29. மோஸார்ட் - கரை காணா இசைச் சாகரம்..!  

இத்தனை வாரங்கள் இந்திய இசையைப் பற்றிக் கவனித்தோம். இந்த வாரம், உலக இசையில் ஒரு மிக முக்கியமான நபராகக் கருதப்படும் ஒருவரையும், அவரைப் பற்றிய திரைப்படம் ஒன்றையும் கவனிக்கலாம்.
29. மோஸார்ட் - கரை காணா இசைச் சாகரம்..!  

இத்தனை வாரங்கள் இந்திய இசையைப் பற்றிக் கவனித்தோம். இந்த வாரம், உலக இசையில் ஒரு மிக முக்கியமான நபராகக் கருதப்படும் ஒருவரையும், அவரைப் பற்றிய திரைப்படம் ஒன்றையும் கவனிக்கலாம். இது ஏன் என்றால், இவரது பாதிப்பு இல்லாத இசையமைப்பாளர்களை விரல் விட்டு எண்ணி  விட முடியும். இவரது இசையை நீங்கள் கேட்டால் மெய்மறந்து போவது உறுதி. அது மட்டும் இல்லாமல், இசையைப் பற்றிய தொடரில், இவர் இடம்பெறாவிட்டால் அந்தத் தொடரே முழுமை பெறாமல் போய்விடும். இதனால்தான்.

வுல்ஃப்கேங் அமேடியுஸ் மோஸார்ட். இந்த முழுப்பெயரைச் சொன்னால் பலருக்கும் அவரை அடையாளம் தெரிவது கடினம், ஆனால், ‘மோஸார்ட்’ என்று சொன்னால், குறைந்தபட்சம் நமது ‘மோஸார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்று அழைக்கப்படும் ரஹ்மானாவது நினைவில் வரும். உலக அளவில் இன்றும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் இது. 250 வருடங்களாகக் கேட்கப்படும் இசை இவருடைய படைப்பு. இந்த உலகம் கண்ட ஜீனியஸ்களில் ஒருவர். மிகச்சிறிய வயதில் – 35 – இறந்த ஒரு மேதை. தனது ஐந்தாவது வயதில் இருந்து இசையமைக்க ஆரம்பித்தவர். இன்றும் பிரபலமான பல சிம்ஃபனிகளையும் ஓபராக்களையும் எழுதியவர் (நமது டைட்டன் விளம்பரத்தில் வந்த இசை கூட இவருடையதுதான்).

இத்தகைய உலக இசை மேதையைப் பற்றிய அற்புதமான படம், ‘Amadeus’ என்ற பெயரில் 1984ல் வெளிவந்திருக்கிறது. மிலோஸ் ஃபோர்மேன் இயக்கத்தில், எட்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய படம் இது. இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். படம் முழுக்க மோஸார்ட்டின் இசை பொங்கி வழியும். படம் பார்ப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அள்ளி வழங்கும் படம் இது. இதன் இயக்குநர் மிலோஸ் ஃபோர்மேன். One Flew Over a Cuckoo’s Nest’ படத்திற்காக ஆஸ்கர் வென்ற அதே இயக்குநர். இப்படத்துக்கும் ஆஸ்கர் வென்றார்

உலக இசையில், மோஸார்ட்டுக்கு மட்டும் அப்படி என்ன முக்கியத்துவம்? அவர் என்ன பெரிய கொம்பரா? போன்ற கேள்விகள் பல எழுப்பப்பட்டுள்ளன இதுவரையில். இதற்குப் பதில் தேடி நாம் பயணித்தால், பல அட்டகாசமான தகவல்கள் கிடைக்கின்றன. அத்தனையையும் இப்போது பார்ப்போம்.

தனது மிகச்சிறு வயதிலிருந்து இசையமைக்க ஆரம்பித்தவர் மோஸார்ட் என்று சரித்திரம் சொல்கிறது. சரியாகச் சொல்லப்போனால், ஐந்து வயதிலிருந்து. இவரது  தந்தை, ஒரு வயலின் கலைஞராக இருந்தவர். ஐரோப்பிய நகரமான சால்ஸ்பெர்க்கின் ஆர்ச் பிஷப்பின் ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் இருந்தவர். தனது மகனான மோஸார்ட்டுக்கு விளையாட்டாக இசை கற்றுக்கொடுக்க ஆரம்பித்த நிகழ்ச்சியிலிருந்து மோஸார்ட்டின் இசைப்பயணம் துவங்கியது எனலாம்.

