7. கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன!

தமிழ்த் திரைப்படங்களில் இருந்து குத்துப்பாடல் என்ற வஸ்துவைப் பிரிக்கவே முடியாது. ஒரு காலகட்டத்தில் இதற்கென்றே தனியாக நடிக நடிகையர் இருந்தனர். 
7. கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன!

தமிழ்த் திரைப்படங்களில் இருந்து குத்துப்பாடல் என்ற வஸ்துவைப் பிரிக்கவே முடியாது. ஒரு காலகட்டத்தில் இதற்கென்றே தனியாக நடிக நடிகையர் இருந்தனர். இப்போது கதாநாயக/நாயகிகளே குத்துப்பாடலுக்கும் ஆடிவிடுகின்றனர். ஆனால் அது அல்ல இந்த வாரக் கட்டுரையின் நோக்கம். குத்துப் பாடல்களை மிகச்சிறப்பாக உபயோகித்துக் கொண்டிருக்கும் கலைஞன் ஒருவனைப் பற்றித்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

உத்தமபுத்திரன் படத்தில் வரும் ‘யாரடி நீ மோகினி?’, குமுதம் படத்தின் ‘மாமா மாமா மாமா’ (எம்.ஆர் ராதா ஆடிய பாடல்), குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ பாடல், பட்டிக்காடா பட்டணமா படத்தின் ‘என்னடி ராக்கம்மா?’, வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில் வரும் ‘நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்’ பாடல் (இந்தப் பாட்டு பாடியதற்காக மட்டுமே நடராஜன் பல வருடங்கள் பிரபலமாக இருந்தார்), அதே கண்கள் படத்தின் ‘பூம் பூம் பூம் மாட்டுக்காரன்’ ஆகியவை பழங்காலத்தில் இருந்து தமிழ்ப்படங்களில் இடம்பெற்ற ஒருசில பிரபலமான குத்துப்பாடல்கள்.

இப்படிப் பட்டியல் இட ஆரம்பித்தால் இவற்றைப் பற்றிப் பல பக்கங்கள் எழுத முடியும். இளையராஜா இசையமைத்துள்ள குத்துப்பாடல்கள், பின்னர் தேவாவில் இருந்து இன்றைய சந்தோஷ் நாராயணன் வரை நூற்றுக்கணக்கில் இப்படிப்பட்ட பாடல்கள் உண்டு. ஜாலிலோ ஜிம்கானா, தகதகதக தகதகவென ஆடவா, சித்தாட கட்டிகிட்டு என்று எழுதிக்கொண்டே போகலாம்.

இப்படி வாழையடி வாழையாக (??!!) வந்துகொண்டிருக்கும் குத்துப் பாடல்களில் இருந்து, மிஷ்கினின் படங்களில் இடம்பெற்றுள்ள குத்துப்பாடல்கள் மட்டும் வித்தியாசப்படும். ஏன்?

மிஷ்கின் எடுத்த முதல் படமான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ’வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்ற குத்துப்பாடல் இடம்பெற்றது. பட்டிதொட்டியெங்கும் அதிரடியாக இப்பாடல் பிரபலம் ஆனது. மிஷ்கினே ஒன்றிரண்டு பேட்டிகளில், கானா உலகநாதன் தான் படத்தின் ஹீரோவை விடப் பிரபலமானார் என்று சொன்னதாக நினைவு. இந்தப் பாடலின் வசீகரமான மெட்டு மட்டும் அல்லாமல், பாடல் படமாக்கப்பட்ட விதமும் அனைவரையும் கவர்ந்தது. மாளவிகாவின் மஞ்சள் புடவை, தமிழகமெங்கும் பிரபலம். கானா உலகநாதனின் கதாபாத்திரம் அந்தப் பாடல் முழுதும் எப்படி வருகிறது என்று கவனித்துப் பாருங்கள். அந்தப் பாத்திரத்தின் உடல்மொழி, கெத்து, அவருடனேயே வரும் மைக் பிடிக்கும் நபர் என்று அச்சு அசலாக வடசென்னையில் நம் கண்முன்னர் நடக்கும் ஒரு கானா பாடல் அனுபவத்தை மிஷ்கின் அப்பாடலில் கொடுத்தார். பாடலுக்கு இசையமைத்த சுந்தர் சி பாபுவும் பிரம்மாதப்படுத்தியிருந்தார். மிஷ்கினின் பாடல்களில் மிஷ்கின் போடும் உழைப்பு மிக அதிகம். எனவே சுந்தர் சி பாபுவையும் தாண்டி மிஷ்கினின் திறமை மிளிரும் பாடல் இது.

