ஆசனம் 48. உஷ்ட்ராசனக் கிரியா

இரண்டு உள்ளங்கைகளையும் முழங்கால்களுக்கு அருகில் வைத்து, முதுகை ஒட்டகம்போல உயர்த்திக்கொண்டு

அஷ்டாங்கயோகம் – சமாதி

யோக நீதிக் கதை

காத்திருந்த கண்கள்

என்னோட ஆபீஸ் வடபழனியில. என்னோட ஆத்ம நண்பன் திலீபோட ஆபீஸ் போரூர்ல. எங்க ரெண்டு பேரு வீடும் ஆலப்பாக்கத்துல. அதனால, அவனும் நானும் ஆபீஸ் முடிஞ்ச பிறகு வளசரவாக்கம் அகத்தீசுவரர் கோயில்லதான் மீட் பண்ணிக்குவோம்.

திலீப்புக்கு சீக்கிரமே ஆபீஸ் முடியறதால முன்கூட்டியே வந்துடுவான். அகத்தீசுவரர் கோயில்ல எனக்காகக் காத்திருப்பான்.

சாமி கும்பிடமாட்டான். நடக்கறது நடந்தே தீரும்டா, நான் எதுக்கும் தயாரா இருக்கேன்டா. நான் நல்லது செஞ்சிருந்தா நல்லது கிடைக்கட்டும்; கெட்டது செஞ்சிருந்தா கெட்டது கிடைக்கட்டும். எது கிடைச்சாலும் ஏத்துக்கறதுக்கு நான் தாயாரா இருக்கேன்டா. கோயிலுக்குள்ள போயி அதைக் கொடு, இதைக் கொடுன்னு கேட்கறது பிடிக்காது. வெளிப் பிராகாரத்துல புல்வெளியும் பெஞ்சும் இருக்கறதுனால, உனக்காக உள்ள வந்து உட்கார்றேன். இல்லேன்னா, வர்றவரைக்கும் வெளிய காத்திருப்பேன்டா சுரேஷ் என்றான் என்னிடம்.

நம்பிக்கை இல்லாதவங்களை வற்புறுத்தக் கூடாது என்று திலீப்பை விட்டுட்டேன்.

அன்றைக்கு எங்கள் ஆபீசுக்கு கொல்கத்தாவுல இருந்து சீனியர் மேனேஜர் வந்திருந்ததால அவரோட மீட்டிங் ஆகிப்போச்சு. அதனால, திலீப்பை வீட்டுக்குப் போகச் சொன்னேன். அவனோ, பரவாயில்ல, நான் கோயில்லயே வெயிட் பண்றேன்னு சொல்லிட்டான்.

ஏன்னா, ரெண்டு பேரும் பேசி முடிச்சதுக்கு அப்பறம் பக்கத்துல இருக்க ஒரு ஹோட்டல் டிபனும் காபியும் சாப்பிட்டுட்டுத்தான் வீட்டுக்குப் போவோம்.

அவனுக்கு அழகான பெண்களைப் பார்க்கறது பிடிக்கும். ராத்திரியாகும் போதுதான் அழகழகான பொண்ணுங்க கோயிலுக்கு வருவாங்க. சரி, அதுக்காகவாச்சும் உட்கார்ந்திருக்கட்டுமே என்று நான் ஓகே சொல்லிட்டேன்.

மீட்டிங் முடிஞ்சு ராத்திரி எட்டரை மணிக்குதான் என்னால கோயிலுக்கு போக முடிஞ்சுது. ஆனா அங்க எனக்குப் பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது!

நண்பன் திலீப், நெத்தியில திருநீறும் குங்குமமும் வெச்சிருந்தான்!

அவனா பூசியிருக்கமாட்டான். யாராவது குடுத்து, அதை மறுக்காம வாங்கி பூசியிருப்பான்னு நெனச்சேன்.

நாங்க வழக்கமா உக்கார்ற எடத்துக்கு பக்கத்துல ஒரு தாத்தா உட்கார்ந்திட்டே இருப்பாரு. நான் போன நேரம், திலீப் அவர்கிட்ட, தாத்தா வரட்டுமா என்று சொல்லிவிட்டு அவர் காலைத் தொட்டு ஆசி வாங்கிட்டுருந்தான்.

