நெற்றிக் கண் திறப்பினும்...

"எழுத்தாளர் சுஜாதா அதிருதுல்ல என்கிற சொல் திருப்பாவையில் எங்கே வருகிறது என்று கேட்க, நானும் உடனே தயங்காது, திருப்பாவையின் நாலாவது பாடலாகிய, 
நெற்றிக் கண் திறப்பினும்...

உன்னோடு போட்டிபோடு! - 32

"எழுத்தாளர் சுஜாதா அதிருதுல்ல என்கிற சொல் திருப்பாவையில் எங்கே வருகிறது என்று கேட்க, நானும் உடனே தயங்காது, திருப்பாவையின் நாலாவது பாடலாகிய, 
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியன் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர்  எம்பாவாய்!
எனும் பாடலைச் சொல்லி, வலம்புரிபோல் நின்று"அதிர்ந்து' எனும் வரியை நான் அழுத்தமாகச் சொன்னவுடன் அவர் மிக்க மகிழ்ச்சியடைந்து, "சரி... தாத்தா சொத்து பேரனுக்கு என்பது போல, நம் முன்னோர்கள் கூறிய கருத்துக்களை மட்டுமல்லாமல் பாடல் வரிகளையும் கூட உரிமையோடு எடுத்துக்கொள்ளலாம் தானே?''  என்று சந்தோசமாய்க் கேட்டார்.

உடனே நானும், "தாராளமாக "நன்னூல்' என்னும் இலக்கண நூலை எழுதிய அதன் ஆசிரியராகிய "பவணந்தி முனிவர்' நீங்கள் சொன்னபடி எடுத்துக்கொள்ளலாம் என்ற உரிமையும் தந்திருக்கிறார்'' என்று சொல்லி,
முன்னோர் மொழி பொருளேயன்றி அவர்மொழியும்
பொன்னேபோல் போற்றுவோம் என்பதற்கும் 
            - முன்னோரின்
வேறு நூல் செய்துமெனும்; மேற்கோள் இல் 
                                                                                 என்பதற்கும்;
கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்!
என்று கூறியிருக்கிறார்'' என்று சொன்னேன்.

"ஆக, "அதிருதுல்ல' என்பது ஆண்டாள் வரிதான்''  என்று சொல்லி முடித்தேன். 

"எல்லாம் சரிதான், ஆனா அந்த நெத்திக் கண்ணைத் தெறந்து நக்கீரன சிவபெருமான் ஏன் எரிச்சாருன்கிற ரகசியத்த எனக்குக் கடைசி வரைக்கும் யாரும் சொல்ல மாட்டீங்க போலிருக்கே?'' என்று ஆதங்கத்தோடு கேட்டார் மீசைக்காரர்.

நான் சொல்லத் தொடங்கும் முன்பாக நம் தமிழையா இடையில் நுழைந்து,   "ஐயா, அது என்ன வழக்கு அப்படிங்கிறத... நாங்க உங்களுக்கு முதல்ல விளக்கணும், அப்பத்தான் அதனோட முழுப்பொருள் உங்களுக்குப் புரியும்'' என்று கூற,
"தமிழ் நாட்டில் மட்டும்தான், குறிப்பாக நம் தமிழ்மொழியில் மட்டும்தான் பட்டிமன்றங்கள், வழக்காடுமன்றங்கள், சொல்லாடல்மன்றங்கள் இவையெல்லாம் இருக்கின்றனவா? அல்லது பிற மொழிகளிலும் இது போன்ற விவாத மேடைகள் உண்டா?''  என்று தமிழ்மணி கேட்டார். 

