4. சந்திரமதி

அரிச்சந்திர புராணத்திலும், பாட்டி சொல்லிய கதைகளிலும், பாடப் புத்தகத்திலும் நாம் தெரிந்து கொண்டிருப்பது
4. சந்திரமதி

அரிச்சந்திர புராணத்திலும், பாட்டி சொல்லிய கதைகளிலும், பாடப் புத்தகத்திலும் நாம் தெரிந்து கொண்டிருப்பது சந்திரமதி என்பவள் பொய்யே பேசாத அரிச்சந்திர மகாராஜனின் மனைவி என்ற வரையிலும் தான். அதற்கும் மேல் நம் அநேகருக்கு சந்திரமதியைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அரிச்சந்திரனின் மனைவி என்பதைத் தாண்டி யார் இந்த சந்திரமதி என்பதை சற்றே அலசலாம்.

முற்பிறவியில் சந்திரமதி காசி நாட்டு இளவரசி. மதிவாணி என்ற பெயருடையவள். காசி ராஜன் தன் மகளின் சுயம்வர தினத்தில், குழுமி இருந்த அரச குமாரர்களில் யார் கூண்டில் அடைபட்டு இருக்கும் சிங்கத்தை அடக்குகிறார்களோ அவர்களுக்கே தன் மகள் மாலை இடுவாள் என்று அறிவித்தார். கூண்டிலோ சிங்கம் சினத்துடன் அங்கும் இங்கும் உறுமியவாறே அலைந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அரச குமாரர்கள் யாரும் தங்கள் உயிரை சிங்கத்திடம் பணயம் வைக்க முன் வரவில்லை. இத்தனை பேரழகுடைய இளவரசி தங்களுக்கு கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டதே என அனைவரது மனமும் விம்மியது.

அப்போது சபையோர் வியக்கும் வண்ணம் மகத நாட்டு இளவரசன் திரிலோசனன் ‘நான் சிங்கத்தை அடக்கத் தயார்’ எனக் கூறி துணிவாக நிமிர்ந்த நடையுடன் கூண்டுக்குள் நுழைந்தான். சில மணி நேர போராட்டங்களுக்குப் பின் சிங்கத்தை அடக்கி வெற்றியுடன் சபை ஏறினான் திரிலோசனன். அதன் பின் வெகு விமரிசையாக மதிவாணிக்கும் அவனுக்கும் திருமணம் நடந்தது.  புதுமணத் தம்பதிகள் கங்கையில் குளித்து காசி நாதரை வணங்கி வர கங்கை கரைக்குச் சென்றனர்.

ஆனால் விதியின் சதியால் நடக்கக் கூடாத சம்பவம் நடந்துவிட்டது.  சுயம்வரத்தில் தோற்றுப் போன மன்னன் ஒருவன் பின்னால் இருந்து திரிலோசனனின் தலையை வெட்டி அவனைக் கொன்றான். திருமணம் ஆன அன்றே கணவனை இழந்து விதவை ஆனாள் மதிவாணி. துயர் பொறுக்க மாட்டாது கணவனைப் பறி கொடுத்த சோகத்தில் ‘தாயே கங்கை மாதா இனி எதற்கு நான் இந்த பூமியில் வாழ வேண்டும். என்னை நீயே எடுத்துக் கொள்’ என்று கதறியபடியே சுழன்று ஓடிய கங்கையில் பாய்ந்து விட்டாள்.

சற்று தூரத்தில் கங்கையில் நித்திய அனுஷ்டானம் செய்து கொண்டிருந்த கௌதம முனிவரின் பாதங்களில் அவள் உடல் சிக்கியது. நீரில் அடித்துக் கொண்டு வந்த பெண்ணை கௌதம முனிவர் கரையில் இழுத்துப்போட்டு முதலுதவி செய்து காப்பாற்றினார். மயக்கம் தெளிந்த மதிவாணி அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினாள். முனிவர் ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று ஆசிர்வதித்ததை கேட்டதும் ஓவென்று கதறி அழுதாள் மதிவாணி.