நான் அவசர அவசரமாக சாமி கும்பிட்டு வந்ததும், இருவரும் வெளியே கிளம்பினோம். எப்போதும் இல்லாதவகையில், என் கைகளை அவன் கோர்த்துக்கொண்டான்.

டேய் மச்சான், அந்த தாத்தாவோட ஸ்டோரி தெரியுமா. ச்சே, பயங்கரம்டா என்றான்.

அப்படி என்னடா ஸ்டோரி…

வா ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்

சில்லி பரோட்டா ஆர்டர் செய்தான். அதுதான் லேட்டாக வரும்.

திலீப் ஆரம்பித்தான்.

நான் அந்தத் தாத்தாகிட்ட சும்மாதான்டா பேச்சு கொடுத்தேன். என்ன தாத்தா, ரொம்ப வருஷமா பார்க்கறோம். தெனமும் இங்க வந்து மணிக்கணக்கா உட்கார்ந்துட்டு போறீங்க. பனி, மழைன்னுகூட பாக்கறதில்ல. அப்படி இந்தக் கோயில்ல என்னதான் தாத்தா இருக்குன்னு கேட்டேன்.

என்னடா சொன்னாருன்னு…

திலீப் சொல்ல முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டான்.

நெஜமாவே அழறியாடா…

எல்லாத்தையுமே விளையாட்டா நினைக்காதடா என்று சொல்லிவிட்டு தாத்தாவின் கதையை தொடர்ந்தான்.

அந்தக் கோயில் தாத்தா சொன்னது இது -

என் பேரு சிவசங்கரன் தம்பி. என்னோட பால்ய வயசு நண்பனோட பேரு ஹரிகிருஷ்ணன்.

நாங்க ரெண்டு பேரும் ஒரே ஏரியாவுல எதிர் எதிர் வீட்டுல இருந்தோம். ரெண்டு பேர் குடும்பமும் அந்நியோன்யமா இருந்தோம். நானும் ஹரிகிருஷ்ணனும் ரொம்ப குளோசு.

சின்ன வயசுல எப்படி இருந்தோமோ அதே மாதிரிதான் காலேஜ் படிக்கும்போதும் இருந்தோம். நாங்க ரெண்டுபேரும் எப்பவும் காலைல எழுந்திரிச்சி வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற வயக்காட்டுப் பக்கம் போய் காலைக்கடன்களை முடிச்சிட்டு, நாட்டு நடப்புகளை பேசிக்கிட்டே வீட்டுக்கு திரும்பி வருவோம்.

எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி புள்ளகுட்டின்னு ஆன பிறகும் இந்தப் பழக்கம் எங்கள விட்டுப் போகல.

ரிடையர் ஆகி உட்கார்ந்த பிறகும்கூட, ஒண்ணா வெளிய போயிட்டு வீட்டுக்கு வருவோம். வரும்போது, வழியில கெடைக்கிற மூலிகை இலைகள், பிரண்டைத் தண்டு, பூக்களை பறிச்சிக்கிட்டு வருவோம்.

சின்ன வயசுல இருந்து எங்கள ஒண்ணா பாக்கறவங்க எல்லாரும், என்னடா எப்பப் பார்த்தாலும், புருஷன் பொண்டாட்டி மாதிரியே சுத்திட்டு இருக்கீங்களேன்னுதான் கேட்பாங்க.

இந்தக் கோயிலுக்கு நானும் அவனும் பத்து வருஷமா ஒண்ணா வந்துகிட்டு இருந்தோம். எனக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் கெடையாது. என் நம்பிக்கை எல்லாம் என் நண்பன் ஹரிகிருஷ்ணன்தான்.

அப்பன்னா, உங்க நண்பர் ஹரிகிருஷ்ணன்…

சொல்றேன் தம்பி. என் குடும்பத்துல அப்போ ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள். சின்ன வயசில இருந்தே ஏதாச்சும் சோதனை வந்திட்டேதான் இருக்கும். என்னோட கஷ்டத்தை எல்லாம் அவன்கிட்டதான் வந்து சொல்லுவேன். அவன், கடவுள்கிட்ட முறையிடுடான்னு சொல்லுவான். எனக்கு அதுல நம்பிக்கை இல்லை. நீ சொல்ற ஆறுதலைக்கூட உன்னோட கடவுள் சொல்லவில்லையே. உன்கிட்ட சொன்னா போதும்னு எல்லாத்தையும் சொல்லுவேன். அத்தனைக்கும் நிதானமா ஆறுதல் சொல்லுவான். தைரியமூட்மூவான், நம்பிக்கையளிப்பான்.

