ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

ஒரு தலைக் காதலால் கோவையைச் சேர்ந்த இளம்பெண் தன்யாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கேரளாவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

ஒரு தலைக் காதலால் கோவையைச் சேர்ந்த இளம்பெண் தன்யாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கேரளாவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித நேயத்திற்கு எதிரான இந்த மிருகச் செயல் கண்டிக்கத்தக்கது. தன்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: -
கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த தன்யா என்ற இளம் பெண் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த ஜாகீர் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக  பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஜாகீரை தன்யாவின் பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். அத்துடன் தன்யாவுக்கு திருமண ஏற்பாடுகளையும் செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு தன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில் நேற்று தன்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜாகீர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்யாவை சரமாரியாக கத்தியால் படுகொலை செய்திருக்கிறான். தன்யாவுக்கு நடந்த கொடுமையை என்ன தான் வார்த்தைகளில் வர்ணித்தாலும் அதன் முழுமையான தீவிரத்தை உணர வைக்க முடியாது. பெற்றெடுத்து ஆசை ஆசையாய் வளர்த்து, படிக்க வைத்து, பணிக்கு அனுப்பி, திருமணம் நிச்சயித்து மகளின் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த தன்யாவின் பெற்றோருக்கு இந்த கொலை எத்தகைய அதிர்ச்சியையும், வலியையும் தந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதன் மூலம் தான், ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளின் முழுமையான பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, விழுப்புரம் வ. பாளையம் மாணவி நவீனா, கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா கடைசியாக தன்யா என இளம் பெண்கள் ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.  எந்த தாய்க்கும் பிள்ளைகளை கொல்ல மனம் வராது என்பது எப்படி உண்மையோ, அதேபோல் மனப்பூர்வமாகவும், உண்மையாகவும் காதலிக்கும் யாருக்கும் அன்பு வைத்தவரை கொலை செய்ய மனம் வராது என்பதும் உண்மை. ஆனால், காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.

இத்தகைய மோசமான கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால், ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. ஒருதலைக் காதல் தறுதலைகளால் உயிரிழந்த 6 பேரில், விருத்தாசலம் புஷ்பலதா என்பவர் மட்டும் தனசேகர் என்ற மிருகத்தால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாலியல் சீண்டலுக்குள்ளாக்கப்பட்டதால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 5 பேரும் மிகவும் கொடூரமான முறையில் வெட்டியும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தின. ஆனால்,  அரசோ தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் பாலியல் சீண்டல் கொலைகள் தொடர்கின்றன.

தமிழகத்தில் புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்.  பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பதன் மூலம் தான் இதை சாதிக்க முடியும். பெண்களின் பாதுகாப்புக்காக 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த 13 அம்சத் திட்டத்தின் நான்காவது அம்சமாக பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.  பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com