‘ஸ்வாமி மண நாள் அன்றே கணவனை இழந்த என்னை தீர்க சுமங்கலி பவ என்று ஆசி கூறியது எப்படிப் பொருந்தும்’ என்று கூறி அழுதாள். அவள் கதையைக் கேட்ட கௌதம முனிவர் அவளிடம் ‘காரணம் அல்லாது காரியம் இல்லை மகளே. நீ சிவனை நோக்கி தவம் இருந்து ஆத்ம சாந்தி அடைவாயாக. அடுத்த பிறவியில் எப்பெண்ணிற்கும் இல்லாத சிறப்பம்சமாக கழுத்தில் இதே தாலியுடன் நீ பிறப்பாய். உன் கணவன் திரிலோசனன் அப்போது சூரிய வம்சத்தில் தோன்றுவான். அவன் கண்களுக்கு மட்டுமே உன் மாங்கல்யம் தெரியும். அவனை அடுத்த பிறவியில் மணந்து தீர்கசுமங்கலியாக புகழுடன் வாழ்வாய்’ என்று ஆசிர்வதித்தார்.

அதன்படியே மதிவாணி மறுபிறவியில் சந்திரமதியாக பிறப்பெடுத்தாள். பிறந்த உடனேயே ‘அவள் கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் யார் கண்ணுக்குத் தெரிகிறதோ அவனே இவளை மணம் முடிக்கத் தகுதியானவன்’ என்ற அசரீரி கேட்டது. அவளின் திருமண வயதில் சுயம்வரம் நடக்கும் போது சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருந்த மன்னர்களுள் அரிச்சந்திரனுக்கு அவளின் திருமாங்கல்யம் தெரியவே, அவனே அவளை மணம் முடித்தான்.

இருவரும் ஓருயிர் ஈருடல் போன்று ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். வாய்மை பிறழாதும், கொடுத்த வாக்கினைத் தவறாத நெறியாளனாக தன் நாட்டை வெகு சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தான் அரிச்சந்திரன். அவனுக்கும் சந்திரமதிக்கும் லோஹிதாசன் என்ற ஆண் மகவு பிறந்தது. அதன் பின் விசுவாமித்திர முனிவரின் சோதனையால் அரிச்சந்திரன் அடைந்த துயரும் அவனோடு சந்திரமதியும் பிள்ளை லோஹிதாசனும் பட்ட பெருந்துன்பமும் நாம் அனைவரும் அறிந்ததே.

முன் ஜன்மத்திலும் மறு ஜன்மத்திலும் அரசகுமாரியாகவே பிறந்து அரசகுமாரியாகவே, ராஜ போகத்துடன் வாழ்ந்தவள் சந்திரமதி. பசிக்கும் முன்பே பாலும் பழமும் தேனும் அறுசுவை உணவுகளும் அவள் கைபடாதா என்று காத்திருந்திருக்கின்றன. சாப்பிட மறுத்தாலும் வாயில் வந்து ஊட்டி விடத் தாயும் சேடிப் பெண்களும் அவளைச் சுற்றி சுற்றி வந்த வண்ணம் இருந்திருக்கின்றனர்.

பல தேசத்து பட்டாடைகள், பூ வேலைகள் பின்னல்கள் இட்ட மேலாடைகள் என விதவிதமான ஆடைகளும், முத்து ரத்தினம், வைரம் வைடூரியம் என விலை மதிப்பில்லாத கற்கள் கொண்ட ஆபரணங்களும் தாங்கள் அழகு பெற அவள் அணிய மாட்டாளா என தவம் இருந்திருக்கின்றன.

எப்படிப்பட்ட பேரழகுடையவள் சந்திரமதி. வேல் போன்ற விழிகளும், கரு நாகம் படம் எடுத்து விரிந்து கிடப்பதைப் போன்ற சரிந்து விழும் நீண்ட கூந்தலும், பிறை போன்ற நெற்றியும், குளிர்ந்த அதரங்களும், ஒடுங்கிய வயிறும், சிறுத்த இடையும் கொண்டு மண்ணுலகம் மட்டுமின்றி விண்ணுலகப் பெண்களும் பொறாமை கொள்ளும் அளவு அழகுடையவளாம் சந்திரமதி.

கண் அசைவில் பணிப் பெண்கள் சேவகம் செய்ய, கைபிடிக்க ஒருத்தி, கால் பிடிக்க ஒருத்தி, அகிலும் புனுகும் கலந்து புகை போட்டு  ஈரக் கூந்தல் உலர்த்த வேறொருத்தி, சாமரம் வீசி தூங்கச் செய்ய மற்றுமொருத்தி என பணிப்பெண்களின் பராமரிப்பில் சீரும் சிறப்புமாக இருந்தவள் சந்திரமதி. 

