நூறு வயதிலும் சாதிக்கலாம்! : நூறு  வயது  இளைஞி  மன் கவுர்

நூறு வயதாகும்  மன்,  100 மீட்டர் ஓட்டப்பந்தய  தூரத்தை  ஓடிக் கடக்க  எடுத்துக் கொண்ட நேரம் ஒரு நிமிடம்  இருபத்தோரு   விநாடிகள்.
நூறு வயதிலும் சாதிக்கலாம்! : நூறு  வயது  இளைஞி  மன் கவுர்

நூறு வயது  ஆகும் போது  எழுந்து  நிற்பதே சிரமமான காரியம்.  தாங்கிப் பிடிக்கும் உதவி இல்லாமல்  நடப்பது என்பது பெரிய சாதனை. அப்படியிருக்கும் போது நூறுவயதில்  நடப்பது  என்ன பிரமாதம்... ஓடியே காட்டுகிறேன்..   என்று    ஓட்டப் பந்தயத்தில்  கலந்து கொண்டு முதலாவதாக  வருவதை   இமாலயச் சாதனை என்றுதானே சொல்ல வேண்டும்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த  மன் கவுர்  கனடாவில் அண்மையில் நடந்த அமெரிக்கா மாஸ்டர்ஸ் கேம்ஸ் அமைப்பு  கனடா வான்கூவரில்  ஏற்பாடு செய்திருந்த   முதியோர்கள் ஓட்டப்பந்தயத்தில், தங்க பதக்கம் வென்று,  சுட்டி முதல் முதியோர் வரை  அனைவரையும் மலைக்க வைத்திருக்கிறார். 

மாஸ்டர் கேம்ஸ்  விளையாட்டு போட்டி நான்கு  ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 49 வயதைக் கடந்த யாரும் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

நூறு வயதாகும்  மன்,  100 மீட்டர் ஓட்டப்பந்தய  தூரத்தை  ஓடிக் கடக்க  எடுத்துக் கொண்ட நேரம் ஒரு நிமிடம்  இருபத்தோரு   விநாடிகள். இவருடன்   சுமார் முப்பது பேர் ஓடியுள்ளனர்.   இவர்கள் அனைவரும் எழுபது முதல் எண்பது வயதுக்குள்   இருப்பவர்கள்.  இவர்களை,   வயதில் பெரிய  மன் கவுர் பின்னுக்குத் தள்ளி  தங்கப் பதக்கம்  வென்றுள்ளார். இந்த  ஓட்டப்  போட்டியில் கலந்து கொண்ட ஒரே பெண் இவர்தான் என்ற பெருமையும்  மன் கவுருக்குச் சொந்தம்.

"மகன் குருதேவ்  சிங்கிற்கு  வயது  எழுபத்தெட்டு.  குருதேவ்   எனக்குத் தந்த ஊக்கம்தான்  என்னை ஓடவைத்தது.  தொண்ணூற்று மூன்று  வயதிலிருந்து   முதியோர்  ஓட்டப் பந்தயத்தில்  கலந்து கொண்டு  வெற்றி பெற்று வருகிறேன். எனக்கு  மூட்டு வலி  எதுவும் கிடையாது.   இதயத்திலும்  பிரச்னை இல்லை. அதனால்  தைரியமாக   ஓட  முடிகிறது. 

நான் தினமும், அதிகாலை, என்  வீடு அருகே உள்ள பூங்காவில்,  நானூறு   மீட்டர் தூரம்  ஓடுவேன்  பிறகு   யோகா பயிற்சி.   எண்ணெய், நெய் இவற்றிற்கு   எனது  உணவில்  இடம்  இல்லை.  தினமும், அதிக அளவில் பழச்சாறுகளை குடிப்பேன்.  நானே தயாரிக்கும் சைவ உணவை  அளவாக   சாப்பிடுகிறேன். எண்ணெய்யில்  பொரித்த  உணவுவகைகளை சாப்பிடுவதில்லை... இவைதான்   எனது  வெற்றியின் ரகசியம்.  

சென்ற  ஆண்டு, கனடாவில் நடந்த ஓட்டப்பந்தயம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில், ஐந்து தங்கம், அமெரிக்காவில் நடந்த உலக தொடர் விளையாட்டுப் போட்டிகளில்  ஐந்து தங்கம், 2011இல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில், "அதலெட் ஆப் தி இயர் விருது' போன்ற பல விருதுகளை பெற்றுள்ளேன்'' என்கிறார் மன் கவுர் உற்சாகமாக.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com