அத்தியாயம் 30

தோண்டிற வேண்டியதுதான். எல்லாருக்கும் நல்லது ஒன்ணு நடக்குன்னா
அத்தியாயம் 30

‘தோண்டிற வேண்டியதுதான். எல்லாருக்கும் நல்லது ஒன்ணு நடக்குன்னா, பெரிய தாத்தா தானே வெளிய வந்துருவாருல்லா’ பெரியப்பா சொல்லிக்கொண்டிருந்தார். ‘முந்தி, ஒரு தடவ யாரோ ஒருத்தரு இவர் கியாரண்டியில பணம் வாங்கிட்டு ஓடிட்டானாம். பணம் கொடுத்தவன் கோபத்துல ‘நீருதாம்வே அவன பணத்தோட ஓட வச்சீரு. அதுல உமக்கு பங்கு இருக்குன்னு சொல்லி விவாதம் வளத்திருக்கான். இவர்கிட்ட ‘நீர் பைசா வாங்கலைன்னா, ஒம்ம விரல அறுத்துப் போடும்வே எனக் கத்த, இவரு அப்பவே  இடது கை கட்டைவிரல வெட்டிப் போட்டாராம். இப்படி ஒரு  கத உண்டும். எதுக்குச் சொல்லுதேன்…’  அனைவரும் பெரிய தாத்தா எத்தனை பேருக்கு உதவினார் என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, செல்லி மட்டும் தனியே நிற்பதை முத்துக்குமார் கவனித்தான்.

‘என்ன செல்லியாத்தா? ஒங்களுக்கு முன்னாடி போனவங்களெல்லாம் எந்திச்சி வாராக போலிருக்கு?’ என்றான்

‘எவனாச்சும் அங்கிட்டுப் போய் தோண்டினீய, கொலை விழும், பாத்துக்க’ திடீரென அலறினாள் செல்லியாத்தா.தரையில் தொப்பென அமர்ந்து, மடேர் மடேரென கைகளால் தரையை அறைந்தாள்.

‘அந்த கோட்டிய எவம்ல கூட்டது?வெளிய தூக்கி எறி’

‘அவளுக்கும் பாத்தியத இருக்கு பாத்துகிடுங்க. பெரியவா. மருவாதியாப் பேசுங்க’ என்றாள் பெரியம்மா, செல்லியாத்தா தரையில் அறைவதைத் தவிர்த்தபடியே.

‘கிடக்கட்டு. எல்லாம் இவம்மா , பெரிய தாத்தா தங்கச்சிகிட்ட நிக்க விட்டதுதான் தப்பாப் போச்சி. பழசையே பேசிட்டிருக்கும்..எளவு’

லிண்டா , செல்லியாத்தாவைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். ‘ஷி இஸ் ஹலுஸினேட்டிங்’ என்றான் முத்துக்குமார். ‘பை போலார், ஸ்கிசோப்ரீனியான்னு சொன்னாங்க. மருந்தெல்லாம் வேணாம்னுட்டா.’

‘ டே மாடசாமி, பெர்மிஷன் கொடுத்துட்டாங்களா, தோண்டிறலாமா?’

‘தோண்டிறலாம். சரியா எடம் தெரியுமா உங்களுக்கு?’

‘இந்த கிறுக்கி தினமும் அங்கிட்டுதான போய் நிப்பா? பெரிய பாட்டியோட இடது பக்கம் தாத்தா, கிழக்கு மேற்கா, அப்பால, இடம் இல்லேன்னுட்டு, முத்தாயிக் கிழவிய வடக்கு தெற்கா, தாத்தா கால்மாட்டுல பொதச்சாங்க. பொறவு, எல்லாம் எரிப்புதான்.’

ஆண்கள் வரிசையாக வெளியேற, செல்லியாத்தாவின் தோள்களைப் பற்றித் தூக்கி இருவர் உள்ளறைக்கு  இழுத்துப் போனார்கள். கால்களை உதைத்து அவள் குழந்தைபோல் அரற்றிச் செல்கையில் தேம்பலாக சில வரிகள் காற்றில் கலந்து, மறைந்தது.

‘குஞ்சியிலே நெய்தடவி குமரியில புறப்பட்டா

காஞ்சிக்கும் அப்பாலே கலங்கிடுவான் துரையெல்லாம்

அஞ்சிறுமே புலியெல்லாம் அய்யா கிளம்பிட்டா’

அதன்பின் வந்த வரியை அவர்கள் கேட்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com