கோலாப்புரி செருப்புகளுக்கும், நாட்டுப்பற்றுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா?

இன்று இந்தியாவில் மாறி விட்ட அரசியல் சூழலில் மாட்டுத் தோலுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கோலாப்புரி செருப்புகளின் தயாரிப்பு முற்றிலுமாகக் குறைந்து விட்டது.
கோலாப்புரி செருப்புகளுக்கும், நாட்டுப்பற்றுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா?

கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற TNPL போட்டிகளின் துவக்க விழாவில் கடவுள் வாழ்த்துப் பாட என் மகள் படிக்கும் பள்ளியின் கர்நாடக இசைப்பிரிவு மாணவிகளுக்கு அழைப்பு வந்தது. ஆஹா... பிரபல திரையிசைப் பாடகர் கார்த்திக்குடன் சேர்ந்து பாடக் கிடைத்த வாய்ப்பு என்று மாணவிகளுக்கெல்லாம் ஒரே குதூகலமாகி விட்டது. அப்புறம் இந்த நிகழ்ச்சி ஸ்டார் டி.வியில் ஒளிபரப்பாகும் என்று வேறு ஒரே ஆனந்தம்... பரமானந்தம் எனும் நிலையில் இருந்தார்கள் மாணவிகளனைவரும். நடுவில் ஒரே ஒரு சின்ன கண்டீஷன்... கடவுள் வாழ்த்துப் பாடும் மாணவிகள் அனைவரும் நமது தமிழ் பாரம்பரியப் படி பட்டுப்பாவடை, சட்டை, வங்கி, ஒட்டியாணம், வளையல்கள், நெத்திச்சுட்டி, கழுத்துக்கு நெக்லஸ் எல்லாம் அணிந்து வர வேண்டும். இது ஒரு சாதாரணமான கண்டீஷன் தான் என்பதால் பெற்றோர்களான எங்களால் உடனடியாக இதை ஒப்புக் கொள்ள முடிந்தது. சென்னையில் தடுக்கி விழுந்தால் ஃபேன்ஸி ஸ்டோர்கள், கோல்டு கவரிங் செட் கடைகள், வெரைட்டி சென்ட்டர்கள் என அனேகம் உண்டே! அதனால் ஒப்புக் கொண்டோம். ஆனால் மியூசிக் டீச்சர்களுக்கு... விழாக்குழுவினரிடமிருந்து மற்றுமொரு கட்டளை வந்தது, பெற்றோர்கள் அனைவரும் அவரவர் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பவிருந்த நிலையில் மேலுமொரு உப கண்டீஷன்! அது என்னவென்றால், நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் அத்தனை மாணவிகளும் கோலாப்புரி செருப்புகள் மட்டுமே தான் அணிந்து வர வேண்டும். என்பதே அந்த கட்டளை! 

