தேவிகா 6. பாகற்காய் நாழிகை!

பாராட்டு, விருது, பெரிய தலைவர்களின் சந்திப்பு, முக்கியப் பிரமுகர்களின் தோழமை என  எத்தனையோ
தேவிகா 6. பாகற்காய் நாழிகை!

பாராட்டு, விருது, பெரிய தலைவர்களின் சந்திப்பு, முக்கியப் பிரமுகர்களின் தோழமை என  எத்தனையோ இனிப்பான சம்பவங்கள் பிரபல நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நாள் தோறும் வந்து போகும். ஆரம்ப கால கசப்புகளுக்கும் பஞ்சம் இராது.

ஆனால் தேவிகாவுக்கு நிகழ்ந்த அவமரியாதை அவர் தென்னகத்திரையில் கொடி கட்டிப் பறந்த போது அரங்கேறியது. மனத்தேமலாகிக் கடைசி வரையில்  மாறாமலே போனது.

அந்தப் பாகற்காய் நாழிகைக்குக் காரணம் கே. பாலசந்தர்.

அவரது எதிர் நீச்சல் நாடகம் சினிமாவாகி மாபெரும் வெற்றிச் சித்திரமாக வசூலித்தது. அடுத்து அதே ஸ்டைலில் கே.பி. உருவாக்கிய நாடகம் நவக்கிரகம்.

நவக்கிரகமும் மேடையில் சக்கை போடு போட்டது. அன்றைய பிரபல தி.மு.க. எம்.எல். ஏ.வும், சினிமா பிரமுகருமான இராம. அரங்கண்ணல் நவக்கிரகம் நாடகத்தைத் திரைப்படமாக்க முன் வந்தார்.

நாகேஷ், மனோரமா, ஸ்ரீகாந்த் முதலிய பிரபல நட்சத்திரங்கள் நாடகத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மனோரமா அகிலாண்டம் என்கிற அட்டகாசமான பாத்திரத்தில் பிரமாதமாக நடித்து நாடகத்தின் வெற்றிக்கு அஸ்திவாரமாக நின்றார்.

நாகேஷின் மைத்துனர் செல்வராஜ். அவர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக நாகேஷ், மனோரமா மீது கடும் கோபத்தில் இருந்தார்.

‘இனி மனோரமாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்’ என்று தனது கலையுலக சகாக்களிடம் நாகேஷ் அறிவித்து விட்டார். நவக்கிரகம் படமானது.

நவக்கிரகத்தில் மட்டுமாவது அகிலாண்டமாக மனோரமாவையே நடிக்க வைக்க கே. பாலசந்தர், நாகேஷிடம் கெஞ்சினார். எத்தனை முறை வற்புறுத்தியும் நாகேஷ் மசியவே இல்லை.

இன்னொரு அகிலாண்டத்தை எங்கே தேடிப் பிடிப்பது? மனோரமா மாதிரி யார் நடிப்பார்கள்? என்கிற கேள்விகள் கே.பி.யின் உள்ளத்தைத் துளைத்தன. தூக்கத்தைக் கெடுத்தன.

கே. பி.யின் உதவியாளர்கள் அகிலாண்டம் ரோலுக்கு ஆளுக்கொரு பெயரைச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர் சிகரத்தின் நினைவுக்கு வந்த ஒரே ஒருவர் தேவிகா.

தேவிகாவின் நடிப்பு அபாரமாக மிளிர்ந்த நீலவானம் சினிமாவின் கதை வசனகர்த்தா கே. பாலசந்தர். தேவிகாவின் மேன்மையை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்.

காலை ஏழு மணி. ஏவி.எம். ஸ்டுடியோ. இரண்டாவது தளம். இயல்பான பரபரப்புடன் டைரக்டர் நுழைந்து, எப்போதும் கேட்கும் கேள்வியை கேட்கிறார்.

‘ஆர்ட்டிஸ்ட் வந்தாச்சா...? ’

‘ஸ்ரீகாந்த் மேக் அப் ரூமில் இருக்கிறார்’ என்கிற பதில் கிடைக்கிறது.

‘அப்ப தேவிகா இன்னும் வரவில்லையோ... கே.பாலசந்தரின் இயக்கத்தில்  நடிக்க ஆசைப்பட்டு உடனே கால்ஷீட் கொடுத்தவர் தேவிகா. குறித்த நேரத்தில் வராமல் போவாரா...? ’

இயக்குநர் சிகரத்துக்கு அந்த இனிய காலைப் பொழுது ஒரு சவாலாகத் தோன்றியது.

