அத்தியாயம் 36

லிண்டா எங்கோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். முத்துக்குமார் ஹலோ என்ற போது,
அத்தியாயம் 36

லிண்டா எங்கோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். முத்துக்குமார் ஹலோ என்றபோது, துணுக்குற்று எழுந்தாள். ‘என்ன ஆச்சு?’ என்றபோது ‘ப்ச்’ என்றாள். ‘ஏதோ கனமாக இருக்கிறது. இதுவரை நான் இப்படி உணர்ந்த்தில்லை. அந்த பாட்டி.. செல்லி… அவரது எதிர்ப்பு, அவரது ஓலம்.. அதை என்னவென்று சொன்னாய்?’

‘ஒப்பாரி’ என்றான் முத்துக்குமார்.

‘அது சுயமாக அவருக்கு வருகிறதா?  பார்த்தால் மனநிலை சரியில்லாதவர் போலத் தோன்றுகிறார்..’

‘அது..’ தயங்கினான் முத்துக்குமார் ‘அது, குடும்பத்தில் பரம்பரையாக வரும் ஒன்று. பெரிய பாட்டி முத்தாயி இயல்பாகப் பாடல் இயற்றிப் பாடக்கூடியவராக இருந்தார். ‘

‘அதோடு, கற்பனையாக பலவற்றையும் கூட்டிக் கதையாகச் சொல்லக் கூடியவர்’ என்றாள் லிண்டா புன்னகையுடன்

‘ஆம்’ என்றான் முத்துக்குமார் சிரிப்புடன் ‘கற்பனையான உலகில் வாழ்ந்தவர். அவர் மகள், திருமணமான சில வருடங்களிலேயே, குழந்தையாக இருந்த செல்லியைத் தூக்கிக்கொண்டு தாய் வீடு திரும்பிவிட்டார். செல்லிக்கு கற்பனை உலகில் சஞ்சரிப்பது எளிதாகவும், இன்பமாகவும் இருந்தது. பாட்டியிடம், தன் பெரிய தாத்தா பற்றி கதை கேட்டு வளர்ந்தவளின் மனச்சிதைவு, தான் வாழும் காலத்தின் முன் சென்று  இரு தலைமுறைக்கு முன் நடந்த நிகழ்வுகளில் வாழத்தொடங்கினாள்’ என்பார் என் அப்பா. எங்களைப் பொறுத்த வரை, அவர் ஒரு மரைகழண்ட கேஸ்.’

‘அவரது பாடல்கள்.. அவரே இயற்றிப் பாடியதா?’

‘சில அவருடையவை, பல, அவர் முத்தாயிப் பாட்டியிடம் கேட்டவை. 1960களில் நா.வானமாமலை ஆராய்ச்சி இதழுக்கு நாட்டுப்புறப்பாடல் தொகுப்புக்கு இவங்க பாடல்களையும் பதிய வந்தாராம். அண்ணன் மேற்கொண்ட  வலிக்காகவும், இறப்புக்குக்காவும் பாடின பாடல்கள் கொஞ்சம் தெளிவில்லாமலும், இவங்க தவிர வேற யாரும் பாடவில்லை என்பதாலும், அவர் பதிவுல ஏறாமப் போயிருச்சாம். இதுக்கு முன்னாடி 1940களில் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பிற்கு வந்தப்போ முத்தாயியோட மகள் எங்க வேலம்மா பாட்டி மறுத்துட்டதா சொல்லுவாங்க.’

‘அந்தக் குரல். தட்ஸ் ஹாண்ட்டிங். என்ன ஆழமான ஒரு வலி வெளிப்பாடு இல்ல?!’

‘லிண்டா’ என்றான் முத்துக்குமார் வந்த வேலையைப் பார்ப்போம். இப்ப, அந்தத் துப்பாக்கி இல்லேன்னா, எங்களுக்குப் பணம் வராதா?’

‘அப்படித்தான் லாயர்கள் சொல்லுகிறார்கள். உயிலின்படி, துப்பாக்கி வழிகாட்ட மட்டுமே நம்மால் உறுதி செய்ய முடியும். இதுவரை அவரிடம் இருந்த முத்துராசா குடும்பத்தின் மரபணு, உங்கள் குடும்பத்தின் வம்சாவளியை நிரூபித்திருக்கிறது. அவ்வளவுதான். குண்டுகளின் இருப்பு மட்டுமே உங்களுக்கு சொத்தில் உரிமை இருப்பதை உறுதி செய்ய முடியும்.’