நான்காவது வயதில் இவ்வாறு பியானோ வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த மோஸார்ட், வெகுவிரைவிலேயே கற்றுக்கொடுக்கப்பட்டதைப் பிழைகளின்றி அப்படியே வாசிக்க ஆரம்பித்தார். அத்தோடு கூடவே, சிறிய இசைக் கோர்ப்புகளையும் சொந்தமாகவே வாசிக்க ஆரம்பித்தார். அவர் தனது ஐந்தாவது வயதில் எழுதிய இசைக்கோர்ப்புகள், இன்றும் காணக்கிடைக்கின்றன.

அன்றிலிருந்து, தனது தந்தையோடு அவர் மேற்கொண்ட உலகப்பயணங்கள் பல. உலகப்பயணங்கள் என்று சொன்னாலும், பெரும்பாலும் ஐரோப்பாவுக்குள்ளேயே அமைந்த பயணங்களே அவை. இந்தப் பயணங்களில், பல நாடுகளிலும் தனது திறமையை சிறுவன் மோஸார்ட் காட்ட, தங்களது ஏழ்மை நிலையை இதில் வந்த பணத்தின் மூலம், மோஸார்ட்டின் தந்தையால் சமாளிக்க முடிந்தது.

மோஸார்ட், தனது சிறுவயதில் சந்தித்த ஒரு முக்கியமான இசையமைப்பாளர், ஜொஹான் க்ரிஸ்டியன் பாக்ஹ். இவர், உலகம் முழுக்கத் தெரிந்த மிகப்பிரபலமான இசை விற்பன்னர் ஜொஹான் செபாஸ்டியன் பாக்ஹின் மகன். லண்டனில் இருந்த பாக்ஹை சிறுவன் மோஸார்ட் சந்தித்தது, அவனது வாழ்வின் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக அமைந்தது.

தனது பதினைந்தாவது வயதில், ரோம் நகரத்தின் ஸிஸ்டைன் சேப்பலில் (மைக்கலாஞ்சலோ, நான்கு ஆண்டுகள் தொங்கிக்கொண்டே அதன் விதானத்தில் வரைந்த ஓவியங்கள், இன்றும் அப்படியே உள்ளன), வாடிகனின் இசையமைப்பாளராக இருந்த க்ரெகோரியோ அல்லெக்ரியின் ஒரு ஸிம்ஃபனியை ஒருமுறை கேட்க நேர்ந்த மோஸார்ட், அதனை அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக எழுதி, அதில் இருந்த சிறிய இசைப் பிழைகளையும் சரி செய்து கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள். ஒரு பெரிய ஸிம்ஃபனி. ஒரு சிறுவன் ஒரே முறைதான் அதனைக் கேட்க நேர்கிறது. கேட்ட உடனேயே அதனை கடகடவென்று அவன் எழுதிக் கொடுத்தால், எப்படி இருக்கும்? வாடிகன் நிர்வாகிகள், அரண்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

இதே போன்ற ஒரு விஷயம், படத்திலும் வருகிறது. ஸாலியேரி, மோஸார்ட்டின் இசைக்கோர்ப்புகளைப் படித்துப் பார்க்கும்போது. ஒரு இடத்தில் கூட எங்குமே எந்த விதமான அடித்தல் திருத்தலும் இல்லாமல், மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் அந்த இசையைப் படிக்கையிலேயே, கண்ணீர் அவரது கண்களிலிருந்து தாரை தாரையாகப் பெருகுகிறது. இசையின் உச்சத்தை அடைந்த ஒரு மனிதனின் பொக்கிஷத்தைக் கண்டேன் என்று ஸாலியேரியின் குரல், பின்னணியில் ஒலிக்கிறது. இசையை உள்ளபடி புரிந்துகொண்ட ஒரு மனிதனின் கதறல் அது.

இவரது கதை, அப்படியே நம்மிடை வாழும் ஒரு இசையமைப்பாளரின் கதையை ஒத்திருப்பதைக் கவனியுங்கள். மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ் என்றே பெயர் பெற்ற அவருக்கு, அந்தப் பெயர் வெறும் குருட்டாம்போக்கில் வைக்கப்படவில்லை என்பது, மோஸார்ட்டின் கதையைப் பார்க்கும்போது தெரிகிறது.