சட்டென்று ஷூட்டிங் தொடங்குவதற்கான அறிகுறிகளைக் காணோம். 

கே.பி.யின் உதவியாளர்கள் ஏதோ நாடகக் காட்சி போல் டைரக்டரின் கண் எதிரேயே குறுக்கும் நெடுக்குமாக நடை பழகினார்கள்.

‘அருள் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிர்வாகி பாலகிருஷ்ணன். கே.பாலசந்தரிடம் மிகவும் தயங்கித் தயங்கி ‘ஒரு சின்னப் பிரச்சனை’  என்று தொடங்கிப் பதற்றத்துக்கான முடிச்சை அவிழ்த்தார்.

‘அம்மா வேடத்தில் நடிக்கத் தயங்குகிறார் தேவிகா. அதுவும் மூக்குக் கண்ணாடியுடன் நடிக்க அவர் விரும்பவில்லை. ’

‘இவ்வளவுதானே... நான் வந்து தேவிகாவுக்கு விவரமாக எடுத்துச் சொல்லட்டுமா’ என்றார் கே.பாலசந்தர்.

தேவிகா ‘அகிலாண்டமாக’ அவதரிக்க, அரிதாரம் பூசி ஒப்பனை அறையில் கனவுகளுடன் காத்திருந்தார். தேவிகாவின் கோரிக்கை நியாயமானது.

‘கொல வெறி’ அனிருத், மற்றும் படுகொலை செய்யப்பட்ட ‘சுவாதி’ குறித்து, முக நூலில் தன் கருத்தை பகிரங்கமாகக் கூறித் தொடர்ந்து விவகாரங்களில் சிக்கிக் கொண்டவர்,  மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் ‘ஓய்.ஜி. மகேந்திரன்’.

1969ல் அவர் இளைஞர். கிண்டி என் ஜினியரிங் கல்லூரி மாணவர்.

படித்துக் கொண்டே தந்தை ஓய்.ஜி.பார்த்தசாரதியின் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழுவில் பங்கேற்றார் மகேந்திரன்.

நவக்கிரகம் சினிமாவில் அவரை அகிலாண்டத்தின் 15 வயது மகனாக, அரை டவுஸருடன் அறிமுகப்படுத்த கே.பாலசந்தர் விரும்பினார்.

ஒய். ஜி. மகேந்திரனின் தாயாராக  நடிப்பது தேவிகாவுக்குச் சிக்கலான விஷயமாகத் தோன்றியது. தமிழில் தேவிகாவுக்கு அப்போது படங்கள் ஏதுமில்லை. ஆனால்  ஆந்திராவில் நம்பர் ஒன் ஹீரோயின் அவர்!

‘ஒரு படம் முழுவதும் அம்மா வேடத்தில் நடிப்பதால், நாயகியாக நடிக்கும் அத்தனை சினிமாக்களும் பாதிக்கப்படும் என்கிற சூழல்.

‘பாலசந்தர் மேக் அப் அறைக்கு வந்து நவக்கிரகம் திரைக்கதையில் தனக்காக மாற்றங்களைச் செய்வார். தன்னைச் சமாதானப்படுத்தி அகிலாண்டமாக வெற்றி நடை போடுதற்கு உதவுவார். மீண்டும் ஒரு திருப்புமுனையை கே.பி. மூலம் பெறலாம்’என்பதான இன்ப அலைகள் தேவிகாவுக்குள் தவழ்ந்தன.

கே. பாலசந்தரா கொக்கா!

அரும்பு மீசை ஒய்.ஜி. மகேந்திரனை, தேவிகாவுக்காக அரங்கேற்றத்திலேயே கைவிடுவதில் பாலசந்தருக்கு உடன்பாடு கிடையாது.

தேவிகா இருக்கும் திசையைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், பேக் ஆஃப் சொல்லிவிட்டு காரில் ஏறிப் பறந்தார் கே.பி.

தேவிகாவுக்கு அதை விட என்ன அவமானம் வேண்டும்! 

நவக்கிரகம் சினிமாவில் தேவிகாவுக்குப் பதிலாக அகிலாண்டமாகத் தோன்றியவர் பத்மினியின் தங்கை ராகினி.

