கணவரின் குருவுக்குக் காணிக்கை செலுத்த விரும்பினேன்: சாந்தகுமாரி சிவகடாட்சம்!

ந்த புத்தகத்தை எழுதியது எனக்கும் என் கணவர் டாக்டர் சிவகடாட்சத்திற்கும் மிகப் பெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது. அவரது குருவிற்கு இது ஒரு சிறந்த காணிக்கை அல்லவா?''
கணவரின் குருவுக்குக் காணிக்கை செலுத்த விரும்பினேன்: சாந்தகுமாரி சிவகடாட்சம்!

இவர் எழுவதில் சமர்த்தர். அதிலும் குறிப்பாக பயணக் கட்டுரைகளை அதிகம் எழுதியுள்ளார். காரணம், இவரது கணவர் அதிகமாக வெளிநாடுகளுக்கு போவதால் இவரையும் அழைத்துச் சென்றுவிடுவார்.  சிறுகதைகளை எழுதத் துவங்கி, பின் நாவல்களும் எழுதியுள்ளார். கவிதையையும் விட்டு வைக்கவில்லை. இவர், தனது கணவரது  குருநாதரின் வாழ்க்கை வரலாற்றை சமீபத்தில் எழுதியுள்ளார். அவர்தான்,  சாந்தகுமாரி சிவகடாட்சம். அவரது கணவர் இருதய சிகிச்சையில் நிபுணர்.  ஓர் சரிதத்தை எழுத விருப்பம் ஏற்பட்டது எப்படி?  அவரே கூறுகிறார்:

"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் என் கணவர் டாக்டர்  சிவகடாட்சத்திற்கும் திருமணம்  நடந்ததே டாக்டர் ரங்கபாஷ்யத்தினால் தான். எனது தயார் ஒருநாள் உடல் நலமில்லாமல் அவதிப் பட்டார். அதனால் டாக்டர் ரங்கபாஷ்யத்திடம் அவரை அழைத்துச் சென்று காட்டினேன். சில நாள்களுக்கு பின்னர், எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது எனது கணவரின் பெயர் அடிபட, அவர் டாக்டர். ரங்கபாஷ்யத்தின் (என்.ஆர்.) உதவியாளராக இருக்கிறார்.  அதனால் டாக்டரையே கேட்டு முடிவு செய்யலாம் என்று நினைத்து அவரை கேட்க சென்றிருக்கிறார் அம்மா.   

ஏதோ உடல் கோளாறு காரணமாகத்தான் இவர் வந்திருக்கிறார் என்று நினைத்து அங்கிருந்த உதவியாளர்கள், வரிசையில் டாக்டரை பார்க்க வைத்தனர்.  டாக்டர் இவரை பார்த்தவுடன்  "உடம்புக்கு என்ன?'' என்று கேட்க "உடம்புக்கு ஒன்றும் இல்லை. என் பெண்ணிற்கு உங்களிடம் உதவியாளராக இருக்கும் டாக்டர் சிவகடாட்சம் மாப்பிள்ளையாக போகிறார். பையன் எப்படி என்று உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று வந்தேன்'' என்று அவர் கூறினார். இதைக் கேட்ட டாக்டர் என்.ஆர். "பையன் சிவப்பாக இருப்பதை பார்த்து நான் அவர் பிராமணப் பையன் என்று நினைத்தேன். முதலியார் என்று தெரிந்திருந்தால் நானே முதலியார் பெண்ணை பார்த்திருப்பேனே என்று சிரித்துக் கொண்டே கூறியதுடன், பையன் தங்கமானவன். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். தைரியமாக அவனுக்கு உங்கள் பெண்ணைக் கொடுக்கலாம்'' என்று கூற, 1978- ஆம்  ஆண்டு , டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி எனக்கும் என் கணவர் சிவகடாட்சத்திற்கும் திருமணம் நடந்தது.  திருமணத்தன்று மழை கொட்டோகொட்டு என்று பெய்தது. அடாத மழையிலும் விடாது எங்கள் கல்யாணத்திற்கு வந்து வாழ்த்தினார் டாக்டர் ரங்க பாஷ்யம். அப்பொழுது கூட பின்னாளில் அவரது  சரிதத்தை நான் எழுதுவேன் என்று  நினைத்ததில்லை.

என் கணவர் நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடத் தொடங்கினார். அந்த காலங்களில் எல்லாம் எங்களது அவுட்டிங் என்ன தெரியுமா?  எங்கள் வீட்டில் இருந்து காரில் ரமணா சர்ஜிக்கல் கிளினிக் செல்வோம். வரும் போது என் கணவர் எனக்கு சாப்பிட ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பார். எனக்கு பிள்ளை பிறந்து அவன் பேசும் வயதுவரை இது தொடர்ந்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக டாக்டர் குடும்பத்தினர்  கூட நான் பழக ஆரம்பித்தேன்.அவரது மகள் மஹாலக்ஷ்மி என்னுடன் நெருங்கிப் பழகினார். இன்னும் சொல்லப் போனால் இந்த புத்தகத்தை நான் எழுத காரணமானவர் அவர் தான். ஒரு நாள் திடீர் என்று எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. டாக்டர் என்.ஆர். மறைந்து விட்டார் என்று. மிகுந்த வருத்தத்துடன் அவர் வீட்டுக்குச் சென்று வந்தோம். அப்போதுதான் தனது வாழ்க்கை வரலாற்றை அவர் எழுத விரும்பினார் என்று தெரிந்தது. அவர் யாரிடமோ அதை சொல்ல, அவர் அதை ஏனோ தானோ என்று  எழுதிக் கொண்டு வந்து அவரிடமே தர,  அவருக்கு சரியாய் படாததினால், வேறு ஒருவரிடம் தந்து எழுத விரும்பினார். அதற்குள் அவர் மறைய, இந்தச் செய்தியெல்லாம் அவரது மறைவிற்குப் பிறகு தெரியவந்தது. 

