அத்தியாயம் 32

நாயுடு தடுமாறினார் ‘அஹ்? அவன் ஆண்டர்ஸனை மட்டும் கொன்றிருக்க வேண்டும்’
அத்தியாயம் 32

நாயுடு தடுமாறினார் ‘அஹ்? அவன் ஆண்டர்ஸனை மட்டும் கொன்றிருக்க வேண்டும்’

‘அப்போது சபாபதியைக் கொன்றது யார் என நினைக்கிறீகள்?’ ஆனி மடக்கினாள்.

‘அது.. சுதேசிகளாக இருக்கக்கூடும்’

‘சபாபதியின் உடலில் கிடைத்த குண்டுகள் வெப்லி மார்க் 4ல் இருந்து வந்ததாக அறிக்கை சொல்கிறது. வெப்லி , சுதேசிகளின் கையில் போயிருக்க வாய்ப்பே இல்லை.’

ஜட்ஜின் நீல நிறக்கண்கள் அவளை உற்று நோக்கின.

‘முத்துராசா, ஒரு நல்ல காப்பாளன் இல்லை, பெண்ணே. அவன் நடுவில் ஆண்டர்சனை சுதேசிகள் மத்தியில் ஆபத்தான நிலையில் விட்டுவிட்டு, வேறு எங்கோ சென்றிருக்கிறான். அவர்கள் ஆண்டர்ஸனைச் சுடுமுன், சபாபதியின் குழு அங்கு வந்துவிடவே அவர்கள் ஓடிச்செல்ல முயன்றிருக்கின்றனர். இதனை அறிந்த முத்துராசா, முதலில் சபாபதியையும், பின் ஆண்டர்சனையும் கொன்றிருக்கிறான். தக்க சாட்சிகள் மூலம் கோர்ட் இவ்வாறு அறிகிறது. மிக்க மன அழுத்தத்தில் நீ இருக்கிறாய். உனக்கு ப்ரமை பிடித்திருக்கிறது. உன் வாழ்வில் இப்படி துயரச் சம்பவம் நடந்ததில் இந்நீதிமன்றம் உன்னுடன் இரக்கப்படுகிறது’

ஆனி இரு உள்ளங்கைகளையும் இறுகப்பற்றியிருந்தாள். மெல்ல மெல்ல அவளுக்குப் புரியத் தொடங்கியது. எப்படி எது நடந்திருந்தாலும், ஒன்று உண்மை – முத்துராசா தப்ப முடியாது.

கண்களை மூடினாள் ஆனி. காட்டில் தீனமாக அழுத பெண்கள் நினைவுக்கு வந்தனர். முத்தாயியையும், பிற சேடிப் பெண்களையும் சீண்டிக்கொண்டிருந்தவர்கள் எளிதில் தப்பியதும், அவர்கள் எகத்தாளமாக சிரித்துக்கொண்டே சென்றதும் கண்ணுக்குள் நின்றது.

‘யுவர் ஹானர்’ என்றாள் ஆனி மெல்ல ‘அன்று உங்களிடம் சொன்னதையே அனைவரின் முன்னும் செல்ல நினைக்கிறேன். முத்துராசா ஆண்டர்ஸனை வேண்டுமென்றே விட்டுச் செல்லவில்லை. அவன் வந்தது எனது கூடாரத்துள்’

‘நோ, ஆனி’ பதறினாள் அவள் அன்னை. கன்னிங்ஹாம் அவளை வெறித்துப் பார்த்தார்.

ஆனி தொடர்ந்தாள் ‘ எங்களுக்கு ஆபத்து என்று எவரோ அவனிடம் திரித்துச் சொல்லி அனுப்பியிருக்கின்றனர். அவன் வந்தபோது ஒரேயொரு வீரன் மட்டும் நின்றிருந்தான். அவனைக் கேளுங்கள்.’

‘அவனும் முத்துராசா காரணமின்றி வந்ததாகவே சொன்னான்’

ஆனி பெருமூச்செறிந்தாள் .இது சதி.

‘முத்துராசா தூக்கிலடப்படவேண்டும் பெண்ணே. உன் ஆண்டர்ஸனின் ஆன்மா சாந்தியடையும். இங்கிலாந்து சாம்ராஜ்யத்தில் ஒரு கறை துடைக்…’

‘முத்துராசா வந்தது என்னைக் காண’

தொப் என சத்தம் கேட்ட்து. ஆனியின் அன்னை மயங்கிக் கீழே விழுந்திருந்தாள். அவளை எடுக்க்கூட, கன்னிங்க்ஹாம் உணர்வற்றவராய் உறைந்திருந்தார். வேலைக்கார்கள் இருவர் ஓடிவந்து, ஆனியின் அன்னையை அமர வைத்து, நீரை அவள் முகத்தில் தெளித்தனர்.

