குறித்து கேட்ட போது அவர் தன் கை அக்குளில் இடுக்கி வைத்திருந்த பொதியைக் காட்டினார். அதுவே தனது பயணப் பையாக கூறினார். அதற்குள் ஒரு ஜோடி மாற்றுத் துணியும் ஒரு தலை துவட்டும் துண்டு மட்டுமே இருந்தன. மனதாலும் உடலாலும் எளிமையின் உருவாக திகழ்ந்த எல்லை காந்தி அவ்வாறு அன்று எல்லோரையுமே வியப்பில் ஆழ்த்தினார். 

பாட்ஷா கான் நேருவின் கண்டு பிடிப்பு. நேருவின் வழியாக காந்திக்கு அறிமுகப்படுத்தப் பட்டவர். தனது இயல்பிற்கும் எண்ணத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்புடையவராகவும் ஆறுதலளிப்பவராகவும் காந்தியை அவர் கண்டார். அதனால் பாட்ஷா கானுக்கு  காந்தியோடு பழகுவதற்கு மிகவும் எளிதாக இருந்தது. அவர் மற்றவர்களோடு இருப்பதை விட, காந்தியடிகளோடே வீட்டில் அதிகமாக இருந்தார். அதற்கு அவர்களின் பொதுவான எண்ணப் பிணைப்பும், வாழ்க்கை பிரச்னைகளில் அவர்களின் ஒரே மாதிரியான அணுகுமுறையும் முக்கியக் காரணமாக இருந்தது. அவரது சுயநலமற்ற எளிமையும் தாழ்த்தப் பட்டவர்களுக்காக தயக்கமற்ற மன உணர்வும் அவருக்கு எல்லை காந்தி என்ற பெரு மரியாதைக்குரிய பெருமையை அளித்தது.  

பாட்ஷாகானின் அழைப்பின் பேரில் 1938-இல் அந்த எல்லை மாகாணத்தில் காந்திஜி வெற்றிகரமான தனது பயணத்தை மேற்கொண்டார். குதாய் கித்மட்கர்களினிடையே தொடர்ந்து பல கூட்டங்களில் பேசினார். குதாய் கித்மட்கர் என்பது கடவுளின் பணியாளர்களெனப் பொருள்படும். அகிம்சையின் மகத்துவத்தையும் அதைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் குறித்தும் போர்க்குணத்துடன் கொதித்திருந்த பட்டான் இன மக்களிடையே புரியுமளவிற்கு எளிய மொழியில் காந்தி விளக்கிப் பேசினார். அந்த மக்களிடமிருந்து காந்தியடிகள் பெற்ற பாசமிகு வரவேற்பே கான் சகோதரர்களில் குறிப்பாக பாட்ஷாகானுக்கு அந்த மக்களிடையே இருந்த அதி முக்கியமான செல்வாக்கிற்கு சான்றாகும். 

பாட்ஷாகானின் மற்றொரு சகோதரர் கான் சாகிப் ஆவார்.    

வரலாற்று சிறப்பு மிக்க அந்தப் பயணத்தின் இறுதியில் காந்தியடிகள் பாட்ஷா கானைப் பற்றி எந்தக் கேள்விக்குமிடமின்றி அவரொரு கடவுளின் மனிதர் என்றார். 

பாட்ஷா கானைப் பொறுத்தவரைக்கும் எந்தப் பாசாங்கும் கிடையாது. எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட எளிமையான மனிதர். 

பாட்ஷா கான் 1947-இல் புதுடெல்லியில் பங்கி காலனியில் காந்திஜியுடன் தங்கிக் கொண்டிருந்தார். காந்தியடிகளின் அறைக்கருகே ஓர் ஓலை வேயப்பட்ட சிறிய குடிசையில்தான் அவர் தங்கி இருந்தார். அந்த அறைக்குள்ளேயே அவரது பகல் பொழுதானது படிப்பது, தியானம் செய்வது, சந்திக்க வரும் நண்பர்களோடு உரையாடுவதென கழிந்தது. அவரைச் சந்திக்க விரும்பும் பார்வையாளர்களுக்கெல்லாம் அந்த சந்திப்பு மிகவும் பரிவானதாக இருந்தது. அணுகுவதற்கு மிகவும் எளிய மனிதராக அவர் விளங்கினார். நேர்மையான எளிமையான கூச்ச உணர்வுடையவராக அவர் இருந்தார். 