தனது தந்தை  விரும்பியதை அவரது மகள் செய்ய விரும்பினார். அதற்கு டாக்டர் ரங்கபாஷ்யம் மனைவி சித்ராவும் சம்மதித்தார். எங்கள் இரு குடும்பங்களும் வாராவாரம் சந்திக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.  ஒருநாள் என்னை அவரது மகள் அழைத்து, "அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நானும் அம்மாவும் விரும்புகிறோம்'' என்றார். 

நான் இரண்டு நாள் அவகாசம் கேட்டேன். இதை என் கணவரிடம் சொன்னபோது, "உன்னால் முடியும் செய்'' என்று ஒற்றை வரியில் பதில் சொல்ல "சரி' என்று அந்த வேகத்திலேயே அவர்களுக்கும் பதில் சொன்னேன். இந்த புத்தகம் வெளிவர அம்மாவும் பெண்ணும் எனக்கு மிகவும் உதவினார்கள். திருமதி ரங்கபாஷ்யம் கேட்டுக் கேட்டு செய்தார்.  மகளும் தன் பங்கிற்கு அப்பாவின் நண்பர்கள், உறவினர்கள், என்று ஒரு பெரிய லிஸ்ட் தயாரித்து அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் பார்வையில் டாக்டர். என். ஆர். எப்படிப் பட்டவர்கள் என்று தெரியவைத்தனர். பலர் எழுதி அனுப்பினார்கள். சிலர் பேசி அனுப்பினார்கள். மேலும் சென்னையில் இருப்பவர்கள் பலரிடம் நானே நேரிலும் தொலைபேசியிலும் பேசி செய்திகளை சேகரித்தேன். சேகரிப்பு முடிந்தவுடன் ஒரு நாள்  என்னிடம் உள்ள எல்லா செய்திகளும் அடங்கிய தாள்களை ஒவ்வொன்றாக பிரித்து என் வீட்டின் பெரிய அறையில் பரப்பி வைத்தேன். அந்த அறை முழுக்க எழுதப் பட்ட வெள்ளை தாள்களாக நிறைந்து விட்டது. இதை பார்த்த எனக்கே பயம் வந்து விட்டது. "இவ்வளவு செய்திகளையும் எப்படி கோர்வைப் படுத்துவது அதையும் சரியாக செய்யவேண்டுமே' ஒரு மாமனிதரின் வாழ்க்கை சரிதத்தை நாம் சரியாக எழுத வேண்டுமே என்ற நினைப்பு என் பொறுப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 

நான் எப்பொழுதும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பக்தை. அவரை வேண்டிக்கொண்டேன். அவரை வேண்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். அவர்தான் என்னுடன் இருந்து இந்த மாபெரும் வேலையை சுலபமாக முடித்து வைத்துள்ளார் என்றே கூறவேண்டும். என்னுடைய ஒவ்வொரு எழுத்தும் பார்த்தசாரதி பெருமாளின் அருள்தான் என்றாலும், இந்த புத்தகம் எனக்கு ஒரு பெரிய பொறுப்பை அளித்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஒரு மாமனிதரின் வாழ்க்கை வரலாறு என்பதோடு மட்டுமல்லாமல்,  என் கணவரின் குருவாக இருந்தவர். அவரைப் பற்றிய புத்தகம் சரியாக வரவேண்டும். அவரோடு வாழ்ந்தவர்கள் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்ற  நினைப்பே என் பொறுப்பை அதிகப் படுத்தியது. 

முடித்தவுடன் அவரது குடும்பத்தாருக்கு படித்துக் காட்டியவுடன் எல்லோரும் அவரைப் பற்றிய நினைவுடன் சிறிது நேரம்  மெளனமாக இருந்து விட்டு பின்னர் என்னை பாராட்டியது என் வேலையை நான் சரியாக செய்து விட்டேன் என்று எடுத்துக் காட்டியது.  எனது நூல்களுக்கு அரசின் விருதும் - மற்ற அமைப்புகளின் விருதுகளும் கிடைத்துள்ளன. ரங்க பாஷ்யம் நூலே எனக்கு ஒரு விருதைப் போன்றதுதான். இந்த புத்தகத்தை எழுதியது எனக்கும் என் கணவர் டாக்டர் சிவகடாட்சத்திற்கும் மிகப் பெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது. அவரது குருவிற்கு இது ஒரு சிறந்த காணிக்கை அல்லவா?'' என்கிறார் சாந்தகுமாரி.                                                                                                                       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com