மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும்...! 

"பார்த்தீர்களா? பல நூலகங்களுக்குப் போய்ப் பல நூல்களைப் படித்தாலும் கிடைக்க முடியாத அறிவு இந்த மாதிரிப் பெரியவங்களோடு பழகினாலே கிடைத்துவிடும்.
மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும்...! 

உன்னோடு போட்டிபோடு! - 13

"வெள்ளக்காரன் பலாச்சுளையைத் தின்ற கதையை நீங்க சொல்லுங்க, பனங்கிழங்கை வச்சு உதாரணம் சொன்ன கவிஞரின் கவிதையை நான் சொல்கிறேன்'' என்று நான் சொல்ல அந்தக் கிழவர் கதையைத் தொடங்கினார்.

"நாம எத்தனைதான் அறிவாளியா இருந்தாலும், நமக்குத் தெரியாத விசயத்தை அடுத்த ஆள்கிட்ட, அட, அதுபத்தித் தெரிஞ்சவங்கிட்ட கேட்டுக்கிட்டாத் தப்பில்லைங்கிறது என்னோட அபிப்பிராயம்''.

"உள்ளூர்க்காரன் பேய்க்கு அஞ்சணும் வெளியூர்க்காரன் தண்ணிக்கு அஞ்சணும்னு'' நம்ப பெரியவங்க தெரியாமலா சொன்னாங்க? என்று அந்தக் கிழவனார் கேட்டபோது எல்லோரும் சிரித்தோம். ஏனென்றால் அவரே 90 வயதுப் பெரியவர்.

"பெரிசுக கிட்டக் கதை கேட்கத் தனியா பொறுமை வேணும்.. பலாச்சுளைக் கதையத் தொடங்கி அத முடிக்காம, உள்ளூர்க்காரன் பேய்க்கு, அயலூர்க்காரன் தண்ணிக்குப் பயப்படனும்னு சொல்லத் தொடங்கினா... எந்தக் கததான் ஞாபகத்தில இருக்கும்?'' என்று மீசைக்காரர் அலுத்துக் கொண்டார்.

"அப்படி இல்லீங்க. எண்ணெய் எடுக்கத்தான் மண்ணைக் கொடஞ்சான் மனுசன். ஆனா எண்ணெய் மட்டுமா கிடச்சது? அதோட சேர்ந்து பல பொருளும் கிடைச்சதில்ல அதுமாதிரித்தான்'' என்று மற்றவர் சமாதானப்படுத்தினார்.

"ஆமாங்க பை-புராடெக்ட் என்று சொல்வார்கள். பெட்ரோல் எடுக்கும்போது கிடைத்ததுதான் ரோட்ல போடுற தார்...'' என்று விளக்கம் கொடுத்தார் கடல்சார் பொறியியல் பேராசிரியர்.

"பனங்கிழங்கையும் திங்க விடாதிங்க, பலாச்சுளைக் கதையையும் கேட்க விடாதீங்க... தாத்தா நீங்க சொல்லுங்க'' என்று ஒருவர் சத்தம் போட்டார்.

"வெள்ளக்காரன் வெள்ளையா இருக்கிறதுனால அவன்மேல நம்ப பயலுகளுக்குக் கொஞ்சம் கோபம் உண்டு. அவன் நம்பள ஆண்டுக்கிட்டு இருந்தப்ப ஒரு வீட்ல மா, பலா, வாழையின்னு முக்கனிகளைச் சாப்பாட்டு இலையில வைத்தார்களாம். இந்தப் பழங்களை எப்படிச் சாப்பிடுறது என்று வெள்ளைக்காரனுக்குத் தெரியவில்லையாம். அதைப் பார்த்த நம்ப பையன் ஒருத்தன் என்ன செஞ்சான் தெரியுமா? என்று கிழவனார் மீண்டும் கேள்வி கேட்க, யாரும் பதில் சொல்லவில்லை. சொன்னால் கதை வேறு பக்கம் போய்விடும் என்ற பயம். "வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன்'' படத்தில ரோபோ சங்கர் கதை சொல்ற மாதிரி.