காந்தியடிகளின் அன்றாடப் பணிகளுக்கு எந்த அளவிற்கும் இடையூறு விளைவிக்கக் கூடாதென்ற அச்சத்தில் அவர் காந்தியடிகளின் அறைக்குள் கூட செல்ல மாட்டார். மாலை பிரார்த்தனைக் கூட்டத்தை தவிர்த்து அவர் அவரது குடிசையை விட்டு வருவதென்பதே மிகவும் அரிதாக இருந்தது. உணவு நேரத்தில் மட்டும் அமைதியாக சமையலறைக்கு வருவார். மற்றவர்களோடு சேர்ந்தோ அல்லது தனித்தோ எளிமையான சப்பாத்தி, பருப்பு, மற்றும் காய்கறிகளை உட்கொள்வார்.

தனது குணத்தால், உயர்ந்த இயல்பால், அசாதாரணமான எளிமையால் எல்லோரையும் கவர்ந்த மனிதராக பாட்ஷாகான் திகழ்ந்தார். 

குளிர்ச்சியான பகுதியில் வாழ்ந்த பாட்ஷாகானுக்கு டெல்லியில் கடும் வெப்பம் ஒத்துக் கொள்வதில்லை. கடுமையான கோடை வெப்பம் பாட்ஷாகானின் தலையில் பல கொப்புளங்களை உருவாக்கியது. அதன் வலியும் வேதனையும் இயல்பில் அவரின் நிதானத்தை கலைத்துக் கொண்டேதான் இருக்கும். அப்படி இருந்தும் அவர் அதை மனதில் எடுத்துக் கொள்ளாமல், எந்தக் கடினத்தையும் வெளிப்படுத்தாமல் இயல்பாகவே தனது அன்றாடப் பணிகளில் மூழ்கிக் கொண்டிருந்தார். 

பாட்ஷா கானின் எளிமையும் சிக்கனமும் காந்தியடிகளையே பிரமிக்க வைத்திருக்கிறது. இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் பாட்ஷா கான் டெல்லியிலிருந்து பெஷாவருக்கு செல்ல வேண்டிய தருணம். அதுவே அவர் காந்திஜியை விட்டுப் பிரிந்து செல்கிற இறுதித் தருணமாக இருக்கும். அப்போது காந்தியடிகள் கல்யாணத்தை அழைத்தார். சாந்தினி செளக் சென்று அங்கே காதி பண்டாரில் பாட்ஷா கானுக்காக ஒரு ஜோடி சல்வாரும் குர்தாவும் வாங்கி தைத்து வரச் சொன்னார். அதை பாட்ஷாகான் செல்லும் போது அவரிடம் கொடுத்து விடுவதற்கான ஏற்பாடாக அது இருந்தது. 

பாட்ஷா கான் உருவத்தில் பெரிய மனிதர். அவருடைய அளவு எல்லோருக்குமே தெரிந்ததாகவே இருந்தது. கல்யாணமும் காதி பண்டார் சென்று பாட்ஷா கானுக்கு விருப்பமான சாம்பல் வண்ணத்தில் ஆடைகள் வாங்கினார். அதை  தைத்து காந்திஜியிடம் கொடுக்கவும் செய்தார். காந்தியடிகளும் அவற்றை வாங்கி பாட்ஷாகான் விடைபெறுகிறபோது கொடுத்தார். உடனே எனக்கு ஆடைகளெல்லாம் தேவையில்லை என்று வலுவாக அவற்றை வாங்க மறுத்தார் பாட்ஷாகான். ஒரு ஜோடி ஆடைகளுக்கு மேல் வைத்திருப்பதே ஆடம்பரமென்றார். காந்தியடிகள் இதயபூர்வமாக சிரித்தார். முடிவில் இன்முகத்துடன் பாட்ஷாகானை இணங்க வைத்து அந்த ஒரு ஜோடி ஆடைகளை அவரிடம் வெற்றிகரமாக கொடுத்து விட்டார் காந்தி. 

பாட்ஷா கான் சாதாரணமாக செய்தித் தாள்களை மேலோட்டமாகவே படிப்பார். ஆனால் அவரது எல்லை மாநிலம் குறித்த செய்திகள் ஏதாவது வந்தால் அதை கூர்ந்த கவனத்துடன் படிப்பார். மீண்டும் மீண்டும் படிப்பார். ஒரு நாள் வட மேற்கு எல்லை மாகாண பிரச்னைகள் குறித்துப் பேச அவர் ஜின்னாவை சந்தித்தார். அடுத்த நாள் காலை செய்தித்தாளிலேயே அவர்களது சந்திப்பு குறித்த செய்தி வந்துவிட்டது. அந்தச் செய்தியையும் ஜின்னாவே கொடுத்திருந்தார். அவற்றை அறியும் ஆவலுடன் கல்யாணத்திடம் அந்த அறிக்கையைப் பார்த்து வரச் சொல்லி இருக்கிறார் பாட்ஷாகான். 

