நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து திமுக மனு: நாளை அவசர வழக்காக விசாரணை

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என, அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு அவசர வழக்காக
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து திமுக மனு: நாளை அவசர வழக்காக விசாரணை
Updated on
1 min read
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என, அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு அவசர வழக்காக செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: கடந்த 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சட்ட விரோதமானது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை அனைவரையும் அவர்களின் விருப்பமின்றி, கூவத்தூரில் உள்ள விடுதியில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டனர்.
 
அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை முழு சுதந்திரத்துடன் பயன்படுத்த முடியவில்லை. அவர்களை முதல்வரின் ஆதரவாளர்கள் பேருந்தில் பேரவைக்கு அழைத்து வந்து, முதல்வருக்கு ஆதரவாக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்டனர்.
 
உறுப்பினர்கள் யாரும் மனசாட்சிப்படி வாக்களிக்கவில்லை. கட்டாயத்தின் பேரிலேயே வாக்களித்திருக்கின்றனர். அதிமுக உறுப்பினர்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டதாலேயே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பேரவையில் வலியுறுத்தினோம்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். திட்டமிட்டே எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார். இது ஜனநாயக மரபுக்கும், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளுக்கும் முரணானது.

இது குறித்து, தமிழக ஆளுநரிடமும் முறையிட்டிருக்கிறோம். தற்போதுள்ள அரசால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும் பேரவையில் அன்றைய தினம் நடைபெற்ற வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும்.
 
அதேபோன்று, இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது தலைமையிலான அமைச்சரவை கொள்கை ரீதியான எந்தவித முடிவுகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
 
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பு மூத்த வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம், -சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது- என அறிவிக்கக் கோரி பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை முறையீடு செய்தார்.
 
இந்த விவகாரத்தை அவசர வழக்காகவும் விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். மாலையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதால், செவ்வாய்க்கிழமை இந்த மனு அவசர வழக்காக முதலில் விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com