நீரே... ஆதார புருஷன்!

"புலவராக மனித வடிவிலே வந்த சிவபெருமான் நக்கீரரோடு வாதாடும்போது, "தேவகுலக் கன்னியர்களுக்கும், கலைமகள் போன்ற தெய்வத்தன்மையுடைய பெண்களுக்கும் இயற்கையிலேயே கூந்தலில் மணம் இல்லையா?'' என்று
நீரே... ஆதார புருஷன்!

உன்னோடு போட்டிபோடு! - 33

"எல்லாம் நல்லாத்தான் இருந்தது, ஆனா மனுஷனா வந்த சிவபெருமான், மனுஷனா நின்ன நக்கீரன  ஏன் நெத்திக்கண்ண வச்சு எரிச்சாரு?  இதுதான் என் கேள்வி? இதுக்குப் பதில் சொல்லுங்க பாப்போம்?''  என்றார் மீசைக்காரர்,  மீசையை முறுக்கியபடி.

இப்படி  அவர் கேட்டபோது அனைவரும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். யார் எப்படிச் சொன்னாலும் எதைச் சொன்னாலும் அதற்குள் இருக்கின்ற பொருளைத்  தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆவலும்,  மன உறுதிப்பாடும் தான் அவர் மீது எங்களுக்கு இருந்த ஆச்சர்யம்.  நான் தமிழையாவைப் பார்க்க, அவர் என்னைப் பார்க்க,  அங்கிருந்தவர்கள் எல்லோரும் எங்களைப் பரிதாபமாகப் பார்க்க,
"எப்படிப்பட்ட கடல் மீனும் ஒரு வலையிலையோ, தூண்டில்லயோ சிக்காமலா போயிடும்?''  என்று ஒரு பெரியவர் மீசைக்காரருக்கு ஆதரவாக ஓர் உதாரணத்தைச் சொன்னார். உடனே நான் சற்றே தொண்டையைச் செருமிக் கொண்டு மீசைக்காரரைப் பார்த்து, "உங்களது பிடிவாதமான கேள்விக்கு நன்றி.

இப்போது நீங்கள் கேட்ட இந்தக் கேள்வியைப் பல்லாண்டுகளுக்கு முன்பாக திருவாரூரிலே ஒரு பள்ளி மாணவர் தன் ஆசிரியரிடத்தில் கேட்டாராம். எங்களைப் போலவே அந்த ஆசிரியரும் திகைத்துப் போய் சற்றே அயர்ந்து நின்று விட்டுப் பிறகு இதற்கான விடையைச் சொன்னாராம்'' என்றேன். 

"அந்த விடையைத்தான் சொல்லிப்புடுங்களேன்''என்று கூட்டத்தில் இருந்து ஒருவர் கெஞ்சினார். 

"புலவராக மனித வடிவிலே வந்த சிவபெருமான் நக்கீரரோடு வாதாடும்போது, "தேவகுலக் கன்னியர்களுக்கும், கலைமகள் போன்ற தெய்வத்தன்மையுடைய பெண்களுக்கும் இயற்கையிலேயே கூந்தலில் மணம் இல்லையா?'' என்று கேட்டுக்கொண்டு வந்தபோதே நக்கீரர், "கலைமகள் என்ன? நான் அன்றாடம் வழிபடுகின்ற இறைவனின் இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறாளே மலைமகள், இமயவள், உமையவள் அவளது கூந்தலிலும் இயற்கையிலேயே மணம் இருக்காது!'' என்று குறுக்கே புகுந்து ஆணித்தரமாகச் சொல்ல,  அதைக் கேட்ட மனிதனாக வந்த சிவபெருமான், "நீர் குறிப்பிடும் அந்த உமையவளின் கணவனாகிய சிவபெருமானே நான்தான்; எனக்குத் தெரியாதா என் மனைவியின் கூந்தலில் இயற்கையிலேயே மணம் இருக்கிறதா இல்லையா என்று?'' என்பதைக் கூறாமல் கூறும் பொருட்டுதான் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து காண்பித்தாரேயன்றி நக்கீரனை எரிக்கும் நோக்கத்தில் அதைச் செய்யவில்லை  என்று தன்னிடத்திலே கேள்வி கேட்ட அந்த மாணவருக்கு சமாதானம் சொன்னாராம் அந்த ஆசிரியர்''  என்று சொன்ன நான் மீசைக்காரரைப் பார்த்து,
"ஐயா உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? தான் யார் என்பதைக் காட்டவே சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து காட்டியிருக்கிறார்'' என்று சொல்லிவிட்டு,  "இதை எனக்குச் சொன்ன ஆசிரியரும், அவரிடம் கேள்வி கேட்ட மாணவரும் யார் என்று தெரியுமா?'' என்று கேட்டேன். 

