ஆசனம்  44. பார்சுவ கோணாசனம்

உடலைப் பக்கவாட்டில் காலோடு சாய்த்துச் செய்யக்கூடிய ஆசனம்.

அஷ்டாங்கயோகம்
நியமம்

யோக நீதிக் கதைகள்

விட்டுக் கொடுத்தவன்

அப்பா என் மனசு ஆறவே மாட்டேங்குதுப்பா... எனக்கு எதாச்சும் பண்ணணும்போல இருக்குப்பா...

நீ பேசாம இரு. அதை மறந்துடு...

என்னால அவ்வளவு ஈஸியா மறக்க முடியாதுப்பா...

அம்மா என்னம்மா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கற? நீயாவது சொல்லும்மா.

டேய் அப்பாவை விடவா? அவரே பயங்கர கோவக்காரரு. அவரே பேசாம இருன்னு சொல்லும்போது நான் என்ன சொல்றது. நீ பேசாம போய் கண்ணை மூடித் தூங்குடா.

அதெப்படிம்மா தூக்கம் வரும்? உண்டு இல்லைன்னு பண்ணாம என்னால தூங்க முடியாதும்மா.

பாருடா, நாட்டுல நல்லவனும் இருக்கான், கெட்டவனும் இருக்கான். கெட்டவன் நல்லவனை சீண்டிக்கிட்டே இருப்பான். அவனுக்கு வேற வேலை இல்லை. ஆனா, நல்லவனுக்கு நெறைய வேலைகள் இருக்கு. கெட்டவனோட போய் போராடிட்டு இருந்தா நம்ம பொழைப்பெல்லாம் போயிடும். அவனுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்னுட்டு பொறுமையா போயிட வேண்டியதுதான். விட்டுக்குடுக்கறவன் கெட்டுப் போறதில்லை. கெட்டுப்போறவன் விட்டுக்கொடுக்கறதில்லை.

கெட்டவன் விட்டுக் கொடுக்கமாட்டான். நல்லவன் விட்டுக் குடுப்பான். நாம நல்லவனாவே இருந்துட்டா அதுதான்டா நிம்மதி. அதே நம்பிக்கையோட போய் படுத்துத் தூங்கு எல்லாம் சரியாயிடும்...

*

போக்குவரத்து சிக்னலில் பயங்கரமான போக்குவரத்து நெருக்கடி.

முன்னால் ஆட்டோக்களும் கார்களும் இன்ச் இன்சாக நகர, இடையிலே புகுந்து போய்விடலாம் என்றால் குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் போய் வந்துகொண்டிருக்கிறார்கள். அதனால், ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தேன். ஆட்கள் குறுக்கே ஓடிவரும்போதெல்லாம் அடித்தாகவேண்டும். இல்லாவிட்டால் குறுக்கே பாய்ந்து விடுவார்கள்.

ஹாரனை அழுத்திக்கொண்டே இருந்தபோது, முன்னால் சென்ற ஆட்டோக்காரன் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

படார் என்று இறங்கிவந்து கையை ஓங்கியதுடன் கெட்ட வார்த்தையைச் சொல்லி,  எதுக்கு இப்படி ஹாரன் அடிச்சு டார்ச்சர் பண்றே. ஏற்கெனவே டிராஃபிக் ஜாப்…. என்றான்.

என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அடிக்க வந்த அவனது கையை இறுகப் பிடித்துக்கொண்டேன்.

ஏன்டா, ரொம்ப ஈஸியா கைய தூக்கிடுவியா. எங்க, அடிடா பாப்போம் என்றேன்.

சொல்லி முடிப்பதற்குள் அவனது வலது கை எனது இடது தலையைப் பதம் பார்த்தது!

இடது கையால் ஹேன்டில்பாரைப் பிடித்துக்கொண்டு நானும் எனது வலது கையால் அவனது தலையில் ஓங்கி அடித்தேன். பதிலுக்கு அவன் தனது இடக் கையால் எனது குடுமியைப் பிடித்துக்கொண்டான் .

