ஆசனம் 47. நாபி ஆசனக் கிரியா

நாபி ஆசனத்தில் சிறு மாற்றத்துடன் செய்யக்கூடிய ஆசனம் என்பதால் இது நாபி ஆசனக் கிரியா என்று அழைக்கப்படுகிறது.

அஷ்டாங்க யோகம் - தியானம்

யோக நீதிக் கதைகள்

கடவுளுக்குக் கண் உண்டா?

அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் சீஃப் சூப்பிரன்டென்ட் மாதவன், மகா வம்புக்காரர். யாரிடம் எப்படி வம்பு இழுப்பது என்றே எப்போதும் வரிந்துகட்டிக்கொண்டு அலைபவர். அவரது கண்கள் இருக்கையில் இருந்தபடியே. யாரிடம் என்ன குறை காணலாம் என்று அலைபாய்ந்துகொண்டிருக்கும்.

குறிப்பாக எளியவர்களை, தாழ்ந்தவர்களை, பலவீனமானவர்களை மற்றவர்கள் முன்னால் எள்ளி நகையாடி, மனிதாபிமானத்தின் எதிரியாக வாழ்ந்தார் சூப்பிரன்டென்ட் மாதவன்.

அலுவலக பியூன் லோகு சிறந்த பெருமாள் பக்தன்.

அன்று புரட்டாசி முதல்வாரம். காலையிலிருந்து சாப்பிடாமல் விரதம் அனுஷ்டிப்பவன். பசி மயக்கத்தில் லெட்ஜரை தலைகீழாகப் பிடித்துக்கொண்டிருந்தான். லெட்ஜரின் முதுகுப் பகுதி மேலேயும் திறந்த பகுதி கீழேயும் இருந்தது.

ஏன்டா அறிவுகெட்ட முண்டமே, சோறு துன்றியா வேற எதாவது துன்றியா? லெட்ஜரை தலைகீழா பிடிச்சிருக்கியே?

சூப்பிரன்டென்ட் மாதவன், எல்லார் மத்தியிலும் சத்தம்போட்டு லோகுவை அசிங்கப்படுத்தினார்.

லோகு தவறை உணர்ந்து சாரி சார் என்றபடி லெட்ஜரை நேராகப் பிடித்துக்கொண்டான்.

ஆனால், மாதவன் விடவில்லை.

பண்றதை எல்லாம் பண்ணிட வேண்டியது. கேட்டா சாரி சார்னு ஈஸியாச் சொல்லிட வேண்டியது. என்னடா வழக்கம் இதெல்லாம், எங்க இருந்துடா கத்துக்கிட்டீங்க? எப்படா மாறப்போறீங்க? என்றார் மாதவன்.

சாரி சார். இன்னிக்கு கொஞ்சம் மனசு சரியில்லை. அதனால, அவசரத்துல லெட்ஜரை தலைகீழா தூக்கிட்டு வந்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க சார் என்று சொல்லியும்கூட அவனை விடவில்லை.

ஓ, உனக்கு மனசு சரியில்லையாக்கும்? எனக்கும்தான் மனசு சரியில்லை. தலையைக் கவுத்தி டேபிள்லயே படுத்துக்கட்டுமாடா? என்றார் சத்தம் போட்டு.

அதிகாரி என்று இருந்தால், அவருக்கென்று ஜால்ரா தட்டுவோர் இல்லாமலா இருப்பார்கள்!

கெக்கக்கே பிக்கக்கே என்று அந்த ஜால்ராக்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒனக்குப் புள்ளை இருக்காடா மாதவா?

என்ன சார் இப்படிக் கேட்கறீங்க?

அதோட பர்த் டே தெரியுமாடா?

எதுக்கு சார் இப்ப அதெல்லாம்?

தெரியுமா தெரியாதா. அதச் சொல்லுடா மொதல்ல.

எதற்காக இப்படி எல்லாம் கேட்கிறார் என்றுதான் லோகு யோசித்துக்கொண்டிருந்தான்.

மறுபடியும் சத்தம் போட்டுச் சிரித்தார் மாதவன்.

முழிக்கிறான் பாருங்க மண்டு. பிள்ளையோட பர்த் டேயை கேட்டா யோசிக்கறான். உனக்கு தெரியலன்னா விடுடா, நான் சொல்றேன். போன வருஷம் நவம்பர் பன்னெண்டு, மத்தியானம் ஒரு மணிக்கு. சரியாடா? என்னடா முழிக்கற? இப்போதானடா ஜனவரி பொறந்திருக்கு. சரியா மூணு மாசம் ஆகுது. சரியா தப்பான்னு அவனையே கேளுங்க என்ற சக அலுவலர்களைப் பார்த்து எகத்தாளமாகக் கையை ஆட்டிக் காட்டினார் மாதவன்.

