18. இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம்(5)

இசை பற்றிய நமது தொடரில், கடந்த சில வாரங்களாக ரஹ்மானின் சூஃபி பாடல்கள்
18. இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம்(5)

இசை பற்றிய நமது தொடரில், கடந்த சில வாரங்களாக ரஹ்மானின் சூஃபி பாடல்கள் பற்றிப் பார்த்து வருகிறோம். பாடல்களை மட்டும் வெறுமனே பார்க்காமல், பாடல்களின் உட்கருத்து, அதன்மூலம் சூஃபியிஸம் சார்ந்த பல விஷயங்கள் என்று பார்த்து வருவதில், இந்த வாரம் ரஹ்மானின் மற்றொரு சூஃபி அற்புதத்தைக் கவனிக்கலாம்.

2011ல் ரஹ்மான் இசையமைத்த படம், ராக்ஸ்டார். இது இம்தியாஸ் அலி இயக்கிய படம். இப்படத்தின் பாடல்களுக்காக ரஹ்மான் பல விருதுகளை வாங்கியிருக்கிறார். இப்போதும் இதன் பாடல்கள் மிகவும் பிரபலம். படத்தின் கதை, மிகச்சாதாரணமானது. எளிய பின்னணியில் வளரும் ஒரு இளைஞன், ராக் இசையின் மீதான ஈடுபாட்டில் எப்படி அவனே ஒரு புகழ்பெற்ற கலைஞனாக மாறுகிறான் என்பதை நம்மூர் காதல் கலந்த ஃபார்முலாவில் சொல்லியிருப்பார் இம்தியாஸ் அலி. பொதுவாகவே, உலக அளவில் ராக்கில் கலக்கிய இசைக்குழுக்கள் மற்றும் கலைஞர்கள், அவர்களின் மனதில் இருக்கும் ஒருவித extesential angst கலந்த எதிர் உணர்வால்தான் தங்களை ஆளுமைகளாக வளர்த்துக் கொள்வார்கள். அது அப்படி ஆகவேண்டும் என்று எண்ணி வளர்த்துக் கொள்ள்வதல்ல. இயல்பிலேயே இருக்கும் தன்மை அது. ஆனால் இப்படத்திலோ, காதல் தோல்வியால்தான் ஒரு இசைக்கலைஞனுக்கு வலி ஏற்பட்டு, அதன்மூலம் அவனது இசைக்கான கச்சாப்பொருள் கிடைக்கும் என்ற இந்திய மனநிலைதான் கருவாகவே இருக்கும். இதனுடன் இணைந்த சாதாரணமான கதையால்தான் இது விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்கவில்லை.

ஆனால் நான் முன்னமேயே எழுதியபடி, பாடல்கள் அத்தனையும் பிரமாதமான ஹிட்கள். ரஹ்மானின் குறிப்பிடத்தகுந்த ஆல்பங்களில் ராக்ஸ்டாரும் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், கதாநாயகன் வீட்டை விட்டு வெளியேற நேரிடும். அப்போது, ஒரு தர்ஹாவில்தான் அடைக்கலம் புகுவான். அங்கே பல நாட்கள் தங்குவான். பாடுவான். அதனாலேயே அவனது வாழ்க்கையில் ஒரு ஏற்றம் கிடைக்கும் என்று கதை போகும். அப்படி அவன் தங்கும் இடம், தில்லியின் மிகவும் பிரசித்தி பெற்ற நிஸாமுதீன் தர்ஹா. ஹஜ்ரத் ஷேக் க்வாஜா சையத் மொஹம்மத் பின் அப்துல்லா அல்ஹுஸைனி நிஜாமுதீன் ஔலியா என்ற பிரசித்தி பெற்ற சூஃபி துறவியின் தர்ஹா அது. ஹஜ்ரத் நிஸாமுதீன் என்ற பெயரால் அழைக்கப்பட்ட துறவி அவர். பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் வாழ்ந்தவர். இவரைப்பற்றி மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ புத்தகத்தில் குறிப்புகள் உண்டு. துக்ளக் வம்சத்தை உருவாக்கிய கியாஸுதீன் துக்ளக், வங்காளத்தில் ஒரு போரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ‘நான் தில்லி வருவதற்குள் அவர் தில்லியை விட்டு ஓடிவிட வேண்டும்’ என்று செய்தி அனுப்பியிருந்தார். ஹஜ்ரத் நிஸாமுதீன் மீது கொண்டிருந்த கோபத்தால் அனுப்பப்பட்ட செய்தி அது.

