முயன்றால் மத்திய அரசு வேலை பெறுவது அப்படியொன்றும் குதிரைக் கொம்பல்ல!

ஒவ்வோராண்டும் மத்திய அரசின் வேலைகளுக்கான காலியிடங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து ஐந்து பேர். ஐந்துபேரும் மத்திய அரசில்தான் வேலை பார்த்தோம்.
முயன்றால் மத்திய அரசு வேலை பெறுவது அப்படியொன்றும் குதிரைக் கொம்பல்ல!

"அப்பாடா..ஒரு வழியா ரிட்டையர்டு ஆயாச்சு. நிம்மதியா பென்ஷன் பணத்தை செலவழிச்சு பேரன், பேத்திகளை கொஞ்சிக்கிட்டே வாழ்க்கையை ஓட்டிவிடலாம்'' என்று வாழ்பவர்கள் பலர் இருக்க, தனக்குத் தெரிந்ததை இளைஞர்களுக்குத் தெரிவித்து அவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றிட இன்றும் ஓடியாடி உழைத்து வருகிறார் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த என்.எம்.பெருமாள்.



 என்.எம். பெருமாள் 1974 ஆம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஒருங்கிணைந்த தேர்வு (IAS etc Exam) மூலமாக தேர்வு செய்யப்பட்டு 34 ஆண்டுகள் தில்லி மத்திய அரசு செயலகத்திலும், தொலைத் தொடர்பு துறையில் இயக்குநராகவும் (பாராளுமன்றம்) இருந்து 2010 இல் ஓய்வு பெற்றவர்.

தற்போது தென்காசியில் வசித்து வருகிறார். அவரின் சேவை குறித்துக் கேட்டோம்:
 
 உங்களது ஆரம்ப கால கல்வி பற்றி?
தென்காசி அருகேயுள்ள பண்பொழி கிராமத்தில் பிறந்தேன். தமிழ் வழியில் தான் படித்தேன். 1966இல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் (PUC) முதல் வகுப்பில் தேறினேன்.

பழனியில் உள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் கலைக்கல்லூரியில் (1967-70) ஆங்கில இலக்கியம் பயின்றேன். ஆனால் மூன்றாம் வகுப்பில் தான் தேறினேன். வீட்டு சூழ்நிலை காரணமாக மேலே படிக்க இயலவில்லை. வெறும் மூன்றாம் வகுப்பு பி ஏ பட்டப்படிப்புடன் ஐ.ஏ.எஸ் தேர்வில் என்னால் வெற்றி பெற முடிந்தது.
 
 ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியது எவ்வாறு?
காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் பசுபதி ஐ.ஏ.எஸ் என்பவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தார். மிகவும் நேர்மையான அதிகாரி என்று மக்களிடையே பெயர் பெற்றவர். நாமும் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் அவரைப் பார்த்துதான் என் மனதில் தோன்றியது.
 
தமிழ் இளைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது குறித்து?

1980-களில் தில்லியில் தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம் (TYCA) என்ற அமைப்பு தமிழ் இளைஞர்கள் மத்தியில் அருமையான சேவைகள் செய்து வந்தது. அந்த அமைப்பு மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து வந்தது. அதனுடன் இணைந்தும், தனியாகவும் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்தேன். அதே சமயம் கிராமப்புற இளைஞர்களுக்கும் உதவ நினைத்தேன்.

இன்று இருப்பது போல் அன்றைய கால கட்டத்தில் தமிழக மாவட்ட நூலகங்களில் பரந்த அளவுக்கு போட்டித் தேர்வுகளுக்குண்டான நூல்கள் கிடையாது. தில்லியிலுள்ள நண்பர்களிடம் பணம் வசூலித்து திருநெல்வேலி நகர நூலகத்திற்கும் பாளையங்கோட்டை மாவட்ட நூலகத்திற்கும் போட்டித் தேர்வுகளுக்குண்டான ஏராளமான புத்தகங்களை வாங்கி அனுப்பினேன்.
ஆனந்த விகடனில் "கேள்விகள் இங்கே}பதில் இங்கே' என்ற தலைப்பில் 80 களில் பல மாதங்கள் தொடர்ந்து எழுதினேன். இதில் பல நூறு இளைஞர்களின் வேலை தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளேன்.

