24. 'சலீல்தா' எனப்படும் அழியாத இசைக் கோலம்..!

ஹிந்தித் திரையுலகில், பிரபலமான இசையமைப்பாளர் என்றால் கட்டாயம் அமிதாப் பச்சனுக்கு இசையமைத்திருப்பார்கள்.
24. 'சலீல்தா' எனப்படும் அழியாத இசைக் கோலம்..!

ஹிந்தித் திரையுலகில், பிரபலமான இசையமைப்பாளர் என்றால் கட்டாயம் அமிதாப் பச்சனுக்கு இசையமைத்திருப்பார்கள். ஆனால் புகழின் உச்சத்தில் இருந்தபோதே, அமிதாப்பின் எந்தப் பாடலுக்கும் இசையமைக்காத ஒரே இசையமைப்பாளர் சலீல் சௌதுரியாகத்தான் இருக்கமுடியும். அமிதாப் நடித்த இரண்டு படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும், ஒன்றில் அமிதாப்புக்குப் பாடல்களே இல்லை - எல்லாப் பாடல்களும் ஹீரோ ராஜேஷ் கன்னாவுக்கே அமைந்துவிட்டன (ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கிய ‘ஆனந்த்’). இன்னொன்றிலோ வெறும் பின்னணி இசையை மட்டுமே அமைத்தார் சலீல் சௌதுரி (காலா பத்தர்). பாடல்களுக்கு இசையமைத்தவர் ராஜேஷ் ரோஷன்).

சலீல்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட சலீல் சௌதுரி, ஹிந்தித் திரையுலகின் பிரமாதமான, ஆழமான இசையமைப்பாளர். Folk இசையில் தலை சிறந்தவர். நௌஷாத் போன்ற ஜாம்பவான்களே இவரை மனமாரப் பாராட்டியிருக்கிறார்கள் என்றால் சலீல்தாவின் இசையின் நேர்த்தியைப் பற்றிப் புரிந்துகொள்ளலாம். 1953ல் இருந்து 1995 வரை நாற்பது வருடங்களுக்கு மேலாகவே திரைப்படங்களுக்கு இசையமைத்தாலும், ஒட்டுமொத்தமாக இருநூறுக்குள்ளான படங்களே இவர் இசையில் வெளிவந்துள்ளன. காரணம் இவரது செய்நேர்த்தியே. ‘பம்பாய்க்கு ஐம்பதுகளின் துவக்கத்தில் சலீல்தா சென்றபோது, இவருக்குக் கீழ் பணிபுரிந்த இசைக்கலைஞர்கள், இவருக்கு வெஸ்டர்ன் இசை தெரியாது என்பதால் இவரைக் கேலி செய்ய, உடனடியாகத் திரும்பிச்சென்று, எக்கச்சக்க புத்தகங்கள் படித்து, 15-16 மணி நேரங்கள் கடுமையாக உழைத்து, இரண்டு வருடங்கள் கழித்துத் திரும்பிச் சென்று, அதே இசைக்கலைஞர்களுக்கு வெஸ்டர்ன் நோட்ஸ்கள் கொடுத்துத் தன்னைப் பற்றி நிரூபித்தவர் சலீல்தா’ என்பது அவருடனேயே பல வருடங்கள் கழித்த கௌதம் சௌதுரியின் கூற்று. தற்சமயம், www.salilda.com என்ற பெயரில் ஒரு இணையதளம் துவங்கி, சலீல்தாவைப் பற்றிய அத்தனை தகவல்களையும் அதில் போட்டுவைத்திருக்கிறார் கௌதம். அதேபோல், இன்னொரு ரசமான சம்பவம் என்னவென்றால், தன்னிடம் கிடார் வாசித்த ஒரு இளைஞனைப் பார்த்து, அவனது இசைத்திறமையில் மகிழ்ந்துபோய், ‘கௌதம்.. அவனைப் பார்த்ததுமே, இந்தியாவின் மிகச்சிறந்த இசைக்கலைஞனாக இவன் வருவான் என்று எண்ணினேன். அதேபோல் நடந்துவிட்டது’ என்று இவரிடம் சொல்லியிருக்கிறார் சலீல்தா. அந்த இசையமைப்பாளர் - இளையராஜா! சலீல் சௌதுரியின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒரு திரைப்படத்தின் பின்னணி இசை மட்டுமே இசைத்தட்டாக வெளியிடப்பட்டது, ‘காலா பத்தர்’ படத்துக்குத்தான். அதன் பின்னணி இசையை அமைத்தவர் சலீல் சௌதுரி என்பதை மேலே கவனித்தோம். இதுதான் சலீல் சௌதுரி. அவரைப்போல் பின்னணி இசையை ஒரு திரைப்படத்துக்குக் கச்சிதமாக இசையமைத்தவர்கள் வெகு சிலரே.