லோகுக்கு அழுகை வந்துவிட்டது.

அவனது அப்பாவித்தனத்தைப் பார்த்து அலுவலகமே எதிரொலிக்கச் சிரித்தார் மாதவன். அவரது பார்வையில், குறைந்த சம்பளம் வாங்கும் அலுவலகர்கள் எவருமே கேவலமாகத் தெரிவார்கள்.

சொல்றா, நான் சொல்றது சரிதான. ஒனக்கு புள்ள பொறந்து மூணு மாசம் ஆவுது. சரியா?

ஆமாம் சார். ஆனா, அது எதுக்கு இங்க சார்…

தூக்கத்துல தட்டி எழுப்பிக் கேட்டாகூட, பிள்ளையோட பொறந்த தேதியை டான்னு சொல்லணுன்டா. அவன்தான்டா சரியான தகப்பன். நீ என்னடான்னா முழிச்சிட்டு நிக்கறே.

மாதவன் போல சுயநல ஜாதிக்கார அலுவலர்கள், தங்கள் பங்குக்கும் லோகுவை சீண்டிப் பார்த்தார்கள்.

என்ன லோகு, சூப்பிரன்டென்ட் சார் என்னன்னமோல்லாம் சொல்றாரு. என்னடா என்றபடி, லோகுவை ஓரக்கண்ணால் பார்த்து கண்ணடித்தபடி கேட்டார் சீஃப் அக்கவுன்ட்ன்ட் அய்யாவு.

கையில் இருந்த லெட்ஜரை அப்படியே எடுத்துக்கொண்டு போய் அவர் தலையில் ஓங்கி அடிக்கலாம் போலிருந்தது லோகுவுக்கு.

சார், என் குழந்தைக்கு ரெண்டு நாளா ஜுரம் சார். நான் அந்தக் கவலைல இருந்தேன். லெட்ஜரை தெரியாம தலைகீழா பிடிச்சிட்டேன். தப்புன்னு தெரிஞ்சி சாரி கேட்டுட்டேன். அதுக்குப்போய் எதுக்கு என் குழந்தை விஷயத்தை எடுக்கறீங்க.

எதை சொன்னாலும் தப்பாவே எடுத்துக்கிட்டா நான் என்னடா பண்றது லோகு. ஒனக்கு புள்ள பொறந்ததுமே நீ பர்மிஷன் சொல்லிட்டு போனியே. அந்த நாளு எனக்கு நல்லா நினைவு இருக்குடா. உன் வீட்டுக் காரியம் மட்டும் இல்லடா லோகு. நம்ம ஆபீஸ்ல யாரு எதுக்கு லீவு போட்டாலும், அந்த லீவு அப்பவே என மனசுல ஆழமா பதிஞ்சிடும்டா லோகு.

நீங்க சொல்றது எனக்கு புரியலை சார்.

புரியும்படி சொல்லணுமா? உன் கொழந்தைய நீ தலைகீழா தூக்கிப் பிடிப்பியா? கழுத்து சுளுக்கிக்கிடாதா? லெட்ஜரும் கணக்கு வழக்குகளை சுமந்துட்டு இருக்கற புள்ள மாதிரிதான்டா. அது சீக்கிரமா பிஞ்சிபோயிடாது. அதுக்குதான் உன் புள்ளைய உதாரணம் காட்டினேன். அப்பத்தான்டா உறைக்கும், அக்கரை வரும். மறுபடியும் இந்தத் தப்பை செய்யமாட்ட. எனக்கு நேச்சராவே மெமரி பவர் கொஞ்சம் அதிகம். அதனால, உன் புள்ளையோட பர்த் டேயை ஞாபகம் வெச்சிக் கேட்டேன். சரி, போய் வேலைய பாருடா என்றார் மாதவன்.

அத்தனை பேர் முன்னாலும் அவர் தன்னை அசிங்கப்படுத்திவிட்டு பிறகு சமாதானப்படுத்தியது அறுவறுப்பாக இருந்தது லோகுவுக்கு. உள்ளுக்குள் குமுறினான்.

தனது இருக்கையில் இருந்தபடியே கையை அசைத்து ஆட்டி, என்னடா ஆச்சு உனக்கு? என்று கத்தினார் மாதவன்.

