பாஸ்வேர்டால் என்ன பயன்?

முதலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா?

மு
தலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல்லை, என்ன பெரிய பாஸ்வேர்டு புடலங்காய் பாஸ்வேர்டு, அதனால் பத்து பைசா பயன் இல்லை என்று நினைக்கிறீர்களா?

உங்கள் பாஸ்வேர்டு பற்றி யோசித்து ஒரு பதிலை முடிவு செய்யுங்கள். ஒருவேளை பாஸ்வேர்டால் என்ன பயன் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் நீங்கள் ஐந்தில் ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இதற்காக நீங்கள் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள முடியாது. மாறாக கவலைப்பட்டாக வேண்டும். ஏனெனில் சமீபத்தில் பாஸ்வேர்டு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒரு இணையப் பயனாளிகள் தங்கள் பாஸ்வேர்டால் சைபர் குற்றவாளிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கருதுவதாக தெரிய வந்துள்ளது.

இணையப் பாதுகாப்பில் முன்னிலை வகிக்கும் காஸ்பெர்ஸ்கி லேப் நிறுவனம் பி2பி இண்டர்நேஷனல் எனும் நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதி பேர் தான் தங்கள் பாஸ்வேர்டை முக்கியமாக கருதுவதாகவும் அது தப்பித்தவறி சைபர் குற்றவாளிகளின் கைகளில் சிக்கிவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். மாறாக 21 சதவீதம் பேர், சைபர் குற்றவாளிகளுக்குத் தங்கள் பாஸ்வேர்டால் எந்தப் பயனும் இல்லை என்று கூறியுள்ளனர்.

அதாவது நாங்கள் என்ன இணையப் பிரபலங்களா இல்லை கோடீஸ்வரர்களா? எங்கள் பாஸ்வேர்டை எல்லாம் களவாடி என்ன செய்யப்போகிறார்கள் என்பது போல கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த அப்பாவித்தனம் ஆபத்தில் முடியலாம் என்கின்றனர் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள். பிரபலமோ இல்லையோ இணையத்தில் இருக்கும் எல்லோருக்கும் பாஸ்வேர்டு முக்கியமானது, மதிப்பு மிக்கது என்று சொல்கின்றனர். பாஸ்வேர்டால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். இணையத்தில் வைக்கப்படும் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்கத் தகவல்கள் மற்றும் பணம் (ஆன்லைன் வங்கிச் சேவை) ஆகியவற்றுக்கான பூட்டுச் சாவி போன்றது பாஸ்வேர்டுகள். அவை களவாடப்பட்டால் வில்லங்கம் தான் என்கின்றனர்.

நீங்கள் பிரபலமானவராகவோ அல்லது கோடீஸ்வரராகவோ இலலாவிட்டாலும் கூட உங்கள் பாஸ்வேர்டால் சைபர் குற்றவாளிகள் பலனடைய முடியும் என்கிறார் காஸ்பெர்ஸ்கி லேபின் அதிகாரி எலேனா கார்சென்கோவா. பாஸ்வேர்டு திருடப்படும்போது பயனாளி மட்டும் பாதிக்கப்படவில்லை, அவரது தொடர்புகளும் தான் என்றும் எச்சரிக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

உதாரணத்துக்கு, ஒருவரது இமெயில் பாஸ்வேர்டு, சைபர் குற்றவாளி கையில் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் மூலம் அவரது முகவரி பெட்டியில் உள்ள அனைத்து தொடர்புகளின் மெயிலுக்குள்ளும் குற்றவாளிகள் கைவரிசை காட்டுவதற்கான கதவு திறக்கப்படுவதாக வைத்துக்கொள்ளலாம். பேஸ்புக் போன்ற தளங்களுக்கும் இது பொருந்தும்.

இப்போது பாஸ்வேர்டின் முக்கியத்துவம் புரிகிறதா?

எனவே இனி பாஸ்வேர்ட் விஷயத்தில் விழிப்புடன் இருங்கள். தொடர்ந்து பாஸ்வேர்டு பாதுகாப்புக் குறிப்புகளை பார்க்கலாம்.