எனக்கு அது வரை இந்தி நடிகை பத்மினி கோலாப்புரியை மட்டும் தான் தெரிந்திருந்தது. கோலாப்புரி என்ற பெயரில் ஒரு பிரசித்தி பெற்ற செருப்பு பிராண்டு ஒன்று இருப்பதை அந்த நிமிடம் வரை அறிந்திராத அஞ்ஞான அம்மாவைப் பெற்றதில் என் மகளுக்கு ஒருவேளை மனக்கஷ்டங்கள் இருந்திருக்கலாம்... ஆனால் அவள் அப்படி எதுவும் சொல்லாமல் களைத்துப் போய் தூங்கி விட்டதால், எப்படியாவது அந்தச் செருப்பை குழந்தைக்கு வாங்கித் தந்தே ஆக வேண்டும் என்றொரு மன உறுதி பிறந்தது. ஒரு வேளை நம்ம ஊர் நதியா கம்மல், நதியா கொண்டை, குஷ்பூ இட்லி போல இதேதோ அந்த நடிகையின் பெயரால் அப்படி ஒரு செருப்பு வடநாட்டில் ஃபேமஸ் போல என்று நினைத்துக் கொண்டு, அந்தச் செருப்புகள் எங்கே கிடைக்கும்? என மியூசிக் டீச்சர்களிடம் விசாரித்தோம். அப்போதே நேரம் இரவு 9 மணியை நெருங்கி இருந்தது. அவர்களோ... டிசைனர் ஃபுட்வேர் கடைகளில் தேடிப் பாருங்கள் மேடம், இல்லாவிட்டால் டி.நகரில் பெரிய செருப்புக் கடைகளில் தேடிப்பாருங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்றார்கள். என்னது டி.நகர் செருப்புக் கடைகளிலா... இந்நேரம் அதெல்லாம் சாத்தியமில்லை எனச் சில பெற்றோர்கள் உஷ்ணமானாலும், ‘வேறு வழியில்லை மேடம்... பார்த்தீர்கள் இல்லையா? அவர்கள் இந்த நிகழ்ச்சிக்காக எவ்வளவு ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்கள் என்று!... தயவு செய்து அந்தச் செருப்புகளை ஏதாவது கடைகளில் தேடி வாங்கி மாணவிகளைப் போட்டுக் கொண்டு வரச்சொல்லுங்கள். நாளை மாலை வரை உங்களுக்கு நேரமிருக்கிறதே!’ என்று கூறி விட்டுச் சென்று விட்டார்கள்.

எங்களில் சிலர், சுமார் நான்கைந்து மாணவிகளின் பெற்றோர் சேர்ந்து, நேரு ஸ்டேடியத்திலிருந்து கிளம்பியது முதல் வீடு திரும்பும் வழி நெடுக கோலாப்புரி செருப்புகள் எந்தக் கடையில் கிடைக்கும் எனத் தேடிக் கொண்டே வந்தோம்... பல கடைகளிலும் இல்லை என்றோ அல்லது இப்போது வேண்டுமானால் ஆர்டர் கொடுங்கள் அடுத்த வாரம் வாங்கி உங்களுக்கு அனுப்புகிறோம் என்றோ தான் பதில் வந்து கொண்டிருந்தது. சரி இனி கோலாப்புரி செருப்புகள் கிடைக்காது, நாளை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்த அடுத்த நொடியில் அமைந்தகரையில் ஒரு செருப்புக் கடையில் அந்தச் செருப்பு இருப்பதாக மியூசிக் டீச்சர் வாட்ஸப்பில் புகைப்பட ஆதாரம் அனுப்பி இருந்தார். உடனே அங்கே சென்றோம்.

ஒரு வழியாக முகப்பில் சிவப்புக் குஞ்சம் வைத்த அந்தச் செருப்புகளை பார்த்ததும் பல கடைகள் இதற்காக ஏறி இறங்கி அலுத்த பின்... இலக்கை அடைந்து விட்ட திருப்தியில் எனக்கு பரமாத்வையே நேரில் கண்டு விட்டதைப் போல அத்தனை ஆசுவாசமாக இருந்தது. அதற்கேற்றாற் போல செருப்பும் முதல் பார்வையிலேயே மனதுக்கு மிக நெருக்கமான உணர்வை அளிப்பதாக இருந்தது. ஆனால் அங்கிருந்த கோலாப்புரிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில்; இன்னும் வேறு சில கடைகளிலும் வேண்டுமானால் தேடிப் பார்த்து விடலாமா? என்ற யோசனையில் இருக்கையில், எங்கே நாங்கள் செருப்பௌ வாங்காமல் போய் விடப்போகிறோமோ என்னவோ என்ற அவசரத்தில் கடைக்காரர் சொன்னார்... ‘மேடம் இது பியூர் லெதர் செருப்பு மேடம்... மேட் இன் இண்டியா, நாட்டுப்பற்று இருக்கிற எல்லாரும் இந்தச் செருப்பைத் தான் வாங்கிப் போட்டுக்குவாங்க... குட் லுக்கிங் ஃபுட்வியர், நீங்களும் வாங்கி யூஸ் பண்ணி உங்க நாட்டுப்பற்றை நிரூபிங்க மேடம் என்றாரே பார்க்கலாம். அம்மாக்களான எங்களில் சிலர் அப்படியே வாயடைத்துப் போனோம். அப்போது நேரம் இரவு 10 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. மேற்கொண்டு அவரிடம் இந்தச் செருப்பு எப்படிங்க நாட்டுப்பற்றை நிரூபிக்கும்? என்றெல்லாம் அசட்டுப் பிசட்டென்று எதுவும் கேட்டு வைத்து நேரத்தை வீணாக்க வகையின்றி அப்படியே கப் சிப்பென்று வாயை மூடிக் கொண்டு செருப்பை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