பின் அது குறித்து இந்த செய்தியின் உள்ளடக்கம் மிகுந்த தவறானது என்றார் பாட்ஷாகான். இதே போன்று நான் எதுவுமே சொல்லவே இல்லையே. இதற்கு நாம் மறுப்பறிக்கை அனுப்ப வேண்டும் என்று கூறி காந்தியடிகளின் அனுமதியுடன் ஒரு மறுப்பறிக்கையும் அனுப்பினார்.

சுதந்திரம் கிடைத்தபோது வட மேற்கு எல்லை மாகாணத்தின் நிலை தெளிவற்று இருந்தது. அங்கே முஸ்லிம் இன மக்கள் அதிகம் வசித்து வந்தாலும் ஆண்டுகள் பலவாய் அங்கே பாட்ஷாகானின் மூத்த சகோதரரான டாக்டர் கான் சாகிப்பின் தலைமையின் கீழ் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அவரே அங்கே முதலமைச்சராக இருந்தார். அப்போது இந்த மாநிலத்தை இந்தியாவோடு இணைப்பதா அல்லது பாகிஸ்தானோடு சேர்த்து விடுவதாவென கேள்வி எழுந்தது. பொதுமக்களின் கருத்துக் கேட்பு வாக்கெடுப்பின் மூலமாக அந்தப் பகுதி மக்களின் முடிவை அறிந்து செயல்படுத்தலாமென்பதே ஜின்னாவிற்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கருத்தாகவும் இருந்தது. 

அப்போது அங்கே முஸ்லிம் லீக்கிற்கு குறைந்த ஆதரவே இருந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு அங்கே மிகப் பெரிய அளவில் ஆதரவும் வரவேற்பும் இருந்தது. அங்கே இருக்கும் பதட்டமானச் சூழ்நிலையில் மக்களின் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பானது ஒரு ரத்தக் களரியை உருவாக்கலாம்... அல்லது அது ஒரு நெடிய பகைமைக்கு அடிகோலலாமென்ற அச்சம் பாட்ஷாகானுக்கு இருந்தது. அதனால் அதை அவர் எப்படியாவது தவிர்க்கவே விரும்பினார். மேலும் அவருடைய இந்தக் கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால் அந்த மாநில அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றும் கூறினார். 

பாட்ஷாகானின் கருத்திற்கு காந்தி சம்மதம் தெரிவித்தாலும் நேருவிற்கு அவரது விளக்கம் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. நேருவைப் பொருத்தவரை பொது மக்களின் கருத்து வாக்கெடுப்பு வழியாக தீர்வு காண்பதே உயர்ந்த வழியாக இருந்தது.. வாக்கெடுப்பின் தோல்வி பயமே பாட்ஷா கானை அந்த வழியில் சிந்திக்க வைத்திருப்பதாக நேரு கருதினார். காந்திக்கும் நேருவுக்குமிடையே இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தது. அதனால் இறுதியில் எல்லை மாகாணம் சார்ந்த பிரச்னைகளுக்கான வழிகாட்டுதல்களுக்கு நேருவையே அணுகிக் கொள்ள பாட்ஷா கானை அறிவுறுத்தும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார் காந்தி. 
நேருவுக்கு எழுதிய கடிதத்தில் காந்திஜி குறிப்பிட்டிருந்தார்..

"உங்களை என்னோடு நான் வைத்திருக்காமல் இருந்தால் குறைந்தது எல்லை மாகாணம் தொடர்பான ஆலோசனையிலிருந்து எனக்கு ஓய்வு கிடைத்திருக்கும். நீங்களே அவருக்கு வழி காட்டுங்கள். அவருக்கும் உங்களுக்குமிடையே என்னால் தலையிட முடியாது. அவ்வாறு செய்யவும் மாட்டேன். நீங்கள்தானே அவரை என்னிடம் கொண்டு வந்தீர்கள்? நீங்கள் தீர்மானித்து என்னிடம் சொல்லுங்கள்.'' என்று கூறினார் காந்தி தனது கடிதத்தில். 

இறுதியில் பாட்ஷா கானின் கோரிக்கை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அந்த எல்லை மாகாணத்திற்கு என்ன நேர்ந்ததென்பதற்கு எதுவும் சொல்லத் தேவையில்லை... அதுவே பாகிஸ்தானின் ஒரு பகுதியாயிற்று.
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com