தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 7

‘சிவப்பு மது’ (Red wine) அல்லது ‘வோட்கா’வை (Vodka) அருந்தக் கொடுக்கிறார்கள்.  நம்மூர்த் துணிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் காப்பியோ, குளிர்பானமோ வழங்குவது போன்ற அவர்களது கலாச்சார மரபு அது!
தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 7
Published on
Updated on
6 min read

சிதறிய இரத்தத் துளிகள்! அதன் மீது மீட்சிக்கான ஓர் ஆலயம் (Church of Resurrection on Spilled Blood)! தான் கொண்டிருந்த வினோதமான பெயரைப் போலவே – எங்கள் கண்முன்னர் பிரம்மாண்டமாக விரிந்து நின்றிருந்த அந்தக் கட்டிடமும் கூட – அங்கிருந்த பிற ஆலய அமைப்புக்களிலிருந்து வேறுபட்டதாக, வித்தியாசமான, விசித்திரமான தோற்றத்தோடு, பல புதிர்களைத் தன்னுள் அடக்கியபடி காட்சி தந்து கொண்டிருந்தது. 

நேவா ஆற்றிலிருந்து கிளைபிரிந்து செல்லும் கால்வாய்கள் பலவற்றில் ஒன்றின் கரை மீது பிரமிப்பூட்டும் அதிசயமாக அமைந்திருந்த அந்த பீட்டர்ஸ்பர்க் அற்புதம், 1800 களில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னர்களில் ஒருவரான இரண்டாம் அலெக்ஸாண்டரின் ஆன்ம சாந்திக்காக உருவாக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னம். ஃப்ரான்ஸ், பிரிட்டன், துருக்கி ஆகிய நாடுகளோடு நிகழ்ந்த கிரிமியப் போரில் (CRIMIAN WAR) ரஷ்யா அடைந்த மிக மோசமான தோல்விக்குப் பிறகு 1855 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவர் இரண்டாம் அலெக்ஸாண்டர். ரஷ்யாவின் மன்னராட்சித் தொடர்ச்சியில் வித்தியாசமான ஓர் ஆளுமையாக விளங்கிய அவர், வேறெவரும் மேற்கொள்ளாத பலப்பல சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்.

அடிமைமுறை (Serfdom) என்னும் வழக்கம், ரஷ்யாவில் மிகக் கடுமையாக நிலவிவந்த காலகட்டம் அது.  நாட்டுப்புற மாகாணங்களின்  கிராமப்பகுதிகளில் வசதிக்குறைவோடு தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் பிரபுத்துவ சமூகத்தின் பிடியில் கொத்தடிமைகளைப்போல (Serfs) வைக்கப்பட்டிருந்த சூழல் அது. நிலக்கிழாராக இருக்கும் ஒரு பிரபுவின் தகுதி, அந்த மனிதன் எத்தனை அடிமைகளைத் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிறான் என்பதன் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுவந்த அந்த சமூக அமைப்பை – அவ்வகை ஏற்றத்தாழ்வுகளை ரஷ்யப் படைப்பாளிகள் பலரும் தங்கள் படைப்புக்களில் விரிவாகச் சித்திரித்திருக்கிறார்கள். அவ்வாறு பரம்பரை அடிமைகளாக – பிணைக் கைதிகளைப் போல மீட்சியற்றுக் கிடந்த மக்கள் பலரையும் அவர்களது எஜமானர்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் முயற்சியை 1861 இல் மேற்கொண்டார் மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டர்.

இராணுவம், நீதித்துறை ஆகியவற்றிலும், நகர்சார் சீரமைப்புக்களிலும் ரஷ்யாவில் இதுவரை கைக்கொள்ளப்பட்டிராத பல திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும் அவர் முயற்சி மேற்கொண்டார். மெய்யான நல்லுள்ளத்தோடு அவர் ஈடுபாடு காட்டிய அந்த சீர்திருத்த முயற்சிகளே அவரது ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் அவருக்குப் பல எதிரிகளைத் தேடித்தரப் பலமுறை அவர் மீது கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நிகழத்தொடங்கின.  அரசர்கள் இளைப்பாறும் குளிர்கால அரண்மனையிலும், வேறு பல இடங்களிலும் வைத்து அவரைக் கொலை செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட, 1881இல் நேவா ஆற்றின் கரையோரமாகக் கோச்சுவண்டியில் சென்றுகொண்டிருந்த அவர்மீது புரட்சியாளர்கள் வெடிகுண்டு வீசினர்.  குண்டுவீச்சில் இரத்த வெள்ளத்தில் சரிந்து வீழ்ந்த  மன்னரின் இரத்தத் துளிகள் சிந்திய இடத்தில் ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு அவரது மகனான மூன்றாம் அலெக்ஸாண்டர் முயற்சி மேற்கொள்ள இரண்டாம் நிகோலாஸ் மன்னனின் காலத்திலேயே அதற்கான பணிகள் முழுமையாக நிறைவுற்றன.