மற்றவர்களுக்கு எப்படியோ? எனக்கு வீடு திரும்பிய பின்னும் அந்தக் கடைக்காரர் சொன்ன விசயம் மூளையிலிருந்து கழன்று மறைவேனா? என்று உறுத்திக் கொண்டே இருந்தது. கோலாப்புரி செருப்பு வாங்கிப் போட்டுக் கொண்டால் அது எப்படி நாட்டுப்பற்றாகும்? என்று உடனே தெரிந்து கொண்டே ஆக வேண்டியதாயிருந்தது எனக்கு. பிறகென்ன இணையத்தில் தேட வேண்டியது தானே பாக்கி! தேடினேன். கிடைத்த சங்கதிகள் ஒருபாடு கொஞ்சம் பயனுள்ளதாகவே இருந்தன.

கோலாப்புரி ஹேண்ட்கிராஃப்டேட் செருப்புகள்...

கோலாப்புரி அல்லது கோல்ஹாப்புரி செருப்புகள் என்பவை இயந்திரங்களால் அல்ல முழுக்க, முழுக்க மனிதக் கைகளினால் தயாரிக்கப்படும் நேச்சுரல் ஃபுட்வியர் வகையைச் சேர்ந்தவை. அதாவது இது ஒரு ஹேண்ட்கிராஃப்ட் வகைச் செருப்பு. மேலும் இதில் பயன்படுத்தும் வண்ணங்களை எடுத்துக் கொண்டால் அவையும் இயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் சாற்றிலிருந்து பெறப்படக் கூடியவையே தவிர செயற்கை ரசாயன வண்ணங்கள் இந்த செருப்பு தயாரிப்பில் பயன்படுத்தப் படுவதில்லை. மஹாராஷ்டிரத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான கோல்ஹாப்பூர் அல்லது கோலாப்புரியில் இருந்து தயாராகி வரும் இந்தச் செருப்புகள் டி ஸ்ட்ராப் எனப்படும் அடிப்படை வடிவத்திலேயே எப்போதும் வடிவமைப்படுவது வழக்கம். விரல்களும், நகங்களும் வெளித்தெரியும் வண்ணம் பாதங்களை வெளிக்காட்டிக் கொண்டு நடக்க இந்த கோலாப்புரி செருப்புகள் உதவும். மஹாராஷ்டிரர்கள் இவற்றைப் பெரும்பாலும் பண்டிகைக்காலத்துக்கான செருப்புகளாகவே பத்திரமாகக் கையாண்டனர். ஏனெனில் இவை பியூர் லெதர் வகை செருப்புகள் என்பதால் மழைக்காலத்தில் இவற்றை அணிவது உசிதமல்ல. அப்படி அணிந்தால் செருப்பின் ஆயுள் குறைந்து சீக்கிரமே செருப்பு டேமேஜ் ஆகக் கூடும்.

கோலாப்புரி செருப்பின் வரலாறு...

வரலாற்று ஆவணங்களின் படி கோலாப்புரி செருப்புகள், கோல்ஹாப்புரி அல்லது கோலாப்புரி என்ற பெயரைப் பெற்றது 13 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்திலிருந்து தான்.. அதற்கு முன்பு இந்த வகைச் செருப்புகளுக்கு கபஷி, பாய்தான், கச்கடி, பக்கல்னலி, புகாரி என்று அவை தயாராகும் ஊர்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களைப் பூர்வீகமாகக் கொண்டு வேறு வேறு பெயர்கள் இருந்தன. 

