இவர் சீரியல் பார்க்கும் சாதாரண பாட்டி அல்ல... துப்பாக்கி சுடத் தெரிந்த சீரியஸ் பாட்டியாக்கும்!

இப்போது ஷூட்டர் தாதியை துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தடுக்க யாருமில்லை. குடும்பத்தினரும் சரி, கிராமத்தினரும் சரி கொண்டாடுகிறார்கள் அவரை! 
இவர் சீரியல் பார்க்கும் சாதாரண பாட்டி அல்ல... துப்பாக்கி சுடத் தெரிந்த சீரியஸ் பாட்டியாக்கும்!

பொதுவாகப் பாட்டிகள் என்ன செய்வார்கள்?. முடிந்தால் வீட்டு வேலைகள் செய்வார்கள், முடியாத பட்சத்தில் மகளோ, மருமகளோ சமைத்துப் போட நேரம் தவறாது சாப்பிட்டு விட்டு, மணிக்கொரு சீரியல் வீதம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மெகாத் தொடர்கள் அத்தனையையும் விடாமல் பார்த்து ரசிப்பார்கள். வெகு சிலர்... மிஞ்சிப் போனால் பேரன், பேத்திகளுக்கு கதைகள் சொல்லி சோறூட்டி, இரவில் கட்டியணைத்து தாலாட்டுப் பாடி தூங்க வைக்கக் கூடும். இது இன்று பெரும்பாலான வீடுகளில் நடந்து வரும் சங்கதி.

ஆனால் இந்தப் பாட்டி இவர்களிலிருந்து ரொம்பவே வித்யாசப்படுகிறார். இவர் சீரியல்கள் எல்லாம் பார்ப்பதில்லை. அதற்காக வீட்டில் உட்கார்ந்து கொண்டு சமைத்துப் போட்டு, பத்துப் பாத்திரம் தேய்த்து, இரவானால் பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லித் தூங்க வைக்கும் சாதாரணப் பாட்டியாகவும் செயல்படவில்லை. வேறு என்ன தான் செய்கிறார் என்கிறீர்களா? இப்போது இவருக்கு 85 வயது; இதுவரை இவர் வாங்கிய மெடல்களை அடுக்க இனி இவரது வீட்டில் புது அலமாரி வாங்க வேண்டும். அத்தனை மெடல்களாக வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார். எதில் தெரியுமா? துப்பாக்கி சுடுதலில். பாட்டிகள் தோசை சுட்டுப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்தப் பாட்டி துப்பாக்கி சுடுகிறார். 

இத்தனைக்கும் இளமையில் இவர் துப்பாக்கியை நேரில் கண்டது கூட இல்லை. 65 வயதில் தான் முதல் முறையாக துப்பாக்கியைப் பார்க்க நேர்கிறது. தன் பேத்தி செபாலி ரைபிள் ஷூட்டிங் கற்றுக் கொள்ளச் செல்கையில் துணைக்குச் செல்ல வீட்டில் வேறு யாரும் இல்லாததால் 65 வயது சந்த்ரோ தோமர் முதல் முறையாக ரைபிள் அகாடமிக்கு உடன் செல்கிறார். அது வரையிலும் அவர் எல்லாப் பாட்டிகளையும் போலவே ஒரு நார்மலான சாதாரண பாட்டி தான். ஒரு முறை துப்பாக்கி சுடும் போட்டிக்கான பயிற்சி நடைபெறுகையில் செபாலி உடனடியாக ரைபிளில் குண்டுகளை லோட் செய்ய முடியாமல் திண்டாட, உடனே படக்கென்று துப்பாக்கியைத் தன் கையில் வாங்கிய பாட்டி அதில் குண்டுகளை  பட் பட் என்று லோட் செய்து  முடிக்க பேத்தி அசந்து போனார். அப்புறமென்ன பாட்டிக்கும் துப்பாக்கி சுடப் பயிற்சி அளித்தால் என்ன என்று தோன்றத் தொடங்கி விட்டது பேத்திக்கு. பேத்திக்கு துணையாக வந்த பாட்டி இப்போது தனக்கே தனக்கென்று பயிற்சி பெறத் தொடங்கினார். முதல் முறையாக எருதின் கண்களை மார்க் செய்த போட்டியில் வென்றது தான் சந்த்ரோ தோமரின் முதல் வெற்றி. பெற்ற வெற்றியால் இவரது புகைப்படம் மறுநாள் அனைத்து லோக்கல் நாளிதழ்களிலும் வர வீட்டிற்குத் தெரியாமல் துப்பாக்கி சுடக் கற்றுக்கொண்ட பாட்டி பயந்து போய் அந்த நாளிதழ் தன் குடும்பத்தினர் கண்களில் படாதவாறு அதை அப்புறப்படுத்தினார். ஆனால் அந்த ஒரே ஒரு நாளிதழில் மட்டுமல்ல ஊரெங்கும் எல்லா நாளிதழ்களிலும் பாட்டியின் முகம் தெரிய வீட்டினருக்கு விசயம் முன்னதாகவே தெரிந்திருந்தது. 

