19. இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம்(6)

ரஹ்மானின் சூஃபிப் பாடல்கள் பற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடந்த சில வாரங்களில் தில் ஸேவில் துவங்கி அவரது முக்கியமான சூஃபிப் பாடல்கள் அனைத்துமே பார்த்துவிட்டோம்.
19. இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம்(6)

ரஹ்மானின் சூஃபிப் பாடல்கள் பற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடந்த சில வாரங்களில் தில் ஸேவில் துவங்கி அவரது முக்கியமான சூஃபிப் பாடல்கள் அனைத்துமே பார்த்துவிட்டோம். இந்த வாரம், அவரது வேறு சில சூஃபிப் பாடல்களைப் பார்த்துவிட்டு, ரஹ்மான் பற்றிய இந்தக் குறுந்தொடரை முடித்துவிட்டு, வரும் வாரத்தில் இருந்து பிற இசையமைப்பாளர்களை வழக்கம்போலக் கவனிக்கலாம்.

தில்ஸேயின் பாடல்கள், பியா ஹாஜி அலி (Fiza), நூர் உன் அலா நூர் (Meenaxi), கரீப் நவாஸ் (Jodha Akbar), அர்ஸியான் (Delhi-6), குன் ஃபயாகுன் (Rockstar) ஆகியவைகள் தவிரவும், ரஹ்மான் இசையமைத்திருக்கும் சூஃபி பாடல்கள் இன்னமும் சில உள்ளன. அவற்றில் பம்பாய் படத்தின் கண்ணாளனே, Netaji Subhash Chandra Bose: The Forgotten Hero படத்தின் Zikr மற்றும் Al Risalah படத்தின் Marhaba ya Mustafa, Jodha Akbar படத்தின் Jashn E bahara, Guru படத்தில் வரும் Ey Hairathe Aashiqui, Tere Bina, ஓ காதல் கண்மணி படத்தில் வரும் Maula Wa Sallim ஆகியவை அடங்கும். இவற்றில் குருவின் பாடல்கள், கண்ணாளனே ஆகியவை கடவுளைப் பற்றி இல்லாமல், காதல் பற்றிய கவ்வாலிகள். இந்த ஒவ்வொரு பாடலையும் நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டும்.

இவற்றில் Zikr என்ற பாடல், கடவுளின் கருணையைப் பெறத்தக்க விஷயமான திக்ர் (Zikr என்பது உண்மையில் திக்ர் என்றே அழைக்கப்படுகிறது) என்பதைப் பற்றிப் பேசுகிறது. இந்த வார்த்தைக்கு, கடவுளை நோக்கிச் செய்யப்படும் பிரார்த்தனைகள் என்று அர்த்தம். இந்தப் பிரார்த்தனையால் என்னென்ன நன்மைகள் என்பதை Zikr நமக்குச் சொல்கிறது.அதன்பின் இறைவனின் குணங்கள் குறித்தும் பேசுகிறது. பின்னர் அல்லாஹ்வின் பல்வேறு நாமங்களை நமக்குச் சொல்கிறது. கேட்பதற்கு மிகவும் இனிமையான, கம்பீரமான ட்யூன் இது.

சுட்டி:

அல் ரிஸாலா என்ற படம் முஸ்தஃபா அக்கட் இயக்கி 1978ல் வெளியானது. இப்படத்திற்காக, இதன் மறு ஒளிபரப்புக்கு ரஹ்மான் ஒரு பாடல் இசையமைத்துக் கொடுத்தார். அதுதான் மர்ஹபா யா முஸ்தஃபா. இந்தப் பாடல், நபியின் பெருமைகள் பற்றிப் பேசுகிறது. கேட்டுப் பார்க்க மிக இனிமையான ட்யூன். ஒரே ஒரு முறை மட்டும் கேட்டுவிட்டு விட்டு விடவே முடியாது.

சுட்டி:

ஓ காதல் கண்மணி படத்தின் மௌலா வா ஸல்லிம் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் பாடல். நபியைப் புகழும் பாடல். இப்பாடல் உருவான காலகட்டம் பதிமூன்றாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. பாடலை எழுதிய எகிப்தைச் சேர்ந்த இமாம் ஷர்ஃபுதீன் முஹம்மத் அல் புஸிரியின் முடக்குவாதத்தை அவரது கனவில் தோன்றிய நபி சரி செய்ததால், அவரைப் புகழ்ந்து நன்றியுணர்ச்சியில் இயற்றப்பட்ட பாடல் இது. உண்மையில் இது மிகவும் பெரிய பாடல். அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ரஹ்மான், ஓ காதல் கண்மணிக்காக எடுத்திருக்கிறார். அதைப் அவரது மகன் ஏ.ஆர். அமீன் பாடியிருப்பது தெரிந்திருக்கும்.

