10 - எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ?

தன் வாழ்க்கையில் இளம்பருவத்தின் பெரும்பகுதியை தில்லியில் கழித்த ஒரு நபர், தமிழில் மறக்கமுடியாத பல பாடல்களை இசையமைக்க இயலுமா?
10 - எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ?

தன் வாழ்க்கையில் இளம்பருவத்தின் பெரும்பகுதியை தில்லியில் கழித்த ஒரு நபர், தமிழில் மறக்கமுடியாத பல பாடல்களை இசையமைக்க இயலுமா? பரத்வாஜால் அது முடிந்திருக்கிறது. 1998-ல் சரண் இயக்கிய ‘காதல் மன்னன்’ திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் ஆயின. அந்த ஒரே படத்தின் மூலம் புகழேணியின் உச்சத்துக்குச் சென்றவர் பரத்வாஜ். அதன்பின் ஏழெட்டு வருடங்களுக்குத் தமிழ்த் திரைப்படங்களில் தவிர்க்கவே முடியாத இசையமைப்பாளராக இருந்தவர்.

திருநெல்வேலியின் ராவணசமுத்திரத்தில் பிறந்த பரத்வாஜ், தந்தையின் வேலைக்காக தில்லி சென்று, அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரியை முடித்தவர். சரளமாக ஹிந்தியில் பேசவும் எழுதவும் தெரிந்தவர். தமிழர்கள் நடத்திய பள்ளி ஒன்றில் படித்ததால் தமிழையும் நன்கு கற்றிருந்தவர். இசையின் மேல் இருந்த ஆர்வத்தால் தில்லிப் பல்கலைக்கழகத்தில் கர்நாடக இசையை முறைப்படி கற்றவர். ஹிந்துஸ்தானியும் நன்கு தெரிந்தவர். தில்லியில் அமைந்துள்ள ஆல் இந்தியா ரேடியோவில் ஒருமுறை பாட பரத்வாஜுக்கு வாய்ப்பு வருகிறது. ஆனால் ஒரு நிபந்தனை. அப்பாடல், ஒன்று - இவரே இசையமைத்ததாக இருக்கவேண்டும்; அல்லது ஆல் இண்டியா ரேடியோவின் இசைக்கலைஞர்கள் இசையமைத்ததாக இருக்கவேண்டும். அங்கேயே அமர்ந்து ஒரு பாடலை எழுதி, இசையமைத்துப் பாடுகிறார் பரத்வாஜ். அதுதான் அவரது இசைப்பயணத்தின் முதல் படி.

பின்னர் தமிழில் இசையில் பணிபுரியவேண்டும் என்றால் தமிழ்நாடு வந்தே ஆகவேண்டும் என்று முடிவுசெய்கிறார். சென்னையில் ஒரு நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர்கிறார் திருமணம் நடக்கிறது. திருமணத்தின் அடுத்த நாளே, இனி இசையை விட்டுவிட்டு வேறு வேலைகளைச் செய்யமுடியாது என்று முடிவுசெய்கிறார். மனைவியின் சம்மதத்தோடு வேலையை உதறுகிறார். முழுமூச்சாக இசையில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தேட ஆரம்பிக்கிறார். இது நடந்தது 1988-ல்.

இதன்பின் அடுத்த ஏழு வருடங்களுக்குக் கடும் நெருக்கடிகள். 1995ல் இயக்குநர் சரணின் அறிமுகம் கிடைக்கிறது. சரணும் அப்போது முதல் படத்தை இயக்கும் நிலையில் இருக்க, ‘காதல் மன்னன்’ படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகிறார் பரத்வாஜ். காதல் மன்னனில் ‘உன்னைப்பார்த்த பின்புதான்’, ‘திலோத்தமா’, ‘கன்னிப்பெண்கள் உள்ளத்தில் கையெழுத்து போட்டவன்’, ‘மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா’, ‘மெட்டுத்தேடித் தவிக்குது ஒரு பாட்டு’, ‘வானும் மண்ணும்’ ஆகிய பாடல்கள் சூப்பர்ஹிட் ஆயின. மாரிமுத்து பாடலை தேவா பாடியிருந்தார். மெட்டுத்தேடி பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துப் பாடியிருந்தார்.

படம் நன்றாக ஓடியது. இதன்பின் தமிழில் பரத்வாஜின் அடுத்த படமாக ‘பூவேலி’ அமைந்தது. இயக்குநர் செல்வா எடுத்த படம். பத்து பாடல்கள். அவற்றில் ‘ஒரு பூ எழுதும் கவிதை’ பாடல் மறக்கமுடியாத பாடலாக ஆனது. பிற பாடல்களும் வித்தியாசமாக அமைந்தன. உடனடியாக, அடுத்த வருடம் பரத்வாஜின் மூன்றாவது படமாக ‘அமர்க்களம்’ வெளியானது. இது இயக்குநர் சரணின் இரண்டாவது படம். இம்முறையும் சரண்-பரத்வாஜ் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’, ‘மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு’, ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’, ‘காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா’ ஆகிய பாடல்கள் அனைவரின் மத்தியிலும் பிரபலமடைந்தன. அமர்க்களத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகப் பாடல்கள் அமைந்தன. பரத்வாஜ் பலராலும் கவனிக்கப்பட ஆரம்பித்தார்.

இதன்பின் செல்வா இயக்கிய அடுத்த படமாக ‘ரோஜாவனம்’ வெளியானது. ‘உன்னைப் பார்த்த கண்கள்’, ‘மனமே மனமே’, ‘என்ன இது என்ன இது’ பாடல்கள் பிரபலமாயின. உடனடியாகச் சரணின் மூன்றாவது படமாக’ பார்த்தேன் ரசித்தேன்’ வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர்ஹிட். ‘எனக்கென ஏற்கெனவே’, ‘பார்த்தேன் பார்த்தேன்’, ‘தின்னாதே’, ‘கிடைக்கல கிடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல’ பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.

