உயிருக்கு ஊதியம்...! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

நம் வீட்டை நிர்வகிக்க உணவு, உடை, இருப்பிடம் இவற்றிற்கு மாதம் எவ்வளவு பணம் வேண்டும்?''  என்று கேட்டாராம். அந்த அம்மையாரும் "மாதம் ரூ.20  இருந்தால் போதும்'' என்று கூறினார்களாம்
உயிருக்கு ஊதியம்...! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 39

முருகப் பெருமானே தனக்கு ஆசிரியராக வர வேண்டும் என விரும்பிய அருணகிரிநாதர் தான் பாடிய  "கந்தர் அனுபூதியில்'  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! என அழைத்துள்ளார் என்னும் செய்தியை நான் சொல்ல,  தமிழையா அதனைத் தம்  இனிய குரலில் பாடிக்காட்டினார்.

"ஐயா எனக்கொரு சந்தேகம்''  என்று மீசைக்காரர் தொடங்கும் முன்  "சந்தேகம் நம்பர் 1535'' என்று கோமாளி கத்த, இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால் நம் மீசைக்காரர் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை, "தம்பிகளா, நீங்க படிச்ச பிள்ளைகள். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வர வாய்ப்பில்லை. ஆனா நான் படிக்காத ஆளு, எனக்கு ஆயிரம் சந்தேகம் வந்துட்டுதான் இருக்கும், அந்தச் சந்தேகத்துக்கு விடையை எங்க  போய் தேடுவேன்?  இந்தா எதக் கேட்டாலும் சொல்லுற வாத்தியாருக இருக்காக, இந்த அறிவுங்ற அகல் விளக்குல ஆயிரம் தீபத்தை ஏத்தலாம், அதனால உங்களப் பத்தி நான் கவலைப்பட மாட்டேன‘‘  என்று அமைதியாகச் சொல்லிவிட்டு, "ஐயா நீங்க சொல்லுங்க, படிச்சவுக பெரிசா?, படிக்காதவுங்க பெரிசா?''  என்று கேட்டார். 

உடனே தமிழையா, "படித்தவர்களால் தான் எதையும் உறுதியாக தைரியத்தோடு கூற முடியும், ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும், படிக்க வாய்ப்பில்லாதவர்கள் அனுபவ ஞானத்தால்தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்வார்கள்; பிறருக்கும் வழிகாட்டியாய் இருப்பார்கள்'' என்று சொல்லிக்கொண்டு வரும்போதே, 
 "வாழைமரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா?
வான்முகிலும் கற்றதில்லை மழைபொழிய மறந்ததா?
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல்கொடுக்க மறந்ததா?
சுதந்திரமாய்ப்  பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா?
படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு' 
 என்று எம்.எஸ்.இராஜேஸ்வரியின் குழந்தைக் குரலில் பாடுவது போல கோமாளி ஒரு பாட்டு பாட அதிகமாக கைதட்டியது மீசைக்காரர்தான். 

"பாட்டைக் கேட்டீர்களா? "படிக்காத மேதை'  படத்தில் கவியரசு கண்ணதாசன்  அவர்கள் எழுதிய காலத்தால் அழியாத காவியப்பாட்டு இது'' என்று நான் பெருமிதமாய்ச் சொன்னேன்.

நான் சொன்னதை ஆமோதித்த தமிழையா, "ஐயா உங்களுக்கு இந்தப் பாடலைக் குறித்த இன்னொரு செய்தியும் தெரிந்திருக்கும், இந்தப்  படம் வந்த காலத்தில் முதலமைச்சராய் இருந்தவர் படிக்காத மேதை பெருந்தலைவர் காமராசர். அவரை எதிர்க்கட்சிக்காரர்கள் அவர் என்ன படித்திருக்கிறார்? என்று அடிக்கடி மேடைகளில் கேள்வி கேட்க அந்தக் கேள்விக்கு விடை கூறுமாறுதான் கண்ணதாசன் இந்தப்பாடலை எழுதியிருப்பார், இந்தப் படத்தை இயக்கிய யு.பீம்சிங் அவர்களும், கதை, வசனம் எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும், படிக்காத மேதை என அந்தப் படத்துக்கும் பேர் வைத்திருப்பார்கள்'' என்று விளக்கம் கொடுத்தார். 