அழகு மட்டுமல்ல, குணத்திலும் பண்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவள். வேறு எந்தப் பெண்ணிற்கும் இல்லாத சிறப்பாக தன் மாங்கல்யம் தன் கணவனின் கண்களுக்கு மட்டுமே தெரியக் கூடிய அரிய வரத்தோடு பிறந்த கற்புக்கரசி சந்திரமதி. விதிவசத்தால் கணவனைப் பிரிந்து தன் பச்சிளம் பாலகனோடு காசி மாநகரத்தில் அந்தணர் வீட்டு அடிமையானாள். ஒரு வேளை சோற்றுக்கு ஏவல் பணி செய்து, ஒரு பிடி உணவும் சரிவரக் கிடைக்காமல் பட்டினியில் வாடிய அவலம் அவளுக்கு நேர்ந்தது.

தன் குலப்பெருமையும் மகன் பிறந்த குலப் பெருமையும் வாய்விட்டு சொல்லக் கூட எவ்விதமான முகாந்திரமும் இல்லாமல் கடைமட்ட பணிப் பெண்ணாய் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டவள் சந்திரமதி. அவள் செய்த குற்றம் என்ன? எதற்கு இந்த அவல நிலை? கணவனின் சொல் காக்க, அவன் உடனிருந்து அவன் நெறி காக்க மேற்கொண்ட தவ வாழ்க்கை அன்றோ இது. முந்தைய பிறவியிலும் கணவனை இழந்தாள். இப்பிறவியிலும் கொண்டவனை உயிருடன் பிரிந்தாள். யாருக்கும் யாருக்குமோ நடந்த விவாதத்தில், (வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் நடந்த விவாதம்) தன் கணவனின் சத்திய நெறி பணையமாக்கப்பட்டு, முனிவன் செய்த சூழ்ச்சியால் தேவர்கள் செய்த கபடத்தால் கணவனை விட அவளே அதிகம் அல்லல் பட்டாள்.

கடைசிவரை உன்னை கைவிடேன் என்று சொல்லிய மணாளன் அடிமையாக அவளை விற்றதும் அல்லாமல் பசுவுடன் கன்றும் வருவது தானே தர்மம் என்ற அந்தணரின் கூற்றுக்கு மறு மொழி பேசாமல் பெற்ற பிள்ளையையும் அடிமையாக்கி அனுப்பி வைத்துவிட்டான். மாட்டுக்காவது அசை போடும் நேரம் கிடைத்தது. ஆனால் இந்த அடிமைக்கு என்ன கிடைத்தது? அரை வயிற்றுக்கும் பத்தாத உணவுக்காக வெட்கி தலை குணிந்து சேவகம் புரிந்து தன் ஜீவனை ஓட்டுகிறாள். ராஜ குமாரனாக அறுசுவை உணவுகள் உண்ண வேண்டிய மகனுக்கு கழுநீரையும் கஞ்சியையும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு ஊட்டுகிறாள்.

பச்சிளம் பாலகன் என்றும் பாராமல் மறுநாள் தர்பணத்திற்காக தர்பை புல் அறுத்து வரக் காட்டுக்கு போகச் சொல்கிறார் அவள் எஜமானர். அவனை அனுப்ப வேண்டாம் நான் போகிறேன் என்று சொன்ன அடிமையின் குரல் எஜமானனுக்கு எட்டவில்லை. அவள் வேலை நின்று போய்விடும் காரணம் காட்டி, பிடிவாதமாக பாலகனையே அனுப்புகிறார். மாலையில் சூரியன் வீடு திரும்பியும் காலையில் சென்ற தன் மகன் திரும்பாதது கண்டு பதைக்கிறாள். கை வேலையையும் விட்டுவிடு போக முடியாமல், மகனையும் காணாது தவிக்கிறாள்.

இருள் சூழ ஆரம்பிக்கிறது இனியும் பொறுக்க தாய் மனம் இடம் தரவில்லை வருவது வரட்டும் என்று துணிந்து வேலையை அப்படியே போட்டுவிட்டு தன் எஜமானனிடம் மன்றாடிக் கிளம்புகிறாள். தர்ப்பை புல் கொய்யும் இடத்தில் அரவம் தீண்டி மகன் இறந்து கிடப்பதை கண்டு அவனைச் சுமந்த கருப்பையில் கடப்பாரை செறுகியதைப் போலத் துடித்துப் போகிறாள் சந்திரமதி.

