சினிமாவுக்காக வேலையை உதறி விட்டு சாதித்துக் கொண்டிருக்கும் 'சாம்பியன்'

சமூகத்தின் அனைத்து விதமான நோய்மைக்கூறுகளுக்கும் சினிமாவைத்தான் அடிக்கடி குற்றம் சுமத்துவார்கள். அது அப்படியல்ல சினிமாவால் சமூகத்தில் நல்ல மாற்றங்களையும் கொண்டு வர முடியும், என நான் நிரூபிக்க விரும்பு
சினிமாவுக்காக வேலையை உதறி விட்டு சாதித்துக் கொண்டிருக்கும் 'சாம்பியன்'

சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவில், ‘பியூர் சினிமா’ எனும் புத்தகக் கடையைப் பார்த்திருக்கிறீர்களா?

இந்தக் கடைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா? இந்தியாவில் முதல்முறையாக சினிமாவிற்கென்றே, சினிமா புத்தகங்களுக்கென்றே, திறக்கப்பட்ட முதல் கடை இது. இங்கே தமிழில் வெளிவந்த சினிமா சார்ந்த புத்தகங்கள், ஆங்கிலத்தில் வெளியான மிக முக்கியமான சினிமா புத்தகங்கள், குறும்பட, ஆவணப்படம் டி.வி.டி.க்கள் என எல்லாமும் ஓரிடத்தில் கிடைக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக நல்ல சினிமாவிற்கான இயக்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் ஸ்டுடியோவின் இன்னொரு மிக முக்கியமான முன்னெடுப்புதான் இந்த பியூர் சினிமா புத்தகக் கடை.

இந்தக் கடையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயக்குனர் மிஷ்கின் திறந்து வைத்தார். முன்னமே இவர்களின் பதிப்பகமான பேசாமொழி பதிப்பகத்தின் மூலம் பல்வேறு நல்ல சினிமா புத்தகங்களை பதிப்பித்து சினிமா சார்ந்த கல்விக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் மிஷ்கினின் ஐந்து திரைக்கதை புத்தகங்கள் இவர்கள் பதிப்பித்த முக்கியமான புத்தகங்கள். ஜூன் மாத நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றன இந்த புத்தகங்கள்.

இந்த புத்தகக் கடையின் நிறுவனர் அருண், மென்பொருள் வல்லுனராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அருண், 2013 தமிழ் சினிமாவின் மீதிருந்த மோகத்தால் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு தமிழ் ஸ்டுடியோ எனும் நல்ல சினிமாவுக்கான இயக்கத்தையும், பியூர் சினிமா புத்தகக் கடையையும் துவக்கி நடத்தி வருகிறார். கை நிறைய சம்பளம் பெற்றுத் தரும் நல்ல வேலையை உதறி விட்டு எதற்காக இப்படி ஒரு முடிவு என்றால், அதற்கு அருண் அளிக்கும் பதில், “வேலையை விட்டு விடுவது என்று முடிவெடுத்ததால் எனக்குள் இருந்த கலைஞன் உயிர் பெற்றுள்ளான். தொடர்ந்து அந்த வேலையில் இருந்திருந்தால் கை நிறைய சம்பாதிக்கலாம், ஆனால் கலைஞர்களால் தொடர்ந்து ஒரே வேலையை செய்து கொண்டிருக்க முடியாது. வேலையை விட்டதில் எனக்கொன்றும் பெரிய வருத்தங்கள் இல்லை” என்கிறார். இந்த இயக்கம் மற்றும் புத்தகக் கடை மூலமாக எங்களால் பலரது மனதைத் தொட முடிந்திருக்கிறது. இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்த முடிந்தமை குறித்து திருப்தியாகவே உணர்கிறேன்” என்கிறார்.

இந்த புத்தகக் கடையில் புத்தக விற்பனை மட்டுமின்றி, உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறுகிறது, அதாவது வருடத்திற்கு 1500 ரூபாய் கட்டி உறுப்பினர் ஆகிவிட்டால், இங்கே இருக்கும் புத்தகங்களை இங்கிருக்கும் ஓய்வறையில் உடற்கார்ந்து படித்துக் கொள்ளலாம். உலகப் படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்களை இங்கிருக்கும் பெரிய திரையில், நல்ல ஒலியமைப்புடன் கூடிய அரங்கில் பார்த்து மகிழலாம். தவிர புத்தகங்களை பத்து சதவீதக் கழிவில் ஆண்டு முழுவதும் வாங்கி கொள்ளலாம். இது இல்லாமல் தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடத்தப்படும் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள சிறப்பு கழிவும் உண்டு’ என்கிறார்.