நான்கரைக் கோடி ரூபிள் பொருட் செலவில் பளிங்குக் கற்களாலும், சலவைக் கற்களாலும் இழைத்துக் கட்டப்பட்ட இதன் உட்புறச் சுவர்களையும், விதானங்களையும் அந்தக் காலகட்டத்தில் முதன்மையாக விளங்கிய பல ரஷ்யக் கலைஞர்கள் தங்கள் அற்புதமான ஓவியங்களால் அழகுபடுத்தினர்.பின்னர் ரஷ்யப் புரட்சியின் உடனிகழ்வாக நேர்ந்த பல கலவரங்களால் ஆலயத்தின் உட்புறம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயிற்று. 1932 ஆம் ஆண்டில் சோவியத் அரசு இந்த ஆலயத்தை மூடியது.  இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாஜிப் படைகளால் லெனின் கிராட் முற்றுகையிடப்பட்ட தருணத்தில் பஞ்சத்தாலும், பிற சித்திரவதைகளாலும் இறந்துபோன மக்களின் பிணங்கள் கூட இங்கே வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.

1997ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆலயம் மறுபடி திறக்கப்பட்டாலும், ரஷ்யப் புரட்சிக்கு முன்பு இருந்தது போலப் பொதுவான வழிபாட்டுத்தலமாக அல்லாமல் இறந்துபோன ஜார் மன்னரின் நினைவைப் போற்றும் வழிபாடு மட்டுமே இப்போது இங்கே நிகழ்ந்து வருகிறது.


    
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் உச்சபட்சக் கவர்ச்சியாகவே விளங்கும் அந்த ஆலயத்திற்குள் – திட்டிவாசல் போன்ற ஒரு சிறு கதவின் வழி உள்ளே சென்றோம்.  இயேசுவை மீட்பராகச் சித்திரிக்கும் வண்ண ஓவிங்களாலும், புனிதர்கள் மற்றும் தேவதைகளின் உருவச் சித்திரிப்புக்களாலும் ஆலய உட்புறச் சுவர்களும், மேற்கூரைகளும் நிறைந்து கிடந்தன; ஆங்காங்கே பல நிறம் கொண்ட பெல்ஜியம் கண்ணாடிப் பளபளப்புக்களும் காணத் திகட்டாத பேரழகோடு பொலிந்து கொண்டிருந்தன.  நாங்கள் சென்ற பிற ஆலயங்களை விடவும் இதைக் காணவரும் மக்கள் கூட்டமும் மிகுதியாகவே இருந்தது. பல்வேறு காலகட்டங்களில் பலவகையான பாதிப்புக்களுக்கு ஆளானபோதும் இன்னும் கூடக் கலையழகு குன்றாமலிருக்கும் அந்த இடத்தை மனம் கொண்ட வரை ரசித்துப் பார்த்த பிறகு மதிய உணவுக்காகச் சென்றோம்.

அகன்ற சாலை ஒன்றின் மிகப்பெரிய அடுக்குமாடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் சிக்கனமான எளிமையுடன் இருந்தது அந்த இந்திய உணவு விடுதி.  அதன் அருகே, அதை ஒட்டியிருக்கும் ஒரு இடத்திலேதான் என் நேசத்துக்குரிய நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி மிகக்குறுகிய காலம் வாழ்ந்தார் என்றும் அதைக் காட்டும் நினைவுச் சின்னம் ஒன்று  அங்கிருக்கிறது  என்றும் உணவுக்காக உள்ளே நுழையும்போது மெல்ல என் காதுக்குள் ஓதினார் வழிகாட்டி காதரீனா.  அடுத்த கணமே பசிக்களைப்பும், ஊர் சுற்றிய களைப்பும் எங்கோ ஓடிப்போய்விட உடனே அதைப் பார்த்தாக வேண்டும் என்ற உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது.  உடன் வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகளுக்கு அதில் ஆர்வம் இருக்க வாய்ப்பில்லை என்பதால் ஐந்தே நிமிடத்தில் மிகச்சுருக்கமாக… விரைவாக உணவை முடித்துக் கொண்டேன். எங்கள் குழுவின் தலைவரிடமும், வழிகாட்டியிடமும் அந்தத் தெருமுனை வரை தனியே சென்று வர அனுமதி பெற்று வெளியே வந்தேன்.  அதே தெருவின் திருப்பத்தை ஒட்டிய பகுதியில்தான் அந்த நினைவுச்சின்னம் இருப்பதாக காத்தரீனா கூறியிருந்ததால் – எங்கள் உணவு விடுதி இருந்த இடத்தை மட்டும் நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டு நடைபாதை வழியே வேகநடை போட்டுத் திருப்பத்தை நெருங்கினேன்.  