இந்தச் செய்தி ஹஜ்ரத் நிஸாமுதீனுக்கு வந்ததும் அவர் உச்சரித்தவைதான் இன்றுவரை மிகவும் பிரபலமான வார்த்தைகள். ‘ஹனூஸ் தில்லி தூர் அஸ்த்’ என்று அவர் கூறியதாகக் கதைகள் உண்டு. ‘அவருக்குத் தில்லி இன்னும் மிகவும் தூரம்தான்’ என்று அர்த்தம். ஆனால் கியாஸுதீன் துக்ளக்கோ தில்லியின் எல்லையை அடைந்து விட்டிருந்தார். அவர் தில்லிக்குள் நுழையப்போகும் தருவாயில், வங்காள வெற்றியைக் கொண்டாட உருவாக்கப்பட்டிருந்த மேடை சரிந்து விழுந்ததில் அங்கேயே நசுங்கி உயிரிழந்தார். இது ஒரு சதி என்பது அவ்வரலாற்றை எழுதிய இப்ன் பதூதாவின் கூற்று. அவருக்குப் பின் அரியணை ஏற இருந்த ஜௌனா கானின் வேலை இது என்பது இப்ன் பதூதாவைப்போன்ற சில சரித்திர எழுத்தாளர்களின் கருத்து. ஆனால் இது நிரூபிக்கப்படவில்லை.

சொல்ல வந்தது என்னவென்றால், தில்லியின் எல்லையை அடைந்தும், ஹஜ்ரத் நிஸாமுதீனின் கூற்றுப்படி கியாஸுதீனுக்குத் தில்லி தூரமாகவே அமைந்துவிட்டது என்பதே.

அப்படிப்பட்ட சூஃபி துறவியான ஹஜ்ரத் நிஸாமுதீனின் தர்ஹாவில்தான் ராக்ஸ்டார் படத்தின் நாயகன் தஞ்சம் புகுகிறான். அங்கேயே தங்குகிறான்.

அப்போது இடம்பெறும் பாடல்தான் ‘குன் ஃபயாகுன்’.

பாடலைப் பார்ப்பதற்கு முன், ‘குன் ஃபயாகுன்’ என்றால் என்ன என்பதைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். பாடலைப் புரிந்துகொள்வதற்கு அது உதவும்.

குர் ஆனில் இந்த சொற்றொடர் வருகிறது. அல்லாஹ் அண்டவெளியை உருவாகச்சொல்லி உத்தரவிட (Kun), அது உருவானது (faya Kun). உருவானது என்பதைவிட, அல்லாஹ் கட்டளைக்குமுன் ஒளிந்திருந்த அண்டம், கட்டளைக்குப்பின் வெளிவந்தது என்பதே சரி. அல்லாஹ் ‘be’ என்று கருணை கொள்ள, அத்தனையும் உருவாகிவிடுகிறது.

ஆகவே, குன் ஃபயாகுன் என்பது இஸ்லாத்தில் ஒரு முக்கியமான சொற்றொடர்.

இனி, பாடலின் மொழிபெயர்ப்பை கவனிக்கலாம். பாடலை எழுதியவர், இர்ஷாத் கமில்.

துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள்

நீங்களில்லாமல் எங்கும் சூழ்ந்திருக்கும் இந்தச் சூனியத்தை உங்கள் வருகையால் அகற்றுங்கள்

என்னை வண்ணங்களால் நிரப்புபவரே (வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்கும் அல்லாவே..மாயையை அகற்றி, உண்மைகளை உள்ளபடி காட்டியருளும் இறைவனே)

எதையும் படைக்கவேண்டும் என்று அல்லாஹ் நினைத்தால், ‘உருவாகுஎன்று அவர் ஆணையிட்ட மாத்திரத்தில், அது உருவாகிறது (‘உருவாகிவிட்டேன்என்று பதிலும் அளிக்கிறது).

எங்குமே எதுவுமே இல்லாத அந்தத் தருணத்திலும், அவர் இருந்தார்; அவர் மட்டுமே எங்குமே இருக்கிறார்

என்னுள் எவர் இருக்கிறாரோ, அவரே உன்னுள்ளும் இருக்கிறார்

இறைவனே அத்தனை தொடக்கங்களுக்கும் ஒரே பிறப்பிடம்.

