அழியும் வரலாறும், கைகொடுக்கும் இணையமும்

செல்ஃபிக்களின் காலம் இது. ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு சுயபடங்களை எடுத்துக்கொள்வதும், பகிர்ந்து கொள்வதும் இயல்பாக இருக்கிறது. அந்த அந்த


செல்ஃபிக்களின் காலம் இது. ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு சுயபடங்களை எடுத்துக்கொள்வதும், பகிர்ந்து கொள்வதும் இயல்பாக இருக்கிறது. அந்த அந்த கணங்களை ரசிப்பதை விட்டு விட்டு, செல்லும் இடங்களில் எல்லாம் சுயபட வாய்ப்பை தேடும் பழக்கத்தின் பாதிப்பு ஒருபுறம் இருக்கட்டும். இனி வெளியே செல்லும்போது  அதிலும் குறிப்பாக சுற்றுலா செல்லும்போது சுயபட மோகத்தைக் கொஞ்சம் தவிர்த்து, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் புகைப்படம் எடுங்கள். அந்தப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுங்கள். புகைப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் மூலமோ அல்லது புகைப்படப் பகிர்வு முன்னோடிச் சேவையான ஃபிளிக்கர் வாயிலாகவோ இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்தப் பகிர்வு நீங்கள் செய்யும் வரலாற்றுப் பங்களிப்பாக கூட இருக்கலாம். எப்படி என்று பார்ப்பதற்கு முன் சைபர் அகழ்வாராய்ச்சி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

சைபர் அகழ்வாராய்ச்சி என்றால் தொல்பொருள் ஆய்வின் நவீன வடிவம் என்று வைத்துக்கொள்ளலாம். அகழ்வாராய்ச்சியின் இயற்கையான பரிணாம வளர்ச்சி என்றும் பொருள் கொள்ளலாம். அகழ்வாராய்ச்சியுடன் நவீன தொழில்நுட்பத்தை இணைக்கும் இந்தத் துறையில் தரவுகள் ஒருங்கிணைப்பு, அவற்றை முப்பரிமாண வடிவமாக்குதல் என பல நுட்பங்கள் இணைகின்றன.

இந்த விளக்கம் குழப்புவதாக இருந்தால், வரலாற்றுச் சின்னங்களுக்கு டிஜிட்டல் வடிவம் கொடுப்பது என புரிந்து கொள்ளலாம். அதிலும் அழிந்துவிட்ட வரலாற்றுச் சின்னங்களுக்கு டிஜிட்டல் வடிவில் உயிர் கொடுப்பது என்றால் இதன் பொருளையும் முக்கியத்துவத்தையும் இன்னும் சிறப்பாகவே புரிந்து கொள்ளலாம்.

ஈராக்கின் மொசூல் நகரில் அழிக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்களை வருங்கால தலைமுறையின் நினைவில் நிறுத்துவதற்காக இப்படித்தான் டிஜிட்டல் வடிவம் கொடுத்து வருகின்றனர், சைபர் அகழ்வராய்ச்சி வல்லுநர்கள். மகத்தான தன்னார்வ திட்டமாக இது செயல்பட்டு வருகிறது.

ஈராக், எண்ணெய் வளம் மிக்க பூமி மட்டும் அல்ல; வரலாற்றுப் பொக்கிஷமும் கூட! மனித சரித்திரத்திற்குச் சாட்சியாக நிற்கும் பல இடங்கள் ஈராக்கில் இருக்கின்றன. சரித்திர நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படும் அருங்காட்சியகங்களும் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் பழங்கதை. சமீப ஆண்டுகளில் நடந்த போர்கள் மற்றும் தற்போது ஈராக்கை உலுக்கிக் கொண்டிருக்கும் தீவிரவாத அலை காரணமாக இந்த நினைவுச் சின்னங்கள் பல சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பது தான் நிகழ்கால நிதர்சனம்.