மத்திய தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளைப் பற்றிய விவரங்களை மடல் வடிவில் தமிழகத்திலுள்ள முக்கியமான கல்லூரிகளுக்கும் குறிப்பிட்ட மாவட்ட மைய நூலகங்களுக்கும் தகவல்கள் அனுப்புவேன். சென்னை விவேகானந்தா கல்லூரி, திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி போன்ற கல்லூரிகளின் முதல்வர்கள் என்னுடைய இந்த சேவைக்காக அப்பொழுது பாராட்டு தெரிவித்து மடல் எழுதியுள்ளார்கள். நூலகங்கள் மூலமாகத் தெரிந்து கொண்ட மாணவர்களும் சேவையைப் பாராட்டியுள்ளார்கள்.

 2010-இல் ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் முதன் முதலில் இரண்டாயிரமாண்டு தமிழ் இலக்கியங்களின் இனிய பகுதிகளைத் தொகுத்து "தமிழ் இலக்கியப் பேழை' என்ற நூலை மணிவாசகர் பதிப்பகம் மூலமாக வெளியிட்டேன். தமிழில் இதுவே முதல் முயற்சி. இது தமிழ்நாடு தேர்வாணைய தேர்வுகள் எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக் கூடிய நூலாகும். 750 பொது அறிவுக் கேள்விகள் அடங்கிய "பொது அறிவுப் பேழை' என்ற ஒரு குறுநூலை சொந்தமாக வெளியிட்டேன். ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு பெரும்பாலான பிரதிகளை எனது பகுதியிலுள்ள மாணவர்களுக்கு இலவசமாக அளித்தேன். போட்டித் தேர்வு எழுதும் தமிழக இளைஞர்களுக்குப் பயன்படும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கேள்வி பதில் வடிவில் எளிய நடையில் எழுதியுள்ளேன். 130 பக்கங்களை மட்டும் கொண்டுள்ள இந்நூல் 2014 இல் வர்த்தமானன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தவிர போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களுக்காக தனிச்சுற்றுக்கு மட்டுமாக இந்திய சுதந்திரப் போராட்டம், அடிப்படை ஆங்கில அறிவு நூல், IAS  மற்றும் மத்திய அரசு உயர் நிலை வேலைகள் பெறுவது எவ்வாறு போன்ற குறுநூல்கள் எழுதியுள்ளேன். இலாப நோக்கின்றி-விரும்பும் இளைஞர்களுக்கு வழங்கி வருகின்றேன்.

 ஓய்வு பெற்ற பின்பு தென்காசியில் வசிக்கிறேன். இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும் இளைஞர்களையும் சந்தித்திருக்கிறேன். பள்ளி, கல்லூரிகள் என 100-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் மத்திய அரசில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்துப் பேசியுள்ளேன். ஒவ்வோராண்டும் மத்திய அரசின் வேலைகளுக்கான காலியிடங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து ஐந்து பேர். ஐந்துபேரும் மத்திய அரசில்தான் வேலை பார்த்தோம். இதேமாதிரி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏன் முயலக்கூடாது? முயன்றால் மத்திய அரசில் தமிழர்கள் மிக அதிக அளவில் வருவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
 
ஆங்கில நூல்களை எழுதியுள்ளீர்களா?

 இன்று இந்தியா முழுமைக்கும் அருகி வருவது நேர்மை பெருகி வருவது ஊழல்.
 ஊழலைப் பற்றிய எனது ஆங்கிலப் புதினம் Swamy IAS  Good or Bad  2014 இல் வெளிவந்தது. மற்றொரு நூல் ஆங்கில இலக்கியம் பற்றியது. தற்கால ஆங்கில இலக்கியம் சாஸர் காலத்தில் (1343-1400) தொடங்கியது. கிட்டத்தட்ட 600 ஆண்டு கால ஆங்கில இலக்கியத்தின் இனிய பகுதிகளைத் தொகுத்து English Literary Quotations என்ற நூலை வெளியிட இருக்கிறேன். கொல்கத்தாவிலுள்ள ஒரு பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது. General Knowledge Digest என்ற தனிச்சுற்றுக்குண்டான குறுநூலையும் எழுதியுள்ளேன். இது 1000 பொதுஅறிவு கேள்வி} பதில்களை ஆங்கிலத்தில் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com