வெற்றியே அடைந்திருந்தாலும் பாட்டியின் வீட்டினர் அதை ஏற்கவில்லை. பாட்டிக்கு இனிமேல் இம்மாதிரியான போட்டிகளில் எல்லாம் பங்கேற்கக் கூடாது என ஏகப்பட்ட அறிவுறைகள் வழங்கப் பட்டன. அதையும் மீறிச் செல்வேன் என்று பாட்டி சொன்னதற்கு கிடைத்த எதிர் கருத்துகள் அதிகம். ஆனாலும் பாட்டி தயங்கவே இல்லை. தன் பேத்தியுடன் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டார். மேலும், மேலுமென பதக்கங்களையும், பட்டங்களையும் வென்றார். அதுவும் எப்போது? தனது 65 வயதுக்குப் பிறகு; பல வயதான பெண்களுக்கு அந்த வயதில் வாழ்வே முடிந்து விட்டதான விரக்தி வந்து விடும். ஆனால் சந்த்ரோ தோமர் பாட்டிக்கு அப்படி எதுவும் விரக்தி வரவே இல்லை. பாட்டியின் இத்தனை மன உறுதிக்கு காரணம் என்னவாக இருக்கும் என பேத்தியிடம் கேட்டால்; பலர் என் பாட்டியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் என் பாட்டி அளித்த ஒரே பதில்; ‘உடலுக்குத் தான் வயதாக முடியுமே தவிர; மனதுக்கு எப்போதுமே வயதாவதில்லை’ பாட்டியின் தொடர் வெற்றிகளுக்குக் காரணம் இதுவே என்கிறார் பேத்தி.

ஒரு முறை துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள தென்னிந்தியாவுக்கு பாட்டி வந்தார். அவருக்கு அப்போது தாய்மொழி தவிர பிற மொழிகள் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டால் அங்கு ஒருவருக்கும் புரியவில்லை. அப்போது தான் பாட்டி தான் ஆங்கிலம் கற்றுக் கொள்வதைப் பற்றி யோசித்தார். இப்போது போட்டிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவர்களோடு உரையாடும் அளவுக்கு பாட்டிக்கு நன்றாகவே ஆங்கிலம் தெரியும். இது தான் பாட்டியின் பலம். ஒரு விசயம் தனக்கு வேண்டுமென முடிவெடுத்து விட்டால் பின்வாங்கவே மாட்டார். அதற்கான கடுமையான முனைப்பு எப்போதும் அவருக்குள் இருக்கிறது. அதுவே என் பாட்டியின் வெற்றி. என்கிறார் இந்தப் பேத்தி.

அதுசரி வாழ்வே முடிந்து போனதாகக் கருதக் கூடிய வயதில், கட்டுப்பெட்டித் தனமான ஜாட் வம்சத்தில் பிறந்து அங்கு பெண்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளுடன் 65 வயது வரை வாழ்ந்து தனது வாழ்வின் கடைநிலையில் இப்படி ஒரு சாதனை நிகழ்த்த வேண்டுமெனில் அதற்கொரு மனோ தைரியம் வேண்டும். அது இந்தப் பாட்டிக்கு நிறையவே இருக்கிறது. அவரது கிராமத்தில் இப்போது பாட்டியின் பெயர் ‘ஷூட்டர் தாதி’ தாதி என்றால் இந்தியில் பாட்டி என்று பொருள். இப்போது ஷூட்டர் தாதியை துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தடுக்க யாருமில்லை. குடும்பத்தினரும் சரி, கிராமத்தினரும் சரி கொண்டாடுகிறார்கள் அவரை! 

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com