வலி உயிர் போனது.

அதற்குள் பின்னால் நின்ற வண்டிக்காரர்கள் பலமாக ஹாரன் அடித்தார்கள்.

கைய எடுடா என்றேன்.

எடுக்க முடியாதுடா. ஒரு ஆட்டோக்காரன் மேல மொத மொதலா கை வச்சது நீதான்டா. நாயே, உன்னை என்ன பண்றேன் பாருடா. நீ இன்னிக்கு வூடு போய்ச் சேரமாட்ட.

டேய் மரியாதையா பேசு. நான் ஒருத்தன் ஹாரன் அடிச்துக்கு அவ்வளவு டென்ஷன் ஆனியே. இப்போ இத்தனை வண்டிக்காரங்களும் ஹாரன் அடிக்கறாங்க. அவங்களை போய் கேட்க வேண்டியதுதானடா?

டேய், அத கேட்க நீ யாருடா நாயே. நான் இன்னிக்கு ஒன்னை சும்மா விடமாட்டேன்டா என்று தனது வலது கை விரல்களை மூடிக்கொண்டு நான்கைந்து முறை என் கன்னத்தில் ஓங்கி ஓங்கிக் குத்துவிட்டான்.

என் பற்கள் உருக்குலைந்து போயிருக்கும் என்பதை என் மனம் எனக்கு உணர்த்தியது.

அதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அப்படியே என் வண்டியை சாலையில் சாய்த்துவிட்டு அவனை மார்போடு முட்டித் தள்ளினேன். அவன் மல்லார்ந்தபடி சாலையோரம் இருந்த மின்சாரப் பெட்டியில் போய் விழுந்தான்.

எழுந்தவன், வேகமாக ஓடிவந்து ஆட்டோவுக்குள் இருந்த சிலுவை ஸ்பேனரை எடுத்து ஓங்கி என் தலையில் அடித்தபோது ரத்தம் பீறிட்டது. தலை சுற்றியபோது மாநகரக் காவல் வண்டி வந்து சேர்ந்தது. ஆட்டோக்காரனையும் என்னையும் பின்னால் ஏற்றிக்கொண்டு அருகே இருந்த காவல் நிலையத்துக்குதுச் சென்றது.

என்னடா தகராறு என்று காகிதத்தைச் சுருட்டிக் காதில் செருகிக்கொண்டே கேட்டார் முன் சீட்டில் இருந்த போலீஸ்காரர்.

சார், ஆட்டோக்காரன்னா அவ்வளவு கேவலமா சார். சிக்னல்ல போக முடியாம நிக்கிறேன். எங்க அம்மா பேரைச் சொல்லி அசிங்க அசிங்கமா திட்டறான் சார் இவன். அதனால ஆத்திரம் வந்து அடிச்சிட்டேன் சார்.

சார் சார் அவன் சொல்றதை நம்பாதீங்க சார். சுத்தப் பொய் சார் என்றேன்.

டேய் வீல் ஸ்பேனரை எடுத்து வீசியிருக்கான்னா சும்மாவாடா? என்றார் அந்த போலீஸ்காரர்.

போலீஸ்காரரின் விசாரணையே திசைமாறியது. வேனும் வேறு திசைக்கு மாறியது.

சார் நான் சொல்றதை கேளுங்க சார்.

காதை ஆட்டி ஆட்டிக் குடைந்துகொண்டே சாலையில் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்துகொண்டிருந்தார் அந்த போலீஸ்காரர்.

போலீஸ் ஸ்டேஷன் முன்னால் வேன் நின்றது. என்னையும் அவனையும் இறக்கிக்கொண்டு உள்ளே நடந்தார் அந்த போலீஸ்காரர்.

சார். ஆளுதான் டீசன்டா இருக்கான் சார். ஆனா ஆட்டோக்காரன் வாயில வராத கெட்ட வார்த்தையெல்லம் பேசறான் சார் இவன்.

சொல்லிக்கொண்டே கூட நடந்தான் ஆட்டோக்காரன்.

