இதோ வந்தாச்சே சோர்வடைஞ்ச உள்ளத்துக்கு மருந்து, தன்னம்பிகை ஊட்டற டானிக்!

இதோ வந்தாச்சே சோர்வடைஞ்ச உள்ளத்துக்கு மருந்து, தன்னம்பிகை ஊட்டற டானிக்!

வானமே எல்லை படம் பார்த்திருக்கிறீர்களா? அதிலொரு வசனம்...

“நான் அப்படி ஒண்ணும் பெருசா சாதிக்கல... மனுஷனுக்கு தன்னம்பிக்கை இருந்தா போதும், முயற்சி திருவினையாக்கும்...”

“ஃபிரெண்ட்ஸ் எத்தனையோ குறைபாடுகள் இருக்கலாம். இருந்தாலும் நமக்கு கிடைச்சிருக்கற பிறவி ஒரு பெரிய வரம்! லைஃப் இஸ் எ பூன் இதை வீணாக்கலாமா? தோல்விகளும், ஏமாற்றங்களும் வெறும் தடைக்கற்கள்! இந்த தடைக்கற்களை வெற்றியின் படிக்கற்களா மாத்திக்க தெரியணும். அவ்வளவு தான்.” இது படத்தில் வரும் டாக்டர். காந்திராமனின் திரை வசனம். சொல்லப்பட்ட இடம் திரைப்படம் என்பதால் அதையும் நடிப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சொன்ன நபரும் சரி, அவரது வார்த்தைகளும் சரி அத்தனையும் 100 சதம் உண்மையானவை. படத்தில் காந்திராமனாக நடித்தவரின் நிஜப்பெயர் H.ராமகிருஷ்ணன். தற்போது எஸ்.எஸ். மியூசிக் சேனலின் சி.இ.ஓ ஆகப் பணியாற்றுகிறார். பிறந்து இரண்டரை வயது முதல் இவர் ஒரு மாற்றுத் திறனாளி என்பது அவரது முகத்தை மட்டுமே பார்க்க வாய்க்கும் யாருக்குமே நம்ப முடியாத செய்தியே!

இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம், இன்றைய தினத்தில் வாழ்வியல் உதாரணமாகக் கொள்ள நமக்கு சற்றே அறிமுகமான இவரைக் காட்டிலும் சிறந்தவர்கள் எவர்!

காலையில் கண்விழித்தது முதலே அலுப்புடனும், சலிப்புடனும் நாட்களைக் கடத்தும் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். ஏன் சில நேரங்களில் நாமும் கூட அப்படித் தான். இறைவன் படைப்பில் எல்லா உடலுறுப்புகளும் சீராக அமைந்த நமக்கே இப்படி எல்லாம் இருந்தால். பிறக்கும் போதேவோ, அல்லது பிறந்து சில வருடங்களிலோ உடலுறுப்புகளில் குறைபாடுகள் ஏற்பட்டு அன்றாட வேலைகளுக்கும், அத்யாவசிய வேலைகளுக்கும் பிறரை எதிர்பார்க்க வேண்டிய நிலையிலிருக்கும் மனிதர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? பல சமயங்களில் நாம் இப்படியெல்லாம் யோசித்து விடை கண்டோமென்றால் பிறகு நமது அலுப்புகளும், சலிப்புகளும் கண் காணாத தூரம் ஓடி விடும்.

H.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இரண்டரை வயது முதலே போலியோ பாதிப்பால் இரண்டு கால்களுமே வலுவை இழந்து விட்டன. போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்பதால் இவருக்கு பள்ளிப் படிப்பு கூட அப்போது மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் படிப்பில் மிக ஆர்வமாக இருந்த தனது பேரனை எப்படியாவது படிக்க வைத்தே தீர்வது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்ட ராமகிருஷ்ணனின் தாய் வழி தாத்தா அவரை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்த்து பயில வைத்தார். அந்தப் பள்ளி இருந்தது வேறு ஒரு ஊரில். தனது ஊரிலிருந்து பள்ளிக்கு அந்நாட்களில் ராமகிருஷ்ணன் பேருந்தில் தான் பயணிக்க வேண்டும். அப்போதெல்லாம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் எல்லாம் அவரிடம் இல்லை. படிப்பின் மீதிருந்த ஆசையில் அவரது அசெளகரியங்கள் அவருக்கு மறந்து போயின.

பள்ளிப் படிப்பை முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குப் படிக்கத் தொடங்கினார். அதிலும் தேறி செய்தி வாசிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், செய்தி சேகரிப்பாளர் என மூன்று வேலைகளுக்காக அவர் தேர்வானாலும் கூட அவை அத்தனையிலும் அவர் போலியோவை காரணம் காட்டி நிராகரிக்கரிக்கப் பட்டார்.

