அண்ணலின் அடிச்சுவட்டில்...20

கல்யாணம் காந்தியை முதன் முதலில் சந்தித்ததற்கு முன்பே 1942-இல் நாக்பூரில் அவரை எம். எஸ். சுப்புலெட்சுமி சந்தித்திருக்கிறார்.
அண்ணலின் அடிச்சுவட்டில்...20

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்                                                 காந்தியும் எம்.எஸ். சுப்புலட்சுமியும்

கல்யாணம் காந்தியை முதன் முதலில் சந்தித்ததற்கு முன்பே 1942-இல் நாக்பூரில் அவரை எம். எஸ். சுப்புலெட்சுமி சந்தித்திருக்கிறார். அவருடைய உள்ளத்தை உருக வைக்கும் பாடலால் அப்போது அவர் எல்லோருடைய மனதையும் கவர்ந்திருந்தார். காந்திக்கு மிகவும் பிடித்தமான "வைஷ்ணவ ஜனதோ'  என்ற பஜனைப் பாடல் எம். எஸ்ஸுக்கும் மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அப்போது அவரது இசைக் கச்சேரிகளின் நிறைவில் இந்தப் பஜனைப் பாடலைப் பாடி பார்வையாளர்களை உருக வைப்பார். அப்போது ஒரு சேர அவர்களின் கண்களில் நீர் நிரம்பி இருக்கும். அந்தப் பாடலின் ஏற்ற இறக்கங்களில் சதா பயணித்துக் கொண்டிருந்த எம். எஸ். எப்போதுமே அதைப் பாடிய விதத்தில் திருப்தி அடையவே இல்லை... இன்னும் இன்னும் அந்தப் பாடலில் மெருகேற்றிக் கொண்டே இருந்தார். 

1947-இல் காந்தியின் 78-ஆவது பிறந்த நாள் கொண்டாடவிருந்த நேரம். அதற்கு ஒரு வாரம் முன்பு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் சுசித்ரா கிருபளானி சென்னையிலுள்ள கல்கி அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 

டி. சதாசிவமுடன் பேச வேண்டுமென வேண்டினார். கல்கியை நிறுவியவர்களுள் எம். எஸ். சுப்புலெட்சுமியின் கணவரும் ஒருவராவார். சதாசிவம் தொலைபேசியை எடுத்த போது வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியின் பிறந்த தினத்தையொட்டி சில இசை நிகழ்ச்சிகளை காந்தியின் முன்பு நிகழ்த்த இருப்பதாகவும், அதில் பங்குபெற எம். எஸ்ஸிற்கு புது டெல்லி வர இயலுமாவெனக் கேட்டார். இன்னும் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டு காந்திக்கு மிகவும் விருப்பமான  " ஹரி தும் ஹரோ' என்ற பஜனைப் பாடலைப் பாட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார் சுசித்ரா. 

சதாசிவத்திற்கு அந்தக் கோரிக்கையை பணிவுடன் மறுக்க வேண்டி இருந்தது. குஞ்சம்மாவிற்கு (எம்.எஸ்) அந்தப் பாடல் தெரியாதென்றார். மேலும் அந்த குறிப்பிட்ட வாரத்தில் குடும்பம் சார்ந்த முக்கியப் பணிகளுமிருந்ததால், அந்த வேண்டுதலை மறுக்க வேண்டிய நிர்ப்பந்தமுமிருந்தது அவருக்கு. அதனால் அந்தப் பாடலுக்கு வேறு நல்ல இசைக் கலைஞர் ஒருவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டினார் சதாசிவம். 

காந்தியின் பிறந்த தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சதாசிவத்திற்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. கிருபளானியிடமிருந்துதான் அந்த அழைப்பு வந்திருந்தது.  "எம்.எஸ்ஸால் அன்று வர இயலாவிட்டாலும் இன்னொருவர் பாடி அந்த பஜனைப் பாடலைக் கேட்பதை விட எம். எஸ். சுப்புலட்சுமியே பாடிப் பதிவு செய்யப்பட்ட பாடலையே காந்தி கேட்கலாமே'' என்றார். எம். எஸ்ஸின் பாடலின் மேல் காந்திஜிக்கிருந்த அளவற்ற விருப்பத்தை வெளிப்படுத்திய அந்த வேண்டுதலை சதாசிவத்தாலும் எம்.எஸ்.ஸாலும் மறுக்க இயலவில்லை. 

அன்றிரவு ஒன்பது மணிக்கே அவர்களது நெருங்கிய நண்பரான சிறந்த பியானோ இசைக் கலைஞராக இருந்த வைத்யநாதனை அழைத்துக் கொண்டு சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திற்குச்  சென்றனர். வைத்தியநாதன் அந்தப் பாடல் வரிகளுள் உள்ளார்ந்து பயணித்தார். அது கிருஷ்ணனை வேண்டி வழிபடும் மீராவின் பாடல்.  "திரெளபதியைக் காத்த கருணை நாயகன் நீ'  எனத் தொடங்கும் பாடல் அது.  "மக்களின் துயரங்களை நீக்கி விடுவாயாக' என வேண்டுகிறது அந்தப் பாடல். 

