டொனால்ட் ட்ரம்பை ஆதரிக்கும் இந்தியப் பெண் சாதனையாளர் தேவிதா சராஃப்!

ஆணாதிக்கம் நிறைந்த,  சவால்கள் மிகுந்த வர்த்தக உலகில்  வெற்றிகரமான தொழில் ஆர்வலராக நான்  அடையாளம் காணப்படுவதும்,  மதிக்கப்படுவதும்   எனக்கு   சவால்களை   எதிர்  கொள்ள  மன  பலத்தைக்  கொடுக்கிறது'' என்கிற
டொனால்ட் ட்ரம்பை ஆதரிக்கும் இந்தியப் பெண் சாதனையாளர் தேவிதா சராஃப்!

டொனால்டு  டிரம்ப்  அமெரிக்க அதிபர் பதவி ஏற்பதற்கு முதல் நாள் இந்தியாவின் பிரபல  ஆங்கில நாளிதழின் முதல் பக்கம் முழுவதுமாக டிரம்பைப் பாராட்டி  ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது. அதில்  டிரம்புடன்   அழகான இந்தியப் பெண்மணி  நின்றிருந்தார்.  அந்த  விளம்பரத்தைக் கொடுத்ததும் அவர்தான்.

அந்தப் பெண்,  டிரம்புடன்  சேர்ந்து நிற்கும் விளம்பரத்தை டிவிட்டரில் பதிவேற்றம் செய்து, "என்னை  இந்தியாவின் இவான்கா என்று அழைத்தமைக்கு  நன்றி'' என்ற  குறிப்பினையும்  சமூக வலைத்தளங்களில்  வலம்  வரச்  செய்தார். அதற்கு  பலவிதமான சூடான  விமர்சனங்கள் எழுந்தன. காரணம்,  உலகம் முழுக்க பலத்த  விமர்சனத்திற்கும், கண்டனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகியிருக்கும்   டிரம்ப்பை அந்தப் பெண்   ஆதரித்ததுதான். அந்த  இந்தியப் பெண்மணி  தேவிதா  சராஃப். 

தேவிதா, வியூ (VU) டெலிவிஷன்ஸ் நிறுவனத்தை உருவாக்கி  அதன் தலைவராகவும்  இருப்பவர்.தேவிதா தனது  வெற்றிக்  கதையை இங்கே கூறுகிறார்: 

"வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்ததுதான்.  சவால்கள்  வர்த்தக உலகிலும் ஏராளம். முறையான, அதே  சமயம்   வித்தியாசமான திட்டமிடலும் கடுமையான உழைப்பும்தான்  பயணிக்கும் பாதையை  எளிதாக கடக்க  எனக்கு   உதவின.  என்  தந்தை ராஜ் ஷராஃப்,    ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் (Zenith Computers) நிறுவனத்தைத் தொடங்கி  நிர்வகித்து வருபவர். பதினாறு வயதிலேயே ஒரு நிறுவனத்தை எப்படி நிர்வகிப்பது என்பதைத் தெரிந்து கொள்ள  தந்தையின் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன்.  இடையில், வெளிநாட்டு  கல்வி  நிறுவனங்களில் வர்த்தக நிர்வாகம் குறித்த  உயர் கல்வி பெற்றேன்.

படிப்பு முடிந்ததும், சொந்தமாக  ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும்  என்ற தீர்மானம் என்னுள்  எழுந்தது. எனது இருபத்தோராம் வயதில்  ஜெனித் கம்ப்யூட்டர்ஸ்  நிறுவனத்தின் மார்கெட்டிங் டைரக்டராக  மாற்றியது. 

ஒரு மாற்றத்திற்காக விலை  உயர்ந்த  கணினிகளை விற்க  தனியாகக்  கடை ஒன்றை ஆரம்பித்தேன்.   கணினி வாங்குபவர்கள் அதன் தொழில் நுட்பத்திற்காக வாங்காமல்  அதன் தோற்றத்திற்காக, கணினியின்  திரைக்கு  முக்கியத்துவம் கொடுத்து   வாங்குகிறார்கள் என்று புரிந்தது. கணினியின் திரையை விடப் பலமடங்கு   பெரிதாக இருக்கும்  டிவிக்களைத் தயாரித்து விற்றால் என்ன என்ற பொறி  மூளையில் தோன்றியது. அதன்  விளைவாக   ஆரம்பிக்கப்பட்டதுதான் வியூ தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிக்கும்  நிறுவனம். சர்வதேச தரத்துடன் வெளிநாட்டு நிறுவனங்களின் டிவிக்களை  விட விலை குறைவாக, எனது  டிவிகளுக்கு   நிர்ணயித்தேன்.  அந்த யுக்தி வெற்றி பெற்றது.

ஆரம்ப  காலத்தில், டிவி  ஷோரூம்கள்  மூலமாக   எனது  டிவிக்களை  விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.  பல்வேறு  டிவிக்களுடன் எனது டிவியும் பத்தோடு பதினொன்றாக  ஷோரூம்களில் காட்சி அளித்தது. அது  எனக்கு   ஏற்புடையதாக இல்லை.  அப்போது தான் புதிதாக வந்த  ஸ்நாப்டீல் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற ஈ - காமர்ஸ் தளங்கள் மூலம் எனது டிவிக்களை விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.  அதனால் விற்பனை சூடு பிடித்தது.  முப்பது கோடி  வர்த்தகமாக இருந்தது,  தொண்ணூறு கோடி வர்த்தகமாக  விரிந்தது.  மிக விரைவில் இந்தியாவில்  அதிகம் விற்பனையாகும் டிவிக்களில்  நான்காவது இடத்தை எனது டிவி பிடிக்கும்.

பிரபலங்களை  விளம்பரங்களில் நடிக்கச் செய்தால் மக்கள் கவனம் அந்த பிரபலத்தின் பக்கம்தான் இருக்கும். அதனால் நானே  எனது டிவிக்களின் விளம்பரங்களில் மாடல் ஆனேன். ஆம், மாடலும் நானே.. ஓனரும்  நானே.. எந்த வணிக  உரிமையாளரும் செய்யாத புதுமையை  அதுவும் பெண்ணாகிய நான் செய்திருக்கிறேன்  என்று  ஊடகங்கள்  எழுதின. "இது, அவரது   தயாரிப்புகளின் மேல்   அவர்  வைத்திருக்கும்  நம்பிக்கையைக்  காட்டுகிறது' என்று வாழ்த்துகளும்  குவிந்தன.

வியூ ஸ்மார்ட் டிவிக்கள், Netflix மற்றும் யூ டியூப்  பார்க்கும் வசதிகளுடன் தயாராகின்றன. இந்த  வசதி  ஏனைய  டிவிக்களிலிருந்து  வியூவை  வித்தியாசப் படுத்திக்   காட்டும்.    

ஆணாதிக்கம் நிறைந்த,  சவால்கள் மிகுந்த வர்த்தக உலகில்  வெற்றிகரமான தொழில் ஆர்வலராக நான்  அடையாளம் காணப்படுவதும்,  மதிக்கப்படுவதும்   எனக்கு   சவால்களை   எதிர்  கொள்ள  மன  பலத்தைக்  கொடுக்கிறது'' என்கிறார்  தேவிதா சராஃப்.

- அங்கவை 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com