1. இணையமில்லாமல் எதுவும் இல்லை

உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 204 கோடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அதில் பெரும்பாலனவை, ஏறக்குறைய 70 சதவீதம் ஸ்பேம் (spam) மின்னஞ்சல்கள். இவற்றை கட்டுப்படுத்த, பெரிய போராட்டமே நடந்துவருகிறது.

இனிதான் ஆட்டம் ஆரம்பம்! ‘இணைய தொழில்நுட்பப் புரட்சியின் முதல் நாளில் முதல் சில நிமிடங்களைத்தான் இதுவரை கடந்திருக்கிறோம்’ என்கிறார் ஸ்காட் குக். தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம் என்று பரவசப்படுபவர்கள் கவனிக்க. இதுவரை நாம் பார்த்தவையெல்லாம் வெறும் டீசர்தான். இனிதான் நிறைய வர இருக்கிறது!

எந்தவொரு புது விஷயமும் ஆரம்பத்தில் பரவசத்தைத் தரும். அதனால் வரும் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்காது. அதற்குள் அடுத்த விஷயம் வந்தாக வேண்டும். ஏற்கெனவே அறிமுகமானவை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இடம்பெற்று, இன்றியமையாத விஷயமாக ஆகிவிடுகின்றன. உதாரணத்துக்கு, மொபைல். அது இல்லாமல் நாம் இல்லை. நாம் இல்லாமல் அது இல்லை!

ஒவ்வொரு தொழில்நுட்பமும் பரவசத்தையும் மகிழ்ச்சியையும் தந்தாலும், கூடவே கூடுதல் போனஸாக பயத்தையும் தந்துவிடுகின்றன. தொழில்நுட்பம், இதுவரை சாத்தியமில்லாத எல்லாவற்றையும் சாதித்துக் காட்டியிருக்கிறது. அதில் சந்தேகமேயில்லை. ஆனால், எத்தனையோ விஷயங்களை நாம் இழந்திருக்கிறோம். நமது சுதந்திரம் பறிபோயிருக்கிறது. யார் யாரோ நம்மை கண்காணிக்கிறார்கள்.

அதையெல்லாம் விட்டுவிடலாம். உண்மையான மகிழ்ச்சி என்பது மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. பேருந்துகளில் ஜன்னலோரப் பயணங்கள் எந்தவொரு குழந்தைக்கும் உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியவை. இதெல்லாம் இறந்தகாலம். இன்றைய குழந்தைகள், பேருந்தில் அமர்ந்ததும் செல்போனை தேடுகின்றன. ஜன்னலோரமாக விரியும் நிஜமான உலகத்தை கவனிக்க மறந்து, கேம்ஸில் விளையாட ஆரம்பித்துவிடுகிறார்கள். சவால்கள் நிறைந்த நிஜமான உலகத்தை துறந்துவிட்டு, மாய உலகில் மூழ்கிப்போய்விடுகிறார்கள்.

தொழில்நுட்பத்தின் மூலமாக வாழ்வது சுலபமாகியிருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்களை காவு கொடுத்திருக்கிறோம். ஆனாலும், யாருக்கும் கவலையில்லை. அடுத்தடுத்து வரும் புதிய விஷயங்களால் அவை தரும் புத்துணர்வால், இழப்புகள் மறக்கடிக்கப்படுகின்றன. புதிய உச்சங்கள் எட்டப்படுகின்றன. உற்சாகம் எங்கும் வழிந்தோடுகிறது.

உலகம் முழுக்க ரேடியோ பிரபலமாவதற்கு 30 ஆண்டுகள் ஆகின. ஆனால், இணையமோ நான்கே ஆண்டுகளில் பிரபலமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வேகம்.. வேகம். வேகம் பலருக்குப் பிடித்திருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன புரட்சி என்று உலகெங்கும் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ‘இது ஆரம்பம் மட்டுமே… இனி போகப்போகத்தான் புரட்சியின் உச்சம் கொஞ்சமாவது பிடிபடும்’ என்கிறார்கள்

சரி, நாளைய உலகம் இப்படித்தான் இருக்கப்போகிறதா? நாளுக்கு நாள் பரபரப்பான உலகமாக மாறப்போகிறதா? வேறு என்னென்ன பிரச்னைகள் வரும்? பிரச்னைகளுக்கு நம்மிடம் தீர்வு இருக்கிறதா? ஏராளமான கேள்விகள். ஒரே ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். இணையத்தின் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் நாம் கணிக்கவே முடியாத அளவுக்கு இணையத்தின் வீச்சு பல மடங்கு அதிகரிக்கக்கூடும்.

