நம்புங்கள்... பல முதியோருக்கு சொந்த வீட்டை விட ஓய்வு இல்லங்களே நிம்மதி தருகிறதாம்!

இளைய தலைமுறையினரின் முறைகேடான நடத்தையால் அனாதையான முதியவர்கள் என்றில்லாமல், தாங்களாகவே தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட பெரியவர்கள் எத்தனை எத்தனை பேர்!
நம்புங்கள்... பல முதியோருக்கு சொந்த வீட்டை விட ஓய்வு இல்லங்களே நிம்மதி தருகிறதாம்!

அண்மையில் ஒரு கல்யாணத்தில் குருசாமியையும் அவர் மகள் உமாவையும் சந்தித்தேன். அதே மரியாதை, அன்புகலந்த பேச்சு, புன்னகை நிறைந்த முகங்கள். குருசாமியை எனக்குப் பல வருஷங்களாகத் தெரியும்... அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவி சாரதாவும் நானும் கல்லூரித் தோழிகள். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.

பத்து வருடங்களுக்கு முன் சாரதா இறந்துவிட்டாள். அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் விடாமல் அழைத்தான் என்பதற்காக சில முறை அங்கு சென்ற குருசாமி, இரண்டு மாதங்களுக்கு மேல் தங்க இயலாமல் ஊர்திரும்பிவிட்டார்.

"மகனும் மருமகளும் ரொம்ப அன்பாகத்தான் இருக்கிறார்கள்... க்ரீன் கார்ட் வாங்கிக்கொண்டு எங்களுடனேயே தங்கிவிடுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், எனக்குத்தான் பொருந்தவில்லை. மைலாப்பூர் மாடவீதிகளில் காலாற நடப்பதும், நண்பர்களுடன் நாகேஸ்வர ராவ் பார்க்கில் அமர்ந்து அரட்டையடிப்பதும் வேண்டியிருக்கிறதே, என்ன செய்ய' என்றார் என்னிடம் ஒருதரம், சின்னச் சிரிப்போடு. கடந்த சில வருடங்களாக மகளோடுதான் சேர்ந்து வசிக்கிறார்.

"உங்களை முன்போல அடிக்கடி காண முடிவதில்லையே ஆரோக்கியம் நன்றாக இருக்கிறதல்லவா' என்று நான் கேட்டதும், உற்சாகமாய் தலையசைத்தார் குருசாமி. "ஆண்டவன் புண்ணியத்தில் எந்த நலக்கேடும் இல்லாமல் செளக்கியமாய் இருக்கிறேன். என்ன... பாண்டிச்சேரியில் இருப்பதால், நினைத்தபோது இங்கு வரமுடிவதில்லை. ஆனால், அது ஒன்றும் பெரிய குறையாக இல்லை...' என்றவர், என் வியப்பைப் புரிந்துகொண்டு தானே விளக்கினார்.

உமாவின் பதினாலு வயசுப் பெண் ரம்யா. மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன் என்பதால், அடிக்கடி போட்டிகளுக்காகவும், பயிற்சிக்காகவும் வெளியூர் செல்ல நேரிடுகிறதாம். வயசுப் பெண்ணை தனியாக அனுப்ப விருப்பமின்றி உமாவும் கூடச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், ஆறுமாசத்திற்கு முன் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு நல்ல ஓய்வு இல்லத்தில் - ரிடையர்மென்ட் ஹோமில் - குருசாமி சேர்ந்திருக்கிறாராம். இடம் ரொம்ப சுத்தமாக, சாப்பாடு ருசியாக இருக்கிறதாம். சின்னச்சின்ன உபாதைகளைக் கவனிக்க சின்னதாய் ஒரு க்ளினிக் இருக்கிறதாம்.

உடம்புக்கு முடியவில்லை என்றால், ஆஸ்பத்திரியில் கொண்டுசேர்க்க ஆம்புலன்ஸ் இருக்கிறதாம். "எங்கள் குடியிருப்புக்குள்ளேயே கோவில், கடை என்று சகலமும் இருக்கின்றன. நாள்கிழமைகளில் சங்கீதக் கச்சேரி, உபன்யாசங்கள், வாரம் ஒருமுறை சினிமா என்று அத்தனை வசதிகளும் உள்ளன.

என் மைலாப்பூர் நண்பர்களில் சிலரும் அங்கு வந்துவிட்டார்கள். ஆக, சுத்தமான சூழல், வாய்க்கு ருசியாய் சாப்பாடு, அரட்டையடிக்க நண்பர்கள் என்று சுவாரஸ்யமாய் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது' - பேசியவர் முகத்திலும் பேச்சிலும் திருப்தி.