முதல் குறிப்பு, முதலில் தனித்தனி பாஸ்வேர்ட் தேவை என்பது. இமெயில், பேஸ்புக், இன்னும் பிற என எத்தனை இணையச் சேவைகளை பயன்படுத்தினாலும் சரி அவை ஒவ்வொன்றுக்கும் தனி பாஸ்வேர்டு அவசியம். இதன் பொருள் ஒருபோதும் எல்லாச் சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தக்கூடாது . ஏன் என எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு சேவையின் பாஸ்வேர்டு திருடு போனது என்றால் உங்கள் எல்லாச் சேவைகளுக்குமான கள்ளச்சாவி குற்றவாளி கையில் கிடைத்தாயிற்று என்று பொருள்!

ஆக , நீங்கள் பல இணையச் சேவைப் பயனாளி என்றால் முதலில் ஒவ்வொன்றுக்கும் தனி பாஸ்வேர்டு இருப்பதை உறுதி செய்யுங்கள்.

தனி பாஸ்வேர்டு மட்டும் இருந்தால் போதாது, அது தனித்தன்மையுடனும் இருக்க வேண்டும். எப்படி? அடுத்த வாரம் பார்க்கலாம்!

***

சோனியின் சோகம்

சோனி நிறுவனத்தின் பொழுதுபோக்குப் பிரிவு கடந்த ஆண்டு சைபர் தாக்குதலுக்கு இலக்காகி பட்டபாடு நினைவிருக்கலாம். இந்தத் தாக்குதலை நடத்திய சைபர் குற்றவாளிகள் சோனி நிறுவனத்தின் இமெயில் பரிவர்த்தனை மற்றும் பல முக்கிய ஆவணங்களைக் களவாடி வைத்துக்கொண்டு மிரட்டல் விடுத்து வெறுப்பேற்றினர்.

சோனியின் தயாரிப்பான இண்டெர்வியூ படத்தை வெளியிடக்கூடாது என அவர்கள் எச்சரிக்கை விடுத்ததும், இதனால் தவித்த சோனி முதலில் ஆன்லைனில் படத்தை வெளியிட்டதும் எல்லாம் பழைய கதை. ஆனால், சைபர் பாதுகாப்பில் படிப்பினையாக இருப்பவை. இந்த சைபர் தாக்குதல் எப்படி நடந்தது, யாரால் நடத்தப்பட்டது என்பது புரியாத புதிராக இருந்தாலும் ஏதேனும் ஓட்டை கிடைத்து நிறுவன கம்ப்யூட்டர் அமைப்புக்குள் உள்ளே நுழைந்துவிட்டால் விபரீதம் தான் என்பதற்கான திகிலான உதாரணம் இந்தச் சம்பவம். பாஸ்வேர்டில் அலட்சியமாக இருந்து கோட்டை விடுவது கூட இப்படி தாக்காளர்கள் (ஹேக்கர்கள்) நுழைவதற்கான ஓட்டையாக அமைந்துவிடலாம்.

நிற்க, சோனி மீதான சைபர் தாக்குதலை பலர் மறந்துவிட்டாலும் அதன் பாதிப்பு மட்டும் மறைந்துவிட வில்லை. சமீபத்தில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் சோனி நிறுவனத்திடம் இருந்து தாக்காளர்கள் களவாடிய ஆயிரக்கணக்கான இமெயில்களை தனது இணைத்யதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த மெயில்கள் அனைத்தும் பொது ஆவணங்கள் என்பதால் இவை பொதுவெளியில் இருப்பது தான் முறை என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடைபெற்றபோது தாக்காளர்கள், நிறுவனச் செயல்பாடுகள் பற்றிய ரகசியத் தகவல்கள் அடங்கிய இமெயில்களை கசியவிட்டு வெறுப்பேற்றியதும் இந்தப் படலத்தின் முக்கிய அம்சம்.

நடிகர்களின் சம்பளம், அடுத்தப் படத்தின் திரைக்கதை போன்ற விவரங்களும் இதில் இடம்பெற்றிருந்தன. இதை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டதையே சோனி தார்மீகத்தை மீறும் செயல் என எதிர்ப்பு தெரிவித்தது. இப்போதோ ரகசியங்களை அம்பலப்படுத்துவதையே நோக்கமாக கொண்ட விக்கிலீக்ஸ் இந்த மெயில்கள் அனைத்தையும் ஆவணமாக்கி இருக்கிறது. இது சரியா என்பது விவாத்துக்கு உரியது என்றாலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் இமெயில் போன்றவற்றை கையாள்வதில் அலட்சியம் காட்டினால் என்ன அபாயம் காத்திருக்கிறது என்பதற்கான பாடம் இது!

