அத்தியாயம் 18

லிண்டா கையிலிருந்த வரைபடத்தை மீண்டும் கவனமாகப் பார்த்தாள். இரு வீடுகள்.
அத்தியாயம் 18

லிண்டா கையிலிருந்த வரைபடத்தை மீண்டும் கவனமாகப் பார்த்தாள். இரு வீடுகள்.. அருகருகே. ஒன்று ஓடு வேய்ந்தது, மற்றொன்று காரை. வளைவுகள் வைத்து கட்டப்பட்ட மாடிக்கட்டிடம். நடேச பிள்ளையின் குடும்பம் காரை கட்டிடத்தில் இருந்திருக்கிறார்கள். முத்து, அருகில் திரையில் கண்ட ஸ்கேனை சிரம்பபட்டு வாசித்தான்.  ஓட்டு வீடு வாடகைக்கு விட்டிருந்ததாக டைரியில் எழுதியிருந்தார் ‘சிவபாத குருசாமியின் கட்டளைப்படி, நெல்லையப்ப பிள்ளையின் குடும்பத்திடம் ரூ.1/- மாத வாடகையாக வசூலித்து, கோயில் பண்டாரத்தில் சேர்க்கவேண்டியது’

‘கிட்டத்தட்ட கொடை. வாடகையில்லை’ என்றான்

‘அவர் ஒழுக்கமிக்க நெறியாளராக வாழ்ந்திருக்கிறார். பல வழக்குகளுக்கு பணம் வசூலிக்கவில்லை. குடும்ப வழக்குகளை தானே மத்தியஸ்தம் செய்து தீர்த்திருக்கிறார். ஒரு மதிப்பு கலந்த அச்சம் மக்களுக்கு நடேச பிள்ளையிடம் இருந்திருக்கிறது’ லிண்டா, சட்டென பேச்சை நிறுத்தி, அவனை சில வரிகள் எழுதி அடித்திருந்த இரு வரிகளை வாசிக்கச் சொன்னாள். சிரமப்பட்டு அதனை ஓரளவு படித்துப் புரிந்துகொண்டு நிமிர்ந்தான்.

‘இங்கு வாடகைக்கு இருந்தவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். சபாபதி, உமையம்மை என்ற இருவர் ஒரு பையனுடன் வந்ததாக குறிப்பு இருக்கிறது. அதன்பின் இந்த வீட்டின் வாடகையைப் பற்றி குறிப்பே இல்லை சொந்தக்காரர்களாக இருக்கும்.’

அவள் பெயரை மீண்டும் உச்சரிக்கச் சொல்லி, தனது கணினியில் தேடினாள்.

‘இல்லை. நடேசபிள்ளையின் குடும்பத்தில் அப்படியொருவர் இல்லை  அவர் வசூலித்த வாடகையை கோவிலில் இட்டிருக்கலாம். ஆனால் வசூலிக்காமலோ, அல்லது அதுபற்றி குறிப்பு எழுதாமலோ போயிருக்க முடியாது.’

எதையெல்லாம் கிண்டுகிறாள் இந்த கிறுக்கி? முத்துகுமாருக்கு எரிச்சல் வந்தது.

‘விடு லிண்டா. துப்பாக்கி பற்றி விசாரிக்கலாம். என்ன துப்பாக்கி அது?’

‘வெப்லி அல்லது மார்க் 3. ஸாரி, இவ்வளவு முக்கியமான தடயத்தைப் பற்றி தடுமாற்றம் கொண்டிருக்கிறேன் என நீ நினைக்கலாம். ஆண்டர்ஸன் படுகொலையில் திடீரென ஆவணங்கள் மறைந்து போனதில் இதன் தகவலும் மறைந்து போனது. ஆனி, அதைப்பற்றி எழுதவேயில்லை. ரிவால்வர், ஐந்து குண்டுகள் - அவ்வளவுதான்.’

‘எனக்குத் தெரிந்து துப்பாக்கிகள் திரட்டும் ஆர்வலர் ஒருவர் இருக்கிறார். விக்ரம் சின்ஹா. பல வகையான துப்பாக்கிகள் பற்றி அறிந்த வல்லுநர். அவரை வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாமா?’

‘என்னவென்று கேட்பாய்? தெரியாத துப்பாக்கி, தெரியாத குண்டுகள். அவர் என்ன சொல்லிவிடமுடியும்?’

‘அக்காலத்தில் இப்பகுதியில் இருந்த துப்பாக்கிகள் எவையேனும் அவரது கவனத்தில் வந்திருக்கிறதா? என்று விசாரிக்கலாம். இது போன்ற அரும்பொருள் சேகரிப்பவர்களுக்கு என்று தனி தொடர்புகள் இருக்கும்.’

‘குட் ஐடியா’ என்றாள் புன்னகைத்து.

முத்து மொபைலில் ராஜீவ் சின்ஹாவின் எண்ணைத் தேடினான். எப்போதோ அவனது க்ளையண்ட் ராஜீவ் சின்ஹா ‘என் தம்பி விக்ரம், துப்பாக்கி நிபுணர். வீட்டுல மட்டுமே நூறு துப்பாக்கி வச்சிருக்கான்.’ என்று ஒரு பார்ட்டியில் பெருமையடித்தது இன்று பயனுள்ளதாக இருக்கிறது.

‘தென் தமிழ்நாடு? ஸாரி. அங்கிருந்து ரிவால்வர் எதுவும் ஏலத்துல வந்ததா எனக்குத் தெரியலை’ என்றார் கனத்த குரலில் விக்ரம் சின்ஹா.

முத்துக்குமாரின் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது. ‘ப்ளீஸ், நினைவுபடுத்திப் பாருங்க. வெப்லி இல்லேன்னா என்ஃபீல்ட் மார்க் 3..’

‘மிஸ்டர் குமார்’ என்றார் மறுமுனையில் சின்ஹா சிரித்தபடி ‘வெப்லியும் மார்க்              3-யும் தேடுவது, தில்லி சாலையில் மாருதி கார்களைத் தேடுவது மாதிரி. எக்கச்சக்கமாக கிடைக்கும். ஆர்மியிலும், தனிமனித பயன்பாட்டிலும் அன்று முதன்மையாக இருந்தவை அவை. எதற்கும் எனக்குத் தெரிந்தவர்களிடம்...’

லிண்டா ஒன்றும் கவனியாததுபோல தன் கணினியின் திரையில் ஆழ்ந்திருந்தாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com