அடுத்ததாக அஞ்சாதே படத்தை இயக்கினார் மிஷ்கின். அதில் இரண்டு குத்துப் பாடல்கள் இடம்பெற்றன. ‘கண்ணதாசன் காரக்குடி’ பாடலை மிஷ்கினே பாடினார். அடுத்ததாக, ‘கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன’ பாடலில், சித்திரம் பேசுதடியில் இடம்பெற்ற அதே மஞ்சள் புடவையுடன் ஸ்னிக்தா ஆடினார். உடன் பாண்டியராஜன் அப்பாடலில் ஆடி நடித்தார். தமிழில் குத்துப்பாடல் என்றதுமே இப்பாடல் சட்டென்று பலருக்கும் நினைவு வராமல் போகாது. இப்பாடலின் சிறப்பு என்ன? ஏன் இது காலம் தாண்டி நிற்கும்/நிற்கப்போகும் குத்துப்பாடலாக இருக்கிறது என்று யோசித்தால், இப்பாடலின் மெட்டு ஒரு தவிர்க்கமுடியாத காரணம் என்று புரியும். இப்படத்துக்கும் இசை சுந்தர் சி பாபுதான். அதேசமயம் மிஷ்கினின் தேர்ந்த இசை அறிவும் இன்னொரு காரணம். பாடல் உருவாக்கத்தில் மிஷ்கின் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும். பாடல் வரிகளை கபிலன் எழுத, துள்ளலாக மிஷ்கின் பாடலைப் படமாக்கியிருப்பார்.

இப்பாடலில் இடம்பெறும் நடன அசைவுகள் அட்டகாசமாக இருக்கும். பாடல் முழுதும் மிகுந்த மகிழ்ச்சியான முகத்துடன் ஸ்னிக்தா, பாடல் முடியும் வரை கூடவே அவ்வப்போது ஆடும் நபர்கள், பாண்டியராஜனின் முகபாவங்கள், அசைவுகள், பாடலில் இடம்பெறும் இசைக்கருவிகள் என்று எல்லா விதங்களிலும் மிகுந்த செய்நேர்த்தியுடன், குத்துப்பாடல் என்றால் ஏனோதானோ என்று இல்லாமல், பாடல் முழுக்கவும் ஜீவன் பொங்கி வழியும்படியான உருவாக்கம் இதில் இருக்கும்.

பாடலைப் பார்க்காமல் கேட்க மட்டுமே செய்தாலும்கூட நம்மையும் எழுந்து ஆடவைக்கும் திறன் இப்பாடலுக்கு உண்டு. குறிப்பாக, அவ்வப்போது ஸ்னிக்தாவுடன் ஆடும் நபர்களைக் கவனியுங்கள். குழுவில் நின்று ஆடும் நபர்களுக்கும் பிரத்யேகமான நடன அசைவுகள் இருக்கும். பாடலின் பாதியில், முதல் சரணம் முடிந்ததும் மறுபடியும் கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன என்று வரும் வரியில், பாண்டியராஜன் ஸ்னிக்தாவுடன் ஆடுவார். அப்போது பாண்டியராஜனின் பின்னால் தாட்டியாக இன்னொரு நபரும் அதே அசைவுகளோடு ஆடுவார். அவரது முகத்தில் தெரியும் மகிழ்ச்சியைக் கவனித்துப் பாருங்கள். இந்த மகிழ்ச்சி, பாடல் முழுதும் அனைவரின் உடல்களிலும் துடிக்கத் துடிக்கப் பிரதிபலிக்கும்.

இதேபோல் யுத்தம் செய் படத்திலும் ’கன்னித்தீவு பெண்ணா கட்டழகுக் கண்ணா’ பாடல் மிகவும் பிரபலம். இப்பாடலுக்கு இசை, கே. இதிலும் மிஷ்கினின் பிரத்யேக செய்நேர்த்தி பளிச்சென்று தெரியும். பாடலுக்கு ஆடிய அமீர், நீத்து சந்திரா ஆகியவர்களிடமும் கத்தாழ கண்ணால பாடலின் மகிழ்ச்சி பொங்கும். வித்தியாசமான நடன அசைவுகள், அட்டகாசமான குரல்கள் (MLR கார்த்திகேயன், ரகீப் ஆலம்) என்று இப்பாடலும் மிகவும் பிரசித்தம். பாடலில் சாரு நிவேதிதா அவ்வப்போது வருவார். பாடலில் தொடர்ந்து இடம்பெறும் ஹார்மோனிய ஒலியைக் கேட்டுப்பாருங்கள். பாடலுக்கே அது முக்கியமான அடிநாதமாக இருப்பது தெரியும்.