அந்தப் பக்கமாக நடந்து சென்ற செக்யூரிட்டி, லோகுவின் முதுகில் தட்டி, என்னப்பா யோசனை, சூப்பிரென்ட் ஏதோ சொல்றாரு பாரு என்றபடி கடந்துபோனார்.

லோகு சுயநினைவை இழக்கவில்லை.

மாதவன் தலைக்கு மேலே சுவற்றில் இருந்த அலமேலுமங்கை உடனுறை ஸ்ரீனிவாசப் பெருமாளை உற்றுப் பார்த்து முறையிட்டுக்கொண்டே நின்றான். பிறகு நடையைக் கட்டினான்.

காலையில் வேலைக்கு வந்ததுமே, பெருமாள் படத்தை பார்த்துவிட்டுத்தான் இருக்கையில் அமர்வது வழக்கம் லோகுவின் வழக்கம்.

*

புரட்டாசி இரண்டாவது வாரம்.

அலுவலகத்துக்கு திடீரென்று விஜிலென்ஸ் ஆபீஸர் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்திருந்தார்.

அவர், அலுவலக நிர்வாகத்தில் நடக்கும் சீர்கேடுகளையும் விசாரிக்கக் கூடுதல் அதிகாரம் பெற்றுக்கொண்டு வந்திருந்தார்.

அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரையும் தனித்தனியே தனது அறைக்குள் அழைத்து, விரிவாக விசாரித்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்.

சீஃப் அக்கவுன்டன்டில் இருந்து செக்யூரிட்டி வரை அத்தனை பேரையும் பார்த்து, அவர்களுடைய மனக்குறைகளை தனித் தனியே கேட்டறிந்தார்.

அவர் இயல்பிலேயே மிகச் சிறந்த மனிதாபிமானியாகக் காட்சியளித்தார். நெற்றி நிறைய பெருமாள் நாமம் இட்டிருந்தார். கை விரலில் திருப்பதி பெருமாள் உருவமிட்ட மோதிரமும் அணிந்திருந்தார்.

*

புரட்டாசி மூன்றாவது வாரம்.

விஜிலென்ஸ் ஆபீஸர் வந்து சென்ற அடுத்த வாரமே, சீஃப் அக்கவுன்டன்டு மாதவனுக்கு கட்டாய இடமாற்றல் உத்தரவு வந்து சேர்ந்தது!

அதிச்சியில் உறைந்துபோய்விட்டார் மாதவன்.

பெருமாளே, நான் என்ன தப்பு பண்ணினேன்? என் வேலையை நான் சரியாதானே செஞ்சிட்டு வந்தேன். எதுக்கு எனக்கு இப்படி ஒரு தண்டனை குடுத்தே? அதுவும் சட்டீஸ்கருக்கு என்று கண்கள் பனிக்கக் கேட்டார்.

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும்!

*

புரட்டாசி நான்காவது வாரம்.

சட்டீஸ்கர் மாவட்டம், ரெய்ப்பூர் அலுவலகத்துக்கு மாற்றலாகிப்போய், சோகத்தோடு உட்கார்ந்தார் மாதவன்.

அங்கும் அவரது வாயாடல் தொடர ஆரம்பித்தது. ஆனால், அவரது வார்த்தைகள் எதுவும் அங்கு எடுபடவில்லை.

எல்லாமே விழலுக்கு இரைத்த நீராகிப்போனது.

நடுத்தர ஊழியர்கள், கீழ்நிலைப் பணியாளர்கள் அனைவரையும் வாய்க்கு வந்தபடி தமிழிலேயே திட்டிக்கொண்டிருந்தார். யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஆங்கிலத்திலும் திட்டிப் பார்த்தார். அப்போதும் யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

காரணம், அங்கு யாருக்குமே ஆங்கிலமும் தெரியாது; தமிழும் தெரியாது! தெரிந்ததெல்லாம் இந்தி ஒன்றே.

ஆனால், மாதவனுக்கோ இந்தி தெரியாது!

அதுமட்டுமல்ல, அங்கு வேலை பார்க்கும் அனைவரும் அவரது பொறுமையைச் சோதிப்பதுபோலவே நடந்துகொண்டார்கள். ஆத்திரமடைந்த மாதவன், தலையைப் பிய்த்துக்கொண்டார்.

கோபத்தின் உச்சத்தில், சென்னையில் இருக்கும் நினைப்போடு சுவற்றைத் திரும்பிப் பார்த்தார்.

பெருமாள் படம் இல்லை. வெறும் சுவர்தான் இருந்தது.