வெற்றுச் சிணுங்கலாக அந்தப் பாடலின் இசை அமையக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் உருக்கமான அந்தப் பாடலுக்கேற்ற இசையாக தர்பாரி கானடாவை தேர்ந்தெடுத்தார். அவர் எம். எஸ். சுப்புலட்சுமிக்கு அந்தப் பாடலைக் கற்றுக் கொடுத்து அந்தப் பாடலுக்கு இசை வடிவமும் கொடுத்தார். அன்றிரவே எம். எஸ். தனது கனிவான குரலால்  "ஹரி தும் ஹரோ'  பஜனைப் பாடலைப் பாட அன்றே ஒலிப்பதிவும் செய்யப்பட்டது. அந்த இரவு அந்தப் பணியால் ஒரு புனித இரவாக நிறைந்தது. 

அடுத்த நாள் காலையே சதாசிவத்தின் சகோதரரின் மகன் ஒரு டகோட்டா விமானத்தில் எம். எஸ்ஸின் அந்த ஒலிப்பதிவினை புதுடெல்லி கொண்டு சென்றார். 
அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்த நாளன்று மாலை மகாத்மா காந்தியின் முன்பு அந்த ஒலிப்பதிவு இசைக்கப்பட்டது. அந்தப் பாடலைக் கேட்டு மகாத்மா காந்தி மிகவும் மனமுருகினார். "எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் அபாரமான இனிமை வாய்ந்தது'' என்றார். ஒரு பஜனையைப் பாடுவதென்பது வேறு. தன்னையே கடவுளிடம் இழந்து பாடுவதென்பது வேறு'' என்று வியந்து கூறினார். 

அதன்பின் 1948 ஜனவரி மாதத்தில் காந்தியுடன் கல்யாணம் டெல்லியில் பிர்லா மாளிகையிலிருந்த போது எம். எஸ். சுப்புலட்சுமியும் அவரது கணவர் டி. சதாசிவமும், அவரது மகள் ராதாவும் காந்தியை பார்ப்பதற்காக அங்கே வந்திருந்தார்கள். அப்போது எம். எஸ். சுப்புலட்சுமியிடம் காந்தி குறிப்பிட்ட ஒரு பாடலைப் பாடச் சொன்னார். அதற்கு எம். எஸ். தனக்கு அந்தப் பாடல் முழுவதும் தெரியாதென்று சொன்னார். உடனே காந்தி, " நீங்கள் அந்தப் பாடல் வரிகளை வாசித்தால்கூட அதுவும் இசைவுடன் இனிமையான இசையாக இருக்கும்'' என்றார். 

குறிப்பாக எம். எஸ். வந்த அந்தத் தருணத்தில் காந்தி அப்போது நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருந்த மதக் கலவரங்களை எண்ணி மிகுந்த மனத்தளர்ச்சியிலிருந்தார். அப்போது அங்கே எம். எஸ். பாட, சதாசிவத்தின் மூத்த மனைவியின் மகளான ராதா பத்து நிமிடங்கள் பரத நாட்டியம் ஆட, அதை காந்தி கண்டு களித்தார். அவர் முகம் முழுக்க விரிந்த சந்தோஷம் அவரது புன்னகையில் வெளிப்பட்டது. அந்தச் சூழலில் எல்லாவற்றையும் மறந்து அவருள் வெளிப்பட்ட அசாதாரணமான மகிழ்ச்சி எல்லோருக்குமே வியப்பினை அளித்தது.  அங்கிருந்த யாவரும் அந்த அளவிற்கு காந்தியின் நீடித்த அந்த மகிழ்ச்சியை அப்போது பார்த்திருக்கவில்லை.  அதன்பின் வழிபாட்டுக்கான நேரம் வந்து விட  அன்றைய வழிபாட்டில் அவர்களும் பங்கு கொண்டனர். 

அந்த நேரத்தில் எம். எஸ். நடித்த "மீரா' படம் புதுடெல்லியில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது. கல்யாணத்திற்கும் அங்கிருந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கும் டி.சதாசிவம் அந்தப் படத்தை பார்ப்பதற்கான இலவச அனுமதிச் சீட்டைத் தந்தார். ஆனால் அன்றிரவு வேறு வேலைகளிருந்ததால் காந்தி  அந்தப் படத்தைப் பார்க்கச் செல்ல கல்யாணத்தை அனுமதிக்கவில்லை.

காந்தியின் இறுதி நாள்
சுதந்திரமடைந்து மூன்று வாரங்கள் கழிந்த பின்புதான் மகாத்மா காந்திக்கு புதுடெல்லிக்கு வர முடிந்தது.  1947 செப்டம்பர் 9 ஆம் தேதி கல்கத்தாவிலிருந்து புதுடெல்லி வந்து சேர்ந்தார். 