***

கூகுள் தரும் புதிய வசதி

கூகுள் தேடியந்திரத்தில் கொஞ்ச காலமாகவே தேடல் வரலாற்றை பார்க்கும் வசதி இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இல்லாவிட்டாலும் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில், இப்போது தேடல் வரலாற்றை டவுண்லோடு செய்து கொள்ளும் வசதியையும் கூகுல் அறிமுகம் செய்திருக்கிறது.

தேடல் வரலாறு என்றால் கூகுளில் நீங்கள் எப்போது, எதை எல்லாம் தேடினீர்கள் என்பது தொடர்பான விவரங்கள்! அதாவது உங்கள் தேடலை நீங்கள் திரும்பிப் பார்க்கலாம்.

கூகுள் பயனாளிகளின் தேடல் பழக்கத்தை நோட்டம் விடுவது பற்றியும் அவற்றை சேமித்து வைத்து விளம்பர நோக்கில் பயன்படுத்துவது பற்றியும் இணைய உலகில் பரவலான குற்றச்சாட்டு உண்டு. இந்நிலையில் பயனாளிகள் தங்கள் தேடல் வரலாற்றை டவுண்லோடு செய்து கொள்ளும் வசதியை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ள உங்கள் கூகுள் கணக்குப் பக்கத்தில் வலது மேல் பகுதிக்குச் சென்று செட்டிங்கில் டவுண்லோடு என்பதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இமெயில் மூலம் தகவலும் இணைப்பும் வரும். நேரடியாக கூகுள் டிரைவில் சேமித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

தேடல் வரலாற்றை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது உங்கள் கையில் இருக்கிறது. ஆனால், பொது கம்ப்யூட்டர்களில் டவுண்லோடு செய்து கொள்ளாதீர்கள் என கூகுள் அன்புடன் எச்சரிக்கிறது.

கூகுள் தொடர்பான இன்னும் நிறைய செய்திகள் இருக்கின்றன. கூகுள் இணையத்தளங்களை பட்டியலிட பின்பற்றும் அல்கோரிதமில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. செல்பேசிகளிலும் தெளிவாகத் தெரியும் இணையத்தளங்களுக்கே தேடல் பட்டியலில் முன்னுரிமை வழங்கப்படும் என்பது தான் இந்த மாற்றம்.

இது ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய ஒன்றியம் கூகுளுக்கு எதிராக வழக்கு போட தயாராகியுள்ளது. கூகுள் தனது தேடல் பட்டியலில் போட்டியாளர்களின் முடிவுகளுக்கு பாரபட்சம் காட்டி தனது விளம்பரங்களை முன்வைக்கிறது என்பது அதன் மீதான புகார்.

***

ஒரு நிமிட உரையாடல்

வாட்ஸ் அப்பிலும் வீ சாட்டிலும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுபவர்கள் கேம்சாட் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. கேம்சாட் செல்போன்களுக்கான புதிய மெசேஜிங் வசதியை அளிக்கும் செயலி (ஆப்). ஆனால், இது வாட்ஸ் அப்புக்குப் போட்டி அல்ல; இதன் நோக்கமே வேறு. ஒரு நிமிடத்தில் உரையாடலை முடித்துக் கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள செயலி இது.

நீங்கள் யாருடன் உரையாட விரும்புகிறீர்களோ அவர்களுக்கு இந்தச் செயலி மூலம், ஒரு நிமிடம் உங்களால் ஒதுக்க முடியுமா? என கோரி ஒரு செய்தி அனுப்பலாம். கோரிக்கை ஏற்கப்பட்டால் ஒரு நிமிடத்தில் அவருடனான உரையாடலை முடித்துக்கொள்ள வேண்டும். என்ன தேவையோ, எது முக்கியமோ அதை மட்டும் கேட்டு விட்டு வேறு வேலை பார்க்க வேண்டியது தான். ஒருவேளை கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அந்தச் செய்தி டெலிட் செய்யப்பட்டு விடும்.