கலாசார அழிவு

வரலாற்றுச் சிறப்பு மிக்க மொசூல் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மனித உயிர்கள் பெருமளவில் பலியானது பெரும் சோகம் என்றால், மொசூல் அருங்காட்சியகத்தில் இருந்த வரலாற்றுக் கலைப்பொருள்களையும், நினைவுச் சின்னங்களையும் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தியது மனித குலத்துக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு. வன்முறைக்கு வரலாறும் சேர்ந்து பலியான காட்சியை அகழ்வாராய்சி வல்லுநர்களும் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களும் பார்த்து கண்ணீர் வடித்தனர். ஆப்கனிஸ்தானில் புத்தர் காலத்தின் வரலாற்றைப் பறைசாற்றிக்கொண்டிருந்த பாமியான் சிலைகள், தலிபான்களின் தோட்டாக்களால் சல்லைடையாக்கப்பட்டன.

இந்த இழப்புக்களை ஈடு செய்ய முடியுமா? இந்தக் கேள்விதான் இணைய வல்லுநர்களை சைபர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட வைத்திருக்கிறது. அதாவது அழிக்கப்பட்ட கலைப்பொருள்களுக்குத் தொழில்நுட்பம் மூலம் டிஜிட்டல் வடிவம் கொடுக்க முயன்று வருகின்றனர். எப்படி என்றால், கலைப்பொருள்களின் பழைய புகைப்படங்களை வைத்துக்கொண்டு அவற்றின் மூலம் பெறப்படும் விவரங்களைச் சேர்த்து முப்பரிமாண வடிவம் கொள்ள வைக்கின்றனர்.

டிஜிட்டல் மீட்பு

நிஜத்தில் இல்லாமல் போன அந்தப் பொருள்களை டிஜிட்டல் பொருள்களாக- முப்பரிமாண உருவமாகப் பார்க்கலாம். இவை அழிந்த பொருள்களுக்கு ஈடாகாது தான். ஆனால், அவற்றின் வரலாற்று நினைவுகளை பாதுகாக்கும் வகையில் இவை அமைந்துள்ளன.

போட்டோகிராமெட்ரி என்று சொல்லப்படும் நவீன நுட்பம் மூலம் இதை உருவாக்குகின்றனர். ஒரு பொருளின் பல கோண புகைப்படங்களை ஒன்றாக தைப்பதன் மூலம் அவை முப்பரிமாண உருவமாக மாற்றப்படுகிறது. கலாசாரம் சார்ந்த பாரம்பரிய திட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த முறையைத்தான் மொசூலில் அழிக்கப்பட்ட கலைப்பொருள்களுக்கு உருவம் கொடுக்க பயன்படுத்தி வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் சார்பிலான கலாசார அமைப்பான இனிஷியல் டிரையினிங் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் கல்சுரல் ஹெரிடேஜ் அமைப்பைச் சேர்ந்தவர்களான மேத்யூ வின்செட் மற்றும் சான்ஸ் காப்னோர் ஆகிய இருவரும் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் காப்பதற்காக டிஜிட்டல் நுட்பங்களைப் பயன்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈராக்கில் ஏற்பட்ட கலாசார இழப்பு பற்றி வருத்தம் பொங்க பேசிக்கொண்டிருந்தபோது இது தொடர்பாக ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்கத்துடன் இவர்கள் உருவாக்கியதுதான் பிராஜக்ட் மொசூல் திட்டம்.

இணையம் மூலம் உதவி

இந்தத் திட்டம் இணையவாசிகள் பங்களிப்புடன் கிரவுட்சோர்சிங் முறையில் செயல்படுகிறது. மொசூல் அருங்காட்சியக கலைப்பொருள்களின் புகைப்படங்களை வைத்திருப்பவர்கள் இந்தத் தளத்தில் அவற்றைச் சமர்பிக்கலாம். அதன் பிறகு தன்னார்வலர்கள் அந்தப் புகைப்படங்களை ஆய்வு செய்து அவற்றில் உள்ள தகவல்களைத் திரட்டித் தருவார்கள். அந்தத் தகவல்கள் மென்பொருள் உதவியுடன் ஒன்றிணைக்கப்பட்டு முப்பரிமாண வடிவம் உருவாக்கப்படும். அதிகப் புகைப்படங்கள் இருந்தால் அந்த அளவு துல்லியம் இருக்கும்.

