முதல் சந்திப்பிலேயே ஒருவரின் மனதை வெல்ல இந்த 7 வழிகளை பின்பற்றினால் வெற்றி நிச்சயம்!

வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களை கவனித்துப் பார்த்தால் அவர்களுள் 85 சதவிகிதம் பேர் தங்களது திறமை அல்லது
முதல் சந்திப்பிலேயே ஒருவரின் மனதை வெல்ல இந்த 7 வழிகளை பின்பற்றினால் வெற்றி நிச்சயம்!

வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களை கவனித்துப் பார்த்தால் அவர்களுள் 85 சதவிகிதம் பேர் தங்களது திறமை அல்லது புத்திசாலித்தனத்தால் மட்டுமே அந்த நிலையை அடைந்திருக்க மாட்டார்கள். மற்றவர்களுடன் பழகும் தன்மையிலும்தான் அது சாத்தியப்படுகிறது என வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ஒருவரை நீங்கள் முதன் முதலில் சந்திக்கும்போது, அவருக்கு உங்கள் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்? அடுத்தடுத்த சந்திப்புக்களுக்கு வழி வகுக்கச் செய்யும் அந்த முதல் சந்திப்பில் உங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்?

அத்தகைய முதல் சந்திப்பை வெற்றிகரமாக்க இந்த 7 அடிப்படை விஷயங்கள் உதவக் கூடும். 

1. உடல்மொழியில் கவனமாக இருங்கள்

நீங்கள் பேசும் வார்த்தைகளை விட அதிகம் கவனம் தரக்கூடியது உங்கள் செய்கைகள். எனவே மற்றவரின் கவனத்தை முதல் பார்வையில் பெற, மனம் திறந்த ஒளிவு மறைவில்லாத அணுகுமுறை வேண்டும். சோர்வாகவும் ஒடுங்கியும் இல்லாமல் நிமிர்ந்த நடையுடன் தன்னம்பிக்கையுடன் அவரை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். தேவையின்றி குனியவும் வேண்டாம், தேவைக்கு அதிகமாக பணியவும் வேண்டாம். நீங்கள் உங்களின் இயல்பை கைவிடாமல், நம்பிக்கை மிளிரும் புன்னகையுடன் இருங்கள். மேலும் அந்த நபரைச் சந்திக்க நீங்கள் ஆவலாக இருந்துள்ளீர்கள் என்பதைக் அவருக்கு தகுந்தபடி உணர்த்திவிட்டால் போதும். கூடுமானவரை கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது நல்லது.

2. உங்களை ஒரேடியாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம்

முதல் சந்திப்பிலேயே உங்களுக்குத் தெரிந்த அத்தனை விஷயங்களையும் கொட்டித் தீர்க்க வேண்டாம். நான் இப்படி, அதை செய்ய விரும்புகிறேன் என்ற சுய புராணமும் தேவையற்றது. அந்தச் சந்திப்புக்குத் தேவையான விஷயங்களை தன்மையாகவும், தெளிவாகவும் பேசினால் போதும். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் அவரின் கவனத்தைப் பெறுவதற்குப் பதில் எரிச்சலைத்தான் பெற முடியும். எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாது என்பதை முதலிலேயே மனதுக்குள் கோடு போட்டு வைத்துக் கொண்டால், அவரை சந்திக்கும் போது சரளமாக அது குறித்து பேச முடியும். அதே சமயம் உங்களின் பேச்சு அவருக்குப் பிடித்துவிட்டால் அடுத்தடுத்த சந்திப்புக்களில் நீளமான உரையாடல்களுக்குள் போகலாம்.

3. காது கொடுத்துக் கேளுங்கள்

உங்கள் எதிரில் இருப்பவர் பேசும் விஷயம் உங்களுக்கு தெரிந்ததாக இருந்தாலும், அவரைத் தடுக்காதீர்கள். அவரது தரப்பை பொறுமையாகக் கேளுங்கள். முழுமனதுடன் அவர் சொல்வதைக் கேட்டால்தான் உங்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்படும். மாறாக அவர் பேசிக் கொண்டிருக்கும் போது நீங்கள் கவனம் பிசகினால் அது அவருக்கு எரிச்சல் தரும். சரி கிளம்பலாமா என்று சொல்லிவிடலாம். கிடைத்த நேரத்தை தக்கபடி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

4. நிறைய கேள்வி கேளுங்கள்

அவர் கூறும் விஷயங்களில் சந்தேகம் இருந்தால் தயங்காமல் தெளிவு பெறும் வரை கேள்வி கேளுங்கள். அதற்காக சம்மந்தமில்லாத கேள்விகளை மறந்தும் கேட்டுவிட வேண்டாம். உங்களிடமிருந்து அவருக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கே கூட சில சமயம் தெளிவற்று இருக்கலாம். நீங்கள் கேட்கும் சரியான கேள்விகள், அவர்களே அறியாமல் அவர்கள் மனதை திறந்து விடும்.

5. நன்றி சொல்ல மறக்காதீர்கள்

உங்கள் இருவரையும் சந்திக்கச் செய்தவர் இருந்தால் அவரைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல மறக்காதீர்கள். அந்த நன்றியை ஒரு கடமைக்காகவும் பழக்கத்தினாலும் சொல்லாமல், இயல்பாகவும் மனதாரவும் சொல்லுங்கள். உங்களுடைய இந்தப் பண்பினால் நிச்சயம் நீங்கள் சந்திக்கும் நபர் உங்களை மீண்டும் சந்திக்க விரும்புவார். 

6. மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம்

ஒருவர் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டி உங்கள் முன் நின்றால் அவரை மன்னித்துவிடுவது தான் ஆகச் சிறந்த குணம். மனங்களை வெல்ல மிகச் சக்தி வாய்ந்த கருவி மன்னிப்பு. போலவே நீங்களே ஒரு தவறு செய்திருந்தாலும், சம்மந்தப்பட்ட நபரிடம் மனதார மன்னிப்பு கேட்டுவிடுவது நல்லது. நாம் செய்த தவறுக்காக தலை குனிவதில் தவறேதும் இல்லை.  

7. பிரத்யேகமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்

நீங்கள் அடிக்கடி கூறும் வார்த்தைகளைக் கோர்த்து ஆக்கப்பூர்வமாக சில வரிகளை வடிவமைத்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது அன்பு, நட்பு, வாழ்க்கை ஆன்மிகம் என எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு பேச்சின் நடுவே தேவைப்படும்போது, பொருத்தமான இடத்தில் பயன்படுத்துங்கள். ஆனால் அதே சமயம் மனப்பாடப் பகுதியை ஒப்பிக்கும் மாணவன் போல் கூறாமல் மிக இயல்பாகக் கூற வேண்டும். அது உங்களைத் தனித்துவத்தை எடுத்துக் காட்டும்விதமாக இருக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com