ஓயாமல் ஸ்மார்ட்போன் திரையைப் பார்த்துக்கொண்டு கவனச்சிதறலுக்கு ஆளாகி தவிப்பதைவிட காரியத்தில் கண்ணாக இருக்க உதவும் இந்தச் செயலி அருமையான யோசனை தான் இல்லையா? ஆண்ட்ராய்டு, ஐபோன் என இரண்டிலும் செயல்படும் செயலி இது; http://gamchat.com/

***

இமெயில் ஆய்வு சொல்லும் தகவல்!

இமெயில் பற்றி இன்னொரு தகவல் பார்க்கலாம். உலகின் மிகப்பெரிய இமெயில் ஆய்வு அது. 1600 கோடி இமெயில்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்றால் சும்மாவா என்ன? ஆனால், இந்த ஆய்வு சொல்லும் சேதி என்ன தெரியுமா? ஐந்து வார்தைகள் தான். அதாவது பெரும்பாலான பதில் மெயில்களில் இடம் பெற்றிருக்கும் சராசரி வார்த்தைகள் ஐந்து தான் என்பது இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று. யாஹூ லேப்ஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலை. இணைந்து நடத்திய இந்த ஆய்வில் 2 லட்சம் பயனாளிகளின் மெயில்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மாதக்கணக்கில் நடந்த ஆய்வின் முடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

பக்கம் பக்கமாக கடிதம் எழுதிப் பழகிய தலைமுறைக்கு, பலரும் 5 வார்த்தைகளில் இமெயிலுக்குப் பதில் அளிக்கின்றனர் என்ற விவரம் அதிர்ச்சியை அளிக்கலாம்.

அதே போல இளம் தலைமுறை அதாவது இணையத் தலைமுறை பதில் மெயில் அனுப்ப எடுத்துக்கொள்ளும் நேரமும் 13 நிமிடங்களாக இருப்பதையும், பெரியவர்கள் இதற்கு 24 நிமிடம் எடுத்துக்கொள்வதையும் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதில் மெயில் அனுப்ப ஆற அமர நேரம் எடுத்துக்கொள்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. அதாவது சராசரியாக 47 நிமிடங்கள்.

முதல் மெயிலுக்கு அனுப்பப்பட்ட பதிலின் அளவு சராசரியாக 43 வார்த்தைகளாக இருப்பதையும் ஆய்வு தெரிவிக்கிறது. நீங்களும் இந்த ரகம் என்றால் அடுத்தப் பதில் மெயில் அனுப்பும் போது இன்னும் கொஞ்சம் கூடுதல கவனம் எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?

இந்த இமெயில் ஆய்வு பற்றி படிக்க ஆர்வமா? இதோ முழு அறிக்கைக்கான இணைப்பு:  http://arxiv.org/pdf/1504.00704v1.pdf

***
வண்ணச் சதுரங்கள் விளையாட்டு!

இணையத்தைக் கலக்கும் கேம்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அவை முதல் பார்வைக்கு மிக எளிமையாக தான் இருக்கும். ஆனால் ஆடிப்பார்க்கும் போது தான் அத்தனை சுலபமில்லை என்பது புரியும். இந்தக் கடினத்தன்மையே எப்படியாவது வெற்றி பெறுவதற்காக அந்த கேம்களை மீண்டும் மீண்டும் ஆடவைக்கும். இப்போது பிரபலமாகி இருக்கும் வண்ணச் சதுரங்கள் கேமும் இந்த ரகம் தான். ஆரம்பத்தில், அட இதென்ன பிரமாதம் என்று அலட்சியமாக நினைக்க வைத்து, அடுத்த அடுத்தக் கட்டங்களாக முன்னேறும் போது இந்த விளையாட்டு மேலும் மேலும் கடினமாக, ஒரு கட்டத்தில் அப்படியே திகைக்க வைத்து விடுகிறது.

குகுகியூப் தான் இந்த இணைய விளையாட்டு. நீங்களும் ஆடிப்பார்த்தால் அதிகமாக அலுத்துக்கொள்வீர்கள்.