தமிழ் சினிமாவில் ராகினியின் பங்களிப்பு சொற்பம். ஆரம்பத்தில் அவர் நடன நங்கை. உத்தமபுத்திரன் காலத்து காமெடி நடிகை.  ஒரு சில படங்களில் ஹீரோயின்  அவ்வளவே.

ராகினியை அகிலாண்டமாக எதிர் கொள்ள இயலாமல் நெளிந்தார்கள் தமிழர்கள். நவக்கிரகம் படத்தை வசூலில் தோல்வியுறச் செய்தார்கள்.

தேவிகா நடித்திருந்தால் நிச்சயம் நவக்கிரகம் தோல்வி அடைந்திருக்காது. மாறுபட்ட தேவிகாவை உருவாக்க கே.பி. கொடுத்து வைக்கவில்லை.

தேவிகாவின் காதல் உலகுக்குத் தெரிய வந்த போது அதிர்ச்சி அடையாதவர்களே கிடையாது, அவரது காதலர் தேவதாஸ்  உள்பட.

ஆந்திராவில் என்.டி.ஆரின் ஆதர்ச நாயகி, தமிழில் நடிகர் திலகத்தின் வெற்றிகரமான இணை தேவிகா. தென்னகத்திரையில் உச்சாணிக் கொம்பில் இருந்த நேரம்.

தேவிகா தேவதாஸை மனமாற விரும்பினார். இயல்பிலேயே இளகிய மனம் கொண்டவர். ஏற்றத் தாழ்வுகள் பாராமல் எல்லாத் தரப்பு நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர்.

தேவிகா   தன்னை  நேசிப்பதைக் கேட்டுப் பரவசத்துக்குப் பதிலாக தேவதாஸ் பதற்றம் அடைந்ததே நிஜம்! நாம் காதலிக்க வேண்டாம். அது சரியாக வராது என்று மறுத்து ஒதுங்கியதே சத்தியம்!

யார் அந்த தேவதாஸ்?

சாமான்யமானவரா... அல்ல.

ஆரம்ப காலத் தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் - கண்ணாம்பா நடித்த அசோக் குமார்  மறக்க முடியாத வெற்றிப்படம். அதைத் தயாரித்தவர் மதுரை முருகன் தியேட்டர்ஸ் முதலாளி சுந்தரராம அய்யர். அவரது  மகன் தேவதாஸ்.

தேவதாஸ் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்தவர் பால கிருஷ்ணன்.- இன்றையப் பிரபல கதாசிரியர்- பட அதிபர் கலைஞானம்.

தேவிகா தயாரித்த வெகுளிப்பென் சினிமா - கலைஞானம் எழுதிய வெள்ளிக்கிழமை மேடை நாடகத்தின் திரை வடிவம்.

மதுரையில் பாகப்பிரிவினை வெள்ளி விழா. அந்நிகழ்வில் கலந்து கொள்ள டைரக்டர் ஏ. பீம்சிங் சென்ற சமயம்.

‘என் பையன் கூட சினிமால வர ஆசைப்படறான். உங்களால் ஏதாவது முடியுமானால் பாருங்கள்.’

தேவதாஸ் தந்தையின் நேரடியான கோரிக்கை.

தன்னிடம் பணிவோடு வந்த விண்ணப்பத்தை பீம்சிங்கால் தட்டிக் கழிக்க முடியவில்லை.

‘சென்னைக்கு வரச் சொல்லுங்கள்’ என்றார்.

பாச மலர் ஷூட்டிங் ஆரம்பமானது. ஏற்கனவே இருந்த பீம்சிங்கின் மூன்று அஸிஸ்டெண்ட்களைக் கடந்து நாலாவது ஆளாக கிளாப் போர்டை சுமந்து நின்றார் தேவதாஸூம்.

மிகப் பிரபலமான மருத்துவர்களை, அதிகச் சம்பளம் வாங்கும் சினிமா ஹீரோக்களை, டைரக்டர்களை ஆலை முதலாளிகளை, முன்னணி தொழில் அதிபர்களை, திருமணம் செய்வது பலகனவுக்கன்னிகளின் சாமர்த்தியம்.

தேவிகா ஒருவர் மட்டுமே இன்று வரை விதிவிலக்கு.

