

கோவை: ரஜினியும் கமலும் தெருவுக்கு இறங்கி வந்தால் தான் உண்மை நிலை தெரியும். இப்போது அவர்கள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.
கோவையில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்த காஞ்சி விஜயேந்திரருக்கு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது உள்ளத்திலும் உணர்விலும் வலு இல்லாமல் போனது ஏன்? இதற்கு காஞ்சி சங்கர மடம் தரும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் தமிழுக்கு காஞ்சி மட விஜயேந்திரர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான் எனவும் தெரிவித்தார்.
நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, சினிமாவை விட அரசியல் கவர்ச்சியாக இருப்பதால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர்.
அரசியலுக்கு வந்த பின்னர் பொதுமக்கள் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை வைத்துதான் கூற முடியும். அதே நேரத்தில் யாரும் இன்னும் தெருவிற்கு வரவில்லை; தாழ்வாரத்தில்தான் நிற்கின்றனர். அவர்கள் மக்களோடு இணைந்தால் தான் அவர்கள் முழு அரசியல்வாதி ஆக முடியும் என்று கூறினார்.
பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள், மக்கள், அரசியல் கட்சிகள் என யார் போராடினாலும் அதை பற்றிய கவலை இந்த அரசுக்கு இல்லை எனவும், எவ்வளவு சுருட்டலாம், கொள்ளையடிக்கலாம் என்பதிலேயே அவர்கள் கவனமாக இருக்கின்றனர்.
மேலும் பாஜக ஒரு மாதிரியான கட்சி. அது செயல்படும் நிலையிலேயே இல்லை ஆனால், அவர்கள் பேச்சுக்கு மட்டும் குறையில்லை என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அமைச்சர்களுக்கு தற்போது தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு நடந்து கொள்கிறார்கள். தில்லியில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு பொம்மலாட்டம் ஆடி வருகிறார்கள். இது எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை.
உதயநிதி ஸ்டாலின் முழுமையாக அரசியலுக்கு வருவது பற்றி எனக்குத் தெரியாது. சூழ்நிலைகள் மாறும். திமுகவிற்கு தலைமையேற்க ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று துரைமுருகன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.