நான்கு அகலமான சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில் எவரிடம் எப்படிக் கேட்டுக் குறிப்பிட்ட நினைவுச் சின்னத்தைத் தேட முடியும் என்பதறியாமல் சற்றுத் திகைக்க வேண்டியநிலை! மொழியும், வழியும் தெரியாத ஓர் இடத்தில் அதற்கு மேல் தொடர்ந்து செல்லவும் மனமின்றி எதிர்ப்பட்ட ஒரு சிலரிடம் விசாரிக்க முனைந்தால் மொழிச்சிக்கல்! பெரும்பாலான ரஷ்ய மக்களும்  தங்கள் மொழியையன்றி ஆங்கிலம் அறியாதவர்களாகவே இருப்பதால் நான் விசாரிக்க முனைந்த விஷயம் எவருக்கும் விளங்கவில்லை.  அந்தக் கணத்தில் எங்கிருந்தோ என்னிடம் பாய்ந்து வந்தார் ஒரு பருமனான பெண்மணி.  தஸ்தயெவ்ஸ்கி என்ற பெயர் மட்டுமே அவர் காதில் அரைகுறையாக விழுந்திருக்க வேண்டும், அதை மட்டுமே பற்றிக் கொண்டு என்னருகே வந்தவர், என் தேடல் குறித்து நல்ல ஆங்கிலத்தில் என்னிடம் வினவினார்.  நான் அதை விளக்கி முடித்ததும், அவரே என் கரத்தைப் பற்றிக்கொண்டு எங்கள் உணவு விடுதி இருந்த கட்டிடத்தின் அதே திசையில் என்னை நடத்திச் சென்றார்.  எனக்குள் ஒரே குழப்பம்!  நான் கூறியதை அவர் சரியாகத்தான் உள்வாங்கிக் கொண்டாரா என்பதிலேயே எனக்கு சந்தேகம் தோன்றிவிட்டிருந்தது.

எங்கள் உணவு விடுதிக்குக் கொஞ்சம் முன்பாக – அதே கட்டிடத்தில் சற்றுத் தள்ளியிருந்த ஒரு பகுதிக்கு முன்பு என்னை நிறுத்திய அந்தப் பெண்மணி, சற்று உயரத்திலிருந்த ஒரு தளத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த ஒரு கற்பலகையை எனக்குச் சுட்டிக்காட்டினார். ‘நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கி 1847ஆம் ஆண்டு முதல் 1849ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இடம்.’ என ரஷ்ய மொழியல் பொறிக்கப்பட்டிருந்த அந்தஎழுத்துக்களை எனக்கு ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லிய அவருக்கு நன்றி கூற வார்த்தை தேடி நான் தவித்தேன்; அவரோ தனது நாட்டின் இலக்கிய மேதை ஒருவரின் சுவடு தேடி இந்தியப் பெண்ணான நான் அலையும்போது எனக்கு உதவ முடிந்ததில் தனக்குப் பெருமகிழ்ச்சி என்று கூறியபடி விடைபெற்றுச் சென்றார்.  தஸ்தயெவ்ஸ்கி குறித்த அந்தக் கற்சின்னத்தை மகிழ்வோடு புகைப்படமெடுத்துக் கொண்டு மனநிறைவோடு உணவு விடுதிக்குத் திரும்பி எங்கள் குழுவினரோடு உரிய நேரத்திற்குள் இணைந்து கொண்டேன். காத்தரீனாவுடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மற்றொரு பகுதியில் தஸ்தயெவ்ஸ்கி சற்று நீண்ட காலம் வாழ்ந்த இடம், தற்போது அவரது நினைவில்லமாகவே மாற்றப்பட்டிருப்பதாகவும், உரிய நேரம் வாய்த்தால் என்னை அங்கே அழைத்துச் செல்வதாகவும் உறுதி அளித்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, ரஷ்யாவின் தனித்தன்மை கொண்ட நினைவுப் பரிசுகளை நண்பர்களுக்கு வாங்கிச் செல்ல விரும்பிய நாங்கள் ஒரு அங்காடிக்குச் சென்றோம். ‘வால் மார்ட்’ போன்ற அமைப்பில் சற்று சிறியதாக இருந்த அந்தப் பல்பொருள் விற்பனைக் கூடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, நம்மை அன்போடு வரவேற்று உபசரித்து  முகப்பிலுள்ள மேசையிலிருக்கும் குப்பிகளில் நிறைக்கப்பட்டிருக்கும் ‘சிவப்பு மது’ (Red wine) அல்லது ‘வோட்கா’வை (Vodka) அருந்தக் கொடுக்கிறார்கள்.  நம்மூர்த் துணிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் காப்பியோ, குளிர்பானமோ வழங்குவது போன்ற அவர்களது கலாச்சார மரபு அது! சர்க்கஸ் சென்றிருந்தபோதும் அதன் இடைவேளை நேரத்தில் அதே போன்ற உபசாரம் அளிக்கப்பட்டது நினைவுக்கு வந்தது.  விரும்பியவர்கள் அதை அருந்த… நாங்கள் கடைக்குள் சென்றோம்.

ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கடுக்காகப் பொதிந்துவைக்கப்படும் (Nesting dolls) மர பொம்மைகளே ரஷிய நாட்டின் தனித்தன்மையைக் காட்டும் கலைப்பொருட்கள்..  பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பெண் வடிவத்தையே (நம்மூர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைபோல) கொண்டிருக்கும் அவை… தற்போது வேறுபல வடிவங்களிலும் கூடக் (தலைவர் உருவங்கள், மதச்சார்புக் கதைகள்) கிடைக்கின்றன.  ‘மெட்ரியோஷ்கா’ பொம்மை (Metriyoshka doll) ‘பபூஷ்கா’ பொம்மை (Babushka doll) என்ற பெயராலும் வழங்கப்படும் அவை நாம் இங்கிருந்து நினைவுப்பரிசாக வாங்கிச் செல்வதற்கு உகந்த பொருட்கள்.  

அதே போல வண்ண வேலைப்பாடுகளுடன்… சற்று விலை கூடியதாக ஆபரண வேலைப்பாடுகளுடனும் அமைந்திருக்கும் பளிங்கிலான முட்டைகளும் (Feberge egg) ரஷ்யக் கலைப் பொருட்களில் தனித்துவம் கொண்டவை.  ஜார் மன்னர்களுக்காகத் தங்கம் இழைத்து உண்டாக்கப்பட்ட அந்த முட்டைகள் இப்போது அவரவர் வசதிக்கேற்ற வகையில் அழகிய வேறு பல வேலைப்பாடுகளுடன் கிடைக்கின்றன. அவரவர் விரும்பிய பரிசுப்பொருட்களை வாங்கிக் கொண்டபின் மாலை ஐந்துமணி அளவில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகுப் பயணத்துக்காக நேவா ஆற்றின் துறையை வந்தடைந்தோம்.

மாஸ்க்வா ஆற்றில் மேற்கொண்ட பிரம்மாண்டமான கப்பற்பயணம் போன்ற சவாரியாக இல்லாமல் இந்தப் படகுப் பயணம் எளிமையான அழகும், இனிமையும் கூடியதாக இருந்தது.  நேவா நதி தீரத்தில்தான் பீட்டர்ஸ்பர்க் நகரமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் அதில் பயணம் செய்யும்போது நகரின் அதி அற்புதமான அத்தனை கட்டிடங்களையும் ஒரு சேரக் கண்டு ரசிக்க முடிவது சுகமான ஓர் அனுபவம்.

நீர்க் கொள்ளளவு அடிப்படையில் பெரிய ஐரோப்பிய நதிகளில் ஒன்றான நேவா ஆழம் மிகுந்து அலைகள் தளும்பியபடி இருந்தது.  லடோசா என்னும் ஏரியின் வழியாக பால்டிக் கடலோடு கலக்கும் நேவா ஆறு… மாஸ்க்வாவை விடவும் கூட உயிரோட்டத்தோடும், துடிப்போடும் இருந்ததாகத் தோன்றியது.  ஆற்றிலிருந்து நகருக்குள் பிரிந்து செல்லும் பல கால்வாய்கள், அவற்றின் மீது அமைந்திருக்கும் வளைவான பாலங்கள் என வெனிஸின் படகுப் பயணத்தை மிகுதியாக நினைவூட்டியது நேவா நதிப் பயணம்.  வழியில் எதிர்ப்பட்ட பாலங்களைப் பற்றி விவரித்துக் கொண்டே வந்த காத்தரீனா… ஒரு குறிப்பிட்ட பாலத்தின் மேலிருந்து முத்தமிட்டுக் கொள்ளும் காதலர்களுக்கு ஓராண்டில் திருமணம் நிகழ்வது உறுதி என்றும் அதன்பிறகு மணமக்களாக அவர்கள் அங்கே திரும்பிவந்து நன்றிக் கடன் செலுத்துவார்கள் என்றும் ரசனையோடு விவரித்துக் கொண்டிருந்தார்.  நாத்திகம் கோலோச்சும் நாட்டிலும் கூட இப்படிப்பட்ட நம்பிக்கைகள் மனித வாழ்வோடு கலந்திருப்பதை எண்ணி வியந்தபடி, குளிர் நீரின் சில்லிப்போடு வீசிய மென்காற்றின் தீண்டலை அனுபவித்து ரசித்துக் கொண்டே நேவா நதிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன் நான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com