"நான் ஊரில் இருந்தால் சனி, ஞாயிறு அப்பாவை வீட்டுக்குக் கூட்டி வந்துவிடுவேன்... திருமணம், விசேஷம் என்றால், அழைத்துவந்துவிடுகிறேன்.
அப்பாவைத் தனியாக விட்டுவிட்டு ஊருக்குப் போகிறோமே என்ற பதைப்பு இப்போது எனக்கு இல்லை. ரொம்ப நிம்மதியாய் இருக்கிறோம்' எந்தக் குற்றவுணர்வுமின்றி யதார்த்தமாய் பேசிய உமாவையும், தலையசைத்து ஆமோதித்த குருசாமியையும் பார்த்தபோது, நாற்பது வருஷங்களுக்கு முன் நிலவிய சூழல் என ஞாபகத்துக்கு வந்தது.

முதுமை என்பது விபத்து அல்ல... அது ஒவ்வொரு நாளும் நம்மை நோக்கி வந்துகொண்டிருப்பது. அதற்கு மனசாலும் உடம்பாலும் தயாராவது அவசியம் என்ற விழிப்புணர்வு எனக்குள் தோன்றிய பிறகு, அதுகுறித்து கட்டுரைகளும் புதினமும் எழுதிய நாள்கள் அவை.

அப்போதெல்லாம் ஓய்வு இல்லங்கள் கிடையாது... முதியோர் இல்லங்கள்தாம் இங்கொன்றும் அங்கொன்றுமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தன. ஆதரவற்றவர்களை வைத்துப் பராமரித்த அந்த இல்லங்களில், வேண்டாத சுமையாகிவிட்ட தாய் } தந்தையைக் கொண்டுவந்து தள்ளிவிட்ட நிலையில், பெற்றவர்களுக்கும் நிம்மதியில்லை, பிள்ளைகளுக்கும் சந்தோஷம் இல்லை.

வாழ்க்கை முறை மாறிவிட்டது. முன்பு கிராமங்களில் தாழ்வாரமும் முற்றமும் தோட்டமுமாய் நாலுகட்டு வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தது காணாமல்போய், நகரங்களில் புறாக்கூண்டு போன்ற ஃபிளாட்டுகளில் வசிக்க நேரும்போது, இடங்கள் மட்டும் குறுகிவிடவில்லை... மனித மனங்களிலும் வெகுவாக ஈரமும் இடமும் குறைந்துபோயின.

என் பெற்றோரை நான் பார்த்துக்கொண்டதுபோல, என் முதுமையில் என்னை என் பிள்ளைகள் கவனிக்க வேண்டும் என்ற முதியோர்களின் எதிர்பார்ப்பு ஒருபக்கம் என்றால், வருகிற வருமானத்தில் என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைப்பேனா, அல்லது இவர்களைக் கவனிப்பேனா, நிலைமை புரிந்து அனுசரித்துப்போகாதவரை வைத்துக்கொண்டு என்ன செய்ய என்று புலம்பிய இளைய தலைமுறை இன்னொரு பக்கம்.

முதுமையை எதிர்நோக்க, பொருளாதார, உடல், மன ரீதியாக  தங்களைத் தயார்பண்ணிக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞை பல பெரியவர்களிடம் இல்லாததும், இன்றைக்கு நாம் வாழும் வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த மூத்தவர் பொறுப்பை முடிந்த அளவாவது ஏற்க வேண்டும் என்கிற உறுதி இளைய தலைமுறையினரிடமும் வளராமல் போனது, பிரச்சினையை பூதாகாரமாக்கியது.

அன்று, முதியோர் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள, அவலமான சூழ்நிலையில் நான் சந்தித்த நபர்கள் அனேகம். கண்களில் சோகமும் பயமும் வெளிச்சம்போட, "இனி எங்கள் கதி என்ன?' என்ற பதைப்போடு பேசிய நவநீதம் அம்மாள், ருக்மிணிப் பாட்டி, கதிரேசன் சார்...

நவநீதம் அம்மாள் - ஒரு காலத்தில் மிராசுதாரின் மனைவியாக வாழ்ந்தவர். குழந்தைகள் இல்லை. கணவர் இறந்த பிறகு, தங்கையின் பிள்ளையைத் தத்து எடுத்துக் கொண்டார்.

அந்த மகானுபாவன், பணம், நகை, சொத்து பூராவும் கொஞ்சம் கொஞ்சமாய் பிடுங்கிக் கொண்டான். தன் எதிர்காலத்துக்கு என்று இவர் மறைத்து வைத்த தங்க பெல்ட் கிட்டவில்லை என்பதால் தோல்பெல்ட்டால் விளாசினதில், இரண்டு தரம் எலும்பு முறிவுகூட ஏற்பட்டிருந்தது. 