ஹிந்தியில் இசையமைத்த எத்தனை இசையமைப்பாளர்கள், தென்னிந்திய மொழிகளில் ஜொலித்திருக்கிறார்கள் என்று பாருங்கள். ஆர்.டி. பர்மன் ஒருசில தென்னிந்தியப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதேபோல் லக்‌ஷ்மிகாந்த் - பியாரிலாலும். ஆனால் சலீல் சௌதுரியைப்போல் தென்னிந்தியாவில் கொடி நாட்டிய வட இந்திய இசையமைப்பாளர்கள் யாருமே இல்லை. மலையாளத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மலையாளத்தில் அவரது முதல் படமாக, ‘செம்மீன்’ (1965)  வெளியானது. செம்மீனின் பாடல்கள் இன்றும் பிரபலம். ‘கடலினக்கர போனோரே’ பாடல் செம்மீன் என்றே தெரியாமல் அப்பாடலை முணுமுணுப்பவர்கள் இன்றும் உண்டு. செம்மீன் மட்டுமல்லாமல், இன்னும் பல மலையாளப்படங்கள் சலீல்தாவின் பெயரைச் சொல்ல உண்டு. ஒரு சில மலையாளப்படங்களுக்குப் பின்னணி இசை மட்டுமேயும் அமைத்திருக்கிறார்.

தமிழில் பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ படமே சலீல்தாவுக்குப் பிரபல இசையமைப்பாளர் அந்தஸ்தை அளித்த முதல் படம் 1971-ல் ‘உயிர்’ படத்துக்குப் பின்னணி இசை அமைத்திருக்கிறார். அதேபோல் வெளியாகி, வெகுசில நாட்களே ஓடிய ‘கரும்பு’ (1973) படத்துக்கும் இசை அமைத்திருக்கிறார் சலீல்தா. இப்படம் இன்னும் வெளியிடப்படவில்லை என்ற கருத்து நிலவுகிறது. அது உண்மையில்லை. வெளிவந்து மிகச்சில நாட்களே ஓடிய படம் இது. இயக்கியவர் ராமு காரியத். இப்படத்தில் மூன்று பாடல்கள் உண்டு. அதில் இன்று, சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ‘திங்கள் மாலை வெண்குடையான்’ என்ற பாடல்! இந்தத் தகவல்களை, நாம் மேலே பார்த்த கௌதம் சௌதுரி பதிவு செய்திருக்கிறார்). அழியாத கோலங்களில், ‘நான் என்னும் பொழுது.. ஏதோ சுகம் என்றே தினம் செல்லும் மனது’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? மிக அருமையான ட்யூன் அது. கட்டாயம் கேட்பவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். சலீல்தாவின் முத்திரையான ஹிந்துஸ்தானி இசையின் சில கூறுகள் இப்பாடலில் உண்டு. அதேபோல், ‘பூவண்ணம் போல மின்னும்’ பாடல் இப்போதும் பலராலும் மறக்கப்படாதது. இதன்பின்னர், ‘தூரத்து இடிமுழக்கம்’ (1980) படத்துக்கு இசையமைத்தார் சலீல்தா. இதுதான் அவரது கடைசித் தமிழ்ப்படம். இப்படத்திலும் ‘உள்ளமெல்லாம் தள்ளாடுதே’ பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. அப்படத்தில் ‘இன்றோ.. மனம் கலங்கி வலையில் விழுந்த மான் ஆனாளே’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். எளிதில் இது சலீல்தாவின் இசை என்று சொல்லிவிடலாம். இதேபோல்தான் அப்படத்தின் ‘செவ்வல்லிப் பூவே’ பாடலும்.

கல்லூரிப் பருவம் முடிந்ததுமே, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர் சலீல்தா. வங்காளத்தின் மிகப்பிரபலமான ‘Peasant Movement’ அமைப்பில் சேர்ந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடியவரும்கூட (1944). இதன்பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை அமைப்பான ‘Indian Peoples Theatre Association’ என்று அழைக்கப்பட்ட IPTA அமைப்பில் சேர்ந்து, கிராமம் கிராமமாகச் சுற்றி, ஆங்கில அரசுக்கெதிரான கருத்துகளையும், மக்களிடம் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும், விழிப்புணர்ச்சிக் கருத்துக்களையும் பற்றிய பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். ஒரு புல்லாங்குழல் கலைஞனாகச் சேர்ந்து, பின்னர் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடும் அளவு அந்த அமைப்பில் முன்னேறினார். இதனாலேயே ஒரு சில வருடங்கள் தலைமறைவு வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கிறார்.இதன்பின்னர் வங்காளத் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் துவங்கினார். இப்படித்தான் சலீல்தாவின் திரைவாழ்க்கை துவங்கியது. பின்னர் வங்காளத்தில் இருந்து ஹிந்திப்படங்களுக்குள் நுழைந்தார்.