‘நீ.. உன் சுய நினைவில்தான் இதனைச் சொல்கிறாயா?’ நீதிபதி மிக நிதானமாக்க் கேட்டார்.

‘ஆம் என்றாள் ஆனி. ‘நீங்கள் எப்படி இதனை எடுத்துகொள்கிறீர்கள் என்பது எனக்கு அக்கறையில்லை. அவன் பார்க்க வந்த்து என்னைத்தான்., என் நலனில் அக்கறை கொண்ட்தால்தான்.  சதி புரிந்த்தும், மீண்டும் ஆண்டர்சனைக் காக்க விரைந்தான். நான் அவன் பின் சென்றேன்.’

‘உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது’ என்றார் நீதிபதி

‘ஆம்’ என்று கூச்சல் கேட்ட்து. ஆனியின் அன்னை கத்திக்கொண்டிருந்தாள் ‘ உனக்குப் பைத்தியம்தான். அழகான ஆண்டர்ஸன் இருக்கையில் ஒரு பழுப்பனுடன் உறவு…சே.. ஆனி, இது நீயில்லை., நீதிபதியவர்களே, இவளை சென்னையில் நல்ல மருத்துவரிடம் காட்டி…’

‘நான் உண்மையைச் சொன்னேன்’ என்றாள் ஆனி ஓவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி. ‘ எப்படிப் புரிந்துகொள்வீர்கள் என்பது உங்களது மனம் பொறுத்த்து’

நீதிபதி மெல்ல எழுந்தார். வெளியே இருங்கள் என அவர்களை அடுத்த அறைக்கு அனுப்பி விட்டு தனியாக அறையில் உலவினார். அவரது சிந்தனையில் இங்கிலாந்தும், அதன் பெருமையும், ஒரு கனவானின் பெண்ணின் கற்புமாக அலைந்தன.

இரு மணி நேரம் கழித்து நீதிபதியின் அறையில் விஞ்ச் துரையும், இன்ஸ்பெக்ட்டரும் அமர்ந்திருந்தனர். ஒரு மணி நேர விவாத்த்தின் பின் அவர்கள் விரைந்து வெளியேறினர். முத்துராசாவும், நடேசபிள்ளையும் நீதிபதியின் அறையில் அழைக்கப்பட்டனர்.

வெளிவந்த முத்துராசாவின் இடது கையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்த்து. துணியின் கனத்தையும், அடுக்கையும் மீறி அது ரத்தத்தில் சிவந்திருந்த்து.

தீர்ப்பு பற்றி ஒரு விளக்கம் கவர்னருக்குச் சென்றது. ‘தகுந்த ஆதாரங்கள் இல்லா நிலையில் இந்நிகழ்வு பரஸ்பர துப்பாக்கிச்சூட்டின் விளைவு என முடிவுக்கு வருகிறேன். தனது கடமையில் தவறிய முத்துராசா, தனக்கே தண்டனையாக , விரலை வெட்டிக்கொண்டான். ஆனி என்ற இங்கிலாந்துப் பிரஜையின் குடும்ப மானம் கருதி, அவர்கள் விவரம் மறைக்கப்படுகிறது.. முத்துராசா விடுவிக்கவேண்டும் என்றும், இனி, அவர்கள் இருவரும் ஆயுட்காலம் வரை தொடர்பு கொள்ளமாட்டார்கள் என்றும், கன்னிங்ஹாம் குடும்ப கவுரவத்திற்கு இடையூறாக அவள் இருக்கமாட்டாள் எனவும், அதற்காக வேறு காலனிக்கு அவள் சென்றுவிடுவாள் என்றும்  அவள் இவ்வாறு வாக்குக்கொடுத்ததற்காக அவள் தந்தை , இவ்வழக்கில்  மேல் முறையீடு செய்வதை நிறுத்தவேண்டும் என்றும் நிபந்தனைகள் இட்டு,  முத்துராசாவை குற்றவாளியல்ல என தீர்ப்பளிக்கிறேன். கன்னிங்ஹாம் குடும்பத்தின் கவுரவத்தை முன்னிட்டும், இங்கிலாந்துப் பிரஜை ஒருத்தியின் கவுரவம் முன்னிட்டும். இந்த கேஸ் பற்றிய விவரங்கள் எந்தப் பத்திரிகையிலும், எந்த கெஜட்டிலும் வரவேண்டாமென பரிந்துரைக்கிறேன்’

ஆனி ,ஒரு மாதத்தில் மும்பை சென்று,  தென்னாப்பிரிக்காவுக்குக் கப்பலேறினாள். அவளது உடைமைகளில் ஒரு சிறு கண்ணாடிப்புட்டியில் ஃபார்மால்டிஹைடில் சுருங்கிய உடல் உறுப்பொன்று மிதந்துகொண்டிருந்த்து. அதனருகே ஒரு சிறு நகைப்பெட்டியும் இருந்த்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com