பிறகு அவரே தொடர்ந்தார்: "இந்த பாரு நான் சாப்பிடுற மாதிரிச் சாப்பிடு'' என்று வெள்ளக்காரனுக்குச் சைகை காட்டிவிட்டு, (இங்கிலீஸ் தெரியாததால் அல்லது வெள்ளக்காரனுக்குத் தமிழ் தெரியாததால்) வினயமாக முதலில் வாழைப்பழத்தை எடுத்துத் தோலை உரித்துவிட்டுப் பழத்தை வாயில்போட்டுவிட்டு தோலை வெளியில் தூக்கி எறிந்த நம்ம பையன், வெள்ளக்காரனைப் பார்த்து, "இதேமாதிரி மூணையும் தின்னு'' என்றானாம். வெள்ளக்காரன் மிகுந்த சந்தோசத்தோடு முதலில் பலாசுளையை எடுத்தானாம். சுளையைப் பிளந்தானாம். பலாக் கொட்டையை வாயில் போட்டானாம். சுளையை வெளியில் போட்டானாம். பலாக் கொட்டையை மெல்ல முடியாமல் தவித்து "இதற்கு யாரு முக்கனின்னு பேர் வச்சது?'' என்று கவலையாகக் கேட்டானாம்.

"குதிரைக்குக் குர்ரம்னா ஆனைக்கு அர்ரம்னா அர்த்தம்?'' என்று கேட்ட கிழவனார் சிரிக்க, நாங்களும் சேர்ந்து சிரித்தோம்.

"பழம் தின்னு கொட்ட போட்டவன்னு கேள்விப்பட்டிருக்கோம்... இவன் கொட்ட தின்னு பழம் போட்டவனால்ல இருக்கான்'' என்று சொன்ன ஒருவர் விடாமல் சிரித்தார்.

"இதையும் கேளுங்க.. உள்ளூர்க்காரன் பேய்க்கு அஞ்சணும் அப்படீன்னா என்ன தெரியுமா? ஒரு ஊர்ல எங்க எங்க பேய் இருக்கும்னு நம்புவாங்கன்னா... தூக்குப் போட்டுச் செத்த புளியமரத்தில, இரயிலடியில, கிணத்தடியில.. இப்படி எல்லாம் செத்துப் போனவங்க கதையக் கேட்டதனால அங்கயெல்லாம் உள்ளூர்க்காரன் நடுராத்திரில போக மாட்டான். ஆனா அசலூர்க்காரன் இராத்திரியானா எந்த இடம் கிடச்சாலும் அந்த இடத்தோட "மகிமை' தெரியாமத் தூங்கி எந்திரிச்சுப் போயிருவான். அவனுக்கு அதுல பயமில்ல. அதேசமயம், நாம வெளியூர் போறப்ப, ஆழம் தெரியாமக் காலவிட்டுத் தண்ணியில மாட்டப்படாது. அதுனால வெளியூர் போனாத் தண்ணிக்கு, நீர்நிலைக்கு அஞ்சணும்'' என்று அந்தக் கிழவர் சொல்லி முடித்தார்.

"பார்த்தீர்களா? பல நூலகங்களுக்குப் போய்ப் பல நூல்களைப் படித்தாலும் கிடைக்க முடியாத அறிவு இந்த மாதிரிப் பெரியவங்களோடு பழகினாலே கிடைத்துவிடும்.

இதைத்தான் திருவள்ளுவர் "பெரியாரைத் துணைக்கோடல்' அப்பிடின்னு சொல்லியிருக்கார்'' என்று நான் பெருமிதமாகச் சொன்னேன்.

"நம்ம வள்ளுவர்... வள்ளுவர்தான்யா. பாருங்க அன்னைக்கே "பெரியாரை'ப் பத்திச் சொல்லியிருக்கார்'' என்று மீசைக்காரர் பெருமிதமாகச் சொன்னார்.

"மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னர்க் கசக்கும் பின்னர் இனிக்கும்னு' சும்மாவா சொல்லியிருப்பாங்க?'' என்று மற்றவர் சொன்னார்.