அப்படி என்ன இருக்கிறது இந்த விளையாட்டில் என்கிறீர்களா? வண்ணச் சதுரங்கள் தான் இருக்கின்றன. ஆரம்பம் முதல் இறுதி வரை சின்னதும் பெரிதுமாக வண்ண சதுரங்கள் தான். அந்த வண்ணக் கட்டங்களில் மாறுபட்ட கட்டத்தை கண்டுபிடிக்க வேண்டும்; அது தான் விளையாட்டு!

முதலில் துவங்கும்போது நான்கு வண்ணச் சதுரங்கள் இருக்கும். இவற்றில் மூன்று ஒரே வண்ணமாக இருக்க ஒரு சதுரம் மட்டும் வேறு நிறத்தில் இருக்கும். அதை கண்டுபிடிக்க வேண்டும். இது எளிதானது தான். பார்த்தவுடன் தெரிந்துவிடும்.

ஆனால் அடுத்தக் கட்டத்தில் சதுரங்களின் எண்ணிக்கை அதிகமாகும். 4 என்பது 9 ஆகும். அதன் பிறகு 16, 25, 36 என அதிகரித்து 81 சதுரங்கள் வரை தோன்றும். முதல் கட்டத்துக்குப் பிறகே எந்தக் கட்டத்தை பார்த்தாலும் ஒரே நிறமாக தோன்றத்துவங்கும். போகப்போக இது இன்னும் கடினமாகும்.

சரியாக கட்டத்தை கணித்தால் ஒரு புள்ளி. தவறாக கணித்துவிட்டால் ஒரு புள்ளி கழிக்கப்பட்டு விடும். ஒவ்வொரு நிலையாக படிப்படியாக முன்னேறிச்செல்ல வேண்டும். அது மட்டும் அல்ல 60 நொடி கெடுவும் இருக்கிறது.

பேஸ்புக்கில், இணையத்தில் மற்றும் ஸ்மார்ட்போனில் இந்த கேமை ஆடலாம். பத்து புள்ளிகளுக்கு கீழ் எடுத்தால் மிக மோசம். 30 புள்ளிகள் வரை எடுத்தால் சராசரி. ஆனால், இதுவே எத்தனை சவாலானது என ஆடிப்பார்த்தால் புரியும்.

கேமில் எடுக்கும் புள்ளிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களையும் சவாலுக்கு அழைக்கலாம்.  இதுவரை பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் இந்த கேமை பகிர்ந்து கொண்டவர்கள், தாங்கள் பெற்ற புள்ளிகளைப் பெருமையுடன் தெரிவித்து வருகின்றனர். பலர் இந்த விளையாட்டு கண்ணைக் கட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

கனடாவை சேர்ந்த நெட்வொர்க் 365 எனும் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த வண்ண விளையாட்டு உங்கள் கண்பார்வைக்கான சோதனையும் கூட!

வண்ண விளையாட்டை ஆட: http://www.kukukube.ca/

***

ஜிம்மி வேல்ஸ் அறிவுரை

பில் கேட்சில் துவங்கி ஸ்டீவ் ஜாப்ஸ், எலன் மஸ்க், மார்க ஜக்கர்பர்க் என எல்லோருமே தொழில்நுட்ப உலகில் சாதித்தவர்கள். இவர்களின் அனுபவப் பாடங்களை பொன்மொழி வாக்கியம் போல சில வரிகளில் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும். அதிலும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால்?

வெப் ஹோஸ்டிங்க்ஸ் ரிவ்யூ இணையதளம் இதைத் தான் அழகான வரைபடச் சித்திரம் மூலம் செய்திருக்கிறது.

பயிற்சிப் பணியாளர்களுக்கு தொழில்நுட்பத் தலைவர்களின் அனுபவப் பாடம் எனும் தலைப்பிலான அந்த வரைபடச் சித்திரத்தில் வெளியாகியுள்ள அனுபவ முத்துக்கள்:

பில்கேட்ஸ்: (மைக்ரோசாப்ட் நிறுவனர்)

சிக்கலான தன்மை உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள். செயற்பாட்டாளராக இருங்கள். பெரிய சமநிலையற்றை தன்மையை எதிர்த்துப் போராடுங்கள். இது உங்கள் வாழ்வின் மகத்தான அனுபவமாக இருக்கும்.

