23. காலத்தை வென்று நிற்கும் ‘கஸல்’கள் 

ஹிந்தியில் ‘கஸல்’ என்ற இசை வடிவம் மிகவும் பிரபலம். கஸல் என்பதைவிட, ‘(க்)ஹஸல்’ என்று, ‘க’வைக் கொஞ்சம் ஹவோடு சேர்த்துத்தான் இதைச் சொல்ல வேண்டும்.
23. காலத்தை வென்று நிற்கும் ‘கஸல்’கள் 

ஹிந்தியில் ‘கஸல்’ என்ற இசை வடிவம் மிகவும் பிரபலம். கஸல் என்பதைவிட, ‘(க்)ஹஸல்’ என்று, ‘க’வைக் கொஞ்சம் ஹவோடு சேர்த்துத்தான் இதைச் சொல்ல வேண்டும். அரேபியாவில் உருவான கவிதை வடிவம் இது. அங்கிருந்து முகலாயர்களால் இந்தியாவில் பிரபலமானது. கஸல்கள் காதலை மையமாகக் கொண்ட கவிதைகள். காதல், காதலால் உருவாகும் வலி, பிரிவு, சோகம் ஆகியவற்றையே கஸல்கள் பேசின. பெரும்பாலும் முகலாய மற்றும் பெர்ஷியத் தொடர்பால் வட இந்தியாவில் மிகப் பிரபலமாயின.

பெர்ஷியாவைச் சேர்ந்த ரூமியின் கஸல்கள் மிகப்பிரபலம். அதேபோல் இந்தியாவில் மிர்ஸா காலிப். இவர்களுக்குப் பின்னர் பல கஸல் கவிஞர்கள் வந்து, ஹிந்தித் திரைப்படங்களில் கஸல்கள் இடம்பெற ஆரம்பித்து, தற்காலத்தில் பல கஸல் தொகுப்புகள் வந்தாகிவிட்டன. ‘கஸல்’ என்றால் எப்படி இருக்கும் என்றும் தற்போது ஒரு புரிதல் உள்ளது.

ஹிந்தித் திரைப்படங்களில் கஸல்கள் துவக்ககாலத்திலேயே இடம்பெறத் துவங்கிவிட்டன. அவற்றில் சில நல்ல கஸல்கள் பற்றி இந்த வாரம் கவனிக்கலாம். உண்மையிலேயே, அமைதியான சூழ்நிலையில் இவைகளைக் கேட்டால், நமது மனதை மாற்றும் வல்லமை இந்த கஸல்களுக்கு உண்டு.

Chupke Chupke Raat Din

இந்தப் பாடல், 1982ல் வெளியான ‘நிக்காஹ்’ படத்தில் இடம்பெற்றது. படத்தை இயக்கியவர், தூர்தர்ஷன் மகாபாரதம் புகழ் பி.ஆர்.சோப்ரா. இப்படத்தில், முஸ்லிம் மதத்தில் விவாகரத்து பெறுவதற்கு உபயோகிக்கப்படும் தலாக் பற்றிய விமர்சனங்கள் உள்ளன. திருமணம் ஆன ஒருவன், மனைவியைக் கவனிப்பதில்லை. இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, தலாக் சொல்லப்பட்டு அவளைக் கோபத்தில் விடுதலை செய்கிறான் கணவன். அப்பெண்ணை நீண்டகாலமாகக் காதலிக்கும் இன்னொருவனை அப்போது அப்பெண் புரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். அப்போது, கோபத்தால் செய்த தலாக் பற்றி வருந்தும் முன்னாள் கணவன் குறுக்கே வர, இறுதியில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் கதை. இது, படம் வெளியான சமயத்தில் பெரிதும் பேசப்பட்ட படம்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ‘சுப்கே சுப்கே ராத் தின்’. பிரபல கஸல் பாடகர் குலாம் அலி பாடிய பாடல். பிரபல இசையமைப்பாளர் ரவியின் இசையில், ஹஸன் கமால் எழுதிய பாடல். மறக்கவே முடியாத கஸல்களில் இது முக்கியமானது.