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

ஒவ்வொரு விடியலும், எனதுடல் மீது உங்களின் கருணையை மழையாகப் பொழிவிக்கிறது; எனது வாழ்வின் பொறியான எனதுயிர், புகையிலிருந்து வெளிவரும் கரியைப் போல இருண்டதாயிருந்தாலும், உங்களிடமிருந்து பெருகும் புத்துயிரின் ஒரு துளிக்காகவே அது உயிர்வாழ்ந்திருக்கிறது எனது இறைவனே . . .

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே உண்மையானவர்;

அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், நபிக்கு உரித்தாகட்டும்;

என்னை என்னிடமிருந்தே காப்பாற்றி விடுதலையளித்தால், அது உங்களது பெருந்தன்மையன்றி வேறில்லை எனது இறைவனே;

என்னை இப்பொழுது நானே அறியவேண்டும்; தயைகூர்ந்து எனக்கு விடுதலையளியுங்கள்

எனது இருண்ட செயல்களோடும், வெறுமையான ஆன்மாவோடும் நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை

என்னுள் நீங்களே வாழ்கிறீர்கள்; என்னை எங்கே அழைத்துவந்திருக்கிறீர்கள்?
உங்களிலும் நானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; உங்களைத் தொடர்கிறேன்; நான் உங்களது வெறும் நிழல்தானே தவிர வேறில்லை;
நீங்களே என்னை உருவாக்கினீர்கள்; இந்த உலகில் வாழ நான் தகுதியற்றவனாக இருந்தும், என்னை அரவணைத்தீர்கள்; நீங்களே முறை தவறாதவர்; நடுநிலையாளர்; நீங்களே மெய்ப்பொருள்.

நீங்கள் உத்தரவிட்டதும், எதுவுமே உடனடியாக உருவாவதைப்போல், என் வாழ்வுக்கும் ஒரு குறிக்கோளையும், ஒரு இலக்கையும் உத்தரவிட்டு அருளுங்கள்

ரஹ்மானின் கூர்மையான குரலில் பாடல் துவங்குகிறது. ஓரிரண்டு வரிகளுக்குப் பின், ரஹ்மானின் குரல், ஒரு நீண்ட ஆலாப்பை வெளிப்படுத்துகிறது. மிக மிக இனிமையான அந்த ஆலாப்பில், துயரத்தின் குரலும் கலந்திருக்கிறது. தன்னைக் கடைத்தேற்றுமாறு இறைவனிடம் இறைஞ்சும் குரல் அது. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், இந்தப் பாடலைக் கேட்கும்போது – குறிப்பாக ரஹ்மானின் அந்த ஆலாப்பில் – ஏதாவது ஒரு சூஃபி பெருமகனாரின் சமாதியில் சென்று, கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலைப் பாட வேண்டும் என்று தோன்றுகிறது.

அதேபோல், பாடலின் முதல் சரணம் ஆரம்பிக்கும் தருவாயில், ஜாவேத் அலியின் குரலில், ‘சதக்கல்லாஹுல்லலியுல்லஜீம்’ (உயர்ந்தவரான, சிறப்பு வாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்) என்ற நீண்ட ஆலாப். மிகவும் உருக்கம். இதுவே, இரண்டாம் சரணத்திலும் வரும்போது, ரஹ்மானின் குரல், இந்த வரியைத் தொடர்ந்து, ‘சதக்கரசூலுஹுன்நபியுல்கரீம்’ (அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள்) என்ற வரிகளை அட்டகாசமாகப் பாடியுள்ளது. இந்த இடத்தைத் தவற விடாமல் கேளுங்கள். அந்த இடத்தின் தப்லா, பிரமாதம்! இந்த வரிகளைத் தொடர்ந்து, ‘சல்லல்லா ஹு அலைஹி வசல்லம்’ (அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், நபிக்கு உரித்தாகட்டும்) என்ற கோரஸ் வரிகள். முதலில் அல்லாவே மெய்ப்பொருள் என்று ஒருவர் பாடுகிறார். அதனைத்தொடர்ந்து நபி தூய்மையானவர் என்று இன்னொருவர் அப்பாடலில் சேர்ந்துகொள்கிறார். உடனே, அனைவருமாக, அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், அப்பேர்ப்பட்ட நபிக்கு உரித்தாகட்டும் என்று வாழ்த்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன இவ்வரிகள்.

பாடலைத் தவறாமல் பாருங்கள். கேளுங்கள். கட்டாயம் இப்பாடல் உங்களை அமைதியில் ஆழ்த்தும்.

பாடலின் சுட்டி :

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com