பனங்கிழங்கின் ருசி எல்லோரையும் மயக்கியது. "இதே கிழங்கைச் சுட்டுத்தின்னா அந்த ருசி இதுக்கு மேலே... அதுக்கும் மேல... அதத் தேன்ல தொட்டுத் தின்னா...'' என்று "ஐ' படத்து விக்ரம் மாதிரி ஒருவர் சொல்லிக்கொண்டும் அனைவருக்கும் பரிமாறிக் கொண்டும் வந்தார்.  எங்களைக் கண்டு பயப்படாமல் அருகில் இருந்த கடல் நாரைப் பறவை நிதானமாக நடந்து அங்கிருந்த கடல் நத்தைகளைத் தன் கூர்மூக்கால் கொத்திப் பிடித்து மேலே தூக்கி விழுங்கத் தொடங்கிய காட்சி... குறும்படம் பார்ப்பது போலிருந்தது.

"ஒரு மனிதன் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இந்த கொக்கைப் போல் காத்திருக்க வேண்டுமாம். இதன் பொறுமையே இதன் பண்பு. இரை கிடைத்தவுடன் பாய்ந்து சென்று பிடித்துக்கொள்ளும். விரைவு வேண்டும். தேடுதல், பொறுத்தல், விரைவு இந்த மூன்று குணங்களைத் திருவள்ளுவர் "காலமறிதல்' என்ற அதிகாரத்தில் கூறியிருக்கிறார்'' என்று நான் சொன்னேன்.

"வலியறிதல், காலமறிதல், இடனறிதல்' இதத்தான் நம்ம பிள்ளைகள் டைம் மேனேஜ்மென்ட், என்று பி.பி.ஏ. எம்.பி.ஏ. பட்டங்கள்ல படிக்கிறாங்க'' என்று சொன்ன ஹெட்போன் பாட்டி தன் பேத்தியைப் பார்க்கப் பனங்கிழங்கை பல வகைகளிலும் தின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பேத்தியும்,
"தட்ஸ்... கரெக்ட் பாட்டி அந்தத் திருக்குறளை இப்பக் கேளுங்க'' என்று சொல்ல... "சொல்லுமா'' என்று ஒருவர் கேட்கத் தயாரானார்.

"நான் சொல்லல... இப்பப் பாருங்க'' என்று தன் செல்போன் செயலியை டவுன்லோடு செய்து பின் செல்லைத் தன் உதட்டருகில் கொண்டு சென்று, 
"திருக்குறள்' - அதிகாரம் - 50 - காலமறிதல்   "கொக்கொக்க' என்று சொல்லி முடித்தவுடன், 
அந்தச் செல்போனில் இருந்து
"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து'
எனும் திருக்குறள் இசையோடு பாட்டாக வந்தது. தொடர்ந்து,
"வினை செய்வதற்குரிய காலம் வரும் வரை கொக்குப்போல் அடங்கியிருக்க வேண்டும். சரியான நேரம் வரும்போது விரைந்து மீனைக் கொத்தும் அந்தக் கொக்குபோல் காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும்' என்ற உரையும் வந்தது.  இதைப் பார்த்த அந்தக் கடற்கரைப் பகுதிப் பெரியவர்கள் வியந்தும் மகிழ்ந்தும் மயங்கியும் போனார்கள்.

"அடடே இதப்பாக்கவும், கேட்கவும் நம்ப திருவள்ளுவருக்குக் கொடுத்து வைக்கலையே'' என்று ஒருவர் கவலைப்பட்டார்.

"அது சரி நம்மகிட்ட உட்கார்ந்து இருக்கிற கடல் பறவை நாரை மாதிரி இருக்கு. நீங்க எல்லோரும் கொக்கப்பத்திப் பேசுறீங்களே... கொக்கு வேற. நாரை வேற இல்லையா? இந்த நாரைக்கு ஒரு பாட்டும் இல்லையா?'' என்று ஒருவர் சத்தமாகக் கேட்டார்.

"ஏன் இல்லை? அதப் பாடினவர் பேர்தான் தெரியலை. ஆனா பாட்டச் சொல்ல வா?'' என்று ஒருவர் ஆவேசம் வந்தவர்போல கேட்க...
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com