சுட்டி:

குரு படத்தில் வரும் இரண்டு பாடல்களான ஏ ஹைரதே(ன்) ஆஷிகி மற்றும் தேரே பினா ஆகியவைகளை எழுதியவர் குல்ஸார் (வேறு யார்?). இவற்றில் தேரே பினா பாடல், நஸ்ரத் ஃபதே அலி கானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடல். இதை ரஹ்மானே சொல்லியிருக்கிறார். ரஹ்மான், நஸ்ரத்தின் பெரிய ரசிகர். அவருடன் வந்தே மாதரம் ஆல்பத்தில் ‘சந்தா சூரஜ் லாகோ தாரே (Gurus of Peace)’ பாடலை இணைந்து பாடியிருக்கிறார். ஃபதே அலி கான் பாடிய ’சஜ்னா தேரே பினா’ என்ற பாடல் உலகப்பிரசித்தம். இந்தப்பாடலின் தாக்கத்தில் உருவானதுதான் ‘தேரே பினா’. ஆனால் இரண்டுக்கும் சம்மந்தமே இருக்காது. முழுக்க முழுக்க ரஹ்மானின் உருவாக்கம் அது.

இந்தப் பாடலின் இசையை ரஹ்மான் உருவாக்கி முடித்தபின்னர் அதைக் கேட்டுப் பார்த்த மணி ரத்னம், ‘இந்தப் பாடல் படத்தில் எங்குமே பொருந்தாதே?’ என்று சொல்லி, வேண்டாம் என்று சொல்லிவிட்டிருக்கிறார். ஆனால், குரு படத்தின் ஆல்பம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்னர் மறுபடியும் ரஹ்மானை அழைத்து, அந்தப் பாடலை முழுக்கவும் உருவாக்கச் சொல்லியிருக்கிறார். அப்படி உருவானதும் உடனடியாக அதைப் படமும் பிடித்திருக்கிறார். இப்படித்தான் நமக்கு ‘தேரே பினா’ பாடல் கிடைத்தது.

 சுட்டி: 

ஆனால் ரஹ்மான் அத்தோடு நிற்கவில்லை. பாடலைப் பார்த்திருக்கிறார். சிச்சுவேஷன் சோகமானது. ஆனால் பாடலோ சந்தோஷமான பாடல். எனவே, பாடலைக் கொஞ்சம் மாற்றியமைத்து, சோகமான மூடுக்கு ஏற்ப இறுதியில் சில அம்சங்களை ஏற்றி இறக்கியிருக்கிறார். அப்படி இறுதியில் உருவானதுதான் இப்போதைய பாடல்.

இதேபோல், அப்படத்தில் இடம்பெற்ற ‘ஏ ஹைரதே(ன்) ஆஷிகி’ பாடலும் பிரம்மாதமானது. பொதுவாகவே ரஹ்மான் பாடல் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கும்போது எங்காவது தடைபட்டுவிட்டால், புகழ்பெற்ற பழங்கால சூஃபி கவிஞரும் சாதுவுமாகிய அமீர் குஸ்ருவின் பாடல் வரிகளையும், பஞ்சாபி சூஃபி சாதுவாகிய புல்லே ஷாவின் வரிகளையும் படிப்பது வழக்கம். அப்படிப் படிக்கையில் அந்தக் குழப்பம் தெளிந்து, பாடல் கைவரப்பெற்றுவிடும் என்பதை அவர் சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு நாள், அமீர் குஸ்ருவின் ஏ ஷர்பத் இ ஆஷிகி (Ae Sharbat-e aashiqui) பாடலைப் படித்துக்கொண்டிருந்தபோது அதனால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட இசைதான் ஏ ஹைரதே(ன்) ஆஷிகி. அமீர் குஸ்ருவின் புகழ்பெற்ற அவ்வரிகளுக்கு ரஹ்மான் இசையமைத்த பாடல் அது.

பாடலைக் கேட்ட மணி ரத்னம், குல்ஸாரிடம் புதிய வரிகளை எழுதச்சொல்ல, பாடலின் இறுதி வடிவம் உருவானது.