இப்படிப்பட்ட பாடல்களை மிஷ்கின் தொடர்ந்து உபயோகப்படுத்தியதன் பின்னணி என்ன? இதோ அவரே பேசுகிறார் (பேசாமொழி இதழ் பேட்டி – இதழ் 25. நவம்பர் 2014)

“ஒரு படத்தில் குத்துப்பாட்டு ஐந்து நிமிட அசிங்கமாக வருகின்றது. நம் உடலினுள் பலவிதமான அழுக்குகள், கழிவுகள் தங்கியிருக்கின்றன. நம் உடலுக்குள் தான் இது இருக்கின்றது. ஆனால் வெளியே வந்தால் நாறுகிறது. உள்ளே இருப்பதால் அது தெரியவில்லை. அதுபோல என் படத்தில் வருகின்ற குத்துப்பாட்டை ஐந்து நிமிட அழுக்காக எடுத்துக்கொள்ளலாம். தயாரிப்பாளர்களின் நலனுக்காக அந்த அழுக்கு தேவைப்பட்டது”.

ஒரு குத்துப்பாட்டை உயிரைக் கொடுத்து சிறந்த செய்நேர்த்தியுடன் எடுத்தாலும், அந்தப் பாடல் பற்றித் தெளிவான கருத்து வைத்திருக்கிறார் மிஷ்கின் என்பதற்கு இது உதாரணம். கூடவே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் குத்துப்பாடல்கள் ஏன் இல்லை என்பதற்கும் அதே பேட்டியில் பதில் சொல்கிறார்.

“நான் எடுத்த ”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, படத்தில் வேலை செய்த உதவி இயக்குனர்கள் சொன்னார்கள், ”எப்படியாவது ஒரு குத்துப்பாட்டு வைத்துவிடுங்கள்”, என்று, அப்பொழுதுதான் படம் ஓடும் என்றும் சொன்னார்கள். ஆனால், நான் சொன்னேன், படம் ஓடுகிறதோ, இல்லையோ, அதனை நான் செய்ய மாட்டேன். ஏனென்றால் எல்லா தயாரிப்பாளருக்காகவும் அதைச் செய்துவிட்டேன். நானே இந்தப்படத்திற்கு தயாரிப்பாளராக இருக்கின்ற காரணத்தினால் அது தேவையில்லை. குத்துப்பாட்டு இல்லாமல் படம் ஓடாவிட்டாலும் பரவாயில்லை. நான் என் சொந்தக்காசை படத்தில் போடுகிறேன்.

நீங்கள் சொன்ன குற்றச்சாட்டிற்கு பிராயச்சித்தம் பண்ணியிருக்கிறேன். மற்ற படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அவரவர்களின் பயத்திற்காக ஒரு குத்துப்பாட்டு கொடுத்தேன். என் படத்திற்கு அப்படிச்செய்யவில்லை. நான் என்னையே அழித்துக்கொண்டேன். இது ஒருவகையில் அவர்களுக்கு நான் செய்த தர்மம். இது சமரசம் கிடையாது”

மிஷ்கின் படங்களைப் பற்றி ஏராளமாக எழுதலாம். ஆனால் பாடல்கள் – குறிப்பாகக் குத்துப்பாடல்கள் என்ற வகைக்கு, அவருக்குப் பிடிக்காவிட்டாலும் மிஷ்கின் அளித்திருக்கும் கொடை பற்றி அவசியம் நாம் விவாதிக்கவேண்டும்.

ஒரு குத்துப்பாடலை மக்களின் மனங்களில் அழியாமல் இடம்பெறச்செய்வது சாதாரணம் கிடையாது. துளிக்கூட ஆபாசமே இல்லாமல், கொண்டாட்டம் ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு மிஷ்கின் உருவாக்கியிருக்கும் குத்துப்பாடல்கள் தமிழ்த்திரையுலகுக்கு ஒரு முன்னுதாரணம். இப்பாடல்களுக்குப் பின்னால் மிஷ்கின் என்ற கலைஞனின் அசுர உழைப்பு இருக்கிறது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இப்பாடல்கள் எளிதானவையாக இருக்கலாம். ஆனால் மிஷ்கின் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பாடல்களை உருவாக்கவே முடியாது. அதுதான் மிஷ்கினின் திறமை.

பாடலின் இணைப்பு:  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com