"நல்ல கேள்வி கேட்டீங்க, பழமையும், பெருமையும் மிக்க நம் தமிழ் மொழியில்தான் இப்படியான ஆசிரியர், மாணவருக்கான வினா-விடை (கேள்வி-பதில்) முறையும், கலந்துரையாடலும் உண்டு. தமிழ்ச்சபைகளில் கூட ஒரு கருத்தை ஒருவர் கூறுவதும், மறுப்பதுமாக உரையாடல்களை வளப்படுத்தி நம் மொழியை வளர்த்திருக்கிறார்கள் நம்முன்னோர்கள். தமிழ் தவிர பிற மொழிகளில் கவியரங்கங்கள், கஜல்பாடல்கள், நாடகங்கள் இவை இருக்குமேயன்றி பட்டிமன்றங்களோ, வழக்காடுமன்றங்களோ இருப்பதற்கான வாய்ப்பு இல்லை'' என்றார் தமிழையா. 

"நீங்க சொல்றது 100% கரெக்ட், அப்படிப் பிற மொழிகளில்  இருந்திருந்தால், உதயா, ஆசியா நெட், ஜெமினி, ஜீ ஹிந்தி டி.வி என்று ஆல் லாங்வேஜ் சேனல்களிலும் பிச்சு உதறியிருப்பானே'' என்றார் ஹெட்போன் பாட்டி. 

"கிரான்ட்மா, இண்டியன் லாங்வேஜஸ்ல மட்டுமில்ல இங்கிலீஷ், பிரெஞ்ச், ஸ்பானிஷ் இப்படி வேர்ல்டு லாங்வேஜ்லக் கூட இருக்கிறதா எனக்குத் தெரியல'' என்று பேத்தியும் தன் பங்குக்கு ஆமோதிக்க, "கேட்டீயாயா, நம்ம தமிழத் தவிர  உலகத்துல வேற எந்த மொழியிலேயும்  பட்டிமன்றம்... வழக்காடு மன்றம் இல்லையாம், இந்தச் சின்னப் பிள்ள என்னமா இங்கிலீஷ் பேசுது! எத்தன மொழி தெரிஞ்சு வச்சுருக்குதுன்னு பார்த்தியா'' என்று ஒரு பெரியவர் ஆச்சர்யத்தோடு கேட்டார். 

"இதென்ன ஆச்சர்யம், நேத்து நான் பார்த்த இங்கிலீஷ் படத்துல 6 வயசு பையன் இங்கிலீஷ்ல வெளுத்து வாங்குறான்'' என்று தன் பங்குக்கு ஆச்சர்யத்தைப் பகிர்ந்து கொண்டார். 

"அட, அது கெடக்குதுயா நம்ம நக்கீரன...'' என்று மீசைக்காரர் தொடங்குவதற்கு முன்பாக, "இந்தாபாரு இன்னொருக்க நக்கீரன்னு நீ சொன்ன நானே நெத்திக்கண்ண தொறந்துருவேன்'' என்று ஒரு பெரியவர் கோபமாகக் கத்தினார். 

"புலவர்களே, சாந்தமாக உரையாடுங்கள்'' என்று பாண்டிய மன்னனைப் போல் தமிழ்மணி கூற, தமிழையா தொடர்ந்தார். "இந்தா பாருங்க, இப்ப நான் அந்தப் பழைய விஷயத்த சொல்லப்போறேன்.  யாரும் குறுக்கப் பேசக் கூடாது, "யப்பா, சுக்குமல்லிக் காபி ஊத்துற தம்பி எல்லார் கையிலேயும் சூடா அதக் குடு'' என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