எல்லாரும் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, தமிழையா மட்டும் மெல்லிய புன்னகையோடு,  "அந்த ஆசிரியப் பெருமகனார் தேவாரத்துக்கு உரை செய்த தண்டபாணி தேசிகர் தானே?'' என்று கேட்டார். நானும் மகிழ்ச்சியோடு "சரியாகச் சொன்னீர்கள், அவரிடத்தில் கேள்வி கேட்ட அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் யார் தெரியுமா?'' என்று எல்லாரையும் பார்த்து நான் கேட்க,
"ஒரு க்ளு கொடுங்களேன் ப்ளீஸ்'' என்று பேத்தி ஆர்வமாய்க் கேட்க, "பராசக்தி திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியவர்'' என்று நான் சொல்லி முடிக்கும் முன்,
"கலைஞர் கருணாநிதி''  என்று ஹெட்போன் பாட்டி சத்தமாகச் சொல்ல, "சரியாகச் சொன்னீர்கள்'' என்று அவர்களைப் பாராட்டினேன். எல்லாரும் கை தட்டினார்கள். இப்போது தமிழ்மணி வியப்போடு கேட்டார். "கலைஞர் கருணாநிதி அவர்கள் படிக்கிற காலத்துலேயே எவ்வளவு துடிப்பாக இருந்திருக்கிறார் பாருங்கள். இன்றைக்கு இருக்கிற மாணவர் சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான். வகுப்பில் ஆசிரியரிடத்தில் பாடம் கேட்டால் மட்டும் போதாது தங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டால் தான் அவர்களின் சந்தேகம் தெளியும் அது மற்ற மாணவர்களுக்கும் பயன்படும்'' என்று சொல்லி விட்டு,  "ஐயா, இந்தச் செய்தியை நீங்கள் எங்கே படித்தீர்கள்?'' என்று என்னிடத்தில் கேட்டார்.

"நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முழு நேர முனைவர் பட்ட ஆராய்ச்சியாளராக பி.ஹெச்டி. படித்துக் கொண்டிருந்த போது வெள்ளைவாரணனார், கோவிந்தராஜனார் போன்ற தமிழ்ச் சான்றோர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். அப்போது ஒரு நாள் ஐயா தண்டபாணி தேசிகரோடு நாங்கள்  எல்லோரும் உரையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவத்தை எங்களுக்கு நேரடியாகச் சொன்னார்'' என்று நான் பெருமிதத்தோடு கூறினேன். 

"பார்த்தீர்களா, இப்படிப்பட்ட மாணவர்களும் எந்தக் கேள்விக்கும் விடை சொல்லும் குருமார்களாகிய ஆசிரியர்களும் நிறைந்து இருக்கும் நாடு நம் நாடு. தாகம் உடையவர்கள் தண்ணீருக்கு அலைவதைப் போல, நமக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை மிகுந்த ஆர்வத்தோடு கேட்டுத் தெரிந்துகொள்வதே நம் அறிவு வளர்ச்சிக்கு நல்லது'' என்றார் தமிழ்மணி. இப்படி உரையாடல் போய்க்கொண்டிருக்கும் போதே பெண்கள் கூட்டத்தில் ஒருவரோடு ஒருவர் மெதுவாகத் தங்களுக்குள் பேசிக்கொள்ள அந்த உரையாடலில் கலந்துகொண்ட ஹெட்போன் பாட்டி, "ஓகே, ஓகே, ஐ வில் ஆஸ்க்'' என்று எல்லோரையும் பார்த்துச் சொல்லிவிட்டு,
"ஐயா, எங்கள் மகளிர் அணி சார்பாக ஒரு முக்கியமான கேள்வி. நக்கீரர், சிவபெருமான், மனிதர், தெய்வம், நெற்றிக்கண் இவையெல்லாம் சரிதான். ஆனால் எங்களுக்குள்ள சந்தேகம் உண்மையிலேயே பெண்களுடைய கூந்தலுக்கு வாசனை உண்டா இல்லையா?''  என்று சம்பளம் கூட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் போல என்னையும் தமிழையாவையும் பார்த்து மகிழ்வோடு கேட்டார். 

இப்படி அவர் கேட்டவுடன் "இல்லை''.. "இல்லை'' என்று நாலா பக்கத்தில் இருந்து இளைஞர்கள் எழுந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போல குரல் கொடுத்தார்கள்.

இப்போது தமிழையா தொடங்கினார், "ஒவ்வொரு மனித உடம்பிற்கும் இயற்கையிலேயே ஒரு வாசனை உண்டு என்று அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். அந்த வகையில் மகளிரின் கூந்தலுக்கும் கூட தனிப்பட்ட வாசனைகள் இருந்திருக்கலாம். சிலப்பதிகாரத்தில் கோவலனும், கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது கோசிகமானி என்று ஓர் அந்தணன் மாதவியிடமிருந்து ஒரு திருமுகக் கடிதத்தைக் கோவலனுக்குக் கொண்டுவந்து தருகிறான். அந்தக் காலத்தில் பனை ஓலை நறுக்கில் கடித வரிகளை எழுதி அதை மண் முத்திரை வைத்துக் கொடுப்பார்கள்'' என்றார்.

