9 மணிக்கு மேல் தொலைக்காட்சி தொடர்களைக் காண்பதை விட குழந்தைகள் நலம் முக்கியம்!

நம்முன்னோர்கள் காலத்தில் மனநோய்க்கென்று   மருத்துவர்கள் இல்லை.. இன்று அதற்காக ஆயிரக்  கணக்கில் செலவிட்டும் பிரச்னைகளில் இருந்து மீளத் தெரியாமல் திண்டாடுகின்றனர். எத்தனை தற்கொலைகள்.. கொலைகள்..
9 மணிக்கு மேல் தொலைக்காட்சி தொடர்களைக் காண்பதை விட குழந்தைகள் நலம் முக்கியம்!

குணச்சித்திர நடிகையாக.. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இப்போது நல்ல சிந்தனைகளைத்  தூண்டிவிடும் பேச்சாளராக மாறியிருக்கிறார்  சென்னையைச் சேர்ந்த  ரேகா பத்மநாபன். இவர், தன் முகநூல்  பக்கம்  மூலம்   நேரலையில்   சமூக  அவலங்களைப்   பற்றி    விளக்கிப்  பேசி அதற்கான சுலபமான தீர்வுகளைக் கூறி பெரிய  தாக்கங்களை  ஏற்படுத்தி  வருகிறார்.  சமீபத்தில் தற்கொலையை   தவிர்ப்பது   குறித்து  நேரலையில்   அவர்  விளக்கியதை ஆயிரக்  கணக்கானவர்கள்    பகிர்ந்திருக்கிறார்கள். பாராட்டியிருக்கிறார்கள்.  பல பள்ளி,  கல்லூரிகளுக்குச்  சென்று விழிப்புணர்வு சொற்பொழிவுகளையும் செய்துவரும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"இன்றைய தலைமுறையினருக்கு உரம் போடுவதும், உறக்கம்  கெடுப்பதும்   தொழிநுட்ப வளர்ச்சி தான். முகநூல், வாட்சப், யூ டியூப், டிவி சானல்கள் மற்றும் ஊடகங்களில்  தணிக்கை இல்லாத நல்லதும் கெட்டதுமான  விஷயங்கள் நிறைந்து  கிடக்கின்றன. சாக்லேட்  விளம்பரம்  கூட ஆபாசம் கலந்து காண்பிக்கப்படுகிறது.. எந்த  விஷயத்தையும்  எப்ப வேண்டுமானாலும் வயது வித்தியாசமின்றி வலைத்தளங்களில்  பார்க்கலாம்.. wrong call,  missed call    என்று தொடங்கி   நட்பு  என்ற  முகமூடி  இட்டு   ஆசை வார்த்தைகளைக் கொட்டி   யாரையும் மயக்கி பணிய வைக்கலாம். இந்த முயற்சிகள்தான் வலைத்தளங்களில்  தீவிரமாக  நடக்கிறது.  இதற்கு இரையானவர்கள்  ஏராளம். பலரும்  வெளியே  சொல்வதில்லை.

தனிமைதான் காமத் தீக்கு முதல்படி.  சமூக வலைத் தளங்களில்  பொதுவான விஷயங்களை  நாலு பேர் மத்தியில் பார்க்கும் ஒருவன், "அந்த மாதிரியான' விஷயங்களை பார்ப்பதை யாரும் பக்கத்தில் இல்லாத  தனிமையில் ஆரம்பித்து ஒவ்வொரு படியாக முன்னேறி பைத்தியம்  பிடித்தது  போல்  ஆகிவிடும் நிலையை அடைகிறான். 

உணர்வுகளைக்    கட்டுப்படுத்த முடியாமல் நாமும் செய்தால் என்ன.. யாருக்குத்  தெரியப்  போகிறது  என்று  மெல்ல மெல்ல எண்ணம் எழுந்து, அதைச்   செய்யும்  தைரியம்   ஏற்படுகிறது.  பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்க  விடாமல்   கட்டிப்  போட்டு விடுகிறது. பிறகு அந்தப்  பாவச் செயல்   நிகழ்ந்தே   விடுகிறது. இதன் விளைவாக  பாதித்தவன்,  பாதிப்பு  அடைந்தவர்  குடும்பங்கள்   சிதைந்து முகமிழந்து  ரணமாக  நடைப் பிணங்களாக     நிற்கின்றன.

