32. குல்ஸார் - உணர்வுகளில் சஞ்சரிக்கும் பயணி

ஹிந்தித் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே, மிகச்சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர் குல்ஸார். பாடலாசிரியராக மட்டும் இல்லாமல், ஒரு கைதேர்ந்த இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.
32. குல்ஸார் - உணர்வுகளில் சஞ்சரிக்கும் பயணி

ஹிந்தித் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே, மிகச்சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர் குல்ஸார். பாடலாசிரியராக மட்டும் இல்லாமல், ஒரு கைதேர்ந்த இயக்குநராகவும் இருந்திருக்கிறார். பல்வேறு வித்தியாசமான களங்களில் பல படங்கள் எடுத்திருக்கிறார். வழக்கமான மசாலாக்களாக இல்லாமல், பார்வையாளனின் மனதில் மாற்றங்களைப் புரியக்கூடிய படங்கள் இவருடையது. குல்ஸாரின் விசேடம் என்னவென்றால், மனித மனத்தில் எழும் வெவ்வேறு உணர்வுகளின் அடியாழம் வரை பயணிக்கக்கூடிய திறமைதான். இதே திறமையால்தான் அவரது பாடல் வரிகள் எப்போது படித்தாலும் பல்வேறு சிந்தனைகளை நமக்குத் தரவல்லவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட குல்ஸார் எழுதியிருக்கும் சில பாடல்களை இந்த வாரம் பார்க்கலாம். இவரது சூஃபி பாடல் வரிகளை இதே தொடரின் துவக்கத்தில் ரஹ்மானின் சூஃபி இசையைப் பற்றிய கட்டுரைகளில் கண்டிருக்கிறோம்.

சம்பூரண் சிங் கால்ரா என்பதே குல்ஸாரின் இயற்பெயர். பாகிஸ்தானின் ஜீலத்தில் 1934 ஆகஸ்ட் 18ல் பிறந்தவர். ‘பந்தினி’ (1963) படத்தில் பாடல்கள் எழுதத் துவங்கியவர். இதன்பின்னர் பல படங்களில் பாடல் எழுதி, பின்னர் திரைக்கதை வசனமும் எழுதி, அதன்பின்னர் படங்கள் இயக்கத் துவங்கி, பெரும் புகழ் அடைந்து, இப்போது மறுபடியும் பாடல்களின் பக்கம் வந்துவிட்டவர். குல்ஸாரின் உவமைகளுக்கு ஈடு இணையே இல்லை. இதுதான் அவரது மிகப்பெரிய பலம். ‘தில் ஸே’ படத்தில், சைய்ய சய்யா பாடலில், உர்தூ மொழியின் மிருதுவான தன்மைக்குக் காதலியின் வார்த்தைகளை ஒப்பிட்டிருப்பார். அந்தப் படத்தின் அத்தனை பாடல்களிலும் உவமைகளில் புகுந்து விளையாடியிருப்பார். ‘எவரின் தலை காதலில் நனைந்துள்ளதோ, அவரது பாதம் சொர்க்கத்தில் நிலைபெற்றிருக்கிறது’ என்று அதே பாடலில் அவர் எழுதிய வரிகள் மறக்கமுடியாதவை.

முதல் பாடலாக, ‘ஆந்தி’ (1975) என்ற படத்தின், ‘தேரே பினா ஸிந்தகி ஸே கோயி ஷிக்வா நஹி’ என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். இப்படத்தில், பிரிந்த இருவர், ஒன்பது வருடங்களுக்குப் பின் மறுபடியும் சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் என்ன பிரச்னை என்றால், அந்தப் பெண் இப்போது இந்திரா காந்தி போல நாடெங்கும் பெரும்புகழ் வாய்ந்த அரசியல்வாதி. ஒருநாள் எதேச்சையாக, ஒரு ஹோட்டலில் தங்க, அந்த ஹோட்டலை வைத்திருப்பவன் தன்னுடன் பல வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்று புரிந்துகொள்வாள். இருவரும் மறுபடியும் இழந்த காதலையும் வாழ்க்கையையும் எண்ணிப் பார்ப்பார்கள். இப்படம் குல்ஸாரே எழுதி இயக்கிய படம். நாடெங்கும் பெரும்புகழ் அடைந்தது. இதில், தேரே பினா பாடலில், இருவரும் உருகுவதை உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்.

‘நீயில்லாமல் என் வாழ்க்கையில் எனக்குப் பிரச்னைகளே இல்லை...

ஆனால், நீ இல்லாத வாழ்க்கைஎன்பது வாழ்க்கையே இல்லை..

என்று துவங்கும் பாடலில்,

‘உன்னுடைய காலடித் தடங்களில் நமது பயணத்தை நாம் ஏன் மேற்கொள்ளக்கூடாது?

தொலைதூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்துக்குச் சென்றுவிடலாம்.

நீ என்னுடன் நடக்கையில் அப்படிப்படிப்பட்ட இடங்களுக்குப் பஞ்சமே இல்லை தெரியுமா?