இப்படத்துக்குப் பிறகு இயக்குநர் சேரனோடு கைகோர்க்கிறார் பரத்வாஜ். ‘பாண்டவர் பூமி’ வெளியாகிறது. ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்’ பாடல் இன்று வரை பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடலாக மாறுகிறது. ‘தோழா தோழா’ பாடலும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.

இப்படத்துக்குப் பின் பரத்வாஜுக்கு வரிசையாகப் பல ஹிட்கள். ‘ரோஜாக்கூட்டம்’, ‘ஜெமினி (சரண்)’, ‘தமிழ்’, ‘ஜேஜே (சரண்), ‘வசூல்ராஜா MBBS (சரண்)’, ‘ஆட்டோக்ராஃப்’, ‘அட்டகாசம் (சரண்)’, ‘அய்யா’, ‘’பிரியசகி’, ‘திருட்டுப்பயலே’, ‘திருப்பதி’, ‘அசல்’ என்று முக்கியமான பல படங்கள். இவற்றைத்தவிரவும் இன்னும் பல படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இவற்றில் இயக்குநர் சரணுடன் பரத்வாஜ் இணைந்த படங்களின் இசையைக் கேட்டுப்பாருங்கள். பரத்வாஜின் சூப்பர்ஹிட் பாடல்கள் இப்படங்களில் இருக்கும்.

கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையை வைத்து உருவாக்கப்பட்ட மெலடிகளை முக்கியமாக இசையமைப்பதே பரத்வாஜின் பாணி. கிதாரை அடிக்கடி இடம்பெறச்செய்வார். எலெக்ட்ரானிக் கிதாரோடு இவரது அருமையான மெலடிக்கள் சேர்வது கேட்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். 1998-ல் இருந்து 2005 வரையிலும் பரத்வாஜுக்கு என்று இசையில் ஒரு தனி இடம் இருந்ததை யாராலும் மறந்துவிடமுடியாது. ஆனால் ஏனோ 2005-க்குப் பிறகு பரத்வாஜின் இசை அவ்வளவாக சோபிக்கவில்லை. இன்று வரை அவ்வப்போது பரத்வாஜின் இசையில் திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் பழைய பரத்வாஜை இப்போது பார்க்கமுடிவதில்லை.

பரத்வாஜின் இசையில் ஒரு மறக்கமுடியாத பாடல், ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் இடம்பெற்ற ‘எனக்கென ஏற்கெனவே’ பாடல். கதாநாயகன் கதாநாயகியை அடிக்கடி சந்திக்கிறான். அவள் ஒரு பேருந்தில் தினமும் வேலை செய்யும் இடத்துக்குச் செல்கிறாள். அதைக் கதாநாயகன் தற்செயலாகப் பார்த்துவிடுகிறான். இருவரும் பார்த்துக்கொள்கின்றனர். காதல் உருவாகிறது. இது தமிழ்த் திரைப்படங்களில் எத்தனை பழகிப்போன காட்சி? ஆனாலும், இந்த அரதப் பழைய காட்சியையும் தனது பாடலால் உயிர்பெறவைத்தார் பரத்வாஜ். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் அட்டகாசமாக இருக்கும். இசை துள்ளி விளையாடும். மனதைக் கவ்வும். மனதில் மகிழ்ச்சி பரவும்.  பாடலைப் பாடிய உன்னிகிருஷ்ணன் மற்றும் ஹரிணியின் குரல்கள் மறக்கவே முடியாத ஒரு விளைவை உங்கள் மனதில் கட்டாயம் உருவாக்கும்.

பாடலை எழுதியவர் வைரமுத்து என்பது பாடலின் வரிகளைக் கேட்கும்போதே புரிந்துவிடும். மிக அழகான வரிகள். பாடல் துவங்கும்போது எழும் கிதார் ஒலியே இது பரத்வாஜின் பாடல் என்று கட்டியம் கூறிவிடும். ‘எனக்கென ஏற்கெனவே’ பாடலின் மூலம் தன் முத்திரையை அழுந்தப் பதித்திருப்பார் பரத்வாஜ். நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ

இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ

ஒளி சிந்தும் இரு கண்கள்

உயிர் வாங்கும் சிறு இதழ்கள்

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே...

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

அது என்னென்று அறியேனடி

ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே

உயிரில் பாதி இல்லை

மீதிப் பார்வை பார்க்கும் துணிவு

பேதை நெஞ்சில் இல்லை

எனது உயிரை குடிக்கும் உரிமை

உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது

எதுவென்று தவித்திருந்தேன்

அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்

கண்ணே உன்னை காட்டியதால்

என் கண்ணே சிறந்ததடி

உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்

கண்முன் பிறந்ததடி

காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது

அது காலத்தை கட்டுகின்றது

என் மனம் என்னும் கோப்பையில் இன்று

உன் உயிர் நிறைகின்றது

மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே

மனசையும் மறைக்கதே

என் வயதை வதைக்காதே

புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி

உன் புன்னகையால் நீ ஒரு மொழி சொன்னால்

காதல் வாழுமடி

வார்த்தை என்னை கைவிடும் போது

மௌனம் பேசுகிறேன்

என் கண்ணீர் வீசுகிறேன்

எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்

உனக்கேன் புரியவில்லை..!

பாடலுக்கான சுட்டி:  

(தொடரும்)     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com