மூன்று வாரங்களுக்கு முன், பியூன் லோகுவை அசிங்கப்படுத்தியபோது, பெருமாள் படத்தை அவன் உற்றுப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

அப்போது அந்தப் பக்கம் பாத்ரூமுக்கு வந்த ஒரு ஊழியர், மாதவனுக்கு சலாம் போட்டுவிட்டு இந்தியில் ஏதோ சொன்னார்.

மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த அட்டண்டரிடம் கேட்டார்.

“ஏன் கவலையா இருக்கீங்க. கடவுள் நாம செய்யறதை எல்லாம் பார்த்துகிட்டேதான் இருக்காரு. நாம் யாரையுமே புண்படுத்தக் கூடாது. சாந்தமா இருங்கன்னு” சொல்லிட்டுப் போறாரு சார் என்றார்.

மாதவன் முதல்முறையாக அதிர்ச்சியடைந்தார்.

அதற்குள் பாத்ரூம் போய்விட்டுத் திரும்பிய அந்த நபர், ஐயா ஒரு நிமிஷம். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். நீங்க இங்க வேலை பார்க்கறவங்களை ஒவ்வொரு நாளும் பேசற வார்த்தைகள் கடவுளுக்கே அடுக்காது சார். எனக்கு தமிழ் சரியா பேச வராதுதான். ஆனா பேசறது நல்லா புரியும். இந்த ஆபீஸ்ல நீங்க பேசற ஆபாசமான வார்த்தைகளைக் கேட்டுட்டு இருக்கறது ரெண்டு பேரு. ஒண்ணு நானு. இன்னொன்னு பெருமாள் என்று சொல்லிவிட்டு, அவர் வழியில் போய்க்கொண்டே இருந்தார்.

இரண்டாவது முறையாக அதிர்ச்சியடைந்த மாதவன், தன் செயலை நினைத்து நிலைகுலைந்துபோனார்!

பெருமாள் தன்னைப் பார்த்துக்கொண்டே இருந்து தண்டித்துவிட்டார். இனிமேல், யாரையும் எக்காரணத்தை முன்னிட்டும் புண்படுத்திப் பேசக் கூடாது என்று அப்போதே உறுதி எடுத்துக்கொண்டு இருக்கையை விட்டு எழுந்தார்.

அந்த சமயம், மொட்டைத் தலையோடு தட்டு நிறைய லட்டுப் பிரசாதத்தைக் கொண்டுவந்து நீட்டினார் ஒரு கீழ்ப் பணியாளர்!

***

ஆசனம்

நாபி ஆசனக் கிரியா

நாபி ஆசனத்தில் சிறு மாற்றத்துடன் செய்யக்கூடிய ஆசனம் என்பதால் இது நாபி ஆசனக் கிரியா என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை

  • குப்புறப் படுத்துக்கொள்ளவும்.

  • பின்னர் இரண்டு கைகளையும் தலைக்கு நேராக நீட்டி விரிப்பின் மீது வைக்கவும்.

  • பின்னர் வலது கையையும் இடது காலையும் மட்டும் உயரத் தூக்கவும்.

  • அதே நிலையில் சில சுவாசங்கள் செய்யவும்.

  • பின்னர் கை, காலை கீழே வைத்துவிட்டு, இடது கையையும், வலது காலையும் உயரத் தூக்கவும்.

  • அதே நிலையில் சில சுவாசங்கள் செய்யவும்.

  • பின்னர் கை, காலை கீழே வைத்துவிட்டு நன்றாக ஓய்வெடுக்கவும்.

  • இதைத் திரும்பத் திரும்பச் செய்யவும்.

     

பலன்கள்

  • நாபி ஆசனத்தில் கைகால்களைத் தூக்கிச் செய்யும்போது, பொதுவான முறையில் ரத்தம் மேலும் கீழும் ஓட்டம்பெறும்.

  • ஆனால், இவ்வாசனத்தில் கை கால்களுக்கு ரத்த ஓட்டம் மாறி மாறிச் செல்லும். வலது கையில் இருந்து இடது காலுக்கும், இடது கையிலிருந்து வலது காலுக்கும் ரத்தம் மாறி மாறி ஓடும்.

  • இதனால், இடுப்புப் பகுதியில் சுழற்சி முறையில் ரத்த ஓட்டம் ஏற்படுவதால், சிறுநீரகங்கள், ஆண்-பெண் குறிகளுக்கும் பெருங்குடலுக்கும் நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கிறது.

  • மலச்சிக்கல் தீர்கிறது.

  • ஆண்மை பெண்மை எழுச்சி பெறுகின்றன.


வீடியோ - பாலாஜி
புகைப்படம் - ஷன்மதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com