மொஸார்ட்டின் அருமையான, மனதை உருகவைக்கும் இசைக்கு ஒரு உதாரணமாக, இதோ இந்த இசைக்குறிப்பைக் கேட்டுப் பாருங்கள். இடையே வரும் ஒரு ஒலிக்குறிப்பு, எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா? இது ஒரு மிகப்பிரபலமான இந்திய இசை. 1:50யிலிருந்து 2:20 வரை உன்னிப்பாகக் கேட்கவும்.

இவ்வளவு மேதையாக விளங்கிய மோஸார்ட் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்? ஒல்லியாக, குள்ளமாக, வெளுத்துப்போய், தெருவில் நாம் பார்க்கும் ஒரு சாதாரண ஆளாகத்தான் மோஸார்ட் இருந்திருக்கிறார். அவரது உருவத்தை மட்டும் பார்த்தால், இவர் ஒரு ஜீனியஸ் என்று யாராலும் கணிக்கவே முடியாது என்று இவரது காலத்தில் வாழ்ந்த சிலரது குறிப்புகள் கூறுகின்றன.

மோஸார்ட்டின் இசை எப்படிப்பட்டது? இதற்கு, அவர் வாழ்ந்த காலத்தையும் நாம் சற்றுக் கவனிக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பா. பெருமளவில் பழமையையும் பாரம்பரியத்தையும் கட்டிக்காத்து வந்த ஒரு பூமி. எப்பொழுதும், பழமையை எதிர்க்கும் ஒரு புதிய அலை அவ்வப்போது எழுமல்லவா? அக்காலத்தில் பொதுவாக வழங்கி வந்த இசை முறையானது, பரோக் (Baroque) என்ற வகை. இந்த பரோக்கை எதிர்த்து, கேலண்ட் (Galant) என்ற புதிய அலை மேலெழும்பிய நேரம். மோஸார்ட்டின் இசையோ, பழைய பரோக்கை மீண்டு எடுத்துவந்தது என்று விமர்சகர்கள் சொல்கின்றனர். ஆனால், இந்தப் பழைய இசையையே, மிகப் புதியதாக, தெளிவாக, பல நுணுக்கங்களுடன் மோஸார்ட்டால் வெளிக்கொணரமுடிந்தது.

மோஸார்ட்டின் சமுத்திரம் போன்ற இசையில் மிகச்சில அலைத் துணுக்குகளைத்தான் இதுவரை கேட்டிருக்கிறேன். ஆனால், அதிலேயே, சில விஷயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது. அவை சரியா தப்பா என்று இசை விமர்சகர்கள் தான் சொல்ல வேண்டும். மோஸார்ட்டின் இசையில், ஒரு துள்ளல் இருந்தது. புதுமை என்று சொல்ல, இசையை நன்கு படித்தவனாக நான் இருக்க வேண்டும். ஆனால், இசையைப் பற்றி ஒன்றும் தெரியாதவன் நான். எனவே, இனிமை, மகிழ்ச்சி, மனமார்ந்த நிம்மதி ஆகிய உணர்வுகள் எனக்குக் கிடைத்தன என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.

மோஸார்ட் இறந்தது, அவரது முப்பத்தைந்தாம் வயதில். காரணம்? கடும் நோய். காய்ச்சல் என்று மட்டும் பரவலாக சொல்லப்படும் காரணத்தை விட, அவர் சதியால் கொல்லப்பட்டார் என்பதே எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் விஷயம். அது எவ்வளவு உண்மையோ தெரியாது. ஆனால், இந்த விஷயத்தை வைத்துத்தான் அமேடியஸ் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இறக்கும் நேரத்தில், ஒரு ரெகீம் (Requiem – இரங்கல் இசை) அமைக்கும் வேலையில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்ததும் உண்மை. அவரால் முடிக்க முடியாமலே போன ஒரு அருமையான இசைக்கோர்ப்பு அது.

மோஸார்ட்டின் அருமையான பல இசைக்குறிப்புகள் இணையத்திலேயே கிடைக்கின்றன. அவற்றை உள்ளது உள்ளபடி கேட்டுப் பார்த்தீர்கள் என்றால், வாழ்க்கையின் மறக்க முடியாத பேரானந்தத்தை அனுபவிக்க இயலும் என்பதை, என் அனுபவத்தில் இருந்து என்னால் சொல்ல முடியும்.

இறந்து ஏராளமான வருடங்கள் ஆனாலும், இன்றும் உயிர்ப்புடன், கேட்பவர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச்செல்லக்கூடிய இசை மோஸார்ட்டினுடையது என்பதை, அவரது இசையைக் கேட்டதும் நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com