’ஹைரத்’ என்ற ஹிந்தி வார்த்தைக்கு, ’ஆச்சரியம்’ என்று பொருள். காதலில் விழுந்துவிட்ட காதலியை, விழிக்கவே வேண்டாம் என்று காதலன் விளிக்கும்படித் துவங்கும் பாடல் இது.

 சுட்டி:

இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் பாடல்களையெல்லாம் நீங்களே கேட்டுப்பார்க்கலாம். கேட்டபின், அவை உங்களுக்குப் பிடித்திருந்தால் இணையத்தில் அவற்றின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப்படிக்கலாம். அவசியம் பாடல்களின் வரிகள் உங்களை வசீகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இத்துடன், ரஹ்மானின் சூஃபி இசை பற்றிய இந்தக் குறுந்தொடர் (தொடருக்குள் தொடர்) நிறைவு பெறுகிறது. இந்தியாவில் ரஹ்மானால் சூஃபி இசையில் மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது என்றால் அது மிகையில்லை. ’இது சூஃபி இசைதான்’ என்று தெரியாமலேயே, இசையின் இனிமையில் மயங்கிப் பலரும் ரஹ்மானின் பாடல்களைக் கேட்டனர். அதன்பின் என்னைப்போன்ற சிலர், அப்பாடலின் பின்னணியை ஆராயப் புகுந்தபோதுதான் எங்களுக்கு சூஃபி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. அதனால் அப்பாடல்களின் தரம் இன்னமும் உயர்வதைக் கண்ணுற்றபோது அப்பாடல்கள் மேலும் மேலும் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்தது. இதனால்தான் இந்தக் குறுந்தொடர் சாத்தியமாகியது.

உண்மையில் சூஃபி என்பது ஒரு மதமல்ல. ஒரு மார்க்கம். இஸ்லாத்திலேயே, கடவுளைப் புரிந்துகொள்ளவும், அடையவும் உயோகப்படுவது சூஃபி. சூஃபி மார்க்கம் அன்பு மார்க்கம். அங்கே யார் மீதும் எந்த வெறுப்பும் இல்லை. சுற்றியிருக்கும் அனைத்தும் இறைவனின் படைப்புகளே என்று மனப்பூர்வமாக உணர்வதால் உண்டாகும் ஆழம் அளவிட முடியாத அன்பு மட்டுமே இருக்கிறது. இந்த எல்லைகளற்ற அன்புதான் மனங்களைக் கனிய வைக்கிறது. அப்படிக் கனியும் மனங்கள்தான் பல அற்புதங்களை நிகழ்த்துகின்றன. அப்படி ஒரு அற்புதம்தான் ரஹ்மான். தனக்கு ஆஸ்கர்கள் அளிக்கப்பட்டபோது, ‘என்முன் இரண்டு பாதைகள் இருந்தன; அன்பு மற்றும் வெறுப்பு. இவற்றில் அன்பின் பாதையையே தேர்ந்தெடுத்தேன்’ என்று அவர் சொல்லியது வெறும் வசனம் அல்ல. அவரது வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால்தான் இந்த வாக்கியத்துக்கு உண்மையான பொருள் கிடைக்கும். சிறு வயதில் இருந்தே குடும்பத்துக்காகத் தீவிரமாக உழைக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்த ரஹ்மானை, இஸ்லாம்தான் தன்னையே புரிந்துகொள்ளக்கூடிய மனிதனாக மாற்றி்யது. அதன்பின் இஸ்லாம் போதிக்கும் எல்லையில்லாத அன்பைப் புரிந்துகொள்ளத் துவங்கினார் ரஹ்மான். அதன் விளைவாக நமக்குக் கிடைத்திருப்பதோ ஏராளமான பாடல்கள். இப்பாடல்களில், நாம் இந்தக் குறுந்தொடரில் பார்த்த சூஃபி பாடல்கள் என்பவை ரத்தினங்கள். இவைகளை மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்துப் புரிந்துகொள்வதன் மூலம், வாழ்க்கையின் பொருளையும், அதில் நாம் கையாளவேண்டிய அளவற்ற அன்பையும் கைவரப்பெறலாம்.

அனைவருக்கும் மனமார்ந்த அன்பும் நன்றிகளும். மீண்டும் வரும் வாரம், இன்னொரு இசையமைப்பாளருடன் நம் தொடரைத் தொடரலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com