இந்தியர்களின் கடவுள் நம்பிக்கை குறித்து ஜெர்மனி தூதுவரின் மனைவி...

தில்லியில் சில இடங்களில் கான்கிரீட் சுவர் வெடிப்புகளில் வளரும் அரச மரத்திற்கு சிலர் தண்ணீர் ஊற்றுவதை பார்க்கும்போது, சில நேரங்களில் கடவுள் நம்முடன் சேர்ந்து நடந்து வருவது போன்ற உணர்வு எனக்குள்
இந்தியர்களின் கடவுள் நம்பிக்கை குறித்து ஜெர்மனி தூதுவரின் மனைவி...

இந்தியர்களின் பாரம்பரிய நம்பிக்கைகள், கடவுள் வழிபாடு, பிராணிகளிடம் காட்டும் அன்பு குறித்து, இந்தியாவிற்கான ஜெர்மனி நாட்டு தூதுவர் மைக்கேல் 
ஸ்டீனரின் மனைவி, எலிஸ் ஸ்டீனர் கூறுகிறார்:
"கடவுள்கள் மனிதர்களுடன் கைகோர்த்து நடந்தபோது...'' என்று 18-ஆம் நூற்றாண்டில் பிரபல ஜெர்மனிய கவிஞர்களில் ஒருவரான ப்ரைட்ரிச் ஹோல்டரின் குறிப்பிட்டிருந்தார். நூறாண்டுகள் கழித்து ப்ரைட்ரிச் நீட்ஸை இதே கருத்தை வெளிப்படுத்தியபோது, "கடவுள் இறந்து விட்டார்'' என்று குறிப்பிட்டார்.

ஐரோப்பாவில் முந்தைய காலங்களைப் போலின்றி ஆன்மிகம் தற்போது பின்வாங்கி தனியார் ஆதிக்கத்தில் இணைந்துள்ளது. பல்வேறு அமைப்புகள் தனித்தனியாகச் செயல்படுவதால் பாரம்பரிய ஆன்மிகக் கூட்டங்களுக்கு மக்கள் வர மறுக்கின்றனர். நிரூபிக்க முடியாதவைகள் எல்லாம் மறைந்துவிட்டதாகக் கருத முடியாது என்று விஞ்ஞானமே கூறுகிறது. பலர் தங்களது தனிமையான ஆதிக்கத்திற்கான காரணத்தைத் தேடுகின்றனர். உலகின் முக்கிய மதங்களில் ஒன்றான கிறிஸ்துவத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்படும் பள்ளிகளில் புதிய ஆன்மிக சிந்தனைகளைப் புகுத்தி மக்கள் கவனத்தைக் கவர்கின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை அனைத்துமே வித்தியாசமாகத் தெரிகிறது. சில நேரங்களில் ஆன்மிகம், அரசியல் பொருளாதார ரீதியாக வியாபாரமாக மாறினாலும் ஒரு வரம்புக்குள் உள்ளது. நான் தில்லியில் வசித்து வருவதால் இந்நாட்டின் பல பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போதெல்லாம் வழியில் மரங்களின் கீழ், நடைபாதைகளில் சிலைகள் வைக்கப்பட்டு, விபூதி குங்குமத்துடன் மக்கள் வழிபடுவதை பார்த்திருக்கிறேன். சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ள சாணக்கியபுரியில்கூட இதுபோன்ற காட்சிகளை பார்த்து வருகிறேன். போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளிலும் மக்கள் கவலைப்படாமல் கடவுளை வழிபடுகின்றனர். இதுமட்டுமல்ல கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள், குருத்துவாரா போன்ற ஆன்மிகத் தலங்களில் மக்கள் நிரம்பி வழிவதை பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் கடவுளை பூஜிக்கும் அவசரத்தில் தங்கள் வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்துவதையும் பார்த்ததுண்டு.

இந்தியாவுக்கு வரும் பல வெளிநாட்டவர், தாங்கள் கேட்டதையும் படித்ததையும் வைத்து இந்தியா ஆன்மிக நாடு அல்ல என்ற தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் வர்த்தக மையங்கள், மக்களைத் திசைதிருப்பும் பல்வேறு வியாபாரங்கள் என்றிருந்தாலும், இந்தியர்களைப் பொருத்தவரை ஆன்மிகத்தில் தங்களுக்கென்று ஒரு குருவை வழிகாட்டியாகக் கொண்டு வித்தியாசமான கொள்கைகளைக் கடைப்பிடிப்பது ஆச்சரியமாக உள்ளது. தன் தினசரி தேவைக்கான சக்தியை தாங்களே தேடிக் கொள்வதாகக் கருதுகிறேன்.

இந்தியாவில் தெருவில் திரியும் வாயில்லா ஜீவன்களுக்கு யாராவது ஒருவர் உணவளிப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு நிறைவாக உள்ளது. இது இந்திய ஆன்மிகத்தில் ஒரு பகுதியாக மட்டுமன்றி, விலங்குகளையும் கடவுள் ரூபத்தில் வழிபடுவது, கிறிஸ்துவ ஆன்மிக வழிபாட்டிலிருந்து வித்தியாசமானது என்றாலும், உலகில் உள்ள எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுவது உலகில் எங்குமே காண முடியாத அதிசயமாகும்.

உலகில் மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப சராசரி ஆயுள் அதிகரித்து வருவதால், அவர்களுக்குத் தேவையான உணவு, தங்கும் வசதிகளை ஐரோப்பிய நாடுகள் வெற்றிகரமாகச் செய்யக்கூடுமென்று கருதினாலும், ஆன்மிக அடிப்படையில் உணவைப் பகிர்ந்து கொள்வது போன்ற காட்சிகளை இந்தியாவில் மட்டுமே காண முடியும். ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இவை அனைத்துமே இந்திய புராண சம்பவங்களை நினைவூட்டுவதாகவே உள்ளன.

என்னுடைய கணவர் மைக்கேலின் 65-ஆவது பிறந்தநாளின்போது, அவரது வாழ்க்கையில் முக்கிய தருணமாக வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்படி ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. இதை "வாழும் கலை' ஸ்ரீரவிசங்கரிடம் தெரிவித்தபோது, ஓர் அற்புதமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக ஒப்புக்கொண்டார். அந்தப் பகல் நேரப் பொழுதில் வீட்டுத் தோட்டத்தில் 1,200 விருந்தினர்களை பிறந்தநாளுக்காக வரவழைத்து ஆன்மிகச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். இடையில் யாருமே எழுந்து செல்ல மனமின்றி நிகழ்ச்சியோடு ஒன்றியிருந்தது புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இதுபோன்ற ஒரு சர்வதேச உறவை ஆன்மிகத்துடன் இணைந்து அனுபவித்ததே இல்லை என்று மைக்கேல் கூறினார். இதைவிட மகிழ்ச்சி வேறு என்ன வேண்டும்? இந்திய நண்பர்கள் மட்டுமன்றி சர்வதேச நண்பர்களும் இந்த ஆன்மிகக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தில்லியில் சில இடங்களில் கான்கிரீட் சுவர் வெடிப்புகளில் வளரும் அரச மரத்திற்கு சிலர் தண்ணீர் ஊற்றுவதை பார்க்கும்போது, சில நேரங்களில் கடவுள் நம்முடன் சேர்ந்து நடந்து வருவது போன்ற உணர்வு எனக்குள் தோன்றுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com