கடந்த பத்தாண்டுகளில் இணையத்தின் பயன்பாடு 44 மடங்கு அதிகமாகியிருக்கிறது என்கிறது ஒரு ஆய்வறிக்கை. ஆசிய நாடுகள்தான் அதிகமாக பயன்படுத்தியிருக்கின்றன. இணையத்தில் உலா வருபவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வளைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். வாட்ஸ்அப் செய்திகளை ஷேர் செய்யாத தமிழனும் உண்டோ?

ஆரம்பத்தில் 10 மடங்காக இருக்கக்கூடும் என்றுதான் கணித்திருந்தார்கள். யூடியூப், கூகிள், பேஸ்புக், டிவிட்டர் அதையெல்லாம் எங்கேயோ கொண்டுபோய்விட்டன. இன்று 150 கோடி மக்கள் யூடியூப் வழியாக காட்சிகளைப் பார்க்கிறார்கள். ஒரு நிமிடத்தில், 30 மணி நேரத்துக்கு மேலாக ஓடக்கூடிய காட்சிகள் இணையத்தில் ஏற்றப்படுகின்றன. தரவிறக்கத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. தமிழ் சினிமா டீசர்கள், வெளியான ஒரு சில நொடிகளில் லட்சங்களை எட்டுகின்றன.

1996-ல், உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே இணையத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது இந்தியாவில் இணையம் என்பது புழக்கத்தில் இல்லை. அடுத்த வந்த ஐந்தாண்டுகள் முக்கியமானவை. ஏறக்குறைய 10 சதவீத மக்கள் இணையத்துக்கு அடிமையாகிவிட்டார்கள். 2009-ன் முடிவில், அதுவே 25 சதவீதமாக இருந்தது.

2013 இணையத்தின் பயன்பாட்டைவிட, 2015-ல் 5 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கணித்திருந்தார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் கணிப்புகள் தவறிப்போய், புதிய கணிப்புகள் உருவாக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம், தகவல்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பரிமாற்றப்படுவதன் வேகம், நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. வேகம் அதிகரிக்கப்படும்போது, பரிமாறப்படும் தகவல்களின் அளவும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

சரி, இணைய பயன்பாடு உலகெங்கும் ஒரேவிதமாக உள்ளதா என்று கேட்டால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆசிய நாடுகள் பெருமளவு முன்னேறியிருக்கின்றன. வளைகுடாப் பகுதிகள் பின்தங்கியிருக்கின்றன. ஆண் பயனாளிகளோடு ஒப்பிடும்போது, பெண் பயனாளிகள் குறைவாகவே இருக்கின்றனர். காரணம், பாதுகாப்பின்மை.

இணையவழி மிரட்டல் (internet bullying) பற்றி பள்ளிக்குழந்தைகளும் படிக்க ஆரம்பித்திருக்கறார்கள். கடந்த பத்தாண்டுகளில் ஏராளமான உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. இணையம் வழியாக ஒருவரை கிண்டலடிப்பது, அவரைப் பற்றிய தவறான தகவல்களை அனுப்புவது எளிதாகியிருக்கிறது. பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பெரிய சவால் இது.

பகிரப்படும் தகவல்கள், நல்லவையா கெட்டவையா என்பதை அலசி ஆராய்வது முக்கியமானதாகிறது. பெரும்பாலான நிறுவனங்கள், இதெல்லாம் உங்களுடைய பொறுப்பு. எதாவது அப்ஜெக்ஷன் இருந்தால் மட்டும் புகார் தெரிவியுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஒதுங்கி இருந்துவிடுகிறார்கள். உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 204 கோடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அதில் பெரும்பாலனவை, ஏறக்குறைய 70 சதவீதம் ஸ்பேம் (spam) மின்னஞ்சல்கள். இவற்றை கட்டுப்படுத்த, ஒரு பெரிய போராட்டமே நடந்துவருகிறது.

ஆக, ஒட்டுமொத்த பிரச்னைக்கு அடிப்படையான விஷயம் என்பது டேட்டா. அது எந்தளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்டு, பரிமாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பதே பிரச்னையின் மையப்புள்ளி. நம்மிடம் உள்ள டேட்டா சரியானதுதானா, முறையானதுதானா என்பதை சரிபார்த்துக்கொள்வதுதான் தீர்வை நோக்கிய பயணத்துக்கு முதல் அடியாக இருக்கமுடியும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com