அழுது துடித்து என்ன பயன். ‘ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீள்வாரோ’ என்பது போல அவள் தனக்கு கொள்ளி வைத்து தன்னை கரையேற்றுவான் என்று பெற்ற மகனை தான் கொள்ளி வைக்க சுடுகாட்டுக்கு எடுத்துப் போகிறாள். பத்து மாதம் சுமந்து பெற்ற அவள் தன் மணிவயிறு வேதனையில் கொதிக்கிறது. லோஹிதாசன் சிதை ஏற்றாமலே எரிந்து விடுவானோ எனும் அளவுக்கு அவள் வயிறு புத்திர சோகத்தில் தகிக்கிறது.

‘ஆறெலாம் அடிகள் வைத்த அடி எல்லாம் விழிநீர்’ என கண்கள் பொங்க சுடுகாட்டுக்குச் சென்று தன் பிள்ளையை சிதையில் ஏற்றுகிறாள். தீ மூட்ட முற்படுகிறாள். விசுவாமித்திரருக்கு தான் பட்ட கடனின் கடைசி பணத்தை அடைப்பதற்காக தன்னையும் அடிமையாக விற்றுக் கொண்ட அரிச்சந்திரன் சுடுகாட்டின் காவலனாக இருக்கிறான். தன் பிள்ளையின் பிணம் எரிக்க முனைந்த சந்திரமதியைத் தடுத்து ‘ஏய் பெண்ணே பிணத்தை எரிக்க கட்டணம் தராமல் எப்படி நீ பிணத்தை எரிக்க முடியும். நிறுத்து’ என தன் பிள்ளைக்கு கொள்ளி போடுவதைக் கூட தடுத்துவிடுகிறான்.

மகன் இறந்த துக்கம் ஒரு புறம், அரச வம்சத்தில் பிறந்து அரசிளம் குமாரனாக வாழ வேண்டியவன் அற்ப ஆயுளில் பறி கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் அவன் பிணத்தை எரிக்கவும் தடை ஏற்பட்ட அவல நிலை ஒருபுறம் வாட்ட விக்கித்து நிற்கிறாள் சந்திரமதி. தான் ஒரு அடிமை என்றும் தன்னிடம் கட்டணமாகக் கொடுக்க காசோ பொருளோ ஏதும் இல்லை எனவும் பலவிதமாகக் கெஞ்சி மன்றாடுகிறாள்.

அரிச்சந்திரனோ அவள் கழுத்தில் மின்னிக் கொண்டிருக்கும் விலை உயர்ந்த மாங்கல்யத்தைக் கண்டு ‘ஒன்றும் இல்லை என்கிறாயே, இத்தனை விலை உயர்ந்த மாங்கல்யம் அடிமைக்கு ஏது? அதை விற்று இந்த இடுகாட்டின் சொந்தக்காரரும் என் எஜமானுமானவருக்கு கட்டணத்தைக் கொடு’ என்கிறான்.

அதைக் கேட்ட சந்திரமதி அதிர்ந்து ‘தேவர்கள், மூவர்கள் முதலான ஈரேழு பதினான்கு லோகங்களில் வாழும் யார் கண்ணுக்கும் தெரியமுடியாத என் கணவரின் கண்ணுக்கு மட்டுமே தெரியக் கூடிய எனது கற்பின் சின்னமாக விளங்கக் கூடிய மாங்கல்யம் ஒரு மயானக் காவலாளியின் கண்ணுக்குத் தெரிந்துவிட்டதே! இந்த துன்பத்தை நான் எப்படி தாங்கிக்கொள்வேன்?’ என்று கதறி புலம்பி மண்ணிலே வீழ்ந்தாள் சந்திரமதி.

அவள் கதையைக் கேட்ட பின் அவள் தான் தன் மனைவி சந்திரமதி என்று கண்டு கொண்ட அரிச்சந்திரன் பிள்ளை இழந்த துக்கத்தில் அழுது புலம்பினான். பின் ஒருவாறு தேற்றிக் கொண்டு, சந்திரமதியிடம் தனக்குச் சேர வேண்டிய வாய்க்கரிசி வேண்டாம் என்றும் ஆனால் சுடுகாட்டின் சொந்தக்காரரான தன் எஜமானனுக்கு சேர வேண்டிய முழத் துண்டும் கால் பணமும் அவளது எஜமானனிடம் கேட்டு வாங்கி வரும்படியும் கூறி அனுப்பினான்.