ஒரு செருப்பு தயாரிக்க ஆகும் காலம்...

ஒரு ஜோடி கோலாப்புரி செருப்புகள் தயாரிக்க சுமார் 6 வார காலம் தேவைப்படும். ஒரிஜினல் கோலாப்புரி செருப்புகள் என்றால் அவை எருமைத்தோலைப் பதப்படுத்தி செய்யப்படக் கூடியவையாகவே இருப்பதால் ஒரு ஜோடி செருப்புகளின் எடை சுமார் 2 கிலோவாக இருக்கும். ஏனெனில் இந்தச் செருப்புகள் மகாராஷ்டிரத்தின் மலைகளும், வறண்ட சமவெளிப்பகுதிகளுமான நில அமைப்பிற்கும், மாறி மாறி வந்து வாட்டும் கடும் வெயிலும், கடும் குளிருமான தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்றாற்போல பிற செருப்புகளைக் காட்டிலும் தடிமனான வகையில் வடிவமைக்கப் பட்டவை. 

கோலாப்புரி செருப்புகளின் இன்றைய வடிவம் மற்றும் ஆயுள்...

இன்று நாம் தென்னகத்தில் காணும் கோலாப்புரி பிராண்ட் செருப்புகளில் பழைய பாரம்பரிய வடிவமைப்பைப் பெரும்பாலும் காண இயலாது. ஏனெனில் பழைய ஒரிஜினல் கோலாப்புரி அதிக எடை கொண்டது. தற்போதைய இளம் தலைமுறை நுகர்வோர் அத்தனை எடை மிக்க செருப்புகளை அணிந்து கொள்ள விரும்புவதில்லை. எனவே இன்றைய நவீன ஃபுட்வியர் வடிவமைப்பாளர்கள், மராட்டியர்களின்  பழம்பெருமை மிக்க கோலாப்புரியின் எடையை எத்தனைக்கெத்தனை குறைக்க முடியுமோ அத்தனைக்கத்தனை குறைத்து, சற்று வேகமாகக் காற்றடித்தாலே நழுவிக் கொண்டு பறக்கும் வகையிலான அளவில் மலிவு விலையில் லைட் வெயிட், ஸ்லீக் மாடலில் கோலாப்புரியை வடிவமைத்து செருப்புகளுக்கான சந்தையில் உலவ விட்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரிஜினல் கோலாப்புரி வேண்டுமெனில் நாம் மகாராஷ்டிரத்திலிருந்து அதன் ஒரிஜினல் கோலாப்புரி கலைஞர்களிடமிருந்து தான் ஆர்டர் செய்து வரவழைத்துக் கொள்ள வேண்டும் போல! அப்படியாகி விட்டது நிலமை. அதற்கேற்றாற் போல ஒரிஜினல் ஹேண்ட்கிராப்ட் ஆன கோலாப்புரி செருப்பு தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து இப்போது தேடிக்கண்டு பிடிக்க வேண்டிய நிலையில் அந்தக் கலை ஷீணித்துக் கொண்டிருக்கிறது.

கோலாப்புரியின் மைனஸ்...