Dil Dhoondta Hai

1975ல் வெளியான ‘மௌஸம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இயக்கியவர், புகழ்பெற்ற கவிஞர் குல்ஸார். பல விருதுகளைப் பெற்ற படம். பல வருடங்களுக்கு முன்னர் சந்தித்த பெண்ணை 25 வருடங்கள் கழித்து சந்திக்கச் செல்லும் நாயகன், அந்தப் பெண் இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டு மனநலம் பதிக்கப்பட்டு இறப்பதைத் தெரிந்துகொள்கிறான். ஆனால் அவளுக்கு ஒரு மகள். இந்த மகள், அந்தப் பெண் போலவே இருக்கிறாள். இயல்பிலேயே, அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் இவனுக்குப் பிறக்கிறது. தன்னுடன் அழைத்துவருகிறான். ஆனால், அந்தப் பெண்ணுக்கோ இவனைப் பிடிக்கத் துவங்குகிறது.  இதன்பின் என்ன நடக்கும்? இதுதான் மௌஸம். தமிழில் சிவாஜியை வைத்து, ‘வசந்தத்தில் ஓர் நாள்’ என்ற பெயரில் திருலோகசந்தர் இயக்கிய படம்.

இப்படத்தில், நாயகன், பல வருடங்கள் கழித்துக் காதலி இருந்த இடத்துக்குச் செல்கையில், அவளுடன் தான் அலைந்து திரிந்ததைப் பற்றி நினைத்துப் பார்க்கும் பாடல் இது. புபீந்தர் சிங்கும் லதா மங்கேஷ்கரும் பாடிய பாடல். இசையமைத்தவர் மதன் மோஹன்.

Huzoor is Kadar Bhi Na Itra Ke Chaliye

1983ல், புதிய இயக்குநர் ஒருவர், ‘மாஸூம்’ என்ற படம் இயக்கினார். அப்படம் பெரிதும் பேசப்பட்ட படம். நஸ்ருதீன் ஷாவும் ஷப்னா ஆஸ்மியும் நடித்தனர். திரைக்கதை எழுதியவர் குல்ஸார். மிகப்பெரிய ஹிட் ஆன படம். ஒரு கணவனுக்கு, வேறோர் காதலியுடன் பிறந்த மகன், அக்காதலி இறந்ததால் இவனிடம் வந்தால் இவனது குடும்ப வாழ்க்கை எப்படி பாதிக்கப்படும்? இதுதான் கதை. படத்தை இயக்கிய அந்தப் புதிய இயக்குநர், ஷேகர் கபூர்.

இப்படத்தில், ஒரு இனிமையான தருணத்தில் இடம்பெறும் பாடல் இது. பொதுவாகப் பெண்களின் குணங்களைப் பற்றிப் பேசும் பாடல். ஆண்களின் மனநிலையில் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுபற்றிய ஒரு பார்வைதான் இந்த கஸல். புபீந்தர் சிங்கும் சுரேஷ் வட்கரும் பாடிய பாடல். இசையமைத்தவர் ஆர்.டி. பர்மன்.

Tum Ko Dekha Toh Ye Khayal Aaya

1982ல் ‘சாத் சாத்’ என்ற படம் வெளியானது. ஃபரூக் ஷேக்கும் தீப்தி நாவலும் நடித்த படம். ஃபரூக் ஷேக், ஹிந்தியில் பிரபலமான நடிகர். கலைப்படங்கள் என்று அழைக்கப்பட்ட பேரலல் சினிமாவில் முக்கியமான நபர். பல்வேறு கொள்கைகளைக் கொண்டு வாழும் இளைஞன் ஒருவன், காதலியைத் திருமணம் செய்தபின் கொள்கைகள் தனக்கு எந்தவிதமான நன்மைகளும் தராததால், கொள்கைகளை விட்டுவிட்டு நேர் எதிரிடையான மனிதனாக மாறுகிறான். இதனால் மனமுடைந்த மனைவி அவனை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். இதன்பின் தன் தவறை அவன் உணர்கிறானா என்பதே கதை.

இப்படத்தில், ஜெக்ஜீத் சிங் பாடிய அருமையான கஸல் ஒன்று உண்டு. குல்தீப் சிங்கின் இசையில், என்றும் மறவாத அட்டகாசமான கஸல்களில் ஒன்று.