எப்படியாவது தேவதாஸை மணப்பது என்று கங்கனம் கட்டிக்கொண்டு நடமாடினார். முடியவே முடியாது என மறுத்த தேவதாஸின் கால்களில் விழுந்து கதறி அழுது, காதலுக்காகத் தன் கண்ணீரால் பாத பூஜையும் செய்தார் தேவிகா.

தனது எதிர் காலம் இன்னதென்று விளங்காத துணை இயக்குநரை, மணாளனாக வரிக்க அவரது கருணை மனத்தால் மட்டுமே முடிந்தது.------------

திருமணத்துக்குப் பிறகு தேவிகா அவரது காதல் கணவர் தேவதாஸை டைரக்டராக்கி அழகு பார்த்தார். அதற்காக அவர் சொந்தத்தில் தயாரித்த படம் வெகுளிப் பெண்.

1971ல் வெளியான சிவாஜி- பத்மினி- சரோஜாதேவி நடித்த தேனும் பாலும், சிவகுமார்-லட்சுமி நடித்த திருமகள், ஜெமினி கணேசன் நடிக்க சவுகார் ஜானகி தயாரித்த ரங்க ராட்டினம், தேவிகாவின் வெகுளிப் பெண் ஆகிய எல்லா சினிமாக்களுமே ஒரே மாதிரியான கதை அம்சம் கொண்டவை. அவற்றில் வெகுளிப்பெண் மட்டும் மக்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்தது.

எதிர் பாராத சூழலில் பருவப் பெண் ஒருத்தி கற்பைப் பறி கொடுப்பாள். அதனை அம்மா, அக்கா, அண்ணி யாராவது வீட்டு ஆண்களிடம் மூடி மறைப்பதே திரைக்கதை.

வெகுளிப் பெண் படத்தில் மூத்த சகோதரி தன் தங்கையின் கர்ப்பத்தை மறைத்து, அவள் பெறுகிற குழந்தையைத் தனக்குப் பிறந்ததாகச் சொல்லி அனைவரையும் நம்ப வைப்பாள்.

தங்கை ராதாவாக வெண்ணிற ஆடை நிர்மலா. அவரது அக்கா ஜானகியாக தேவிகா நடித்தார்கள்.

ஜெமினிகணேசன், முத்துராமன், கே.பாலாஜி, நாகேஷ் ஆகியோரில் யார் நிர்மலாவைச் சீரழித்தவர் என்கிற சஸ்பென்ஸ் படம் முழுவதும் நிலவும்.

திருமணமாகாத  தங்கைக்குப் பிறந்த குழந்தையைத் தன்னுடையதாகக் கூறி அநேக அவஸ்தைகளுக்கு ஆளாகும் மாறுபட்ட கதாபாத்திரம் தேவிகாவுக்கு. 

குழந்தையின் பிறந்த நாள் விழாவில் அது யாருடையது என்கிற சந்தேகம் எழுகிறது. வி. குமார் இசையமைப்பில், தேவிகாவுக்காக பி. சுசிலா பாடுவதாக,  எப்போதும் போல் கதைக்கும் காட்சிக்கும் பொருத்தமாக கண்ணதாசன் எழுதிய பாடல்-

‘முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்குச் சிப்பி சொந்தம்

பிள்ளைக்கு அன்னை அல்லவோ என் கண்ணா

பெண்மைக்குத் தாய்மை அல்லவோ. ’

அந்த  ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களுள் அதுவும் ஒன்று.

1971 ஆம் ஆண்டின் சிறந்தத் தமிழ்ப் படமாக தேசிய விருது பெற்றது வெகுளிப்பெண்.

சிவாஜி- கே. பாலாஜி போன்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, தேவிகா எங்கிருந்தோ வந்தாள், பாரத விலாஸ், அன்புச் சகோதரர்கள், உள்ளிட்ட  சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில்  தோன்றினார். அந்த மூன்று படங்களும் தேவிகாவின் முத்தான நடிப்புக்கு முழு முகவரி தந்தன.

குறிப்பாக எங்கிருந்தோ வந்தாள் படத்தில் கே.பாலாஜி ஜோடியாக தேவிகா ஏற்ற அண்ணி அமிர்தம் என்கிற கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

அன்புச் சகோதரர்களில் மேஜர் சுந்தரராஜனின் மனைவியாக லட்சுமி என்கிற கேரக்டர். அனுதாபத்துக்குரியது.

