சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளச் செல்லும் ஒரே ஒரு தமிழகச் சிறுவன்!

கறுப்பு வண்ண பெல்ட் எனக்கு ஜப்பானிலிருந்து வரும். ஜப்பான் நாட்டின் கறுப்பு வண்ண பெல்ட் இருந்தால்தான் சர்வதேசப் போட்டியில் கலந்து கொள்ள இயலும்.
சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளச் செல்லும் ஒரே ஒரு தமிழகச் சிறுவன்!

அயர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளச் செல்கிறார், சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜி.அசோக்குமார். இவர் ஒருவர் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து செல்கிறார். இவர் ஜனவரி 9 முதல் 11 ஆம் தேதிவரை மும்பை ஜி.சி.சி. கிளப்பில், ஜெ.கே.ஏ.இந்தியா என்ற அமைப்பு சார்பில் தேசிய அளவில் மும்பையில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று சர்வதேசப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார். மும்பையில் அதே அமைப்பு 12.1.2017 அன்று நடத்திய 3வது  தேசிய சாம்பியன் சிப் கராத்தே போட்டியில் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் குமித்தே பிரிவில் முதலிடம் பெற்று தங்கபதக்கம் பெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து அசோக்குமார் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை: ""நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கராத்தே பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றேன். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பயிற்சியாளர் செபாஸ்தியான் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியாளர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்டர்நேஷனல் சௌவுத்கான் கராத்தே அகாதமி ஆப் இந்தியா என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த அமைப்பினர் 7.9.2013 - இல் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று மஞ்சள் வண்ண பெல்ட் பெற்றேன்.

இதையடுத்து எனக்கு கராத்தே மீது ஆர்வம் பிறந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கண்ட அமைப்பு சார்பில்  8.12.2013 - இல் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மூன்றாமிடம் பிடித்து சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றேன். தமிழ்நாடு கராத்தே அமைப்பு, இந்திய கராத்தே அமைப்பு ஆகியவை இணைந்து 2014 அக்டோபரில் நாகர்கோவிலில் நடத்திய 10வது தேசிய கராத்தே போட்டியில் குமித்தே பிரிவில் மூன்றாமிடம் பெற்றேன்.

பின்னர் மாநில அளவில் இரு போட்டிகளில் குமித்தே பிரிவில் மூன்றாமிடம் பெற்றேன். 23.2.2014 - இல் ஆரஞ்சு வண்ண பெல்ட்டும், 17.8.2014 - இல் பச்சைவண்ண பெல்ட்டும் பெற்றேன். தொடந்து பல போட்டிகளில் குமித்தே பிரிவில் வெற்றி பெற்று வந்தேன். மேலும் கறுப்பு வண்ண பெல்ட்டும் கிடைத்தது.

கறுப்பு வண்ண பெல்ட் எனக்கு ஜப்பானிலிருந்து வரும். ஜப்பான் நாட்டின் கறுப்பு வண்ண பெல்ட் இருந்தால்தான் சர்வதேசப் போட்டியில் கலந்து கொள்ள இயலும். மேலும் அதே அமைப்பு மும்பையில் நடத்திய தேசிய கராத்தே போட்டியில் 15வயதுப் பிரிவில் குமித்தே பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றேன். இப்போட்டியில் அஸ்ஸôம் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரை எதிர்கொண்டு  வெற்றி பெற்றேன். சர்வதேசப் போட்டியிலும் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பேன்'' என்றார் அசோக்குமார்.

- எஸ்.பாலசுந்தரராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com