"புராண காலத்துல நடந்த வழக்காடு மன்றம் இது. மதுரையை ஆண்ட செண்பகப் பாண்டியன் என்றொரு மன்னன் தன் மனைவியாகிய பட்டத்தரசி பாண்டிமாதேவியோடு தனித்திருந்து உரையாடிக் கொண்டிருந்தான். அவளது கூந்தலின் நறுமண  வாசனை அவனை மயங்க வைத்தது. அதனால் அந்த மன்னன் ஆச்சரியப்பட்டுப் போய், பெண்களின் கூந்தலில் உண்டாகும் இந்த இனிய நறுமண வாசனை இயற்கையானது தானா? என்று சிந்தித்தான்.  பின்னர் தமிழ்ச்சபையில் புலவர்களை வரவழைத்து விவாதம் செய்தான்.  அச்சபையில் இருந்த சில தமிழ்ப்புலவர்கள் மன்னன் சொல்வதே சரி,  இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு என்றார்கள், வேறு சிலரோ அதை மறுத்தார்கள். அப்போது பாண்டிய மன்னன் ஒரு அறிவிப்பு செய்தான்.  எப்படி தெரியுமா?

"நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி, இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், நமது மன்னர் செண்பகப்பாண்டியருக்கு ஓர் அரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் பாடலை யார் எழுதிக் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும் டம...டம...டம...'' என்று ஒலி எழுப்பி அவர் நிறுத்த  அங்கிருந்த எல்லோரும் கைதட்டினோம்.

தமிழையா தொடர்ந்தார்:  "இந்த அறிவிப்பைக் கேட்ட தருமி என்ற ஏழைப் புலவன் பரிசுக்காக ஏங்கி நின்ற போது, சிவபெருமானே தமிழ்ப் புலவராக வந்து தான் எழுதிய பாடலை தருமிக்குக் கொடுக்க அவரும் அதை அரச சபைக்குக் கொண்டு செல்ல, அந்தப் பாடலில் பிழையிருப்பதாகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராயிருந்த நக்கீரர் மறுத்துக் கூறினார்'' என்று சொன்னவுடன்,
"அந்தக் கதைதான் தெரியுமே, அந்தப் பாட்டுக் கூட சரியா ஞாபகம் வரமாட்டேங்குதே' என்று ஹெட்போன் பாட்டி சொல்லிக்கொண்டிருந்த போது,  அந்தப் பேத்தி தன் டேபில் (Tab)  இருந்த பாடலை தன் பாட்டியிடம் காட்ட, உடனே ஹெட்போன் பாட்டியும் தொண்டையைச் செருமிக் கொண்டு, 
"கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில்இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?''
என்று அந்தப் பாடலை கம்பீரமாகச் சொல்லி முடிக்க  நாங்கள் எல்லோரும் "பட பட' என்று கை தட்டினோம்.

"பேத்தி இங்கிலீஷ்ல பேசுது அதுதான் ஆச்சரியமுன்னு நெனச்சேன், ஆனா இந்தப் பாட்டியம்மா இந்தியில அருமையாப் பாடுதே'' என்று ஒருவர் அப்பாவியாகச் சொல்ல, சிலர் குபீரென்று சிரித்தார்கள்.

"யோவ், அந்தம்மா சொன்னது தமிழ்ப் பாட்டுதான்யா... உனக்கு  இந்தக்காலத்துப் பாட்டும் புரியாது, அந்தச் சங்ககாலத்துப் பாட்டும் புரியாது போ'' என்று மற்றொருவர் எரிச்சலோடு சொன்னார். உடனே தமிழையா,  ஹெட்போன் பாட்டியைப் பார்த்து, "அம்மா, நீங்கள் சொன்ன தமிழ்ப்பாட்டுக்கு நன்றி, ஆனால் இந்தப் பாட்டு திருவிளையாடல் புராணத்தில் வரும் பாட்டு இல்லை'' என்றார் உறுதியாக. 