போலீஸ்காரர் என் தலையில் கை வைத்து காயத்தைச் சுரண்டிப் பார்த்தபடி, அது என்னடா எல்லாருமே ஆட்டோக்காரன்னா ஆகாதவனாவே பார்க்கறீங்க? அவனும் உங்களை மாதிரி மனுஷங்க தானடா. நீ ஏதோ படிச்சு கவுரமா உத்தியோகத்துல போய் உட்கார்ந்துட்டே. அவனுக்கும் வசதியிருந்திருந்தா அவனும் உன்னைப்போலவே உத்தியோகத்துல போய் உட்கார்ந்திருப்பான்லடா? சும்மா இருக்காம ஆட்டோ ஓட்டிட்டாவது இருக்கானே. அவனைப் போய் அநாவசியமா பேசினா விடுவானாடா என்றார்.

ஏட்டய்யா, இவனை கூட்டிட்டு எதிர்ல இருக்கற கிளினிக்ல போய ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டு சீக்கிரமா வாங்க என்று சொல்லவும், அந்த ஏட்டய்யா என் பிடரியில் கைவைத்து தக்க மரியாதையோடு தள்ளிக்கொண்டு போனார்.

வாடா மாப்பிள்ளை, எங்கடா ஆளையோ காணோம்? என்ற சத்தம் கேட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு போலீஸ்காரர் அந்த ஆட்டோக்காரனை உரிமையோடு அழைத்தபோது, அவன் பணிந்து குனிந்து அவரது அருகில் போய் குழைந்துகொண்டு நின்றான்.

எனக்கு காயத்தைவிட மனம்தான் வலித்தது.

டாக்டர் என்னப்பா? என்றார்.

ஆட்டோக்காரன் அடிச்சுட்டான் சார் என்றேன்.

அவர் காதில் வாங்கிக்கொள்ளாதவர்போல மருந்து போட்டு தலையைச் சுற்றி காட்டன் சுற்றிவிட்டு, ம்… கூட்டிட்டு போங்க என்றார்.

என்னை ஒரு லாக்-அப் ரூமைத் திறந்து உள்ளே அனுப்பினார் அவர்.

சார் என்ன இது? நான் வீட்டுக்குப் போகணும் என்றேன்.

வீட்டுக்கா? என்று கேட்டுவிட்டு அவர் இளக்காரமாகச் சிரித்துவிட்டு லாக்கப் இரும்பு கேட்டை பூட்டினார்.

உள்ளே திரும்பிப் பார்த்தபோது, கிழிந்த லுங்கியும் தாடியும் மீசையும் கொண்டு கொடூரமான உருவம் ஒன்று படுத்துக் கிடந்தது. அதன் துர்நாற்றம் குடலைப் பிடுங்கியது.

அவன் தலைக்கு மேல் சில கரப்பான் பூச்சிகள் ஊர்ந்துகொண்டிருந்தன. அவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான்.

சார் உங்களைத்தான், ஏன் என்னை லாக்கப்புல தள்ளினீங்க?

பதிலே இல்லை.

போய்விட்டார்.

யாருமே அந்தப் பக்கம் வரவில்லை.

உள்ளே “வாக்கி டாக்கி” சத்தம் மட்டும் கத்திக்கொண்டே இருந்தது.

சில போலீஸ்காரர்கள் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

சார் உங்களத்தான், ஒரு நிமிஷம் இங்க வாங்க, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க என்று நூறு தடவைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுத் தொண்டை வறண்டதுதான் மிச்சம்.

அந்தப் பிச்சைக்காரனின் நாற்றம் தாளாமல் நான் வாந்தி எடுத்து அதை எனது சட்டையிலேயே துடைத்துக்கொண்டேன். அதுவும் ஒரு பக்கம் சேர்ந்து நாறியது.

இரவு பதினொன்று ஆகிவிட்டது. நான் தாமதமாகத்தான் வீடு திரும்புவது வழக்கம். அதனால் பெற்றோரிடமிருந்து அழைப்பு இல்லை. அவர்களுக்குத் தெரிந்தால் பயந்துவிடுவார்கள் என்பதால் நண்பன் சிவாவுக்கு ஃபோன் செய்தேன்.