உன்னுடனே இருந்துகொண்டு, உனது மடியில் என் கண்ணீர்த்துளிகளைச் சிந்த விரும்புகிறேன்..

உனது கண்களின் ஈரத்தில் அதே துளிகளைக் கண்டுகொள்கிறேன்..

நீ சொன்னால் இன்று இரவு நிலா அஸ்தமிக்காது. இந்த இரவு அப்படியே நின்றுவிடும்..

சொல். இந்த இரவை நீடித்து நிறுத்து..

இந்த இரவைப் பற்றிய விஷயங்கள் இவை.. இனி வாழ்க்கையில் வேறு எதுவும் பாக்கி இல்லை..

என்று பாடல் விரிந்து முடியும். பாடலைப் பார்த்தால், இவ்வரிகளின் உணர்ச்சிகள் உங்கள் மனதிலும் எழும்.இசையமைத்தவர் ஆர்.டி. பர்மன்.

ஒரு குழந்தை, திடீரென்று ஒருவனின் வாழ்க்கையில் நுழைகிறது. அவனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் பிறந்த குழந்தை அது. தாய் இறந்ததால், வேறு வழியின்றி, இவனிடம் வந்து சேர்கிறது. மனைவியுடன் நிம்மதியாக வாழும் இவன் இதை எதிர்பார்க்கவில்லை. முதலில் குழந்தையை வெறுக்கிறான். பின்னர் அக்குழந்தையுடன் பழகத் துவங்குகிறான்.அப்படிப் பழகும்போது வரும் பாடல் இது. ‘மாசூம்’(1983) என்ற படத்தில் வரும் பாடல் இது. இயக்கியவர் ஷேகர் கபூர். இது அவரது முதல் படம். நஸ்ருதீன் ஷாவும் ஷபனா ஆஸ்மியும் பிரம்மாதமாக நடித்திருப்பார்கள். இப்படத்தின் திரைக்கதையும் பாடல்களும் குல்ஸாரே எழுதியவை. ‘துஜ் ஸே நாராஸ் நஹி ஹை ஸிந்தகி’ என்ற பாடல்.

‘வாழ்க்கையே.. உன்மீது எனக்குக் கோபம் இல்லை..

உனது அப்பாவித்தனமான கேள்விகள் என்னைக் குழம்ப மட்டுமே செய்கின்றன..

வாழ்க்கையை வாழ, வலிகளைப் பற்றிக்கொண்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை..

ஒவ்வொரு புன்னகைக்கும், ஒவ்வொரு விலையை வாழ்க்கை நிர்ணயிக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை..

இப்போதெல்லாம் நான் சிரிக்க நினைக்கையில், தீராக் கடனில் எனது உதடுகள் அழுந்தியே இருக்கின்றன என்று உணர்கிறேன்..

வாழ்க்கையே.. நீ என்னை நோக்கி வீசும் ஒவ்வொரு துன்பத்திலும், உறவுகளைப் பற்றிப் புதிதாக அறிகிறேன்..

சுட்டெரிக்கும் வெய்யிலில்தான் வாழ்க்கையில் தேவைப்படும் நிழல்களைப் பற்றி அறிந்துகொண்டேன்..

இன்று என் கண்கள் கண்ணீரால் வீங்கியிருக்கின்றன..விரைவில் அவை வெடிக்கவும் செய்யலாம்..

ஆனால், நாளை, பழுதடைந்த என் கண்கள், புதிய காட்சிகளைக் காண ஏங்கக்கூடும் என்றே நினைக்கிறேன்..

என் கண்களில் இருந்து ஒரு கண்ணீர்த்துளியை மட்டும் பத்திரமாக எங்கோ வைத்திருந்தேன்..

அந்தத் துளி எங்கே?

‘இஜாஸத்’ என்று ஒரு படத்தை குல்ஸார் 1987ல் எழுதி இயக்கினார். ஒருவன், ஒரு பெண்ணை மணந்துகொள்கிறான். ஆனால் அதற்கு முன்னர் இன்னொரு பெண்ணை அவன் விரும்புகிறான். இதனாலேயே திருமணத்தையும் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறான். இம்முறை திருமணம் நடந்து விடுகிறது. மனைவியை நேசிக்கத் துவங்குகிறான். ஆனால் காதலி திரும்ப வருகிறாள். இருவரும் சேர்ந்து வாழ்ந்த நினைவுகள் அவனைத் தாக்குகின்றன. காதலி தற்கொலைக்கு முயல்கிறாள். எப்படியாவது அவளைச் சமாதானப்படுத்தி, பேசி, அவளை மாற்றலாம் என்று மனைவியிடம் சொல்கிறான் காதலன். ஆனால் மனைவியோ முற்றிலும் இதை மறுக்கிறாள். காதலியினால் தன்னை இவன் ஏமாற்றுவதாக அழுகிறாள். சீறுகிறாள். ஆனாலும் காதலி எந்நேரமும் தற்கொலை செய்துகொண்டு இறக்கும் அபாயம் இருப்பதால் அவன் அவளைச் சந்திக்கக் கிளம்புகிறான். ஆனால் அங்கே அவள் இல்லை. திரும்ப வெறும் கையுடன் வருகிறான். ஆனால் வீட்டில் மனைவியும் இல்லை. திருமணத்தை முறித்துக்கொண்டு அவள் சென்றுவிடுகிறாள்.