அப்படி உங்களுக்கு என்ன பிரச்னை தாத்தா?

என் பொண்டாட்டிக்கு கிட்னி பெயிலியர் ஆயிடுச்சு. என் பொண்ணு அவ புருஷனோட வாழாம புள்ளைங்களோட வந்து என் வீட்டுல உட்கார்ந்துட்டா. என் பையனுக்கோ பிள்ளை இல்லை. அவன் பொண்டாட்டி அவனோட கோச்சிக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா!

பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடனால வீடு ஏலத்துக்கு வந்துடுச்சு. இதெல்லாம் தாங்கிக்க முடியாம எனக்கு பிரஷ்ஷர் அதிகமாகியிடுச்சு!

தெனமும் நடக்கிற ஒவ்வொரு கஷ்டத்தையும் ஹரிகிருஷ்ணன்கிட்டதான் சொல்லிட்டு இருந்தேன். சிவசங்கரா, எனக்குத் தெரிஞ்சு நீ யாருக்கும் ஒரு தீங்கும் செஞ்சதில்ல. தைரியமா இருன்னு சொல்லிட்டே இருப்பான். அவன்கிட்ட சொல்லிட்டு வந்தாபோதும். அன்னிக்கு ராத்திரி நிம்மதியா தூங்கிடுவேன். ஒருநாள் ஹரிகிருஷ்ணனோட பொண்டாட்டி செத்துப்போயிட்டாங்க. அவன் பையன் கல்யாணம் பண்ணிட்டு அமெரிக்காவுக்கு போயிட்டான். அவன் எத்தனையோ தடவ அமெரிக்காவுக்கு வாங்கப்பான்னு கூப்பிட்டு பார்த்துட்டான். நண்பன் சிவராமனை விட்டுட்டு எங்கயும் வரமாட்டேன். அமெரிக்காவும் வேண்டாம், ஆப்பிரிக்காவும் வேண்டாம்னு சொல்லிட்டான்.

அவனுக்கு, ஒரு ஆயாம்மா சமைச்சுப் போட்டாங்க. அதைச் சாப்பிட்டுட்டு, வீடு உண்டு இந்தக் கோயில் உண்டுன்னு நிம்மதியா இருந்திட்டிருந்தான் தம்பி. அவனுக்கு நான்தான் கதி. எனக்கு அவன்தான் கதி. என்கிட்ட மட்டும்தான் பேசுவான். வேற யாருகிட்டயும் அநாவசியமாப் பேசமாட்டான். திடீர்னு அதுக்கும் ஒருநாள் சோதனை வந்துச்சு தம்பி.

தாத்தா முகத்தை கூர்ந்து பார்த்தான் திலீப். அவர் கண்களில் இருந்து நீர் வழிந்தது. பேச முடியாமல் மூச்சு வாங்கினார்.

திலீப் ஆறுதலோடு தாத்தாவின் கையைப் பிடித்துத் தடவினான்.

தழுதழுத்த குரலோடு பேச ஆரம்பித்தார் தாத்தா.

நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருந்தோம். யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.

என்னாச்சு தாத்தா?

அமெரிக்காவுல ஹரிகிருஷ்ணனோட பையன் இருக்கறதா சொன்னேனே. அவன் பொண்ணுக்கு நாலு வயசு ஆனதும் ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறதால, பொண்ண பாத்துக்க ஆள் இல்ல. அதனால, அப்பாவ அமெரிக்காவுக்கு வரச் சொல்லிட்டான்.

கேட்டுக்கொண்டிருந்த திலீப்புக்கே நெஞ்சு அடைத்தது.

ஹரிகிருஷ்ணன் முடியாதுன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்திருக்கான். பையன் சண்டை போட்டிருக்கான். ஒரே பையன். கடைசிக் காலத்துல தன்னோட காரியத்தை அவன்தான கவனிக்கனும். அதனால, அரை மனசோட ஒத்துக்கிட்டான்.

