தமிழகத்தில் ஆளுநரால் மீண்டும் சர்ச்சை: என் கன்னத்தை ஆளுநர் தட்டியிருக்கக் கூடாது- பெண் செய்தியாளர் காட்டம்

பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரம் பல சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண்
தமிழகத்தில் ஆளுநரால் மீண்டும் சர்ச்சை: என் கன்னத்தை ஆளுநர் தட்டியிருக்கக் கூடாது- பெண் செய்தியாளர் காட்டம்
Updated on
2 min read

ஆளுநர் மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடந்துகொண்ட விதம் குறித்து பெண் நிருபர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரம் பல சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவை அடங்குவதற்குள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் செய்தியாளரின் அனுமதியின்றி அவரது கன்னத்தில் தட்டியது மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் (ராஜ்பவன்) செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். 

அப்போது பேசிய ஆளுநர், நிர்மலா தேவியின் முகத்தைக்கூட இதுவரைப் பார்த்தது இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அபத்தமானவை என்று விளக்கமளித்தார். 

தமிழக ஆளுநராகக் கடந்த அக்டோபரில் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித், முதன்முறையாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கமளிப்பதற்காகச் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று கூறிய அவர், பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்ததால் சந்தித்ததாகவும், அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறினார். 

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் போது பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை ஆளுநர் தட்டிக் கொடுத்தார். 

இது குறித்து அந்த பெண் செய்தியாளர் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் போது, நான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்குப் பதிலாக, எனது அனுமதியின்றியே அவர் கன்னத்தில் தட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பலமுறை எனது முகத்தை கழுவிவிட்டேன். இருப்பினும் அந்த உணர்வு போகவில்லை, அதிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. கோபமும் ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டது. ஆளுநர் அவர்களே... தாத்தா என்கிற முறையில் எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முறையில் நீங்கள் இதைச் செய்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் செய்தது தவறு!" என்று டுவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

பெண் செய்தியாளரிடம் ஆளுநர் நடந்துகொண்டது குறித்து அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்க பதிவில், ஆளுநரின் செயல் துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல. அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல! என்று தெரிவித்துள்ளார் 

கனிமொழி: புரோகித் என்ன தான் வயதில் பெரியவராக இருந்தாலும் தவறான நோக்கத்தில் தொடாவிட்டாலும் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவர் கன்னத்தில் தட்டியது தவறு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com