அவன் என்ன செய்வான்? கடும் அதிர்ச்சியில் மாரடைப்பு வருகிறது. பழைய காதலி திரும்ப வருகிறாள். கவனித்துக்கொள்கிறாள். ஆனால் இவனுக்கு மனைவியின் நினைவுகள் எழுகின்றன. மனைவியைத்தான் இப்போது அவன் அதிகமாகக் காதலிப்பதை அவள் அறிகிறாள். அவனை விட்டுச் சென்றுவிடுகிறாள். ஆனால் அப்படிச் செல்லும் வழியில் இறந்துபோகிறாள்.

சில வருடங்கள் கழித்து, ஒரு ரயில் நிலையத்தில் பிரிந்த மனைவியைச் சந்திக்கிறான் அவன். சந்திக்கையில் பல சம்பவங்கள் நேர்கின்றன.

இதுதான் இஜாஸத். 'இஜாஸத்' என்ற வார்த்தைக்கு, அனுமதி என்று பொருள். அவனை விட்டுவிட்டுச் சென்றதற்கு மனைவி அவனிடம் அனுமதி இதுவரை கேட்கவில்லை. ஆனால் இறுதியில் அவனிடம் அந்த அனுமதியை வேண்டுகிறாள். இதுதான் கதை.

இப்படத்தில், ‘மேரா குச் சாமான்.. துமாரி பாஸ் படா ஹை’ என்று ஒரு பாடல். பாடலைப் பாடிய ஆஷா போஸ்லேவுக்குத் தேசிய விருதைப் பெற்றுத்தந்த பாடல். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை குல்ஸாருக்குக் கொடுத்த பாடல் இது.

‘எனது சில பொருட்கள் உனது வசம் இருக்கின்றன..

அந்த மழைக்காலத்தில் நனைந்து ஈரமான சில நாட்களும் உன்வசமே..

எனது கடிதத்தால் அரவணைக்கப்பட்ட அந்த இரவும் உன்னுடன் தான் இருக்கிறது..

அந்த இரவை மறையவை. என் பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிடு.

இலையுதிர்காலத்தில் உதிரும் இலைகளின் கிசுகிசுப்பு நினைவிருக்கிறதா?

அந்தக் கிசுகிசுப்புகளை மறுபடியும் நான் என்னுடனே கொண்டுவந்துவிட்டேன்..

ஆனால், இலைகள் உதிர்ந்த மரத்தின் அந்தக் கிளை மட்டும் இன்னும் நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறது..

அந்தக் கிளையை வெட்டிவிடு. எனது பொருட்களைத் திருப்பிக்கொடுத்து விடு.

ஒரு குடையின் கீழ், மழையில் நாம் இருவரும் பாதிப்பாதி நனைந்தோமே..

அந்த நனைதலின் உலர்ந்த பகுதியை நான் எடுத்துவந்துவிட்டேன்..

நனைதலின் ஈரமான பகுதி, எனது இதயம். அது நமது படுக்கையின் அருகே இருக்கக்கூடும்..

அதை மட்டும் தயவுசெய்து என்னிடம் திருப்பிஅனுப்பிவிடு..

நிலவின் பல்வேறு இரவுகள்.. உனது தோளில் இருக்கும் மச்சம்..

ஈரமான மருதாணியின் மணம்.. நாம் போலியாக சண்டையிட்டுக்கொண்ட கணங்கள்..

அந்தப் போலியான சத்தியங்களை நான் நினைவு படுத்த விரும்புகிறேன்..

உன்னுடன் இருக்கும் எனது அத்தனையையும் தயவுசெய்து திருப்பி அனுப்பி விடு..

எனது ஒரே ஒரு ஆசையை மட்டும் நிறைவேற்றிவிடு..

நீ அனுப்பியவைகளையெல்லாம் நான் ஆழமாகப் புதைக்கையில்..

எனது இறுதி மூச்சை நான் விட்டுவிடவேண்டும்..

எத்தனை அருமையான வரிகள்? இவையெல்லாம் ஒரு பெண் பாடுகையில் எப்படி இருக்கும்? உள்ளத்தை உருகவைத்துவிடும். அதுதான் இப்பாடலின் சிறப்பு.

குல்ஸாரின் கவிஞானத்துக்கு இவையெல்லாம் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் குல்ஸார் பற்றி ஏராளமாக எழுத முடியும். அவரது பாடல்களையும் கவிதைகளையும் படித்துப் பாருங்கள். அவசியம் நமது மனம் நனைவதை நம்மால் உணரமுடியும்.

(தொடரும்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com