அதன் பின் பஜாஜ் நிறுவனத்தார் இவருக்காக ஸ்பெஷலாக வடிவமைத்துக் கொடுத்த ஆட்டோ ரிக்‌ஷாவில் ஹேண்ட் பிரேக் வசதி ஏற்படுத்திக் கொண்டு பயன்படுத்தத் தொடங்கினார். இதழியலின் மீது பெருங்காதல் கொண்ட ஒரு இளைஞருக்கு தான் ஒரு மாற்றுத் திறனாளி என்பதால் மட்டுமே அந்த வாய்ப்புகள் பறிபோவதில் துளியும் விருப்பமில்லை.

இத்தனைக்கும் பள்ளிக்காலத்தில் தான் ஒரு செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என  மிகப்பெரிய லட்சியமே கொண்டிருந்தார் H.கிருஷ்ணன். அப்போது ஆல் இந்தியா ரேடியோ செய்தியாளர்களில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்த மெவில் டி மெலோ தான் H. கிருஷ்ணனின் ஆதர்ஷம். தான் ஒரு செய்தி வாசிப்பாளராகவோ, தொகுப்பாளராகவோ ஆக வேண்டும் என தனது ஆசையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி டி மெலோவுக்கு கிருஷ்ணன் கடிதம் எழுதினார். பதிலாக டி மெலோ முதலில் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு பிறகு ஆல் இந்தியா ரேடியோ செய்தி வாசிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு கூறினார். அதன் படியே செய்த கிருஷ்ணன் தனது ஆசைப்படி கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் ஒரு செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி என இரு ஊடகங்களிலுமே பணியாற்றினார். 
தனது வாழ்வில் தான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் போராட்டங்களையும், நிராகரிப்புகளையும் சந்தித்தாலும் கூட அத்தனை தடைக்கற்களையும் வெற்றியின் படிக்கற்களாக அவர் மாற்றிக் கொண்ட வித்தையால் தான் அவரால் சுமார் 40 ஆண்டு காலம் ஒரு பத்திரிகையாளராகவும், சிறந்து விளங்க முடிந்தது. ஒரு பத்திரிகையாளராக, ஊடகவியலாளராக இருப்பது மட்டுமல்ல ராமகிருஷ்ணன் மிகச் சிறந்த கொன்னக்கோல் வித்தகரும் கூட. கர்நாடக இசைப்பற்றின் காரணமாக ஆரோகணம் மற்றும் ஸ்ரீ பைரவி கான சபா என இரண்டு சபைகளையும் நடத்தி வருகிறார். இதோடு கூட தன்னைப் போலவே மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்களுக்காக ‘கிருபா’ எனும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி உதவி செய்து வருகிறார். சென்னை தூர்தர்ஷனில் முதல் தர செய்தி வாசிப்பாளராக மட்டுமல்ல, இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறையின் கீழ் மாற்றுத் திறனாளியாக மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர்களிலும் இவரே முதல்வர். 

இன்றைக்கிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் எல்லாம் இல்லாத காலத்திலும் கூட நேரடி ஒளிபரப்புகளைத் திறம்படக் கையாள்வதில் மிகத் தேர்ந்தவராக இருந்தவர் H.கிருஷ்ணன். ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் லாஞ்சிங் என்றாலும் சரி மூத்த அரசியல்வாதிகளை நேர்காணல் செய்வதாக இருந்தாலும் சரி மிகத் திறமையாக அனைத்தையும் செய்து முடிப்பவர் என்ற பாரட்டுதலுக்குரியவர் இவர்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று ஒரு மூத்த இதழியலாளரான, மூத்த ஊடகவியளாலரான இவரை நினைவுகூர்தலும் இவரைப் பற்றி இனி வரும் சந்ததியினருக்கு தெரியப்படுத்தலும் நாம் செய்ய வேண்டிய நற்காரியங்களில் ஒன்றே. அதோடு ‘வானமே எல்லை’ படத்தில் வரும் இளைஞர்களைப் போலவே நாமும் கூட 

‘தாழ்வு மனப்பான்மை என்கிற சுவற்றை இடிப்போம், இயலாமைங்கற இடிபாடுகளை உடைச்செறிவோம், மனித மேம்பாட்டுக்குத் தடையா இருக்கற தடைக்கற்களை தகர்த்தெறிவோம், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்காம ஓய மாட்டோம். இது சத்தியம்.’ எனும் உறுதி கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com