பெற்றோர்களுக்கு  மிகப் பெரிய பொறுப்பு இருக்குதுங்க... குழந்தைக்கு  எது  சரி எது தப்பு  எது தர்மம்  எது அதர்மம்,  அதர்மத்துக்கு  கிடைக்கக் கூடிய தண்டனைகள்  என்னென்ன?  நீதி   நியாயத்துக்கு   கிடைக்கும்  மதிப்பு மரியாதை என்ன? என்பதைக் கதை ரூபத்தில் பத்து  பன்னிரண்டு   வயதிற்குள் குழந்தைகளுக்குச்   சொல்லிக் கொடுத்துவிட வேண்டும். இந்த  போதனைகள்   ஆழ்மனதில்   (மனசாட்சியில் ) அப்படியே பதிவாகும்.

நமது மூதாதையர்கள் இதைப் புரிந்து கொண்டுதான்  புராணங்களை, இதிகாசங்களை, நீதிக்  கதைகளை   நமக்குச் சொல்லிச் சென்றார்கள்.  எல்லா மதங்களிலும் எது நல்லது. எது பாவம், அதற்கான தண்டனை என்ன? என சொல்லப்பட்டுள்ளது. அதை நாம்  புரிந்துகொள்வோம்.  இனியாவது  பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.

சிறிய தோல்விகளை   எதிர்கொள்ள  முடியாமல்   சிலர்   தற்கொலை செய்து கொள்ளும்  அளவுக்குத்   தள்ளப்படுகிறார்கள்.  வாழ்க்கையில் தர்மத்தின் பக்கம் சென்று வெற்றி பெற வேண்டும் என்னும் முனைப்பை  பிஞ்சிலே பதியவையுங்கள்.. சீதையை  தூக்கிச்  சென்று  ராவணன் சிறை வைத்தாலும், இக்கட்டான சூழ்நிலையிலும் கற்புடன் இருந்து பிறகு  அதை சீதை  நிரூபித்துக்   காட்டியதையும்  பிஞ்சுகள்   மனதில் பதிய வையுங்கள்.  Bad touch என்ன என்று புரிய வைப்பதை  விட  சீதா உதாரணம்  எளிதில் புரியும்.   பெண்ணைத்    தொட்ட ராவணனுக்கு நேர்ந்த அழிவை கதையாக ஒவ்வொரு ஆண் பிள்ளைகளுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நிச்சயமாக பருவ வயதில் தவறான பாதையில் முதல் அடி எடுத்து வைக்கும்போதே  இது தப்பு,  செய்யாதே என்று  ஆழ்மனது ஆரம்பத்திலேயே தடுத்து  நிறுத்திவிடும்..

நம்முன்னோர்கள் காலத்தில் மனநோய்க்கென்று   மருத்துவர்கள் இல்லை.. இன்று அதற்காக ஆயிரக்  கணக்கில் செலவிட்டும் பிரச்னைகளில் இருந்து மீளத் தெரியாமல் திண்டாடுகின்றனர். எத்தனை தற்கொலைகள்.. கொலைகள்..  

பாரம்பரியத்தை,  கலாசாரத்தை  வீட்டுப் பாடமாக குழந்தைகள் மனதில் விதையுங்கள்.. அது   அவர்களை   பின்னாளில்   தீய   காரியங்கள் செய்வதிலிருந்து மனசாட்சியாக இருந்து காக்கும்.

இதில் பெரிய வருத்தம் வேதனையான விஷயம்  குழந்தைகளுக்கு சொல்லித்தர   பெற்றோர்களுக்கு  நேரமில்லை. குழந்தைப்  பருவத்தில்தான் அவர்களுக்கு ஆழ்மனம்  என்பது  உருவாகிறது.. அவர்கள்   காணும்   கேட்கும்   விஷயங்கள்  அவர்களுக்குள் பதியத்  தொடங்குகின்றன.  ஒன்பது மணிக்கு மேல்  காணும்    தொலைக்காட்சி தொடர்களைவிட குழந்தைகள்  நலம் முக்கியம்.  குழந்தைகளிடம் பேசுங்கள்.. அல்லது  குழந்தைகளைப்  பேசச் சொல்லிக்  கேளுங்கள்..

பெண்பிள்ளைகளுக்குத்  திருமணம்  ஆகிற  வரை  வயிற்றில் நெருப்பைக் கட்டிக்  கொண்டு  பெற்றோர்கள்  இருப்பார்கள். இப்போது  ஆண்பிள்ளைகளைப்   பெற்ற    பெற்றோரின்  நிலையும்   அதுதான். ஆண்குழந்தைகளுக்கும்   சில அவலங்கள்  அநீதிகள்   நடக்கத்தான்  செய்கின்றன.  இதைப்   புரிந்துகொண்டால்,  நமது  வழித்தடத்தை  மாற்றிக்  கொண்டால்   அடுத்த  தலைமுறை தப்பும்.   இல்லையெனில்  தப்புத்  தாளமாகும்.  அடுத்த  தலைமுறை  சீரழிய  நாமே  காரணம்  ஆவோம்.''
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com