மேலும், தமிழில் நல்ல சினிமா, அல்லது சினிமா தொழில்நுட்பம் சார்ந்து நிறைய புத்தகங்கள் வெளிவரவில்லை. நூற்றாண்டுகளை கடந்த தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரம் புத்தகங்கள் கூட சினிமாவிற்காக அச்சிடப்படவில்லை என்பது பெரும் சோகம். இந்தச் சூழலில்தான் சினிமா புத்தகங்களை அதிகமாக கொண்டு வரவும், அவற்றுக்கான விற்பனையை அதிகப்படுத்தவும், நல்ல சினிமாவை எல்லா தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்லவும், சினிமா குறித்த கல்வியை உருவாக்கவும் இந்த புத்தகக் கடை திறக்கப்பட்டுள்ளது என்கிறார் அருண்.

பியூர் சினிமா, கடையில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றிக் கேட்டபோது அருண் கூறியது. ‘பியூர் சினிமா கடை தொடங்கியது முதல் இரண்டு புத்தகங்களை அதிகமான வாசகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒன்று சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி? இன்னொன்று கே. பாக்யராஜின் வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம். சுஜாதா புத்தகம் இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால் கே.பாக்யராஜின் புத்தகத்தை அவரிடமே பேசி, அவரிடம் இருந்த நாற்பது பிரதிகளை பியூர் சினிமா புத்தகக் கடையில் விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த நாற்பது பிரதிகளும் வெகுவிரைவில் விற்றுத் தீர்ந்தால் அடுத்த பதிப்பிற்கு இந்த புத்தகம் செல்லும்.  ஒரு கதையை எப்படி சொல்லவேண்டும் என்கிற உத்தியை நீங்கள் நிச்சயம் இதில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் புத்தகத்தை தொடர்ச்சியாக வாசகர்கள் கேட்கிறார்கள் என்றதும் உடனே புத்தகத்தை விற்பனைக்கு கிடைக்க ஏற்பாடு செய்தார் கே. பாக்யராஜ். அவருக்கு பியூர் சினிமாவின் நன்றி. இப்போது விற்பனையாகிக் கொண்டிருப்பது  ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிதான். இந்த நாற்பது பிரதிகள் விட்டதும், மறுபதிப்பு இன்னும் நிறைய கட்டுரைகளோடு வெளிவரவிருக்கிறது’ என்றார்.

இது தவிர அருண்; லண்டன் பல்கலைக் கழகத்தில், டிப்ளமோ இன் ஃபிலிம் டெக்னாலஜி மாணவராகச் சேர்ந்தது முதல் ஃப்ரெஞ்சு மற்றும் இத்தாலியத் திரைப்படங்களில் அறிமுகமாகியுள்ள ‘நியோ ரியலிஸம்’ எனப்படும் புதிய அலையிலான திரைமொழியை தமிழ் சினிமா உலகின் அடுத்தடுத்த இளம் படைப்பாளிகளும் பின்பற்றச் செய்ய வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என்கிறார்.

தமிழ் சினிமா நூற்றாண்டு விழா நினைவாக, அருண் 100 சிறந்த குறூம்படங்கள் மற்றும் திரைப்படங்களைத் திரையிட்டுவருகிறார். இந்தத் திரையிடலில் சிறப்பு என்னவென்றால் தமிழ் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோரை அந்நிகழ்வில் பங்கேற்க வைத்து, பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்க வைக்கும் முயற்சி.

இதைப் பற்றி பேசும் போது அருண் தெரிவித்த விசயம் “சமூகத்தின் அனைத்து விதமான நோய்மைக்கூறுகளுக்கும் சினிமாவைத்தான் அடிக்கடி குற்றம் சுமத்துவார்கள். அது அப்படியல்ல சினிமாவால் சமூகத்தில் நல்ல மாற்றங்களையும் கொண்டு வர முடியும், என நான் நிரூபிக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சியே இது” என்கிறார். 

இந்த இளைஞரின் முயற்சியும், நல்ல நோக்கமும் வெற்றியடையட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com