ஆசனம் 41. நாபி ஆசனம்

நாபிக்கமலமாகிய தொப்புள் பகுதியை தரையில் பதியவைத்து குப்புறப்படுத்துச் செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு நாபி ஆசனம் என்று பெயர்.

அஷ்டாங்க யோகம்

தியானம்
---

யோக நீதிக் கதை

செய்யும் தொழிலே தெய்வம்

அது இரும்பு வாஷர்கள் தயாரிப்பு தொழிற்சாலை. மதிய உணவுக்கான மணி ஒலித்தது.

உற்சாகமில்லாமல் சாப்பிட்டான் சேகர்.

என்னடா, ஏன் டல்லா இருக்கே? என்றான் குணாளன்.

நான் இன்னியோட வேலையை விட்டுப் போகப்போறேன்டா.

ஏன்டா? என்றான் அதிர்ச்சியுடன்.

தெரியலை. எனக்குப் பிடிக்கலை. மனசுல வேண்டாத எண்ணங்க வருது. இருபது வருஷமா இங்க குப்பை கொட்டியாச்சு. ஆனாலும் என் கவலைங்க கொறைஞ்சபாடு இல்லடா.

என்னன்னு சொன்னா நான் ஏதாவது உதவி செய்வேன்ல.

சொல்லி என்னாகப்போவுது குணா. பணக் கஷ்டம்னா நீ குடுத்து உதவலாம். ஆனா எனக்கு இருக்கறது மனக் கஷ்டம். என் கஷ்டத்தை யாரால தீர்க்கமுடியும்? என்னால வேலை செய்யவே முடியலைடா.

சேகர், உனக்கு மட்டும் இல்லடா. இங்க வேலை பார்க்கற எல்லாருக்குமே கவலை இருக்கு. ஆனா, எல்லாருக்குமே தீர்வு அவங்க பார்க்கற வேலைதான்டா. வேலையிலே கவனமா இருந்தா, கவலைகள் சுவடு தெரியாம போயிடும். சொன்னா கேளு, அவசரப்பட்டு வேலையை விட்டுடுடாத.

பாதி சாப்பாட்டிலேயே எழுந்து கை கழுவப்போனான் சேகர்.

மாலை ஐந்து மணிக்கு கைகுலுக்கிவிட்டு விடைபெற்றபோது, சேகரை தனியாக அழைத்துச் சென்றான் குணாளன்.

சேகர், நானும் இதே கம்பெனியில இருவது வருஷமா வேலை பார்க்கறேன். எனக்கு வராத கவலையில்லை, வராத சோதனை இல்லை. நீயும் பார்த்திருப்பே. என்னதான் கஷ்டம் வந்தாலும் வேலைக்கு ஓடி வந்துடுவேன். என்னதான் மழை பேஞ்சாலும் வெயிலடிச்சாலும் வந்துடுவேன். காய்ச்சலடிச்சாகூட வேலை பார்ப்பேன். கவலைகளுக்குப் பயந்துட்டு வீட்டுல உட்கார்ந்தா, அந்தக் கவலையே நம்மள கொன்னுடும். நெஜமாவே நீ போகத்தான் போறியா?

ஒரு வாரத்துக்கு முன்னாலயே ஓனர்கிட்ட சொல்லிட்டேன். சரி நான் வரேன் என்று சொல்லி விடைபெற்றான் சேகர்.

அடுத்த நாள் -

ஆவடியில் உள்ள பிரபலமான பாத்திரக் கம்பெனியில் மேனேஜர் வேலைக்குச் சேர்ந்தான் சேகர்.

சாக்குப் பைகளில் அலுமினியப் பாத்திரங்கள் மூட்டை மூட்டையாக வந்து இறங்குவதும், அவற்றைச் சரிபார்ப்பதும் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்வதுமாக கலகலப்புடன் இருந்தான் சேகர்.

ஒரு வாரம் போன பிறகு வேலை அலுத்தது. மனதில் ஒட்டவில்லை.

முதலாளி திருநெல்வேலிக்காரர். சேகரைச் சத்தம் போட ஆரம்பித்தார்.

ஏலே, என்னல உஷார் இல்லாம இருக்கே. ஆந்திராவுக்கு இட்லிப் பாத்திரம் நாலு லோடு நேத்தே போயிருக்கணும்லே. இன்னிக்கும் போனபாடு இல்லலே. நாளைக்கும் போற மாதிரி தெரியலைலே. இது சரிப்பட்டு வராதுலா. ஆந்திராகாரன் மொத்த பணத்தையும் ரொக்கமா அனுப்பிட்டு, உயிரை எடுக்கறான்ல. ஏலே, நான் என்ன கேக்கேன்னு தெரியுதாலே? பின்ன என்னல்ல முழிச்சுட்டே நிக்கே?