அத்தனையும் போதாதென்று, புத்தூர் மூலிகை வைத்தியம் செய்து கட்டியிருந்ததையும் ஒருநாள் கோபத்தில் அந்தப் பிள்ளை பிரித்துவிட, கால் எலும்பு முறிவு சேராமல்போய், நிரந்தரமாய் முடமாகிப்போனவர் அவர்.

ருக்மிணிப் பாட்டி - கல்யாணமாகும் முன்னரே, அவர் கணவனுக்கு அண்ணியுடன் தொடர்பு இருந்ததாம். அண்ணா இறந்த பிறகு இந்த உறவு இறுக, தாலி கட்டியவரும் அண்ணியும் ஆட்டிவைத்த ஆட்டல் சொல்லி மாளாதாம்.

ஒருநாள் அண்ணி பேச்சைக் கேட்டுக்கொண்டு கணவர் நகைகளைக் கேட்க, கொஞ்சம் கொடுத்துவிட்டு கொஞ்சத்தை மறுக்க... அப்புறமென்ன? வீட்டைவிட்டு விரட்டல்தான்.

படிப்பு வாசனை இல்லாத பெண்களால் சுலபமாகச் செய்யக்கூடிய வேலையான சமையல் வேலையைச் செய்துகொண்டு காலத்தை ஓட்டியவருக்கு வாதம் வந்தபின், அதுவும் நின்றுபோயிற்று. இருந்த நகையை விற்றுச் சாப்பிட்டு, அடுத்த வேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் யார் வீட்டுத் திண்ணையிலோ முடங்கிக்கிடந்தவர்.

சீர்வரிசைகளை ஏற்றுக்கொண்டபின், முகம் கோணல் என்று கணவனால் ஒதுக்கித்தள்ளப்பட்ட பெண்மணி. அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் குடித்தனம் பண்ணிவிட்டு, பிள்ளை இறந்ததும் மருமகளால் அனாதையாக விடப்பட்ட பாட்டி. பாஷை தெரியாமல் எங்காவது திண்டாடினாலும் சரி, நம்மை விட்டால் போதுமென்று வடக்கே போகும் ரயிலில் சொந்தப் பிள்ளையாலேயே ஏற்றிவிடப்பட்டுத் தவித்த பெருமாள்...

ஒற்றைப் பிள்ளையைக் கண்ணுக்குள் வைத்து, வளர்த்துவிட்டு, அவனது சம்பாத்தியத்தில் ருசிகண்டதால் அவனுக்குக் கல்யாணம் கூடச் செய்துவைக்க பிடிக்காமல், கடைசியில் ஊர் நிர்ப்பந்தத்துக்காகச் செய்வித்து, கட்டினவளோடு அவனை ஓரிரவு முழுசாய் படுக்கவிடாமல், சதா பிள்ளையை "பெண்டாட்டி தாசன்' என்று குறை சொல்லி, அவனது வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட கதிரேசன் சார்...

இளைய தலைமுறையினரின் முறைகேடான நடத்தையால் அனாதையான முதியவர்கள் என்றில்லாமல், தாங்களாகவே தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட பெரியவர்கள் எத்தனை எத்தனை பேர்!

யாரைச் சொல்ல? யாரை விட?

ஆனால், இப்போது அப்படியில்லை. முழுமையாகத் தீர்வு உண்டாகாவிடினும், இருபாலரிடமும் இதுகுறித்து ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

என் உடல்நலத்தைக் கவனித்துக்கொண்டு, முதுமைக்காகக் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்துக்கொள்வதோடு, என் குழந்தைகளின் கஷ்டம் புரிந்து கூடுமானவரையில் என் காலில் நிற்க முயற்சிப்பேன் என்கிற ரீதியில் பல முதியோர் சிந்திக்கத் தொடங்கியிருப்பதும், நம்மோடு வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும், ஓர் ஓய்வு இல்லத்தில் சகல வசதிகளுடன் வாழச் செய்து, அவ்வப்போது சென்று கவனித்துக்கொள்வோம் என்று சில இளைய தலைமுறையினர் முடிவுசெய்து செயல்பட முனைவதும் ஆரோக்கியமான
விஷயமே.

காலம் மாறிவிட்டது. இந்த நிலையில், இன்னமும் பழைய பழக்கங்களையே நினைத்துக்கொண்டு, எதிர்பார்த்து, ஏமாந்து, அடிபட்டு, உடைந்துபோவது தவிர்க்கப்பட வேண்டும். இன்றைய யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழப் பழகுவது அனைவருக்குமே நிம்மதியைத் தரும்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com