ஜேக் டோர்சே ( டிவிட்டர் இணை நிறுவனர்)

சிலிக்கான் வேலியில் மற்றவர்கள் காலடியைப் பின்பற்றி நடக்கும் நிலையில் விழுவது சுலபமாக நடப்பது. நீங்கள் சொந்த பாதையை கண்டாக வேண்டும்.

எலென் மஸ்க்; (டெஸ்லா எலெக்ட்ரிக் கார் முன்னோடி)

இளம் வயது ரிஸ்க் எடுப்பதற்கானது. பின்னர் உங்களுக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் கடமைபட்டவர்களாகி விடுவீர்கள்.

ஜிம்மி வேல்ஸ்(விக்கிபீடியா நிறுவனர்)

எந்த வகையான ஆடம்பரச் செலவுக்கும் கடன் வாங்க வேண்டாம். கல்விக்கடன் போன்ற முதலீட்டு வகை கடனுக்காக மட்டுமே கடன் வாங்குங்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள் பிதாமகன்)

நீங்கள் விரும்பியதை செய்வதே மகத்தான் பணிக்கான ஒரே வழி. விரும்பியதை கண்டுபிடிக்காவிட்டால் கிடைத்ததை ஒப்புக்கொள்ளாதீர்கள்.

இந்த பாடங்களை இன்போகிராபிக்காகவே பார்க்கவும் படிக்கவும் வேண்டுமா?; http://www.webhostingreviews.ca/articles/tech-leaders-lessons-interns/

***

திபோட்டோகிராபிக்டிக்‌ஷனரி

புக்மார்க் ; http://thephotographicdictionary.net/

இணையத்தில் எத்தனையோ அகராதிகளைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் திபோட்டோகிராபிக்டிக்‌ஷனரி போல வித்தியாசமான இணைய அகராதியை பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த டிக்‌ஷனரியில் அப்படி என்ன வித்தியாசம் என்றால் வார்த்தைகளுக்கு இது காட்சி விளக்கமாக பொருள் தருகிறது. அதாவது குறிப்பிட்ட வார்த்தையை உணர்த்தக்கூடிய ஒரு புகைப்படத்தை இந்த அகராதி முன்வைக்கிறது. அதோடு அந்தப் புகைப்படத்தின் கீழ் வழக்கமான அகராதி விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

முகப்புப் பக்கத்தில் வரிசையாக ஆங்கில எழுத்துக்கள் அகரவரிசையில் இடம்பெற்றிருக்கும். அதில் ஒரு எழுத்தைத் தேர்வு செய்து அந்த எழுத்தில் துவங்கும் வார்த்தைகளை கிளிக் செய்தால் அந்த வார்த்தைக்கான புகைப்படத்தைப் பார்க்கலாம். வார்த்தைகளின் பொருளுடன் புகைப்படம் பொருந்தும் விதம் பெரும்பாலும் கச்சிதமாகவே இருக்கிறது. ஒவ்வொரு படத்துடனும் தொடர்புடைய மற்ற சொற்களையும் பார்க்கலாம்.

இதில் உள்ள வார்த்தைகளைத்தான் பார்க்க முடியும்; அகராதி போல தேடமுடியாது என்றாலும் மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தை அளிக்க கூடிய இணையத்தளம். இதில் உள்ள புகைப்படங்கள் இணையவாசிகளால் சமர்பிக்கப்பட்டவை என்பதால் நீங்களும் கூட சமர்பிக்கலாம். லிண்டா வாரென் எனும் அமெரிக்கப் புகைப்படக் கலைஞரின் கைவண்ணம் இந்தத் தளம்.

***
இணைய மொழி!

நாங்கள் இணைய சமநிலையை (நெட் நியூட்ராலிட்டி) முழுவதும் ஆதரிக்கிறோம். எல்லோருக்கும் இணையத்தை வழங்கும் முயற்சி மற்றும் இணைய சமநிலை இரண்டும் சேர்ந்து இருப்பது சாத்தியம் தான்!

இன்டெர்நெட்.ஆர்க் திட்டம் பற்றி பேஸ்புக் நிறுவனர், மார்க் ஜக்கர்பர்க் .

                                 ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com