என்னுடைய நேரம், அவன் ஊரில் இல்லை.

இன்னொரு நண்பனிடம் ஃபோன் பண்ணிச் சொன்னேன்.

அவன் வந்தான்.

இன்ஸ்பெக்டர் நாளைதான் வருவார். எதுவும் பேச முடியாது. எஃப்.ஐ.ஆர். போட்டாச்சு. நாளைக்கு கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுவாங்க. நீங்க கிளம்புங்க. நீங்க என்ன பண்ணாலும் விடமாட்டாங்க என்று சொல்லி, அந்த நண்பரை துரத்தாத குறையாகத் துரத்தினார் ஒரு போலீஸ்காரர்.

இரவு பன்னிரெண்டரை மணிக்கு என் அப்பாவிடமிருந்து ஃபோன் வந்தது. ஆபீஸில் நைட் டூட்டி குடுத்துட்டாங்கப்பா. அதனால நாளைக்குதான் வரமுடியும், அம்மாகிட்ட சொல்லிடுங்க என்றேன்.

ஸ்பேனர் பட்ட வலியால் தலை “வின் வின்”னென்று தெறித்தது. வீக்கம் ஏற்பட்டு கண்கள் இரண்டும் பயங்கரமாக வலித்தன.
விடிய விடிய குத்திட்டு உட்கார்ந்திருந்தபோது, சில கரப்பான் பூச்சிகள் வந்து காலில் ஏறி என்னைச் சீண்டிப் பார்த்தன. அந்தப் பிச்சைக்காரன் இன்னும் தூங்கிக்கொண்டேதான் இருந்தான்.

மறுநாள் விடிந்தபோது மனம் கசந்து அழுதேன்.
ஒன்பது மணிக்கு யாரோ ஒரு வேலைக்காரச் சிறுவன் எனக்கும் அந்த பிச்சைக்காரனுக்கும் இரண்டு டீ கிளாஸ்களை கம்பிகளுக்குள் நீட்டினான். கடும் பசி. வேறு வழியில்லாமல் வாங்கிக் குடித்தேன். அந்தப் பிச்சைக்காரன் குடித்துக்கொண்டே என்னடா சர்க்கரையே போடமாட்டீங்களா? என்று டீக்கடைச் சிறுவனை ஏசினார்.
ஏட்டய்யா கூட்டிக்கொண்டு போவதற்குள், ஒரு போலீஸ்காரர் ஒரு ரெஜிஸ்டர் நோட்டைக் கொண்டு வந்து நீட்டி, அதில் கையெழுத்து போடுப்பா என்றார்.
கையெழுத்தா? எதுக்கு சார்?

போடறியா, லாடம் கட்டட்டுமா?

சா...ர்

போடுடான்னா. போலீஸ்காரன்கிட்டயே வேலைய காட்டறியா?

போட்டேன்.

ஆட்டோக்காரன் பப்ளிக் சர்வீஸ் பண்றவன். அவன் வண்டியில பேஷன்ட் இருக்கும்போது அநாவசியமா ஹாரன் அடிச்சு தொந்தரவு பண்ணியிருக்கே. அதனால பேஷன்ட் உயிருக்கே ஆபத்தாயிடுச்சு. அந்த பேஷன்ட்டைக் காப்பாத்தறதுக்காக, எதுக்கு இப்படி ஹாரன் அடிச்சேன்னு கேட்டிருக்கான். உடனே நீ அவனை அசிங்க அசிங்கமா திட்டி வலது கைய ஓங்கியிருக்கே. அவன் தடுக்கறதுக்காக உன் கைய பிடிச்சிருக்கான். நீ வண்டிய போட்டுட்டு, இடது கையால அவனை தாக்கியிருக்கே. உன் வண்டிக்குள்ள வச்சிருந்த வீல் ஸ்பேனரை எடுத்து அவனைத் தாக்க முயற்சி பண்ணியிருக்கே. அவன் தடுத்தபோது அதுவே உன் தலை
மேலே பட்டு உனக்கே காயம் ஆயிடுச்சு...