நான் என்ன செய்யணும் முதலாளி?

அப்படி கேளுல. குடோனுக்கு போயி ஈரக் கோணிய இழுத்து மூடிட்டுத் தூங்குல. ஏல, என்ன கேள்வி கேக்கறல?

வேலைக்கு புதுசுதான முதலாளி. சொன்னா செய்யப்போறேன்.

சரி போவட்டும். லாரிக்கு சொல்லியாச்சு. ராத்திரிக்குள்ள லோடு ஏத்தியாகணும். புரிஞ்சுதால. இல்லேன்னா லாரி வாடகைய நீதான் குடுக்கணும். பார்த்துக்கோல!

ஃபேக்டரிக்கு ஓடினான் சேகர்.

தொழிலாளிகளை துரிதப்படுத்தினான். ஆனால், எல்லோருமே செவிடர்கள்போல இருந்தார்கள்.

முதுகில் தட்டிச் சொன்னபோது, குருடர்கள்போல குனிந்துகொண்டே இருந்தார்கள்.

இரவுக்குள் லோடு ஏற்றப்படவில்லை.

சம்பள நாள் -

இந்தாப்பா சேகர், ஆந்திராவுக்கு சரக்கு லேட்டாதான் போயிருக்கு. நீதான் காரணம். லாரி வாடகைல பாதிய உன் சம்பளத்துல பிடிச்சாச்சு என்று கவரை நீட்டினார் அக்கவுன்டன்ட்.

அதிர்ச்சியில் தள்ளாடினான் சேகர்.

சார், சரக்குகள் லேட்டானதுக்கு ஒர்க்கர்ஸ்தான் காரணம். நான் என்ன பண்றது?

அவங்களை வேலை வாங்க வேண்டியது உன்னோட வேலைதானப்பா?

நான் நல்லாதான் வேலை வாங்கினேன். அது எல்லாருக்குமே தெரியும் சார்!

பாரப்பா, அந்தக் கதை எல்லாம் முதலாளிகிட்ட பேசிக்கோ.

முதலாளியிடம் மூச்சிறைக்க ஓடிப்போய் முறையிட்டான் சேகர்.

இங்க பாருல, நான் ஒண்ணே ஒண்ணு கேக்கேன். ஒனக்குப் பிள்ளை குட்டி இருக்கா?

இருக்கு, ஒரே ஒரு பையன்.

ஸ்கூல்ல உன் பையன் ஒழுங்கா படிக்கலன்னா அப்பன கூட்டிட்டு வாடான்னுதான்ல சொல்லுவாக. ஊருக்குல்ல உன் பையன் தப்புப் பண்ணினா, எவன் பெத்த பிள்ளைன்னுதானேல கேட்பானுக.

ஒரு கம்பேனில எவனுமே ஒழுங்கா வேலை செய்யலேன்னா எவன்டா மேனேஜர்ன்னுதானலே கேட்பானுக. மரியாதையா குடுத்தத வாங்கிட்டு போலே. இல்லேன்னா இந்த மாசத்தோட எடத்த காலி பண்ணுல.

மனச் சோர்வுடன் வீடு திரும்பினான் சேகர்.

மனைவியிடம் சொல்லிக் கண்ணீர் விட்டான்.

பதிலுக்கு அவளும் வாய் பேசாமல் கண்ணீர் வடித்தாள்.

கோயிலுக்குப் போனான்.

காலை முதல் மாலை வரை உட்கார்ந்தே கிடந்தான். தன் கவலைகளை முறையிட்டுக்கொண்டே இருந்தான். பஜனையில் உட்கார்ந்து பார்த்தான். பஜனை நடத்தியவரிடம் ஆறுதல் வேண்டினான்.

தினமும் தியானம் செய் என்றார் அவர்.

வீட்டுக்கு திரும்பியவன், தினமும் தியானம் என்ற பெயரில் சும்மாவே உட்கார்ந்து கிடந்தான்.

மனம் அடங்கியபாடில்லை!

பத்துக்கு நூறு மடங்கு, காட்டாற்று வெள்ளம்போல் கவலைகள் பெருக்கெடுத்தன!

கைகளைத் தலைக்கு மேலே வைத்து விட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சேகர்.

கையில் வைத்திருந்த பணம் எல்லாம் கரைந்துவிட்டது.

ஏங்க, வீட்டுக்காரரு வாடகைப் பணம் கேட்கறாங்க. மளிகைக் கடைக்காரன் பாக்கிப் பணம் கேட்டு ஆள் அனுப்பறான். பால்காரம்மாகிட்ட டோக்கனுக்குப் பணம் தரணும். நீங்க வாங்கி வந்த பாதிச் சம்பளம் போன மாயம் தெரியல என்றாள் மனைவி பரிமளா.