முத்துக்குமார் சில நிமிடங்கள் சிந்தனை வயப்பட்டு நின்றிருந்தான். ஐந்து குண்டுகள் அடங்கிய துப்பாக்கி கிடைத்தால், கோடிகள்.. கிடைக்காவிட்டால்….

‘முத்து, எனக்கு அந்த முதியவளைக் காண வேண்டும்போல் இருக்கிறது. அவளை இங்கே அழைக்க முடியுமா?’

‘வேண்டாம்’ என்றான் முத்துக்குமார். ‘நாம் அவள் வீட்டிற்கே போவோம். இங்கே வந்தால் எப்படி, நடந்து கொள்வாள் எனச் சொல்ல முடியாது’.

செல்லியாத்தாவின் வீட்டை அவர்கள் அடைந்தபோது, தெரு வெறிச்சோடிக்கிடந்தது. பத்தரை மணி வெயில் உச்சியில் உறைக்க, வேப்பமர நிழல் சற்றே குளுமையைத் தந்தது. ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்த செல்லியாத்தா, அவர்கள் வரும் ஓசையில் எழுந்து விரைந்து வந்தாள்.

‘யாரு? ஆனிம்மாவா?’ என்றபடி எழுந்தாள் செல்லியாத்தா. ‘நீ வருவன்னு தெரியும். ஒன்னப்பாக்கத்த்த்தான் உசிரை இத்தனை நாளும் பிடிச்சு வச்சிருந்தேன் பாத்துக்க’

‘யாத்தா, இவங்க ஆனியில்ல. லிண்டா’ என்றான் முத்துக்குமார் புன்னகையுடன். லிண்டாவைப் பார்த்துப் புன்னகையுடன் ‘இவள் உன்னை ஆனி என நினைத்திருக்கிறாள். இவள் வாழ்க்கையில் இதுவரை ஆனியைப் பார்த்ததே கிடையாது. மனநோயின் உச்சம்..’ என்றான்.

‘ஏலா, இவள அன்னிக்கு கூட்டிட்டு வந்தல்லா? இவளக் கண்டுட்டு ரெண்டு நாளா ஒறங்கல பாத்துக்க. மண்டைக்குள்ள ஒரே இடி. இவள எங்கிட்டோ பாத்திருக்கம்லா?ன்னுட்டு. அதான் கவனமா ஒருவாட்டி பாத்து கேட்டுகிடலாந்தான் .. யாத்தா, ஒம்பேரென்னா?.’

‘லிண்டா, பாட்டி’ என்றான் முத்துக்குமார்.

‘ஒங்கிட்ட கேக்கல, மூதி. அவ சொல்லட்டு.’

தடுமாறிப்போன அவன், செல்லியின் கேள்வியை மொழிபெயர்க்க, லிண்டா ஒரு சிரிப்புடன் அவள் கையைப் பற்றியபடி ‘லிண்டா..’என்றாள்.

‘ஆங். கொரலும் அதேதான். இல்ல, ஒம் பேரு வேற’ செல்லியாத்தா தலையை இங்குமங்கும் ஆட்டினாள்.

‘யாத்தா, இவ முததடவயா இங்க வர்றா, புரியுதா? சொம்மா தொணதொணங்காத’

செல்லியாத்தா உள்ளே போனாள். தனது ட்ரங்குப் பெட்டியில் ஒரு ப்ளாஸ்டிக் பையினுள் வைத்திருந்த சில காகிதங்களை எடுத்து வந்து அவளிடம் நீட்டினாள். ‘நீ இங்ஙன வந்தது, நாம் பொறக்கறதுக்கு முன்னாடி. இதுல பாரு’

சற்றே பழுப்பேறிப்போயிருந்த அந்த காகிதங்களின் நடுவே ஒரு போட்டோ. கறுப்பு வெள்ளையில், வெள்ளை நிற கவுனும், தலையில் தொப்பியுமாக, எங்கோ நோக்கிச் சிரித்தபடி நின்றிருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் கழுத்தளவு போட்டோ...

லிண்டாவின் கண்கள் நிலைகுத்தின... ‘இது இது ஆனி. அவள் கழுத்தில் இருப்பது?

தொடரும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com