அதைக் கேட்டதுல இருந்து என்னால தாங்கிக்க முடியல. நான் செத்த பிறகு நீ எங்க வேணாலும் போடா. உன்னை விட்டுட்டு என்னால இருக்கமுடியாதுடா ஹரின்னு அவனை கட்டிப் பிடிச்சி அழுதேன்.

இல்லடா, என்னை மன்னிச்சுடு. நான் போய்த்தான் ஆகனும். நான் உன்னை தனியா விட்டுட்டு போகல, இந்த அகத்தீஸ்வரன்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போறேன். அவன்கிட்ட உன்னை பத்தி சொல்லியிருக்கேன். நீ என்கிட்ட உன் கஷ்டத்த சொன்ன மாதிரி, இனி அவன்கிட்ட சொல்லிட்டுப் போடா. என்கிட்ட சொன்னப்போ என்னால ஆறுதல்தான் சொல்ல முடிஞ்சது. ஆனா அகத்தீஸ்வரன் உனக்கு தீர்வே தருவான். இது சத்தியம்னு சொல்லிட்டு கெளம்பிட்டான்.

எப்போ தாத்தா?

பதில் சொல்லமுடியாமல் தாத்தா கண்ணீர்விட்டுப் பலமாக அழுதார்.

ஹரிகிருஷ்ணன் அமெரிக்காவுக்கு போன நாள்ல இருந்து தெனமும் இந்தக் கோயிலுக்கு வந்து, அவன் சொன்ன மாதிரி அகத்தீஸ்வரனை ஹரிகிருஷ்ணனா நினைச்சிட்டு என் கஷ்டத்த சொல்லுவேன். என்ன ஆச்சரியம் தெரியுமா தம்பி, உன் பேரு என்ன?

திலீப்.

நல்லா கேட்டுக்கோ, அறுவது வயசுல ரெண்டு பேரும் ரிடையர்டு ஆனோம். பத்து வருஷமா இந்தக் கோயிலுக்கு வந்துட்டு இருந்தோம். எழுபது வயசுல ஹரிகிருஷ்ணன் அமெரிக்காவுக்கு போயிட்டான். எங்களுக்கு இப்போ தொன்னூறு வயசாகுது. இருபது வருஷமா அங்கதான் இருக்கான்.

ரொம்ப ஆச்சரியம் தாத்தா...

ஆமாம்ப்பா. அதுல என்ன பெரிய ஆச்சரியம் தெரியுமா, நான் முறையிட முறையிட, என் குடும்பத்துல இருந்த கஷ்டங்கள் அத்தனையும் ஒவ்வொன்னா விலக ஆரம்பிச்சிச்சு. இயற்கை வைத்தியத்துக்கு மாறினதால, என்னோட மனைவிக்கு கிட்னி சரியாய்டுச்சி. என் பொண்ணு திடீர்னு கெளம்பி அவ புருஷன் வீட்டுக்கு போயிட்டா. அதே சமயம், என்னோட மருமகளை அவங்க வீட்டுக்காரங்களே கூட்டிட்டு வந்து சமாதானப்படுத்தி விட்டுட்டுப் போனாங்க. அடுத்த வருஷமே என் மகனுக்கு பொண்ணு பொறந்துட்டா! எனக்கு இருந்த பிரஷ்ஷரும் நார்மலாயிடுச்சு. ஒரு காலி மனைய வித்து கடனை எல்லாம் தீர்த்துட்டேன்.

இப்போ, இந்த அகத்தீஸ்வரர் புண்ணியத்துல எனக்கு எந்தக் குறையும் இல்லை. நண்பன் ஹரிகிருஷ்ணன் பக்கத்துல இல்லாத குறைதான். அவன் அமெரிக்காவுக்கு போன பிறகு, இருபது வருஷமா தினமும் நான் மட்டும் ஒத்தையா வந்து அகத்தீஸ்வரரைக் கும்பிட்டுட்டு, இதோ ஹரிகிருஷ்ணன் உட்கார்ந்திருந்த பெஞ்சுல வந்து நிம்மதியா உட்கார்ந்துடுவேன் தம்பி. திக்கற்றவங்களுக்கு தெய்வம்தான் துணை. நல்லா கும்பிட்டுக்கோன்னு சொன்னாருடா என்று சுரேஷிடம் தாத்தாவின் கதையை திலீப் சொல்லி முடித்தான்

என்னால அதுக்கு மேல சும்மா வெளிய உக்கார முடியல. எழுந்து கோயிலுக்குள்ள போய் சாமிய கும்பிட்டுட்டு வந்தேன். அந்த நேரத்துலதான் நீயும் வந்தே. நீ சொன்னப்ப நான் நம்பலைடா. ஆனா, இப்ப எனக்கும் கடவுள் நம்பிக்கை வந்துடுச்சுடா என்றபோது அவனது மொபைல் ஒலித்தது.