கிடுக்கிப்பிடி போட்டதுபோல, வாழ்க்கை நெருக்கடிக்குள் வந்துவிட்டதை உணர்ந்தான் சேகர்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் பாண்டி அருகில் வந்தான்.

அப்பா, பேக்டரில வேலைக்குப்போன வரைக்கும் நீங்க நல்லாதான் இருந்தீங்க. அதை விட்டுட்டு பாத்திரக் கம்பெனிக்குப் போனதிலேருந்து உங்க முகமே நல்லா இல்லப்ப என்றான்.

வாசலில், சேகர் சேகர் என்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது.

குணாளன்!

ஏய் குணா, வாடா வா. என்ன திடீர்னு?

பார்த்து ரொம்ப நாளேச்சேன்னு வந்தேன்டா.

*

என் கவலைகளுக்குத் தீர்வு கிடைக்கும்னுதான் அந்த வேலையை விட்டேன். தெரியாத வேலையில சேர்ந்து செருப்படி பட்டேன். இப்போ அதையும் விட்டுட்டு கஷ்டப்படறேன். கோயில் கோயிலா போனேன். கவலை தீரலை. நாள் முழுக்க தியானத்துலயே உட்கார்ந்து பார்த்தேன். பிரயோஜனம் இல்லை. இப்போ வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில போராடிட்டு இருக்கேன்டா.

டேய் சேகர். நீ ஏற்கெனவே தினமும் தியானம் பண்ணிட்டுதான்டா இருந்தே, என்றைக்கு அந்த வேலைய விட்டியோ, அப்பவே தியானத்தையும் விட்டுட்ட.

என்னடா சொல்றே குணா?

நீ பார்த்த வேலைய ஒழுங்கா செஞ்சிட்டிருந்தியே, அதுதான்டா உண்மையான தியானம்! உண்மைய சொல்லனும்னா, உன்னைவிட பெரிய பெரிய கவலைகள் எனக்கும் இருக்குடா. கடமையிலயே கவனமா இருந்துதான் அதையெல்லாம் சமாளிச்சேன். வேலைய ஒழுங்கா பார்த்தா போதும். உன் கவலைகள் தானா தீர்ந்துடும்.

குணாளனை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதான் சேகர்.

இதோ பாரு சேகர். இந்த உலகத்துல கவலை இல்லாத மனுஷனே இல்லை. உழைப்புதான்டா கடவுள் கொடுத்த வரம். உழைப்பு மட்டும் இல்லேன்னா, எல்லாருமே பைத்தியம் பிடிச்சு அலைவாங்க. உன்னோட வேலை இன்னும் காலியாதான் இருக்கு. நீ மறுபடியும் வர்ற மாதிரி இருந்தா உன்னை முதலாளி கூட்டிட்டு வரச்சொன்னாரு. அதான் வந்தேன் சேகர்!

இதுவரைக்கும் ஈடுபாடு இல்லாம வேலைய பார்த்தே. போனது போகட்டும். இனிமே ஈடுபாட்டோடு வேலைய பாரு. அதுக்கு மேலயாடா கடவுளும் தியானமும்!

செய்யும் தொழிலே தெய்வம். அதுதான் தியானம்

***

ஆசனம்

நாபி ஆசனம்

பெயர் விளக்கம்

நாபிக்கமலமாகிய தொப்புள் பகுதியை தரையில் பதியவைத்து குப்புறப்படுத்துச் செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு நாபி ஆசனம் என்று பெயர்.

செய்முறை

விரிப்பின் மீது குப்புறப்படுத்துக்கொள்ளவும்.

கைகள் இரண்டையும் மடக்கி, தலைக்குப் பின்புறமாக விரல்களைக் கோர்த்தபடி வைத்துக்கொள்ளவும்.

பின்னர் கால்களை மேலே தூக்கியபடி முன்னும் பின்னுமாக ஆடவும்.

பிறகு கைகளை எடுத்து நெற்றிக்கு அடியில் மடக்கிவைத்து ஓய்வு எடுக்கவும்.

இது ஓய்வு அல்ல. இதில் ஒரு ஆசனம் உள்ளது. முதலைபோல் உடலைக் கிடத்திச் செய்வதால், இது மகராசனம் எனப்படுகிறது.

பலன்கள்

அடிவயிறு அழுத்தப்படுவதால், ஜீரண உறுப்புகள் பிசையப்பட்டு சுரப்பு நீர்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் உணவு நன்கு செரிமானம் ஆகிறது. மலச்சிக்கல் தீருகிறது. தொப்பை குறைகிறது.

கணையச் சுரப்பி தூண்டப்படுவதால் இன்சுலின் சுரந்து சர்க்கரை நோய் குணமாகிறது.

காணொளி: அக்ஷயா
புகைப்படம் : சன்மதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com