"நீங்கள் சொல்வது உண்மைதான் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர், பாடல் எழுதியவர், இயக்கியவர், கதாநாயகனாக நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவர்கள் அனைவருமே காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள். அதுமட்டுமில்லை,  ஒரு காலத்தில் பண்டித ஜவஹர்லால் நேருவின் மறைவிற்குப் பிறகு இந்தியாவிற்கே யார் தலைமை தாங்குவது? பிரதமர் பதவியை யார் ஏற்பது? எனும் சிக்கல் வந்த போது அதைக் "கிங் மேக்கராக' இருந்து தீர்த்து வைத்த பெருமை பெருந்தலைவர் காமராசர் அவர்களையே  சாரும்'' என நான் கூறினேன். 

"பார்த்தீர்களா, இந்தியத் தலைமையை அக்காலத்தில் நம் தமிழ்நாட்டு தலைவர் தான் தீர்த்து வைத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு நம்மவர்கள்,  வெள்ளிக் கிழமையானால் டில்லிக்கு போய்விடுகிறார்கள் யோசனைக் கேட்க... ம்.. காலம் இப்படி மாறிப் போய்விட்டதே!''  என்று கவலைப்பட்டார் அமெரிக்காவில் படித்தவரும், கணிணித் துறையில் ஜெயித்தவருமான தமிழ்மணி.

"அட அது இருக்கட்டுங்க, எப்படியும் நல்ல முடிவு வராமலா போப்போது?'' 
"ஆமா, நீங்க சொல்ற அந்தப் பெருந்தலைவர் எவ்வளவு படித்திருந்தார்?'' என்று ஆர்வமாய் கேட்டார் மீசைக்காரர். 

"ஆறாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். தந்தையார் இல்லாத காரணத்தாலும், வறுமையாலும் அவரால் உயர்கல்வி படிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அப்பெருந்தலைவர் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்தபோது உருவாக்கிய பள்ளிகளும்,  அவர் பெயரில் இன்றைக்கும் இருக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் என்றைக்கும் அவர் பெயரை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்'' என்றார் தமிழையா. 

"ரொம்பச் சந்தோசமாய் இருக்குதுயா, ஆனாலும் அந்தப் பெருந்தலைவர் யாரை இந்தியாவின் பிரதம மந்திரியாய்க் கொண்டு வந்தாருன்னு நீங்க இவுங்களுக்கு சொல்லலையே?''  என்று ஒரு பெரியவர் இடையில் கேட்டார். 

"நிச்சயமாகச் சொல்லத்தான் வேண்டும். ஏனென்றால் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அப்படிப்பட்ட தலைவர்களைப் பற்றி தெரியாமல் போய்விடக் கூடாது பாருங்கள்'' என்றார் தமிழையா. 

"நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா, காந்தியடிகளைப் பற்றி இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலும், இங்கிலாந்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான பெர்னாட்ஷாவும், காந்தியடிகளின் பெயரைச் சொல்லி "இப்படி ஒரு மனிதர் இருந்தார் என்று சொன்னாலும் அடுத்த தலைமுறை அதை நம்பப் போவதில்லை' என்றார்களாம். 

உடனே  நான்,  "நேரு அவர்களின் மறைவிற்குப் பிறகு மொராய்ஜி தேசாய், இந்திரா காந்தி போன்ற பலரும் அப்பிரதமர் பதவிக்கு வருவார்கள் என்று நினைத்திருந்தபோது நம் பெருந்தலைவர் காமராசர் கூர்ந்து கவனித்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். அவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு ஒரு முன் கதை சொல்ல வேண்டும்'' என்று நான் சொல்லத் தொடங்க, அமைதியாய் எல்லோரும் என் முகத்தைப் பார்த்தார்கள்.

இதற்குள் சில இளைஞர்கள் எழுந்து கடற்கரையில் எரிந்து கொண்டிருந்த நெருப்புக்கு விறகு போட்டார்கள். சுற்றிலும் சுடர் விட்டுக் கொண்டிருந்த தீப்பந்தங்களுக்கும் எண்ணெய் விட்டார்கள். பெட்ரோமாஸ் (டநவசழஅயஒ) விளக்குகளுக்கு காற்றடித்தார்கள். தமிழ்மணி பெருமிதமாய் அவர்களுக்கு வணக்கம் சொன்னார். அவர்கள் அத்தனை பேரும் அமைதியாய் என்னருகில் வந்து அமர்ந்தார்கள். நானும் அவர்களை வணங்கி இளைய தலைமுறைக்கு என் வணக்கம் உங்களின் பொறுப்புணர்வு என்னைப் பூரிக்க வைக்கிறது'' என்று வாழ்த்திவிட்டு நம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் ஜனாதிபதியாக டாக்டர்.

இராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றார். நேரு அவர்கள் பிரதமர் ஆனார். வல்லபாய் படேல்  அவர்கள் இராணுவ அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்தார். அக்காலங்களில் காங்கிரஸ் அலுவலகத்தில் முழு நேர ஊழியராக ஓர்  இளைஞர் வேலை பார்த்து வந்தார். அவர் வறுமையான குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் ஊதியம்  ஏதும் பெற்றுக்   கொள்ளாமலே வேலை பார்த்து வந்தாராம். 

ஒரு நாள் காங்கிரஸ் அலுவலகத்தில் அவரை அழைத்து "உங்களுக்கு குடும்பம் நடத்த மாதச் சம்பளம் எவ்வளவு வேண்டும்?''  என்று கேட்டார்களாம். உடனே அவரும் வீட்டிற்கு விரைந்து சென்று தன் மனைவியிடத்தில் நம் வீட்டை நிர்வகிக்க உணவு, உடை, இருப்பிடம் இவற்றிற்கு மாதம் எவ்வளவு பணம் வேண்டும்?''  என்று கேட்டாராம். அந்த அம்மையாரும் "மாதம் ரூ.20  இருந்தால் போதும்'' என்று கூறினார்களாம் என்றேன் நான்.

"அநியாயம், அக்கிரமம் இருபது ரூபாயை வைத்து ஒரு குடி தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியாது. அந்த அம்மாள் இருபதாயிரம் சொல்லியிருக்க வேண்டும்'' என்று ஓர் இளைஞர் சொல்ல, 

"யூ மீன் 2,00,000''- என்று பேத்தி கேட்க. "நோ, ஒன்லி ட்வென்டி  ருப்பீஸ்''  என்று ஹெட்போன் பாட்டி அழுத்தமாய் சொல்லியது. உடனே தமிழையா, "யாரும் பதட்டப்படாதீர்கள், அந்தக் காலத்தில் ரூபாய் மதிப்பு அதிகம், ஒரு ரூபாய் என்பது 16 அணாக்கள், 192 காசுகள், அமெரிக்க ஒரு டாலரும், இந்திய ஒரு ரூபாயும் சமமாகத்தான் இருந்தன. ஒரு பவுன் விலை பதினைந்து ரூபாய் தான்.

இதையெல்லாம் எனக்குச் சொன்னவர் எங்கள் தலைமை ஆசிரியரின் 105 வயதாகும் அவரது தந்தைதான்'' என்று கூறினார். 

"சரி கதைக்கு வாருங்கள்... அந்தம்மாள் சொன்னபடி அந்த இளைஞர் போய் காங்கிரஸ் அலுவலகத்தில் சொல்ல அவர்களும் மாதம் இருபது ரூபாய் ஊதியம் கொடுத்தார்களாம். நான்கு மாதம் ஆயிற்று ஒரு நாள் அந்த இளைஞர் வீட்டில் இருந்த போது பக்கத்து வீட்டுக்காரர் ஒடிவந்து  "ஐயா என் மகன் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டான், மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் உடனடியாக உயிரைக் காப்பாற்ற இருபது ரூபாய் பணம் கட்ட வேண்டும்' என்று பதட்டத்தோடு கூறினாராம். அதைக் கேட்டு திடுக்கிட்ட அந்த இளைஞர் என்ன செய்வது என்று மனைவியைப் பார்க்க, அந்தம்மாள் வேகமாக உள்ளே ஓடி இருபது ரூபாய் கொண்டு வந்து கொடுக்க பெற்றுக் கொண்ட அவரும் விரைந்து சென்று மகனைக்  காப்பாற்றினாராம். 

மனைவி கொடுத்த பணத்தை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்த அந்த இளைஞர்,   "உன்னிடம் ஏது இவ்வளவு பணம்?' என்று கேட்க,  " நீங்கள் கொடுக்கும் சம்பளப் பணத்தில் மாதம் ஐந்து ரூபாய் மிச்சப்படுத்தினேன். நான்கு மாதத்தில் இருபது ரூபாய் சேர்ந்தது. அதைத்தான் கொடுத்தேன்'  என்று சொல்ல அந்த இளைஞர் உடனடியாக காங்கிரஸ் அலுவலகத்துக்குப் போய்  "இனிமேல் எங்கள் குடும்பத்திற்கு பதினைந்து ரூபாய் ஊதியம் கொடுத்தால் போதும்.  நாங்கள் உயிர் வாழ்வோம் என்று சொன்னாராம். அவர் யார் தெரியுமா?''   என்று நான் கேட்க,  
எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க...
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com