ஐயோ என்ன சார் கொடுமை இது, எல்லாமே சுத்தப் பொய் சார்…

இப்படித்தான்டா வர்றவன் எல்லாருமே சொல்றான். கேட்டுக் கேட்டுப் புளிச்சுப்போச்சுடா. நல்லா கேட்டுக்கோ, நீ பதினைஞ்சு நாள் ரிமாண்டுல இருக்கணும். பிரதம மந்திரி சென்னைக்கு வர்றாரு. அதனால புழல்ல போய் ரெண்டு வாரத்துக்கு இரு. கேஸ் நடக்கும். மத்ததை நீதிபதி சொல்வாரு.

நான் மயங்கி விழுந்தேன்.

கண் விழித்தபோது நரகத்துக்குள் இருப்பது போன்ற பிரமை. இரும்புச் சிறைக் கதவுக்குள் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தேன். என் அறைக்கு எதிரே வரிசையாக இரும்புக் கதவுகள் போடப்பட்ட அறைகள். எல்லாமே கைதிகளின் சிறை அறைகள்.

அதற்குள் ஜாலியான மூடில் இளம் குற்றவாளிகள்!

என்னடா மச்சான். என்ன பண்ணிட்டு வந்தே? என்று குரல் கொடுத்தான் எதிர் கூண்டுக்காரன்.

பார்த்தா நல்லவனா தெரியறே. அதுனாலதான் இங்க கூட்டி வந்துட்டாங்க.

இந்தக் காலத்துல நல்லவன் மாதிரி வேஷம் போடறவணுங்கதான் ஏராளமா இருக்கானுங்க.

என்ன, பொண்ணைக் கெடுத்துட்டியா?

பேங்க்ல கைவரியை காட்டினயா?

பிக் பாக்கெட்டா?

தலைக் காயத்தின் வலி கூடிக்கொண்டே போனது.

ஒரு போலீஸ்காரன் இரும்புக் கதவைத் திறந்து, இன்னா துன்றே? என்று கேட்டார்.

சார், நான் ஒரு தப்பும் பண்ணாதவன். என்னை அடிச்சவன் ஆட்டோக்காரன். அவனை நான் அடிச்சதா கேஸ் போட்டு இங்க வந்து தள்ளிட்டாங்க. என்னசார் நியாயம் இது?

நியாயமா அநியாயமான்னு பதினெஞ்சு நாள் ரிமாண்டுக்குப் பிறகு ஜட்ஜ் அய்யாதான் சொல்லணும். நாங்க சொல்ல முடியாது. நீ ஏதோ தப்பு பண்ணியிருக்கே. அதனால இங்க அனுப்பிச்சிட்டாங்க. என்ன தப்பு பண்ணினேன்னு எஃப்.ஐ.ஆர். பாத்தாதான் தெரியும். எங்களுக்கு அதல்லாம் காட்டமாட்டாங்க. எங்க டூட்டி
என்னன்னா, உங்களுக்கு பசியாத்தணும். என்ன சாப்பிடறே? சொல்லு.

எனக்கு எதுவுமே வேணாம் சார்.

வேண்டான்னா எப்படி? என்னடா காயம் தலையில என்றபடி சுற்றிக் கட்டியிருந்த காட்டனைப் பிடித்து இழுத்தபோது வலியால் துடித்தபடி கண் விழித்தேன்!

அறைக்குள் சுற்றுமுற்றும் பார்த்தேன். சுவரில் முருகன் படமும் பக்கத்தில் ஷீர்டி பாபா படமும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன.

தலைமாட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தினேன். எப்பவாச்சும் கெட்ட கனவு வந்து கண்முழிச்சா, உடனே தண்ணி எடுத்து சாந்தி.. சாந்தி.. சாந்தின்னு சொல்லிட்டுக் குடிச்சிடு என்று அம்மா சொல்லுவாங்க.