கோலாப்புரி செருப்புகள் என்ன தான் கடுமையாக உழைத்தாலும் ஒருமுறை மழையில் நனைந்தாலும் போதும்... அப்புறம் அந்த செருப்புகளின் கதி அதோ கதி தான். இந்த குறைப்பாடே கூட இந்த வகைச் செருப்புகள் தற்காலத்தில் அறுகி விட்டதற்கான காரணமாகவுமிருக்கலாம். ஆனால் 70 களில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஹிப்பி கலாச்சார அலை உச்சத்திலிருந்த போது இந்த கோலாப்புரி செருப்புகள் அணிந்து கொள்வது அமெரிக்காவில் மிகப்பெரிய டிரெண்ட் ஆக இருந்து வந்தது. தற்போது அந்த டிரெண்ட் தேய்ந்து காணாமலே போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இன்று ஃபேஷன் அணிவகுப்புகளில் வரும் மாடல்கள் மட்டுமே ‘டோ ரிங் செப்பல்’ என்ற பெயரில் இந்த வகைச் செருப்புகளை ராம்ப் ஷோக்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

கோலாப்புரி செருப்புகளுக்கான இன்றைய வியாபார வாய்ப்புகள்...

இன்று இந்தியாவில் மாறி விட்ட அரசியல் சூழலில் மாட்டுத் தோலுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கோலாப்புரி செருப்புகளின் தயாரிப்பு முற்றிலுமாகக் குறைந்து விட்டது. தொழில் நசிந்ததால் இந்த செருப்பு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான குடும்பங்கள் அவற்றைக் கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி வரும் சூழல் நிலவுவதால் இப்போதிருக்கும் தலைமுறையினர் தான் ஒரிஜினல் கோலாப்புரி செருப்பு தயாரிப்பாளர்களின் இறுதிக் கலைஞர்களாக இருப்பார்களாயிருக்கும். மாட்டுத்தோலுக்கான பஞ்சம் மற்றும் செருப்புத் தயாரிக்க தேவைப்படும் கால எல்லை இவையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு காணும் போது கோலாப்புரி செருப்புகளில் நிகழ்ந்த கலாச்சார மாற்றத்தை, வடிவமைப்பில் மாறிப்போன பழைய பாரம்பரியத்தை இனி மீட்டெடுக்க முடியாமல் போகும் நிலையும் வரலாம்.

மேட் இன் இந்தியா என்பதால் நாட்டுப்பற்று நிரூபணமாகிறதா?

எல்லாம் சரி தான் ஆனால் கடைசி வரை கோலாப்புரி செருப்பை வாங்கினால் நாட்டுப்பற்றை எப்படி நிரூபித்திருக்க முடியும் என்று மட்டும் எனக்குப் புரியவே இல்லை. இந்த வட இந்திய செருப்பு வியாபாரிகள் என்னவெல்லாம் சொல்லி மூளைச்சலவை செய்து தங்களது பொருட்களை மக்களிடம் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்த போது ஒரே வியப்பாகி விட்டது. அப்புறமும் அவர்களது விற்பனை உத்தியை ஒரேயடியாகப் புறம்தள்ளவும் முடியாமல்... ஒரு வேளை  ‘மேட் இன் இந்தியா’ என்பதால் செருப்புக்கடைக்காரர் அப்படிச் சொன்னாரோ? இந்தியாவின் பாரம்பரிய கைவினைத் திறன்களில் இதுவும் ஒன்று என்பதால் அப்படிச் சொன்னாரோ? என யோசனைகள் நீண்டன. எது எப்படியோ இன்றைக்கு மார்கெட்டில் கிடைக்கக் கூடிய கோலாப்புரி செருப்புகளை வாங்கிப் பயன்படுத்த நினைப்போர் காலடியில் சரியாகப் பிடிமானம் கிடைக்கிறதா? என்று சோதித்துப் பார்த்து விட்டு பின்னர் அணிந்து கொண்டு அவரவர் தெருக்களில் ராம்ப் வாக்குங்கள் ஏனெனில் நாங்கள் வாங்கிய செருப்பு சாதாரண மண் தரையில் கூட பயங்கரமாக வழுக்கும் தன்மையுடன் இருந்தது. அப்புறம் ஒருமுறை மழையில் நனைந்து விட்ட இந்த வகை செருப்புகள் என்றால் நாய்களுக்குக் கொள்ளைப் ப்ரியம். எனவே நாட்டுப்பற்றை நிரூபிக்க நினைப்பவர்கள் அதையும் தான் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com