"வாட் இஸ் த மீனிங் ஆஃப் த முத்திரை?'' என்று பேத்தி கேட்க,
"தட் லெட்டர் இஸ் கவர்டு அண்டு சீல்டு  என்று ஹெட்போன் பாட்டி தன் பேத்திக்கு விளக்கம் சொன்னார். அவர்கள் பேசி முடியும் வரை கேட்டுக்கொண்டிருந்த தமிழையா மீண்டும் தொடங்கி,
"மாதவி கொடுத்த கடிதம் மண்ணால் முத்திரை இடப்பட்ட திருமுக ஓலை. அந்த ஓலையைப் பெற்றுக் கொண்ட கோவலன் அதில் இருந்து புறப்பட்ட நறுமணத்தால் மனம் நெகிழ்ந்து போனான். அப்போது மாதவியோடு தான் கூடியிருந்த காலத்தின் நினைவும் அவள் தலையில் பூசியிருந்த நெய்யின் வாசனையும் (கூந்தலில் பூசும் தைலம் - ஹேர் ஆயில்) அவளது கூந்தலின் மணமும் அவனது நினைவுக்கு வந்தன, என்பதை 
"மண்உடை முடங்கல் மாதவி ஈத்ததும்
 ஈத்த ஓலைகொண்டு இடைநெறித் திரிந்து
மாதவி ஓலை மலர்க்கையின் நீட்ட
உடன்உறை காலத்து உரைத்தநெய் வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்தி'
என இளங்கோவடிகள் சுட்டிக்காட்டுகிறார். மாதவியின் கடிதத்தைப் பெற்றவுடன் அவளது வாசனை பொருந்திய கூந்தலும் அவனது நினைவுக்கு வந்ததாக இளங்கோவடிகள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது பெண்களின் கூந்தலுக்கு வாசனை இருந்திருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது'' என்றார்.

"ஒரு ஆதாரமெல்லாம் போதாது'' என்று சில இளைஞர்கள் ஆட்சேபனை செய்தார்கள்.

"வாட்ஸ்அப்ல வர்ற குரல் பதிவுகளையும், குறுஞ்செய்திகளில் வருகின்ற பதிவுகளையும் கொண்டே சமீபத்தில் ஒரு நீதிபதி வரலாறு காணாத தீர்ப்பைச் சொல்லி ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வழங்கியிருக்கிறார் தெரியுமா? ஆகவே ஒரு ஆதாரமே போதும்'' என்று ஒரு பெண்மனி கண்ணகி போல் எழுந்து குரல் கொடுத்தார். 

உடனே நானும், "அவர்கள் கேட்பதும் சரிதான், அதே நேரத்தில் நீங்கள் சொன்னதும் சரிதான்'' என்றேன்,
"சரித்தான் சரித்தான்'' என்றார்கள் இன்னும் சிலபேர்.

"இதென்ன தெனாலிராமன் தீர்ப்பு சொன்னது மாதிரில்ல இருக்கு'' என்று கேட்ட ஒரு பெரியவர் அதை விவரிக்கவும் தொடங்கினார். "ஒரு முறை தெனாலிராமனை ஒரு வழக்கிற்கு நீதிபதியாக உட்கார வைத்தார்களாம். அப்போது வழக்கு தொடுத்த ஒருவர் எழுந்து ஒரு மணி நேரம் பேச நீ சொல்றதுதான் சரி என்று சொன்னாராம், உடனே வழக்கு மறுத்த மற்றவர் எழுந்து ஒன்றரை மணி நேரம் பேச, "இப்ப நீ சொல்றதுதான் சரி' என்று அவரைப் பார்த்து சொன்னாராம். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் கூட்டத்தில் இருந்து எழுந்து "அதெப்படி ஐயா, ரெண்டு பேர் சொல்றதும் சரியா இருக்கும் என்று கோபத்தோடுக் கேட்க, "இப்ப நீ சொல்றதுதான் சரி' என்று தீர்ப்புச் சொன்னாராம்'' என்று பெரியவர் கதையை முடிக்க எல்லோரும் சிரித்தோம்.

பிறகு நான் தொடர்ந்து, "ஒரு ஆதாரம் போதாது என்பவர்களுக்காக இதோ இன்னொரு ஆதாரம். ஆண்டாளுடைய திருப்பாவையின் ஏழாவது பாடலில் 
"கீசு கீசு என்று எங்கும் ஆனை(ச்) சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ 
பேய்ப்பெண்ணே
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால் 
ஓசை படுத்த தயிரரவும் கேட்டிலையோ?' 
எனப் பாடுவதால் பெண்களின் கூந்தலுக்கு, ஆய்ச்சியர் கூந்தலுக்கு தனி வாசனை உண்டு, இது ரெண்டாவது ஆதாரம்'' என்றேன் நான். 

"ஆஹா நீரே ஆதார புருஷன்'' என்று ஹெட்போன் பாட்டி என்று வணக்கத்துடன் சொல்ல எல்லோரும் கை தட்டி சிரித்தார்கள்.

"சரி இப்படி பேசிக்கொண்டே இருப்பதைக் காட்டிலும் வேறு ஏதாவது வார்த்தை விளையாட்டு, விடுகதைகள், வினாடி-வினா என்று தொடங்குவோமே'' என்றார் தமிழ்மணி.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com