சற்று முன்னர்வரை எனக்கு ஏற்பட்ட கொடிய அனுபவங்கள் எங்கே போயிற்று? கனவா, ம்ஹும். இருக்க முடியாது. அப்படி ஒரு அனுபவம்.

அறைக் கதவைத் திறந்துகொண்டு வந்தேன். குளிர்ந்த வாடைக்காற்று மனதை பரவசப்படுத்தியது.

நீண்ட பெருமூச்சோடு அம்மாவின் அருகே போய் நின்றேன்.

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அப்பா கட்டிலின் மீது அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

முதல் நாள் மாலை சிக்னலில் ஒரு ஆட்டோக்காரன் என் ஆத்திரத்தைத் தூண்டிப் பேசினான். அப்போது பொறுமையாக வந்துவிட்டேன். ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை உசுப்பேற்றிவிட்டுக்கொண்டிருந்தன. மனம் சமாதானம் ஆக மறுத்தது. அந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் சொல்லிச் சொல்லி ஆதங்கப்பட்டேன்.

அப்போது என் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

இதோ பாருப்பா. விட்டுக் குடுக்கறவன் கெட்டுப்போறதில்லை. கெட்டுப்போறவன் விட்டுக் கொடுக்கறதில்லை. கெட்டவன் விட்டுக் கொடுக்க மாட்டான். நல்லவன் விட்டுக் குடுப்பான். நாம நல்லவனாவே இருந்துட்டா அதுதான்டா நிம்மதி. அதே நம்பிக்கையோட போய் படுத்துத் தூங்கு, எல்லாம் சரியாயிடும்.
எனக்கு ஏற்பட்ட கனவு எதையோ எனக்கு உணர்த்தியது!

***

ஆசனம்
பார்சுவ கோணாசனம்

உடலைப் பக்கவாட்டில் காலோடு சாய்த்துச் செய்யக்கூடிய ஆசனம்.

செய்முறை

இரண்டு கால்களையும் அகலமாக்கி நிற்கவும்.

பிறகு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி வலப் பக்கமாக இடுப்பைத் திருப்பவும்.

அப்படியே வலது முழங்காலை மடக்கி வலப் பக்க உடலை வலது தொடையின் மீது படியவைத்து, வலது கையை வலது காலுக்கு இணையாக விரிப்பின் மீது வைத்துக்கொள்ளவும். அதே சமயம், இடது கையை தலைக்கு மேலே உயர்த்தி, இடக் கன்னத்தை ஒட்டியபடிச் சாய்த்து நீட்டவும்.

சில சுவாசங்கள் இருக்கவும்.

பின்னர் இடக் கையை மேலே உயர்த்தியபடி எழுந்து நிமிர்ந்து நிற்கவும்.

அடுத்த முறை அப்படியே இடது முழங்காலை மடக்கி இடப் பக்க உடலை இடது தொடையின் மீது படியவைத்து, இடது கையை இடது காலுக்கு இணையாக விரிப்பின் மீது வைத்துக்கொள்ளவும். அதே சமயம், வலது கையை தலைக்கு மேலே உயர்த்தி, வலக் கன்னத்தை ஒட்டியபடிச் சாய்த்து நீட்டவும்.

சில சுவாசங்கள் இருக்கவும்.

பின்னர் வலக் கையை மேலே உயர்த்தியபடி எழுந்து நிமிர்ந்து நிற்கவும்.


பலன்கள்

உடலின் பக்கவாட்டுப் பகுதியில் வலப் பக்கம் முழுதும் நீட்டி விரிக்கப்படுகிறது. இடப் பக்கம் முழுதும் மடக்கி நெருக்கப்படுகிறது. இதனால் உள் உறுப்புகள் யாவும் நன்றாக அழுத்தப்பட்டு ரத்த ஓட்டம் உண்டாகி, அதனால் சுரப்பு நீர்கள் தூண்டப்படுகின்றன.

நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகிறது.

உயரம் குறைவாக உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், அவர்களது உயரம் அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com