பிமல் ராய் இயக்கிய ‘தோ பீகா ஸமீன்’ (1953) படம்தான் சலீல்தாவின் முதல் ஹிந்திப்படம். இந்தப்படம் கான் விருது விழாவில் Prix International விருதும் வாங்கியது. இப்படத்தைத் தொடர்ந்து, வரிசையாக ஹிந்தி மற்றும் பெங்காலிப் படங்களுக்கு இசையமைத்தார் சலீல்தா. அப்படி இசையமைக்கும்போது, இவருக்கும் பிரபல பாடகர் ஹேமந்த் குமாருக்கும் ஏற்பட்ட பிரச்னை உலகப்பிரசித்தம். ஒரு கட்டத்தில் இருவரும் முற்றிலுமாகப் பிரிந்துவிட்டனர். பிந்நாட்களில் சேர்ந்தாலும், முன்பு போன்று இருவராலும் அட்டகாசமான பாடல்கள் தர இயலவில்லை. ஹேமந்த் குமாரின் மறைவின்போது, சலீல்தா அவரது இரங்கல் அறிக்கையில், இருவரைப் பற்றியும் இருவரிடமும் தவறாகப் பேசியவர்களால்தான் இப்படி ஆனது என்று எழுதியிருக்கிறார். இதுபோல் சலீல்தாவைப் பற்றிப் பல கதைகள் உண்டு.

எது எப்படி ஆனாலுமே, அறுபதுகளில் இசையமைத்த படங்களை விடவும், எழுபதுகளில் இசையமைத்த ஹிந்திப்படங்களே சலீல்தாவுக்குப் பெரும் புகழ் சேர்த்தன. ‘ஆனந்த்’ (1971) படத்தில் இது துவங்கி, ‘’மேரே அப்னே’ (1971- குல்ஸார் இயக்கிய முதல் படம்), ‘அன்னதாதா’ (1972), ‘ரஜனிகந்தா’ (1974 - இயக்கம் பாஸு சட்டர்ஜீ. இன்றும் புகழ்பெற்ற படம்), ‘மௌஸம்’ (1975 - பின்னணி இசை மட்டும். குல்ஸார் இயக்கம்), ‘ச்சோட்டி ஸி பாத்’ (1975 - இயக்கம் பாஸு சட்டர்ஜீ - பாடல்களுக்காகவே ஓடிய படம். சென்னையில் மிகப்பிரபலம்), ‘ம்ரிகயா’ (1976 - இயக்கம் ம்ருணாள் சென்) ஆகிய படங்கள் மூலம் சலீல்தாவின் பெயர் பல இடங்களிலும் பரவியது.

இவற்றைத் தவிர, பல ஹிந்திப்படங்களுக்கும் மலையாளப்படங்களுக்கும் பின்னணி இசை மட்டுமே கூட அமைத்திருக்கிறார் சலீல்தா. பின்னணி இசைக்கோர்ப்பில் அவரது கூர்த்த கவனமும் செய்நேர்த்தியும் புகழ்பெற்றவை. இவர் அளவு பின்னணி இசை மட்டும் அமைத்த இசையமைப்பாளர்கள் இந்தியாவில் யாரேனும் உண்டா என்று கேட்டால், இல்லை என்றே சொல்லிவிடலாம்.

யேசுதாஸின்மீது சலீல்தாவுக்கு இருந்த பிரியம் குறிப்பிடத்தக்கது. அவரை ஹிந்திக்கு அழைத்துவந்தவர் சலீல்தாவே. ஆனந்த் மஹால் (1972)  படத்துக்காகவே முதலில் ஏசுதாஸைப் பாடவைத்தார் சலீல்தா. ஆனால் முதலில் வெளியான படமோ ‘ச்சோட்டி ஸி பாத்’ தான். இப்படத்தில் யேசுதாஸ் பாடிய ‘ஜானேமன் ஜானேமன் மிலே தோ நயன்’ பாடல் தமிழ்நாட்டிலும் பிரம்மாண்ட ஹிட் ஆனது. சலீல்தாவுக்குப் பின்னர் யேசுதாஸை ஹிந்தியில் பிரபலப்படுத்தியவர் ரவீந்த்ர ஜெய்ன் (இவரைப்பற்றியும் பின்னால் வேறொரு கட்டுரையில் கவனிக்கலாம். கண்கள் இல்லாத நிலையில் ஹிந்தியின் பிரபல இசையமைப்பாளராக உயர்ந்தவர் ரவீந்த்ர ஜெய்ன். இவரது கதை பலருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியது).

இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஜீனியஸ்களில் ஒருவர் சலீல்தா என்றால் அது அவசியம் மிகையான அறிக்கையே அல்ல. சலீல்தாவின் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com