அவளது துயர் அதோடு நிற்கவில்லையே. வழியில் தன் மகன் வயதை ஒத்த அழகான பாலகன் ஒருவன் இறந்து கிடப்பதைக் கண்டு மனம் வாடி தன் பிள்ளை நினைவில் அக்குழந்தையை கட்டிக் கொண்டு அழுகிறாள். அங்கு வந்த வீரர்கள் அந்நாட்டு ராஜகுமாரனை அவள் கொன்றதாக குற்றம் சுமத்தி மன்னனிடம் இட்டுச் செல்கின்றனர். தன் பிள்ளையைக் கொன்றவள் என்ற கோபத்தில் தீர விசாரிக்காமல், அவள் தலையை கொய்யும் படி தீர்ப்பு சொல்கிறான் அந்நாட்டு மன்னன். அவள் தலையைக் கொய்ய மயானக் காவலனான அரிச்சந்திரனையே பணிக்கின்றனர். தன் மனைவி குற்றமற்றவள் எனத் தெரிந்தும் அதை நிரூபிக்கும் வழி இல்லாமல் அரச கட்டளையை மறுக்க முடியாமல் அவன் சந்திரமதியை வெட்ட வாளை வீசுகிறான்.

வாளின் வீச்சு அவள் தலையைக் கொய்யாமல், பூ மாலையாக விழுகிறது. அதன் பின் காசி விஸ்வநாதரும் உமா மகேஸ்வரியும் தேவர்களுடன் காட்சி கொடுத்து, இதுவரை நடந்தது எல்லாமே அவனுக்கு நடைபெற்ற சத்திய சோதனை என்றும் அவன் அதில் வெற்றி பெற்றுவிட்டான் எனவும் கூறினர். அவனே உலகத்தின் சிறந்த சத்திய சீலன், வாக்கு தவறாத நெறியாளன் என போற்றினர். இது வரை நடந்தது அனைத்துமே ஒரு நாடகம் தான். அவனுடைய பிள்ளை லோஹிதாசனும் அரச குமாரனும் இறக்கவில்லை என்று கூறி அவர்கள் இருவரையும் உயிருடன் மீட்டுத் தந்தனர். அரிச்சந்திரனின் நாடும் அவனுக்கே எனக் கூறி அதுவரை நடந்த சோதனையில் இருந்தும் வேதனையில் இருந்தும் மீட்டதாக கதை முடிகிறது.

இன்று வரை வாய்மை தவறாதவன் சத்திய சீலன் என்றால் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது அரிச்சந்திரன் தான். அண்ணல் காந்தி அடிகளே அரிச்சந்திரன் கதையால் ஈர்க்கப்பட்டு தான் தானும் வாய்மையை கடைபிடித்ததாக கூறியுள்ளார்.

ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு சந்திரமதி நினைவுக்கு வருவாள். அரிச்சந்திரனுக்கு ஈடாக அதற்கும் மேலும் துன்பங்களை துயரங்களைக் கடந்து வந்தவள் சந்திரமதி. அத்துனை துன்பத்திலும் ஒரு நொடி கூட தன் கணவனின் கொள்கையால் தானே தனக்கு இந்த இடர் என்று  நினையாதவளாய் சத்திய விரதத்தை அவளும் கடைபிடிக்கிறாள்.

எல்லையில்லா துன்பம் ஆட்கொண்ட போதும் அவள் தன் கணவனை அவன் வழியிலிருந்து மாற கட்டாயப் படுத்தியதே இல்லை. அவன் மீது கடுகளவும் வெறுப்போ கோபமோ கொள்ளவில்லை. கடைசி வரை, அவன் தன் தலையைக் கொய்தாலும் சரி அதற்கும் தான் தயார் என எல்லாவற்றுக்கும் துணை நிற்கிறாள். இத்தனை சிறப்புடைய சந்திரமதியும் அரிச்சந்திரனுக்கு ஈடாக கொண்டாடப்பட வேண்டியவளே.

இசைக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com