"வாட்? நான் அந்தப் படத்த ரிலீஸ் ஆன காலத்துல இருந்து இப்ப வரைக்கும் அந்தத் தமிழுக்காகவே 100 தடவைக்கு மேலே பார்த்துக்கிட்டே இருக்கேன். நிச்சயமாக எனக்குத் தெரியும் அந்தப் பாட்டு திருவிளையாடல் படத்துலதான்'' என்று ஹெட்போன் பாட்டி வாதாட, 
தமிழையா விடாமல், "அம்மா நீங்கள் சொன்ன அந்தப் பாட்டு தமிழ்ப்படமான திருவிளையாடல் படத்தில் வருவது தான் என்பது எனக்கும் தெரியும், ஆனால் அந்தப் பாட்டு பரஞ்சோதி முனிவர் எழுதின திருவிளையாடல் புராணத்தில் முழுமையாக இல்லை, கொங்கு தேர் வாழ்க்கை எனும் சொல் தொடரை மட்டும் அவர் எடுத்துக் கையாண்டிருக்கிறார்.  

பிற்காலத்தில் நீங்கள் சொன்ன அந்தக் குறுந்தொகைப் பாடலை முழுமையாகத் திருவிளையாடல் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓர் ஆச்சரியம் பாருங்கள் அந்தப் பாடலை எழுதிய புலவரின் பெயர்  இறையனார்'' என்று அவர் சொல்லச் சொல்ல... 

எங்களோடு உட்கார்ந்திருந்த ஒருவர், "மாப்பிள்ளை அவர்தான் ஆனா சட்டை அவரோடது இல்லை என்கிறது மாதிரில்ல இருக்கு' என்று படையப்பா வசனம் பேசினார்.

நான் தமிழையாவைப் பார்த்து, "ஐயா நீங்கள் சொல்வது சரிதான். நாம் இப்போது இந்தப் பாட்டு எந்த இலக்கியத்தில் வருகிறது என்பதைப் பற்றி பேச வேண்டாம், சிவபெருமானுக்கும், நக்கீரனுக்கும் இடையே நடந்த அந்த வாதப் போர் பற்றிச் சொல்லுங்கள்'' என்றேன். 

"அதுக்கு இல்லை ஐயா, எங்கே பிழை கண்டாலும் அதை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்பது நம் தமிழ் மரபு. சரி கேளுங்கள், நக்கீரர் தருமி என்ற அந்தப் புலவர் கொண்டு வந்த பாட்டில் பிழையிருக்கிறது என்று சொன்னவுடன் புலவராக வந்த சிவபெருமான் அவரோடு வந்து வாதாடத் தொடங்கினார். 
சிவபெருமான் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று சொல்ல...

"ஒருக்காலும் இருக்க முடியாது, வாசனாதி திரவியங்களைப் பூசிக் கொள்வதாலும், தொடர்ந்து மலர்களைச் சூடிக்கொள்வதாலும் தான் பெண்களின் கூந்தலுக்கு மணம் இருக்கிறதே தவிர, இயற்கையிலேயே அவர்களது கூந்தலுக்கு மணம் இல்லை' எனக் கடுமையாக மறுத்தார் நக்கீரர்.

"நக்கீரா, நன்றாக என்னைப் பார், நான் எழுதிய தமிழ்ப்பாட்டுக் குற்றா?'  என்று தன் நெற்றிக் கண்ணைச் சிவபெருமான் சுட்டிக் காட்ட, அதற்கு அஞ்சாத நக்கீரரும்,  "புலவரே, நீரே முக்கண் முதல்வனும் ஆகுக, உடம்பெல்லாம் கண்ணாகிச் சுட்ட போதிலும், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று அஞ்சாது எடுத்துரைத்தார்.

சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறக்க, நக்கீரர் அதன் வெப்பம் தாங்காது சுருண்டு விழுந்தார்'' என்றார் தமிழையா.

"எல்லாம் நல்லாத்தான் இருந்தது, ஆனா மனுஷனா வந்த சிவபெருமான், மனுஷனா நின்ன நக்கீரனை  ஏன் நெத்திக்கண்ணை வச்சு எரிச்சாரு? இதுதான என் கேள்வி?, இதுக்குப் பதில் சொல்லுங்க பாப்போம்?'' என்றார் மீசைக்காரர், மீசையை முறுக்கியபடி...
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com