ஆன் செய்து பேசினான். அப்படியா தாத்தா? சந்தோஷம். நீங்க ஜெயிச்சிட்டீங்க தாத்தா. இனிமே உங்களையும் உங்க ஃப்ரெண்ட் ஹரிகிருஷ்ணனையும் யாரும் பிரிக்க முடியாது. உங்க நட்பு ஜெயிச்சிடுச்சு. உங்களை மாதிரியே எனக்கும் ஒரு க்ளோஸ் ப்ஃரெண்டு இருக்கான் என்றபடி என்னைக் கட்டித் தழுவிக்கொண்டான் திலீப்!

என்னன்னு சொல்லுடா. போன்ல யாரு…

கோயில்ல பார்த்த அந்த தாத்தான்டா. அவரோட அமெரிக்கா ஃபிரெண்டு ஹரிகிருஷ்ணன் சென்னைக்கே நிரந்தரமா திரும்பி வரப்போறாராம். அவங்க ரெண்டு பேரும் ஜோடியா மறுபடியும் கோயிலுக்கு வரப்போறாங்களாம் என்று சொன்னபோது, என்னை அறியாமல் நானும் திலீபை கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினேன்!

***

ஆசனம்

உஷ்ட்ராசனக் கிரியா (ஒட்டகாசனக் கிரியா)

செய்முறை

மண்டியிட்டு வஜ்ராசனத்தில் அமரவும்.

பின்னர் இரண்டு முழங்கால்களிலும் நிற்கவும்.

பின்னர் இரண்டு உள்ளங்கைகளையும் முழங்கால்களுக்கு அருகில் வைத்து, முதுகை ஒட்டகம்போல உயர்த்திக்கொண்டு முகத்தைக் கவிழ்த்து இரண்டு கைகளுக்குள்ளும் இருக்கும்படியாக வைத்துக்கொள்ளவும். தாடையால் தொண்டைப் பகுதி மூடப்பட்டிருப்பதுபோல அழுத்தமாக வைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

சில சுவாசங்கள் எடுக்கவும். பின்னர் நிமிரவும்.
 

பின்னர் கைகள் இரண்டையும் பின்பக்கமாகக் கொண்டுசென்று உள்ளங்கைகளை குதிகால்களின் மீது மாற்றி ஊன்றி வைத்துக்கொள்ளவும்.

அதாவது, வலது உள்ளங்கையை இடது குதிகாலிலும், இடது கையை வலது குதிகாலிலும் வைத்து மல்லார்ந்து இருக்கவும்.

முகத்தை அன்னார்ந்து பார்த்து வைக்கவும்.

ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்கவும்.

பின்னர் கைகளை உள்பக்கமாகக் கொண்டுவந்து ஆசனத்தைக் கலைத்து வஜ்ராசனத்தில் அமரவும்.

இதை திரும்பத் திரும்பச் செய்யவும்.

பலன்கள்

உடல் பின்பக்கமாக வளைக்கப்படுவதால் மார்பும் வயிறும் விரிவடையும்.

பின்னந்தலைக்கு ரத்த ஓட்டம் கிடைப்பதால், மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. முதுகுத் தண்டுவடம் வழியாகச் செல்லும் நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறும்.

கைகளை கால்களில் மாற்றி வைப்பதால், வயிற்றுத் தசைகள் வளைக்கப்பட்டு, ஜீரணக் கருவிகள் நன்றாகத் திருக்கி முறுக்கப்பட்டு, ஜீரண சுரப்பிகள் மிகுதியாகச் சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் வராது.

நுரையீரல்கள் விரிவடைந்து ஏராளமான காற்றை உள்ளிழுக்கமுடியும்.

கைகளும் பலம்பெறும்.

***

காணொளி: அருள்ஜோதி
புகைப்படம்: ப்ரியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com