அப்போது அவர் அல்புகர்க் சாலை (தற்போது அந்த சாலை 30 ஜனவரி சாலை என்ற பொருளில் தீஸ் ஜனவரி மார்க் என இந்தியில் அழைக்கப்படுகிறது) யிலுள்ள பிர்லா மாளிகையிலேயே தங்கினார். டெல்லி வருகையின் போது அவரது பயன்பாட்டுக்காகவே தயார் செய்யப்பட்டது அந்த அறை. எல்லா அடிப்படை வசதிகளுடன் இருந்தது அந்த அறை. தடிமனான பஞ்சு மெத்தை, சாய்ந்து உட்கார பெரிய தலையணை ஆகியவற்றோடு அந்த அறையின் ஒரு மூலையில் எழுதுவதற்கு ஒரு சாய்வு மேசையும் இருந்தது. மற்றொரு மூலையில் அலுவலகக் கோப்புகள் மற்றும் கடிதங்கள் கட்டி வைக்கப்பட்ட ஒரு மேஜையும் நாற்காலியும் இருந்தன. 

கடிதங்களுக்குப் பதில் எழுதுவதிலும் நாட்டின் வளர்ச்சி குறித்து மக்களோடு உரையாடுவதிலும் ராட்டை நூற்பதிலும் உணவு உண்பதிலுமென நாள் முழுக்க இந்த அறையிலேயே காந்தியடிகளது அன்றாடப் பணிகள் இருந்தன. அந்த அறையை ஒட்டியே கண்ணாடிக் கதவுகளுடனான மூடப்பட்ட ஒரு வெளி முற்றம் இருந்தது. அங்கே விரிக்கப்பட்ட கம்பளத்தின் மேல்தான் அவர் இரவில் எல்லோருடனும் தூங்குவார்.

1948 ஜனவரி 30 என்றும் போல் வழக்கமான காலையாக அது இருந்தது. அதுவே அவரது கடைசி காலையென்று யாரும் ஊகித்திருக்க வாய்ப்பில்லை. வழக்கம் போல் அதிகாலை 03 .30 க்கு காந்தி எழுந்து விட்டார். அன்று கல்யாணமும் அதிகாலையில் எழும்பி அன்றையப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். காந்தியடிகளோடு எப்போதும் அவருக்கு உதவியாக இருப்பவர்கள் அவரது பேத்திகளான மனுவும் ஆபாவும்.  காந்தி முதலில் மனுவை எழுப்பினார்.  மனு எழுந்ததும் ஆபாவை எழுப்பினாள்.  ஆபா எழுந்திருக்கவில்லை.

காந்தியடிகளின் ஒரு நாளானது வழிபாட்டில் தொடங்கி வழிபாட்டிலேயே நிறைவு பெறும்.  அவர் வழிபாட்டை ஒரு நாளினை திறப்பதற்கும் மூடுவதற்குமான திறவுகோலாக கூறுவார்.  அவரது அன்றாட வழிபாட்டில் குறிப்பாக இந்து, இஸ்லாம் உட்பட்ட அனைத்து மதப் பாடல்களும் பாடப்பட்டன. 

காந்தி விழிகளை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஆபாவோ விழிகளை மூடி இன்னும் உறக்கத்திலேயே இருந்தார். ஆபா இன்னும் வரவில்லையென்பதை காந்தி கவலையுடன் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஆபா இல்லாமலேயே அன்றைய வழிபாடு நிறைவு பெற்றது.  

வழிபாடு முடிந்ததும் காந்தியின் காலை பானம் தயார் செய்வதற்காக மனு சமையலறை சென்றாள். ஒரு பளிங்கு குவளை நிறைய சூடான வென்னீரில் ஒரு சின்ன கரண்டி நிறைய தேனையும் எலுமிச்சம் பழச்சாறினையும் கலந்து பானம் தயாரித்து காந்திக்கு அளித்தார். 

மனுவிடம் காந்தி மிகுந்த வருத்தத்துடனேயே குஜராத்தியில் கூறினார்: "என்னோடு இருப்பவர்களிடமே நான் கடைப்பிடிக்கிற பழக்கங்கள் தேய்ந்து வருவதாக எனக்குத்  தோன்றுகிறது. வழிபாடானது ஒருவரது ஆன்மாவை சுத்தம் செய்கிற துடைப்பம் போன்றது. வழிபாட்டிற்கு ஆபா வராதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது. வழிபாட்டோடு நான் வைத்திருக்கிற முக்கியத்துவம் உனக்கு நன்றாகவே தெரியும். உனக்கு தைரியமிருந்தால் என் சார்பாக என்னுடைய வருத்தத்தை அவளிடம் சொல். வழிபாடுகளில் பங்கேற்க அவள் தயாராக இல்லையென்றால் அவளிடம் என்னை விட்டு இங்கிருந்து போய் விடச் சொல்.  இது நாம் எல்லோரும் சேர்ந்து ஆர்வமாகச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்'' என்றார்.

அப்போது ஆபா எழுந்திருந்து அவளது அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்கி இருந்தாள். தனக்கே தெரிந்த காரணத்தால் காந்தி நேரடியாக அதைப்பற்றி ஆபாவிடம் எதுவும் கேட்கவில்லை. 

 (தொடரும்)

எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com