Tum Itna Jo Muskura Rahi Ho

ஒரு மனிதன், இன்னொரு பெண்ணின் மீதான காதலால் தனது மனைவியைக் கைவிட்டால் என்னாகும்? 1982ல் ‘அர்த்’ என்ற படத்தை மகேஷ் பட் இயக்கினார். உண்மையில், நடிகை பர்வீன் பாபியுடன் மகேஷ் பட்டின் உறவு மிகவும் பிரசித்தம். அதையே ஒரு கதையாக மாற்றினார் பட். குல்பூஷன் கர்பந்தாவும் ஷபனா ஆஸ்மியும் ஸ்மிதா பாடீலும் நடித்த படம். மிகவும் உணர்வுபூர்வமானது. தமிழில் ‘மறுபடியும்’ படம் இப்படத்தைத் தழுவியே எடுக்கப்பட்டது. ஷபனா ஆஸ்மிக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்த படம்.

படத்துக்கு இசை புகழ்பெற்ற கஸல் பாடகர்களான சித்ரா சிங்கும் ஜக்ஜீத் சிங்கும். பாடல்கள் அனைத்தும் ஹிட். இந்தப் பாடலை எழுதியவர் கைஃபி ஆஸ்மி. ‘நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்’ என்ற பாடல் நினைவிருக்கிறதா? ஹிந்தியில் அதே சிச்சுவேஷன். பாடியவர் ஜெக்ஜீத் சிங்.
 

Zindagi Jab Bhi Teri Bazm Mein

1981ல் ‘உம்ரோ ஜான்’ என்ற படம் வெளியானது. முஸாஃபர் அலி இயக்கிய படம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனது குடும்பத்தில் இருந்து பிரிந்த ஒரு பெண்ணைப் பற்றிய கதை. அவள் சந்திக்கும் ஆண்கள் அவளை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தார்கள் என்பதை மிகவும் உணர்வுபூர்வமாகவும், அற்புதமான இசையோடும் சொன்ன படம். நாயகியாக நடித்தவர் ரேகா. ‘உம்ரோ ஜான்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இசையமைத்தவர் கைய்யாம். விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம்.

இப்படத்தில் தலத் அஸீஸ் பாடிய பாடல் ஒன்று உண்டு. பாடலின் வரிகளும் இசையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். எழுதியவர் ஷார்யார்.

Aap Ki Aankhon Mein

கணவன் மனைவி. அன்பான குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள், திரைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு வரும்போது ஒரு கும்பல் இவர்களைத் தாக்கி, நாயகியை வன்புணர்வு செய்துவிடுகிறது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். குணமாகிறார்கள். ஆனால், இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், இருவருக்கும் இடையே ஒரு மிகப்பெரிய சுவர் உருவாகிறது. அன்பு மறைகிறது. இந்நிலையில் இருவரும் என்ன செய்ய முடியும்? இதுதான் ‘கர்’. மாணிக் சாட்டர்ஜீ இயக்கிய படம். 1978ல் வெளியானது. ஆர்.டி. பர்மன் இசையமைத்த படம்.

குல்ஸாரின் பாடல் வரிகளில், கிஷோர் குமாரும் லதா மங்கேஷ்கரும் பாடிய அற்புதமான கஸல் இது. எழுதியவர் குல்ஸார்.

இங்கே நான் கொடுத்திருப்பது, கஸல்கள் என்ற பிரிவில் எனக்குப் பிடித்த மிகச்சிறந்த பாடல்கள் மட்டுமே. இவைகளைத் தவிர, நூற்றுக்கணக்கில் ஹிந்தியில் கஸல்கள் உண்டு. இவற்றின் வரிகள் பெரும்பாலும் ஆழமான பொருளைத் தரவல்லவை. அற்புதமான பல இசையமைப்பாளர்கள், உணர்வுகளை ஆராயக்கூடிய பல அருமையான காட்சிகள் அடங்கிய படங்களில் இப்படிப்பட்ட கஸல்களைக் கொடுத்துள்ளனர். அவற்றை நாம் கேட்டுப்பார்த்தால், வாழ்க்கையின் பல ஜன்னல்கள் நமக்காகத் திறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com