இதுவரை 543 கலைப்பொருள்கள் தொடர்பான 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முப்பரிமாண கலைப்பொருள்கள் ஆன்லைன் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மொசூல் அருங்காட்சியகத்தை அலங்கரித்த சிங்கச் சிலைதான் பார்வையாளர்களின் அபிமானத்துக்கு உரியதாக இருக்கிறது.

இணையவாசிகள் உதவியுடன் நிகழும் டிஜிட்டல் மீட்பு என இந்த முயற்சி வர்ணிக்கப்படுகிறது. நிஜப் பொருள்களுக்கு இவை பதிலாக அமையாது என்றாலும் கலைப்பொருள்களைக் காட்சி ரீதியாக பார்க்க உதவுகிறது. ஏறக்குறைய அருங்காட்சியகத்தில் இருக்கும் உணர்வை சைபர்வெளியில் உண்டாக்க முடிவதாகவும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

அழிவும் ஆக்கமும்

ஈராக்கில் நடைபெறும் நிகழ்வுகள் கலாசார இழப்பு மட்டும் அல்ல, கலைப்பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் நடந்து வருவதாகவும், இவற்றை எல்லாம் நாம் மெளனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதை விட ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என பிராஜக்ட் மொசூல் தளத்தின் அறிமுக பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அழிப்புடன் தொடர்பு படுத்தப்படும் துவேஷ உணர்வை விட்டுவிட்டு இணைந்து செயல்படும் நம்பிக்கை உணர்வைப் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்மிடையே இருக்கும் பகிரப்பட்ட நினைவுகளைப் பாதுகாப்பதும், ஏன் அவற்றை மறு உருவாக்கம் செய்வதும் கூட சாத்தியம் என்றும் நம்பிக்கை பொங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவாசிகள் சமர்ப்பிக்கும் புகைப்படங்கள் மூலம் அழிக்கப்பட்ட கலைப்பொருள்களை மெய்நிகர் வடிவங்களாக உருவாக்குவதைத் தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் அழிக்கப்பட்ட கலாசாரச் சின்னங்கள் நிரந்தரமாக மனிதக் குலத்தின் பொது மனத்தில் இருந்து அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதை இது சாத்தியமாக்குகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று இந்த கலைப்பொருள்களின் உருவாக்கத்தை முப்பரிமாண அச்சு நுட்பம் மூலம் அச்சிட்டுக்கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர்.

நாளைய நம்பிக்கை

மொசூல் திட்டத்தில் உண்டாக்கப்படும் டிஜிட்டல் கலைப்பொருள்கள், ஆன்லைன் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இந்தக் கலைப்பொருள்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

மேலும் பொதுமக்களுக்கும் தங்கள் வரலாறு சார்ந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும், பரிமாறிக்கொள்ளவும், வருங்கால தலைமுறைக்கு கொடையாக வழங்கவும் வகை செய்யும். வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெறுமைக்கும் வேதனைக்கும் மத்தியில் நம்பிக்கை கீற்றையும் ஏற்படுத்தும். அதே போல நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் அழிந்த கலைப்பொருள்களை மீட்டெடுக்கவும் இதே போன்ற சைபர் அகழ்வாராய்ச்சி உதவும்.

அழிக்கப்பட்ட கலைப்பொருள்களின் நினைவைப் பாதுகாக்க மட்டும் அல்லாமல், பொது மக்கள் பார்வைக்கு வைக்க முடியாத நிலையில் இருக்கும் கலைப்பொருள்களையும் இதே முறையில் உருவாக்கி இணைய காட்சிக்கு வைக்க முடியும். இவ்வாறு அரிய வகைப் பொருள்களையும் பொதுமக்கள் ஆன்லைன் கூடத்தில் காண வைக்க முடியும்.

வருங்காலத்தில் இது போன்ற முயற்சிகள் மேலும் பரவலாகலாம்.

அதனால்தான் வரலாற்றுச் சின்னங்களையும் கலாசாரப் பொக்கிஷங்களையும் புகைப்படம் எடுத்து பதிவேற்றுவது நல்ல விஷயமாக இருக்கும். அவை டிஜிட்டல் அடையாளங்களாக கைகொடுக்கும்.

பிராஜெக்ட் மொசூல் இணையதளம்; http://projectmosul.org/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com