செல்வ சீமாட்டி ஜமுனாவைக் காதலித்துச் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகக் கை விடுவார் மேஜர். அவரை ஜமுனா பழி வாங்க நினைத்து, ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் வறுமையில் வாட்டி எடுப்பதே திரைக்கதை.

‘என் கணவரை ஏதும் செய்து விடாதே. அவர் செய்த தவறை மன்னித்து எங்களை நிம்மதியாக வாழவிடு!’ என்று ஜமுனாவிடம் தேவிகா கெஞ்சிக் கதறும் கட்டங்கள் தாய்க்குலங்களைக் கண்ணீர் சிந்த வைத்தன.

அன்புச் சகோதரர்கள் படத்தின் வெற்றிக்கு தேவிகாவின் குணச்சித்திர நடிப்பு நங்கூரம் பாய்ச்சியது.

சத்யம் படத்தில் நடிகர் திலகத்தின் நாயகியாகத் தமிழ் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார் தேவிகா. அதில் அவருக்கு மைத்துனராக வந்தவர் கமல்ஹாசன்.

ஆனாலும் ஸ்ரீதர் தேவிகாவை மறப்பதாக இல்லை. கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் கழித்து 1986ல், கமல்  நடிக்க ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய  படம்’நானும் ஒரு தொழிலாளி’  அதில் கமலுக்கு அண்ணியாக தேவிகாவை மீண்டும் திரையில் தோன்ற வைத்தார்.

நானும் ஒரு தொழிலாளி தேவிகா நடித்த கடைசித் தமிழ்ப்படம் என்று நினைக்கிறேன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஒரே நேரத்தில் அநேக மொழிகளில் கொடி கட்டிப் பறந்த மிகச் சில நாயகிகளில் தேவிகாவும் ஒருவர்.

அன்றைய நட்சத்திரங்களில் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் போதே ‘மத்யமா’ இந்தித் தேர்வு  எழுதி தேர்ச்சி பெற்றவர் தேவிகா. இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் தனியே ஆசிரியர் வைத்துச் சரளமாக இந்தியில் உரையாட  ட்யூஷன் எடுத்துக் கொண்டார். அவரது இந்தி பண்டிட்டின் பெயர்  சூரஜ் நாராயண் சின்ஹா.

‘தேவிகா எனது முதல் தர மாணவி. எதையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் நிறைந்தவர். ஜெமினியின் கரானா இந்தி சினிமா ஷூட்டிங்கில் தேவிகாவின் இந்தி உச்சரிப்பை ராஜேந்திரகுமார், ஆஷாபரேக் உள்ளிட்ட வடக்கத்திய நட்சத்திரங்கள் மனப்பூர்வமாகப் பாராட்டியதை நான் நேரிலேயே பார்த்தேன். ’ என்று தேவிகாவுக்குப் பத்திரிகை பேட்டி ஒன்றில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார் சின்ஹா.

தேவிகாவைப் பயன் படுத்திக்கொள்ளாத புகழ் பெற்ற படக் கம்பெனிகள்  தேவர் பிலிம்ஸ். ஆர்.ஆர். பிக்சர்ஸ். 

சரோஜாதேவி, ஜெயலலிதா, கே.ஆர். விஜயா ஆகியோரைத் தொடர்ந்து நாயகிகளாக நடிக்க வைத்த தேவர், டி.ஆர். ராமண்ணா இருவரும் ஏனோ தேவிகாவை மறந்து விட்டார்கள்.

தேவிகாவை இயக்காத பிரபல டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு, கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர்.

எம்.ஜி.ஆருடன் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை என்கிற கேள்விக்கு தேவிகாவின் பதில்-

‘ என் கைவசம் நிறையவே படங்கள் இருந்தன. அதில் பல சின்ன பட்ஜெட்டில் உருவாகும் குறுகிய காலத் தயாரிப்புகள். எம்.ஜி.ஆர். படம் என்றாலே பெரிய மூலதனத்துடன் உருவாகித் திரைக்கு வர  நீண்ட காலம் பிடிக்கும்.

எற்கனவே தமிழில் சிவாஜி, தெலுங்கில் என்.டி.ஆர். படங்களுக்குத் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து வந்தேன். நான் இருந்த பிஸியான சூழலில் எம்.ஜி.ஆருடன்  மீண்டும் ஜோடி சேர முடியாமல் போனது. ’

-பா. தீனதயாளன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com